என் மலர்
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்
கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று சீசன் கடைகள் ஏலம்
- வெளியூர் வியாபாரிகள் குவிந்தனர்
- இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். இங்குவருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களில் பெரும்பாலானவர்களும் வந்து செல்வார்கள். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
இந்த சீசனையொட்டி கன்னியாகுமரியில் நடை பாதைகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சீசன் கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்படும். இந்த ஆண்டு கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரைக்கு செல்லும் சிலுவை நகர் பகுதி, குமரி மாவட்ட சுற்றுலா அலுவலகம் முதல் அரசு விருந்து மாளிகை முன்பு வரை உள்ள மெயின் ரோடு பகுதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்லும் சன்னதி தெருவில் உள்ள விவேகானந்தா ராக் ரோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 125 சீசன் கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துஉள்ளது. இந்த சீசன் கடைகள் ஏலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த மோகன் தலைமையில் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரிசிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் ஆகியோர் முன்னிலையில் இந்த சீசன் கடைகள் ஏலம் நடந்தது.
இந்த சீசன் கடை ஏலம் எடுப்பதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர். சீசன் கடைகளை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதையொட்டி கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த சீசன் கடைகளை ஏலம் எடுக்க வெளியூர் வியாபாரிகள் நேற்று முதலே கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். ஏலம் எடுக்க சென்ற வியாபாரிகள் போலீசாரின் கடுமையான சோதனைக்கு பிறகே பேரூராட்சி அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.






