search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பாரம்பரிய விளையாட்டை விளையாடி மகிழ்ந்த பெண்கள்

    • கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.
    • ஏராளமான கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடனும், பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களில் இன்று காணும் பொங்கலையொட்டி மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலை ஒட்டி ஒவ்வொரு வருடமும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    காணும் பொங்கலை ஒட்டி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பெண்கள் ஒரு நாள் முழுவதும் ஒன்று கூடி ஆடி, பாடி பொழுதை கழிப்பார்கள். பெண்கள் மட்டுமே வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலையொட்டி அனுமதிக்கப்படுவார்கள். ஆண்களுக்கு அனுமதி இல்லை.

    இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த வருடம் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மாநகராட்சி பணியாளர்கள் வ.உ.சி. பூங்காவை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இன்று மதியம் 12 மணி அளவில் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலை கொண்டாட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பெண்கள் வரத் தொடங்கினர்.

    ஏராளமான கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடனும், பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். மேலும் பாண்டி பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டையும் விளையாடி மகிழ்ந்தனர். மியூசிக்கல் சேர் விளையாட்டையும் விளையாடி மகிழ்ந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் வ.உ.சி. பூங்காவில் கூடியதால் வ.உ.சி. பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வ.உ.சி. பூங்கா 2 கேட்கள் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

    Next Story
    ×