search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரம்-பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    X

    மாமல்லபுரம்-பழவேற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

    • மாமல்லபுரம் கடற்கரையில் உயர் கோபுரம் அமைத்து ஒலிபெருக்கி மூலமாகவும், ரோந்து சென்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர்.

    மாமல்லபுரம்:

    காணும் பொங்கல் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூங்காக்கள், சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். குடும்பத்துடன் அவர்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

    சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் காணும் பொங்கலை கொண்டாட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இன்று காலையில் இருந்தே குடும்பத்துடன் வரத்தொடங்கினர்.

    இதையடுத்து மாமல்லபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகனங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. கிழக்கு கடற்கரை சாலை, பூஞ்சேரி, ஐந்துரதம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் என 3 இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    பூஞ்சேரி டோல்கேட், புறவழிச்சாலை பகுதியில் இருந்து கடற்கரை கோயில், புலிக்குகை, ஐந்துரதம், அர்சுணன்தபசு போன்ற புராதன சின்னம் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மாமல்லபுரம் பஸ் நிலையம் வரை செல்ல தாம்பரம், ஆலந்தூர், குரோம்பேட்டை, அடையாறு டெப்போக்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாநகர மினிபஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்களில் பயணம் செய்ய ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து உற்சாகம் அடைந்தனர். மாமல்லபுரம் பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகளின் கூட்டமாக காணப்பட்டது. இதனால் அங்குள்ள கடைகளில் வியாபாரம் களை கட்டியது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ருக்மாந்தகன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடலில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். திருட்டு, பெண்களை கேலி செய்தல், போதை ஆசாமிகளை பிடிக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணித்தனர்.

    மேலும் மாமல்லபுரம் கடற்கரையில் உயர் கோபுரம் அமைத்து ஒலிபெருக்கி மூலமாகவும், ரோந்து சென்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    பழவேற்காட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் டச்சுகல்லறை, நிழல் கடிகாரம், பழமைவாய்ந்த சிவன் கோவில் உள்ளிட்ட பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மர நிழலில் அமர்ந்து உற்சாகமாக பொழுதை கழித்தனர். ஏற்கனவே சமைத்து கொண்டு வந்து இருந்த உணவை குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பழவேற்காடு பகுதி மக்கள் கூட்டத்தால் திக்கு முக்காடியது.

    சுற்றுலா பயணிகளின் கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த தனித்தனி இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க டி.எஸ்.பி. கிரியா சக்தி திருப்பாலைவனம் ஆய்வாளர் நடராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பொன்னேரி தீயணைப்பு அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

    வடசென்னை அனல்மின் நிலையம், பழவேற்காடு செல்லும் சாலை, காட்டு பள்ளி, பொன்னேரி -பழவேற்காடு சாலை ஆண்டார் மடம், போளாச்சி அம்மன் குளம், ஆகிய இடங்களில் வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் பழவேற்காடு கடலில் குளிக்கவும், படகு சவாரி செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×