என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை முயற்சி"

    • தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அடுத்த மாதம் 16-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • அதிபருக்கு வழங்கிய சாக்லெட்டுகளை சோதனை செய்தபோது அதில் நச்சுப்பொருட்கள் இருப்பது தெரிந்தது.

    குயிட்டோ:

    தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அதிபர் டேனியல் நோபோவா (37) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளதால் அடுத்த மாதம் 16-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் அவர் மீண்டும் போட்டியிடுவதால் நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் மற்றும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி சமீபத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.

    அப்போது அன்பளிப்பாக அவருக்கு சாக்லெட்டுகள் வழங்கப்பட்டன. அந்த சாக்லெட்டுகளை சோதனை செய்தபோது அதில் அதிக செறிவூட்டப்பட்ட நச்சுப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதுகுறித்து அதிபர் டேனியல் நோபோவா கூறுகையில், இந்த சம்பவம் தற்செயலான நிகழ்வு அல்ல. எனவே விஷசாக்லெட் கொடுத்து தன்னை கொல்ல சதி நடப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து அவரது பாதுகாப்புக்கு பொறுப்பான ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அரசாங்கத்தை கண்டித்து இந்த மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது அதிபர் டேனியல் சென்ற வாகனம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கி–னர். அவரது வாகனத்தில் சில தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

    இந்த தாக்குதல் அதிபரை கொல்ல முயற்சி என ராணுவ மந்திரி கியான் கார்லோ லோப்ரெடோ கூறினார். தற்போது ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அவரை கொல்ல சதி நடைபெற்ற சம்பவம் ஈகுவடார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பேரூராட்சி அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.
    • தமிழகத்தில் பாதுகாப்பு வழங்க இயலாத திமுக ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா?

    பாமக முக்கிய பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாமகவின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ம.க. ஸ்டாலின் அவர்களைப் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய மர்ம நபர்கள் முயற்சித்ததாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    பட்டப்பகலில் ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்திலேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. மாநிலத்தைச் சீர்படுத்த வேண்டிய திமுக அரசு விளம்பரத்தில் ஒரு புறம் மூழ்கியுள்ளது என்றால், மறுபுறம் குற்றங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையாக மாறி வேடிக்கை பார்த்து வருகிறது.

    மக்களுக்கு சேவை செய்யும் அரசியல் தலைவர்களுக்கே தமிழகத்தில் பாதுகாப்பு வழங்க இயலாத இந்த திமுக ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா?

    மாநிலத்தின் அமைதியிலும், மக்கள் பாதுகாப்பிலும் சிறிதும் அக்கறை இருந்தால், பாமக நிர்வாகியைக் கொலை செய்ய முயற்சி செய்த குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ம.க.ஸ்டாலினுடன் சென்ற இருவருக்கு அரிவாள் வெட்டு என தகவல்.
    • ம.க.ஸ்டாலின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    பாமக முக்கிய பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றபோது வழிமறித்து ம.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

    மேலும், ம.க.ஸ்டாலினுடன் சென்ற இருவருக்கு அரிவாள் வெட்டு என தகவல் வெளியாகியுள்ளது.

    ம.க.ஸ்டாலின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, ராமதாஸ் அணியைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின் மீது சணல் குண்டுவீசி கொலை முயற்சி செய்த சம்பவத்தை தொடர்ந்து பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.

    சாலையில் டயர்களை கொளுத்தி ராமதாஸ் ஆதரவு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால், சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தீயை தண்ணீர் ஊற்றி அணைத்து போராட்டக்காரர்களை தடுத்தனர்.

    • விசாரணையில், அவர் நாய்களை மிகவும் நேசித்தது T
    • கூகிள் பே மூலம் ராஜேஷுக்கு ரூ.2,000 அனுப்பிய ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநரும் அடங்குவார்.

    டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கடந்த ஆகஸ்ட் 20 காலையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் அவரை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குற்றம்சாட்டப்பட்டவர் குஜராத்தின் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டி ராஜேஷ்பாய் சகாரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    அவரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நாய்களை மிகவும் நேசித்ததாகவும், டெல்லியில் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் கோபமடைந்து இந்த தாக்குதலை செய்ததாவும் தெரியவந்தது.

    ராஜேஷ் டெல்லிக்கு வந்தபோது, அவரது நகரத்தைச் சேர்ந்த ஐந்து பேருடன் தொடர்பில் இருந்தார். டெல்லி காவல்துறை குழு ராஜ்கோட்டில் ஐந்து பேரை விசாரித்தது. இதில் கூகிள் பே மூலம் ராஜேஷுக்கு ரூ.2,000 அனுப்பிய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரும் அடங்குவார். அந்த ஓட்டுனரையும் ஞாயிற்றுக்கிழமை போலீஸ் காவலில் எடுத்து.

    இந்நிலையில் ராஜேஷ் ரேகா குப்தாவை கொலை செய்யும் திட்டத்துடன் டெல்லி வந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.

    சம்பத்தன்று ராஜேஷ் முதல்வரின் வீட்டிற்கு கத்தியை கொண்டு வந்துள்ளார். ஆனால் போலீஸ் பாதுகாப்பைக் கண்டதும், அவர் கத்தியை சிவில் லைன்ஸ் பகுதியில் வீசினார். அது தற்போது போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.

    • பரசுராமன் நிர்வாணமாக நின்று பூஜை செய்து கொண்டிருந்தார்.
    • ஜெயலட்சுமி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த அக்ரகாரம் பூசிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் திருப்பதி என்பவரின் மகன் பரசுராமன் (வயது33).

    இவர் அதே பகுதியில் உள்ள ராஜாத்தி என்பவரின் வீட்டின் எதிரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பூஜை செய்துள்ளார்.

    அப்போது பரசுராமன் வீட்டின் அருகே வசிக்கும் குமரன் (27) என்பவர் ஏதோ வெளிச்சம் தெரிகிறது என கருதி அருகில் சென்று பார்த்தார்.

    அப்போது பரசுராமன் நிர்வாணமாக நின்று பூஜை செய்து கொண்டிருந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குமரன் ஏன் இங்கு இப்படி பூஜை செய்கிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதை அறிந்த அருகில் இருந்தவர்கள் தட்டி கேட்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது வீட்டில் குமரனும் இவரது தாயார் ஜெயலட்சுமி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது பரசுராமன் அவரது சகோதரர் சாந்தகுமார் (29) இருவரும் குமரன் வீட்டிற்கு வந்தனர். குமரனின் தலை மீது கல்லை போட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஜெயலட்சுமி மற்றும் குமரன் கத்தி கூச்சல் போட்டனர். அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த குமரனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் இதுகுறித்து ஜெயலட்சுமி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரசுராமன், சாந்தகுமார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சைத்ராவுக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
    • முதலில் இது புட் பாய்சன் ஆக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், தனது கள்ளக்காதலைத் தொடர்வதற்காக கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோரின் உணவு மற்றும் காபியில் தூக்கமாத்திரை கலந்து கொல்ல முயன்ற சைத்ரா என்ற 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கஜேந்திரா என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த சைத்ராவுக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சைத்ராவுக்கு ஷிவு என்ற நபருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த உறவுக்கு குடும்பத்தினர் தடையாக இருப்பார்கள் என்று அஞ்சிய சைத்ரா, அவர்களை விஷம் வைத்து கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

    உணவு மற்றும் காபியில் நச்சு மாத்திரைகள் மற்றும் பிற பொருட்களைக் கலந்து கொடுத்ததால், குடும்பத்தினருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதலில் இது புட் பாய்சன் ஆக இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர்.

    கணவர் கஜேந்திராவுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பெலூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் சைத்ரா வேண்டுமென்றே உணவில் தூக்கமாத்திரை கலந்தது உறுதி செய்யப்பட்டது.

    சைத்ரா கைது செய்யப்பட்ட நிலையில், அவரது கள்ளக்காதலன் ஷிவு தலைமறைவாக உள்ளார்.

    • பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டார்.
    • இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சென்ற ஹெலிகாப்டரை குறிவைத்து உக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது. இருப்பினும், புதின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று நள்ளிரவுக்குப் பிறகு புதின் பதற்றமான எல்லைப் பகுதியான குர்ஸ்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

    ஏப்ரல் மாதம் ரஷியா உக்ரேனியப் படைகளை குர்ஸ்க் பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக அறிவித்த பிறகு, புதின் குர்ஸ்க் பகுதிக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.

    புதினின் ஹெலிகாப்டர் பாதையில் உக்ரைனால் ஏவப்பட்ட ஒரு ஆளில்லா விமானம், ரஷிய வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதிபர் ஹெலிகாப்ட்டர் தொடரணி வானில் பறந்து கொண்டிருக்கும்போதே அதைத் தாக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த சம்பவம் குறித்து ரஷிய பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.    

    • தாக்குதலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது.
    • தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை கான்வாயில் சென்ற வாகனங்களில் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், வாகனம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து இந்த சம்பவம் அதிபர் புதினை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பியது.

    இந்த சம்பவம் மாஸ்கோவில் உள்ள உளவுத்துறை தலைமையகமான எஃப்.எஸ்.பி. அருகே நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்களில் கார் தீப்பிடித்து எரிவதும், அங்கிருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.

    அதிபர் கான்வாயில் இடம்பெற்று இருந்த ஔரஸ் செனட் லிமோசின் ரக கார் ஒன்றின் எஞ்சின் பகுதியில் தீ ஏற்பட்டு, பிறகு முகப்பு பகுதி முழுக்க பரவியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் காரின் பெரும்பாலான பகுதி சேதமடைந்துள்ளது. தீப்பிடித்து எரிந்த காரில் இருந்தது யார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. 

    • உள்ளூர் மக்கள் சிலர் அங்கு சென்று, பெண்கள் மீது கொட்டப்பட்ட மண்ணை அகற்றி, இருவரையும் மீட்டனர்.
    • குடும்பச் சொத்தில் உரிய பங்கை கேட்டதால கொல்ல முயன்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்

    ஆந்திராவில் சொத்து பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்திய பெண்களை உயிரோடு புதைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஹரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாளம்மா மற்றும் அவரது மகள் சாவித்ரி ஆகியோருக்கும், அவர்களின் உறவினர்களான ஆனந்தராவ், பிரகாஷ் ராவ், ராமராவ் ஆகிருக்குமிடையே பூர்வீக நிலத்தின் உரிமை தொடர்பாக தகராறு உள்ளது. குடும்ப சொத்தில் தங்களுக்கு உரிய பங்கை தரக்கோரி இரண்டு பெண்களும் 2019ம் ஆண்டு முதல் போராடிவந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று இரண்டு பெண்களும் போராட்டம் நடத்தும்போது, டிராக்டரில் வந்த ராமராவ் மண்ணைக் கொட்டி உயிருடன் புதைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர். இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் சிலர் அங்கு சென்று, பெண்கள் மீது கொட்டப்பட்ட மண்ணை அகற்றி, இருவரையும் மீட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குடும்பச் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைக் கேட்டபோது தங்கள் மீது மண்ணைக் கொட்டி கொல்ல முயன்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

    பிரச்சனைக்குரிய நிலத்தில் ராமராவ், கட்டிடம் கட்டுவதற்காக மண் மற்றும் கிராவலை கொட்டி உள்ளார். இதைப் பார்த்த தாளம்மா மற்றும் அவரது மகள் சாவித்ரி இருவரும் அங்கு சென்று அந்த இடத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி, மண் கொட்டுவதை தடுத்துள்ளனர். எனினும் ராமராவ் மண்ணை கொட்டியுள்ளார். அப்போது பெண்கள் இருவரும் அங்கு அமர்ந்து தர்ணா செய்துள்ளனர். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத ராமராவ், அவர்கள் மீது மண்ணை கொட்டி உள்ளார்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • கடந்த சில ஆண்டுகளாக மனைவி தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக பாறசாலை போலீசில் சுதீர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாணவருக்கு காதலி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீள்வதற்குள் கள்ளக்காதலுக்காக கணவருக்கு மனைவியே விஷம் கொடுத்தள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை அருகே உள்ள முறியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுதீர் (வயது 49). கேரள அரசு போக்குவரத்துக் கழக டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர் தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரியா குடும்பத் தகராறில் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மனைவி தனக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்திருப்பதாக பாறசாலை போலீசில் சுதீர் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

    இதற்கு ஆதாரமாக வீட்டின் பீரோவில் இருந்து கைப்பற்றப்பட்ட அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் சிரிஞ்சை அவர் காண்பித்துள்ளார். மனைவி பிரியாவுக்கும் திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது என்றும் அவர் தான் விஷத்தை கொரியர் மூலம் அனுப்பி இருக்கிறார் என்றும் சுதீர் கூறினார். மேலும் கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு வீட்டில் சாப்பிட்டால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் மனைவி உணவில் விஷம் கலந்து கொடுத்தது தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

    அதன்பேரில் விசாரணை நடத்திய பாறசாலை போலீசார், பிரியா, முருகன் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழ, கணவருக்கு மனைவி விஷம் கொடுத்ததாக கூறப்படும் இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார்.

    கோவை:

    கோவை மலுமச்சம்பட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 29 வயது தேங்காய் வியாபாரி. இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 6 மாதங்களுக்கு முன் தேங்காய் வியாபாரிக்கு அவரது மனைவியின் தங்கையான திருமணமாகாத இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக தேங்காய் வியாபாரியின் மனைவிக்கு தெரியவந்தது.

    அவர் தனது கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலுக்கு மனைவி இடையூறாக இருப்பதாக நினைத்தார். எனவே அவரை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் விஷத்தை கொடுத்து தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி ஆன்லைன் மூலமாக தனது மனைவியை கொல்வதற்கு விஷத்தை வாங்கி உள்ளார். பின்னர் அதனை வீட்டில் மறைத்து வைத்தார்.

    இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேங்காய் வியாபாரி தனது கள்ளக்காதலியுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து அவரது மனைவி மாயமான தனது கணவர் மற்றும் தங்கையை கண்டுபிடித்து தரும்படி செட்டிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியின் தங்கையுடன் ஓட்டம் பிடித்த தேங்காய் வியாபாரியை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் 2 பேரும் மதுரை ஜெய்ஹிந்புரத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போது போலீசார் மனைவியின் தங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த தேங்காய் வியாபாரியை பிடித்தனர். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வடிவேல் முருகனின் ரத்த மாதிரியை ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    • அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான மருந்து அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர்.

    இரணியல்:

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆழ்வார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன் (வயது 32), கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி சுஜா. இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

    கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன், திடீரென இரவில் வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தற்போது மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ள வடிவேல் முருகன், தனது மனைவி மீது புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

    தனது மனைவிக்கு திருமணத்துக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் காதல் இருந்ததாகவும் தற்போது அவருடன் சேர்ந்து தனக்கு மெல்லக் கொல்லும் விஷத்தை மனைவி கொடுத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வடிவேல் முருகன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

    அந்த வீடியோவில் வடிவேல் முருகன் தனது மனைவியின் செல்போனை தற்செயலாக பார்த்த போது தான் கொலை சதி பற்றி தெரிய வந்ததாகவும் தனது மனைவி கள்ளக்காதலனுடன் உரையாடிய வாட்ஸ்அப் ஆதாரம் தனக்கு கிடைத்து இருப்பதாகவும் கூறுகிறார்.

    இந்த உண்மை தனக்கு சரியான நேரத்தில் தெரியாமல் இருந்தால், தான் கொல்லப்பட்டு இருப்பேன் என்றும், அல்லது விபத்தில் சிக்கி இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

    தனது கணவனுக்கு அளித்த மருந்தில் ஏதோ கலந்து கொடுத்ததாக முன்னாள் காதலனுடன் சுஜா பேசிக்கொண்ட தகவல் வாட்ஸ்-அப்பில் பதிவாகி உள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்து வடிவேல்முருகன் போலீசிலும் புகார் அளித்தார். தனது மனைவியையும் அவரது காதலனையும் கைது செய்து தனக்கு அளித்த மருந்தை அறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் அவர் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட போது... வடிவேல் முருகனின் ரத்த மாதிரியை ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான மருந்து அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் காதலன், மாணவர் மெல்லக் கொல்லும் விஷத்தால் கொல்லப்பட்டதாக ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில் தற்போது மனைவியே கணவனுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×