search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "damaged"

    • ரூ.3 லட்சம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் எரிந்து சேதம் அடைந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் தெற்கு தெருவை சேர்ந்தவர் கூடலிங்க பாண்டியன்(வயது36). பள்ளி ஆசிரியரான இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. தற்போது கரும்பு சாகுபடி செய்து பராமரித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு கரும்பு பயிர்கள் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் எரிந்து சேதமாயின. இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    முதற்கட்ட விசாரணை யில், பக்கத்து நிலத்தில் தீ வைத்ததில் கரும்பு பயிர் களுக்கும் தீ பரவியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது
    • மின் கம்பம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்கிறார்கள்.

    ஈரோடு, 

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம், ஜோசப் தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஜோசப் தோட்டம் பகுதியில் உயர் மின்னழுத்த லைன் செல்கிறது.

    இங்குள்ள ஒரு உயர் மின் அழுத்த லைனில் உள்ள மின்கம்பங்கள் முற்றிலும் சேதம் அடைந்து எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது.மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் கம்பி வெளியே தெரிகிறது.

    அந்தப் பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த மின் கம்பம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கடந்து செல்கிறார்கள். மின் கம்பம் உடைந்து எந்த நேரமும் விழும் சூழ்நிலையில் உள்ளது.

    மேலும் மழை நேரங்களில் இந்த மின் கம்பம் மூலம் மின்சாரம் தாக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.
    • அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட ஓடுகள் தூக்கி வீசப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த பட்டம்பாளையம், காட்டுப்பாளையம், பருத்திக்காட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் பட்டம்பாளையத்தில் ஒரு தென்னை மரம் முறிந்து விழுந்தது. ஒரு பனை மரம் வேரோடு சாய்ந்தது. இதுபோல் பருத்திக்காட்டுப்பாளையம் பகுதியில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதுபோல் சுற்றுப்புற பகுதிகளில் வாழை மரங்களும் சேதமானதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

    சேவூர் அருகே பொங்கலூர் ஊராட்சியில் பகுதியில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்கள் மழை அவ்வப்போது பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் பொங்கலூர் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் தோட்டங்களில் வாழை மரங்கள் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் 5000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது.

    மேலும் பொங்கலூர் புது காலனியில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தது. மேலும் அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரையில் 200 -க்கும் மேற்பட்ட ஓடுகள் தூக்கி வீசப்பட்டன. இதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது சேதமடைந்துள்ள வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவிவசாயிகள் தெரிவித்தனர்.

    • மின்னல் தாக்கியதில் தென்னை மரம் சேதம் அடைந்தது.
    • மீன்சுருட்டி பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்தது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து பெய்த இந்த மழையின் போது காற்று, இடி, மின்னல் ஏற்பட்டது. இதில் காடுவெட்டி வடக்கு தெருவில் உள்ள கிருஷ்ணமூர்த்தி மனைவி அரசிளங்குமாரி (வயது 45) என்பவரின் வீட்டின் முன்பு இருந்த தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் தென்னை மரம் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மீன்சுருட்டி, பாப்பாக்குடி, காடுவெட்டி, இறவாங்குடி, ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

    • மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மணல் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரையில் கடந்த 15 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் கடைவீதிகளுக்கு முன்புள்ள சாலை குண்டுகுழியுமாக மாறிவிட்டன. அதில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இேதபோல் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் சாலையோரம் சேறும், சகதியுமாகி மக்கள் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மழையில் சேதமான சாலைகளை சீரமைக்கவும் ,சேறான பகுதிகளில் மணல் கொட்டவும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் தாமதமின்றி சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மணல் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஜே.சி.பி. வாகனம் எரிந்து சேதம்
    • கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள அடைக்கலபுரத்தைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 39). ஜே.சி.பி. வாகனத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். கலிங்கப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் இவரது ஜே.சி.பி. வாகனத்தின் ஆப்பரேட்டராக உள்ளார். சம்பவத்தன்று ராஜபாளையம் அருகே உள்ள மூக்கரநத்தம் பகுதியில் உள்ள செந்தட்டிக் காளை என்பவருக்கு சொந்தமான வயல் காட்டில் ஜே.சி.பி. உதவியுடன் முள் செடிகளை அப்புறப்படுத்தும் பணியில் கருப்பசாமி ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு மேட்டில் சென்றபோது ஜே.சி.பி. வாகனம் பழுதாகி நின்று விட்டது. இதையடுத்து மெக்கானிக்கை அழைத்து வருவதற்காக கருப்பசாமி சென்றார்.

    அப்போது அருகே உள்ள சோளக்காட்டில் வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் காற்றின் வேகத்தில் தீ பரவி ஜே.சி.பி. வாகனத்தில் தீப்பிடித்தது. அந்த வழியாக வந்தவர்கள் அதனைப் பார்த்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சங்கரன்கோவில் மற்றும் வெம்பக்கோட்டை பகுதியில் இருந்து இரண்டு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் ஜே.சி.பி. வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் ஜே.சி.பி. வாகனம் முழுமையாக எரிந்து சேதமானது. இது குறித்து மாரிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் கீழ ராஜகுலராமன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சாக்கடை நீர் காவேரி நகர் பகுதியில் இருந்து கரைபுரண்டு ஓடி வருகிறது.
    • கழிவு நீர் கால்களில் படும்போது தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

     பெருமாநல்லூர் :

    ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை செல்லும் வழியில் ரெயில்வே பாலத்தின் அடியில் மழைக்காலங்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சாக்கடை நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுசுகிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் கொடிய நோய்கள் பரவும் நிலை உள்ளது. இது குறித்து ஊத்துக்குளி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த சாக்கடை நீர் காவேரி நகர் பகுதியில் இருந்து கரைபுரண்டு ஓடி வருகிறது. அப்படி கரைபுரண்டு வரும் சாக்கடை கழிவு நீரை தடுப்பு கற்கள் மூலம் தடுத்து நிறுத்தியும் சிறிது சிறிதாக கரைந்து மீண்டும் பாலத்தின் அடியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர் .மூக்கை பிடித்துக் கொண்டுதான் நடந்து செல்ல முடிகிறது.அது மட்டுமில்லாமல் நடந்து செல்லும் போது அந்த கழிவு நீர் கால்களில் படும்போது தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் பலமுறை ஊத்துக்குளி ஒன்றிய நிர்வாகத்திடம் குறை சொல்லிவிட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கும் நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இது ரெயில்வே சம்பந்தப்பட்டது என்று கைவிரித்து விடுகிறார்கள்.இதனால் மக்களின் பாதுகாப்புக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆகவே இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர். 

    • சேதமடைந்து காணப்படும் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    • மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் முக்கியமான பகுதியாகும். இந்த பகுதியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெருங்குடி, திருமங்கலம், காரியாபட்டி, வலையங்குளம், மண்டேலாநகர், பர்மா காலனி, மீனாட்சிபுரம், அவனியாபுரம் வழியாக திருப்பரங்குன்றம் செல்லும் பஸ்கள் என 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் அவனியாபுரம் வந்து செல்கிறது.

    அவனியாபுரத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் என இந்த பகுதியில் இருந்து அதிக பஸ்கள் செல்கின்றன. இவைகளில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிர–த்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய அவனியாபுரம் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

    இவர்கள் பயன்பெறும் வகையில் 2 நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிழற்குடைகள் சேதமடைந்து பயணிகள் உயிரை காவு வாங்கும் நிலையில் உள்ளது. ஒரு நிழற்குடை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாநகராட்சி அதிகாரிகள் அந்த நிழற்குடையை சீரமைக்காமல் கம்பு வைத்தும், கயிறுகளாலும் தடுத்துள்ளனர்.

    மற்றொரு நிழற்குடை இலைக்கடை ஆக்கிரமிப்பில் உள்ளது. இங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் அமர இடமில்லாமல் தவிக்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக முதியோர்கள் மாதாந்திர மாத்திரை வாங்க வருவதுண்டு. அவ்வாறு வரும் முதியோர்கள் அதிக தூரம் நடக்க முடியாமல் இந்த நிழற்குடையில் அமர்ந்து செல்வதுண்டு. ஆபத்தான நிலையில் பஸ் பயணிகளுக்கான நிழற்குடை இருப்பது முதியோர்களை அச்சப்பட வைக்கிறது.

    விரைவில் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • மேற்கூரை பெயர்ந்து விழுந்து மருத்துவ கருவிகள் சேதம் அடைந்தது.
    • அந்த வார்டின் வெளிப்புற ஜன்னலின் மேற்கூரை பூச்சும் பெயர்ந்து விழுந்தது.

    மதுரை

    மதுரை கோரிப்பாளையத்தில் அரசு  மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள கட்டிடங்கள் பழமையானவை ஆகும்.

    மதுரையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சில கட்டிடங்களில் கீறல் விழுந்துள்ளது. அவற்றை பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இருந்தபோதிலும் அந்த கட்டிடங்கள் புனரமைக்கப்படவில்லை. மதுரை அரசு ஆஸ்பத்திரி 3-வது தளத்தில் உள்ள 90-வது வார்டு பகுதியில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. அங்கு மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் லேப்ரோஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் சேதம் அடைந்தன.

    மேலும் அந்த வார்டின் வெளிப்புற ஜன்னலின் மேற்கூரை பூச்சும் பெயர்ந்து விழுந்தது. இதில் அங்கு பொருத்தப்பட்டிருந்த குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதே போல குழந்தைகள் வார்டிலும் மேற்கூரை பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன.

    இந்த விபத்துக்களால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டபோது, இட நெருக்கடி காரணமாக வார்டுகளை மாற்றி அமைப்பதில் சிரமங்கள் உள்ளது. புனரமைப்பு செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்என்று தெரிவித்தனர்.

    தென் தமிழகத்தில் எளிய மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் மதுரை அரசு மருத்துவமனையின் கட்டிடங்களை முறையாக பராமரித்து, நோயாளிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • நெல்லை மேலப்பாளையம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை உள்ளது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை உள்ளது.

    இன்று காலை அங்கு வழிபட சென்றவர்கள் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதை பார்த்து நிர்வாகி தங்கவேல் என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இதுகுறித்து மேலப்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தினமும் பூஜை நடைபெறும் நிலையில் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால் நள்ளிரவு அங்கு யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் துணை கமிஷனர் சீனிவாசன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சம்பவம் குறித்து அறிந்த இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள் அங்கு கோவிலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் .சிலையை சேதப்படுத்தி யவர்களை கைது செய்ய வேண்டும், புதிய விநாயகர் சிலை அமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    மேலும் பாளையங்கோட்டை தாசில்தார் அவுடையப்பன் புதிய விநாயகர் சிலை அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்தார். இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திரருச்சுழியில் வீடு தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.
    • வழக்கம்போல் இரவு நேரத்தில் வீட்டில் விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.

    காரியாபட்டி

    விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ரெயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் சுந்தரராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில் சுந்தர் -ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

    இருவரும் தினந்தோறும் இரவு நேரத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வழக்கம்போல் இரவு நேரத்தில் வீட்டில் விளக்குகளை எரிய விட்டு சென்றனர்.

    காலையில் அதிக சத்தத்துடன் பல்பு வெடித்ததாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.

    இதனால் வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி யளித்தது. வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்த நிலையில் அருப்புக்கோட்டை தீயணை ப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இது குறித்து திருச்சுழி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ரெயில் நிலையம் பகுதியில் புகை மண்டலமாக தெரிந்ததால் பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மணிமுத்தாறு அருகே சூறைக்காற்றில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு- மாஞ்சோலை  உயர் அழுத்த மின் பாதையில் நேற்று முன்தினம் சூறை காற்றின் காரணமாக மரங்கள் சாய்ந்து  10 மின் கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்தது.

    இதனையடுத்து மாற்று மின் பாதை மூலம் மாஞ்சோலை பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் போர்க்கால அடிப்படையில் சூறை காற்றால் சாய்ந்து விழுந்த மரங்களும், மின் கம்பங்களும் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மின்கம்பங்களை நடும் பணி நடைபெற்று வந்தது.

     கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளர் சுடலையடும் பெருமாள் தலைமையில் கல்லிடைக்குறிச்சி உதவி செயற்பொறியாளர்  திருசங்கர், கல்லிடைக்குறிச்சி இளநிலை பொறியாளர் (பொறுப்பு) மாதவன் முன்னிலையில் கல்லிடைக்குறிச்சி உப கோட்ட மின் பணியாளர்கள் விைரவாக பணியில் ஈடுபட்டனர். சீரமைப்பு பணிகள் முழுமையடைந்த நிலையில் நேற்று மறுபடியும் மணிமுத்தாறு -மாஞ்சோலை இடையே உயர் மின்னழுத்த பாதையின் வழியே மின்சாரம்  பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
    ×