என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டார் பகுதியில் கழிவுநீர் ஓடை சீரமைப்பு - மேயர் மகேஷ் ஆய்வு
    X

    கோட்டார் பகுதியில் கழிவுநீர் ஓடை சீரமைப்பு - மேயர் மகேஷ் ஆய்வு

    • மழை நீருடன் சாக்கடை நீர் ரோடுகளில் கரைபுரண்டு ஓடுவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி
    • மேயர் மகேஷ் அந்த பகுதி முழுவதும் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழை நீருடன் சாக்கடை நீர் ரோடுகளில் கரைபுரண்டு ஓடுவதை தடுக்கும் வகையில் கழிவுநீர் கால்வாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அங்குள்ள ஒரு கடையின் மேற்கூரை சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து மேயர் மகேஷ் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அந்த கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், புகார் வந்ததால் கடையில் ஆய்வு செய்ய அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து மாநகராட்சி சுகாதார அதிகாரி ராஜ்குமார், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் ஆகியோர் அந்தக் கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதைத்தொடர்ந்து மேயர் மகேஷ் அந்த பகுதி முழுவதும் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகரப் பகுதியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு வார்டாக ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கோட்டார் பகுதி மிக முக்கியமான பகுதியாகும். இந்த பகுதியில் மழை நேரங்களில் தண்ணீர் ரோடுகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதை சரி செய்யும் வகையில் கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது.

    தற்பொழுது சாலையில் மழை நீர் தேங்காமல் கழிவு நீர் ஓடையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தற்பொழுது கழிவுநீர் ஓடை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்ததும் கழிவு நீரோடையின் மேல் மூடிகள் அமைக்கப்படும். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    அகற்றப்பட்ட பிறகும் பொதுமக்கள், வியாபாரிகள் மீண்டும் அந்த இடத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குப்பையில்லா மாநகராட்சியாக நாகர்கோவில் மாநகராட்சி மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சதாசிவம் உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×