என் மலர்
புதுச்சேரி

புத்தாண்டு கொண்டாட்டம் - புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்
- புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
- புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.
புதுச்சேரி:
நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு திரளுவார்கள்.
அதுபோல் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டமும் புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை கொண்டாடப்படும் கடற்கரை சாலையில் அரசு சுற்றுலா துறை சார்பில் இசை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன. புதுச்சேரியில் உள்ள விடுதிகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளை நோக்கி செல்கின்றனர்.
புதுச்சேரி நகர் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டை தினத்தன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரி முழுவதும் போக்குவ ரத்து போலீசார் குவிக்கப் பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.
புதுச்சேரியில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க 50 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் சீருடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பணியில் ஈடுபடுவார்கள். மேலும் மதுகுடித்திருப்பதை கண்டறியும் கருவி (பிரீத் அனலைசர்) சோதனை மேற்கொள்வார்கள். இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்கக்கூடாது. அதிக வேகத்தில் செல்லக்கூடாது இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்யக்கூடாது அதிக இரைச்சல் எழுப்பக்கூடாது. இதனை இன்டர்செப்டர் வாகனம் மூலமாக கண்கா ணிக்கப்படும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






