search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manimuthar River"

    • நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை உள்ளது.
    • நடுத்தர மக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பது பெரும் கனவாகிவிட்டது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை உள்ளது. இங்கு செல்லும் வழியில் மணிமுத்தாறு அருவி உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருவார்கள்.

    வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி மற்றும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளுக்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிகளுக்கு சொந்த வாகனத்தில் செல்பவர்களோ, வாடகை வாகனத்தில் அதிகப்படியான பணம் செலவழிக்க முடிந்தவர்கள் மட்டுமே செல்லும் நிலை மட்டுமே தற்போது நிலவி வருவதாக நடுத்தர மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

    தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கும் காரணத்தால் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். ஆனால் சுற்றுலா செல்லும் பயணிகள் வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சூழல் சுற்றுலா வாகனத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செல்ல ஒரு நபருக்கு ரூ. 350 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    இத்தொகை அரசு பஸ் கட்டணத்தை விட 10 மடங்கு அதிகமாக இருப்பதாகவும், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பெரும் சவாலான தொகையாக இது இருப்பதாக அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

    அருவிக்கு செல்ல மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் செல்ல அனுமதி இல்லை. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் அல்லது வாடகைக்கு கார் எடுத்து செல்பவர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் நடுத்தர மக்கள் மணிமுத்தாறு அருவியில் குளிப்பது பெரும் கனவாகிவிட்டது. ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது. பணம் படைத்தோருக்கு மட்டுமே அருவிக்கு செல்ல முடியும் என்ற நிலை வந்துள்ளது. இதனால் பணக்கார அருவியாக மணிமுத்தாறு அருவி மாறிவிட்டது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • தென்காசி மாவட்டத்தில் ஆய்குடி, கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 9.50 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • கடனா மற்றும் ராமநதி அணை பகுதிகளில் தலா 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நெல்லை:

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.

    அதன்படி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே பரவலாக பெய்து வருகிறது. நேற்று மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல களக்காடு தலையணையிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் தலையணை மற்றும் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்றும் மலைப்பகுதியில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் குறையவில்லை. இதனால் இன்று 2-வது நாளாக அருவி பகுதிக்கு செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் இன்று அங்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்படுவதாக வனசரகர் பிரபாகரன் அறிவித்துள்ளார். இதையடுத்து நேற்று மூடப்பட்ட தலையணை நுழைவு வாயில், கட்டண வசூல் மையம் மற்றும் சோதனை சாவடி உள்ளிட்டவை இன்று காலை திறக்கப்பட்டது.

    மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட இடங்களில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 32 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 40 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    அம்பை, சேரன்மகாதேவி, முக்கூடல், நாங்குநேரி, நெல்லை, பாளை, கன்னடியன் கால்வாய், களக்காடு, கொடுமுடியாறு அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழை பெய்யவில்லை.

    தென்காசி மாவட்டத்தில் ஆய்குடி, கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 9.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடனா மற்றும் ராமநதி அணை பகுதிகளில் தலா 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. கருப்பாநதியில் 7 மில்லிமீட்டரும், தென்காசியில் 6 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் இன்று விடுமுறை தினம் என்பதால் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    ×