என் மலர்
உள்ளூர் செய்திகள்

மணிமுத்தாறு அருகே கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி- பொதுமக்கள் பீதி
- கோவில் பகுதியில் முகாமிட்டு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
- மக்கள் பீதியில் இருந்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் கரடி வந்தது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள தெற்கு பாப்பன்குளம், ஆலடியூர், மணிமுத்தாறு போன்ற பகுதியில் அவ்வபோது மிளா, காட்டுப்பன்றி, யானை,
சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் இரவு நேரங்களில் சுற்றி திரிகின்றன.
இந்த பகுதிகளில் கரடி நடமாட்டம் என்பது சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இரவு நேரங்களில் அவை சாவகாசமாக வந்து பலாப்பழங்களை சாப்பிடுவதும், தெருக்களில் நடமாடுவதுமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் கரடி வந்தது. அதனை பிடிக்க வனத்துறை கூண்டு வைத்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மணிமுத்தாறு அருகே அண்ணா நகர் பகுதியில் உள்ள தங்கம்மன் கோவிலில் கரடி ஒன்று கோவில் வளாகத்தில் உள்ளே நுழைந்து சுற்றி திரிந்தது. கோவிலில் தீபம் ஏற்ற வைக்கப்பட்டிருந்த எண்ணெய் மற்றும் சுவாமிகளுக்கு படைக்கப்பட்டிருந்த சக்கரை பொங்கல் உள்ளிட்டவற்றை அந்த கரடி தின்றது.
இதுகுறித்தான காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி இருந்தது. இந்த தகவலை அப்பகுதி மக்கள் அம்பை வனத்துறையினருக்கு தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து சென்று கோவில் பகுதியில் முகாமிட்டு கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






