என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாணியம்பாடி அருகே பள்ளி பஸ்சில் சிக்கி 1½ வயது ஆண் குழந்தை பலி
- குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்காயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தாய் மற்றும் சகோதரிகள் கண்முன்னே பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த காவலூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி திலகவதி. தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். 1½ வயது மகன் துர்சாந்த்.
2 பெண் பிள்ளைகளும் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தினமும் காலை அவர்களை ஏற்றி செல்வதற்காக பள்ளி பஸ் வீட்டின் அருகே வந்து நிற்கும். அதேபோல் இன்று காலை மாணவிகளை ஏற்றிச் செல்ல பஸ் வந்தது.
அப்போது, திலகவதி துர்சாந்த்தை அழைத்துக் கொண்டு 2 மகள்களையும் பஸ்சில் ஏற்ற சென்றார். துர்சாந்த் பஸ்சின் முன்பக்கமாக விளையாடி கொண்டிருந்தான்.
இதை கவனிக்காத பஸ் டிரைவர் பஸ்சை ஓட்டியபோது அதன் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த காவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆலங்காயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் மற்றும் சகோதரிகள் கண்முன்னே பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.






