என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரிழப்பு"

    • குழந்தைகளை தவிர்த்து மற்றவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
    • ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 800 மி.லி. முதல் ஒரு லிட்டர் சிறுநீரை வெளியேற்றும் திறன் கொண்டது.

    உடல் நலனை பேணுவதற்கு தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பது நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. அப்படி 8 டம்ளர் தண்ணீர் மட்டும் பருகினால் போதுமானதா? என்ற கேள்விக்கு அது ஒரு கட்டுக்கதை என்கிறார், டாக்டர் சிரியாக் அபி பிலிப்ஸ். கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த இவர் கல்லீரல் நோய் நிபுணர். கல்லீரல் டாக்டர் என்றும் அழைக்கப்படும் இவர், தினமும் உடலில் ஏற்படும் திரவ இழப்பை ஈடு செய்வதற்கு ஏதுவாக தண்ணீர் பருக வேண்டும் என்றும் கூறுகிறார். உடல் தினமும் எவ்வளவு திரவ இழப்பை சந்திக்கிறது? அதற்கான காரணம் என்ன? தினமும் எவ்வளவு தண்ணீர் பருக வேண்டும்? என்பது பற்றி விளக்கி இருக்கிறார். அது பற்றி பார்ப்போம்.

    எவ்வளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும்?

    நீரிழப்பைத் தவிர்க்க குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் (பானங்கள் மற்றும் தண்ணீர் உட்பட) திரவம் உட்கொள்ள வேண்டும். இந்த நீரில் சுமார் 20 சதவீதம் உண்ணும் உணவில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து கிடைக்கும். இந்த அளவு உணவை பொறுத்து மாறுபடும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக நீர் உள்ளடங்கி இருக்கும். இறைச்சிகளில் மிதமான நீர் கலந்திருக்கும். பதப்படுத்தப்பட்ட, வேகவைத்த பொருட்களில் குறைவான அளவில் நீர் இருக்கும். ஒன்றரை லிட்டர் என்பது குறைந்தபட்ச அளவுதான். அவரவர் உடலமைப்பு, நீரிழப்புக்கு ஏற்ப தண்ணீர் பருகும் அளவு மாறுபடும்.

    வெப்பம்-உடல் செயல்பாடு: கடுமையான வெப்பம் மற்றும் கடின உடலுழைப்பு காரணமாக உடலில் இருந்து வியர்வை வெளிப்படுவதுண்டு. இந்த வியர்வை ஒரு மணி நேரத்திற்கு 300 மி.லி. முதல் 2 லிட்டர் வரை உடலில் திரவ இழப்பை ஏற்படுத்தக்கூடும். உடற்பயிற்சியினால் ஏற்படும் நீரிழப்பை தடுக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 400 மி.லி. முதல் 800 மி.லி. திரவ பானங்களை பருகுமாறு அமெரிக்க விளையாட்டு மருத்துவக்கல்லூரி பரிந்துரை செய்துள்ளது.

    குழந்தைகள்: வயது மற்றும் உடல் செயல்பாட்டை பொறுத்து குழந்தைகளுக்கு நீரின் தேவை மாறுபடும். 2 முதல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 1.3 லிட்டர் தண்ணீரும், 4 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1.6 லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும்.

    மற்றவர்கள்: குழந்தைகளை தவிர்த்து மற்றவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒன்றரை லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். தாக உணர்வு, சிறுநீரக செயல்பாடுகளை பொறுத்து இந்த அளவு மாறுபடும்.

    நீரேற்ற திட்டம்

    மிதமான வானிலை நிலவும் சூழலில் ஒரு நாளைக்கு சுமார் 1.5 லிட்டர் (தண்ணீர், பானங்கள் மற்றும் உணவில் கலந்திருக்கும் ஈரப்பதம்) உட்கொள்வது போதுமானது. மற்ற சமயங்களில் ஒரு நாளைக்கு 2 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் பருகலாம்.

    அதே நேரத்தில் கடுமையான உடற்பயிற்சியோ, உடல் உழைப்போ மேற்கொள்பவர்கள் ஒரு நாளைக்கு 6 முதல் 7 லிட்டர் வரை பருகலாம். கடுமையான வெயில், அதிக வியர்வை வெளியேற்றம் போன்ற சமயங்களில் 10 லிட்டர் தண்ணீர் வரை பருக வேண்டியிருக்கும். மருத்துவரின் ஆலோசனை பெற்று தண்ணீர் பருகுவது நல்லது.

    உடல் எவ்வளவு தண்ணீரை இழக்கிறது?

    நாம் ஓய்வெடுக்கும்போது கூட உடல் தொடர்ந்து நீரிழப்புக்கு ஆளாகிக் கொண்டுதான் இருக்கிறது. 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வசிக்கும்ஆரோக்கியமான நபர் தினமும் சிறுநீர் வழியாக தினமும் சுமார் 500 மி.லி. திரவ இழப்பை எதிர்கொள்கிறார். சுவாசம் மற்றும் சருமத்தில் இருந்து ஆவியாதல் செயல்முறை மூலம் கூட சுமார் 700 மி.லி. நீரை இழக்கிறார். ஒட்டுமொத்தமாக சிறுநீர் கழித்தல், வியர்த்தல், சுவாசித்தல் மற்றும் குடல் அசைவுகள் போன்ற பல்வேறு செயல்முறைகள் மூலம் மனித உடல் ஒரு நாளைக்கு சுமார் 2 லிட்டர் முதல் 3 லிட்டர் தண்ணீரை இழக்கிறது. இது வெப்பமான காலநிலையிலோ, கடுமையான உடற்பயிற்சியின்போதோ அதிகரிக்கக்கூடும்.

    சிறுநீரகங்களின் செயல்பாடு

    ஆரோக்கியமான சிறுநீரகங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 800 மி.லி. முதல் ஒரு லிட்டர் சிறுநீரை வெளியேற்றும் திறன் கொண்டது. அதற்காக ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் என்ற அளவில் தண்ணீர் பருகுவது ஆபத்தானது.

    அப்படி அதிகமாக தண்ணீர் பருகுவது ரத்தத்தில் சோடியத்தை நீர்த்து போகச் செய்து ஹைபோநெட்ரீமியா எனப்படும் சோடியம் குறைபாடு சார்ந்த நோய் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    நீரேற்றமாக இருப்பது எப்படி?

    8 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும் என்பதை மறந்துவிடுங்கள். அதற்கு பதிலாக உடலின் சமிக்ஞைகளை கவனியுங்கள். சிறுநீர் தெளிவாகவோ அல்லது வெளிர் மஞ்சள் நிறமாகவோ இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் தண்ணீர் கூடுதலாக பருக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடைசியாக எப்போது தாகமாக உணர்ந்தீர்கள் என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப தண்ணீர் பருகுங்கள்.

    • தாகம் நீரிழப்பின் முதல் அறிகுறியாகும்.
    • நீரிழப்புடன் இருக்கும்போது ரத்த ஓட்டத்தின் அளவு குறையும்.

    கோடை காலத்தில் சுட்டெரித்த வெயிலால் ஏற்பட்ட நீரிழப்பை ஈடுசெய்ய அடிக்கடி தண்ணீர் பருகியவர்கள் மழைக்காலம் தொடங்கியதும் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவார்கள். பருவநிலை மாறினாலும் போதுமான அளவு தண்ணீர் பருகாவிட்டால் நீரிழப்பு ஏற்பட்டு பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ஒருசில அறிகுறிகள் உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருப்பதை உணர்த்தும். அவை...

    தாகம்

    இதுதான் நீரிழப்பின் முதல் அறிகுறியாகும். நீரிழப்புடன் இருக்கும்போது, தாகம் ஏற்படுவதை உணர்த்த உடல் மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்பும். அதிக தாகமாக இருப்பதை நீங்கள் உணர்வதற்குள் ஓளரவு உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் அடிக்கடி சிறிதளவாவது தண்ணீர் பருக வேண்டும்.

    சிறுநீர் கழித்தல்

    உடல் நீரிழப்புக்கு ஆளாகும்போது, திரவங்களை சேமிக்க முயற்சிக்கும். அதனால் சிறுநீர் வெளியேறுவது தாமதமாகும். அல்லது குறைவாகவே சிறுநீர் வெளியேறும். நீண்ட நேரமாக சிறுநீர் கழிக்காமல் இருந்தால் உடல் நீரிழப்புக்கு உள்ளாகி இருப்பதை உணர்த்தும். வெளியேறும் சிறுநீரின் நிறமும் மாறி இருக்கும்.

    வாய் வறட்சி

    நீரிழப்பு ஏற்பட்டிருந்தால் வாய் மற்றும் உதடுகள் வறண்டு போய்விடும். உதட்டில் ஆங்காங்கே சிறு சிறு வெடிப்புகளும் ஏற்படக்கூடும். உதடு நன்றாக உலர்ந்த நிலையில் காணப்படும். வாய் துர்நாற்றமும் ஏற்படக்கூடும்.

    சோர்வு - மயக்கம்

    நீரிழப்புடன் இருக்கும்போது ரத்த ஓட்டத்தின் அளவு குறையும். அதன் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்படும். அதனால் சோர்வு மற்றும் தலைச்சுற்றல் உண்டாகக்கூடும். சிலருக்கு மயக்கமும் ஏற்படும்.

    தலைவலி

    நீரிழப்பு அதிகரித்துவிட்டால் தலைவலியை ஏற்படுத்தும்.ஏனெனில் திரவங்களின் பற்றாக்குறை காரணமாக மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டமும் பாதிப்படையும். அதன் வெளிப்பாடாக தலைவலியால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

    உலர்ந்த சருமம்

    நீரிழப்பு உதட்டை மட்டுமல்ல சருமத்தை வறண்டுபோக செய்துவிடும். சருமத்தின் மென்மைத்தன்மை மாறிவிடும். சிலருக்கு அரிப்பு ஏற்படக்கூடும்.

    கண்கள்

    நீரிழப்பு கண்களையும் பாதிப்படையச் செய்துவிடும். நீரிழப்பை ஈடு செய்ய கண்களைச் சுற்றியுள்ள எல்லா இடங்களில் இருந்தும் திரவங்களை இழுக்கும். அதனால் கண்களை சுற்றி வறண்டு, குழி விழுந்தது போல் காட்சி அளிக்கும்.

    தசைப்பிடிப்பு

    நீரிழப்பு உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கும். அதன் காரணமாக தசைப்பிடிப்பு உண்டாகும். குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது அதற்குப் பிறகோ தசைப்பிடிப்பால் அவதிப்பட வேண்டியிருக்கும். இதனை தவிர்க்க போதிய அளவு தண்ணீர் பருகுவதை உறுதி செய்ய வேண்டும்.

    • உடல் நீரில் 15 முதல் 25 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டால் மரணம் ஏற்படுகிறது.
    • நீர்ச்சத்து மிகுந்த பழங்களை உண்ணுங்கள்.

    நமது உடலுக்குத் தேவையான மொத்த நீரின் அளவு குறையும்போது ஏற்படுகிற உடலியல் மாற்றமே நீரிழப்பு என்று அழைக்கப்படுகிறது. இந்த நீர்ப்பற்றாக்குறையால் வளர்சிதை மாற்ற செயல்முறைகளுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. பொதுவாக அதிக நேரம் உடற்பயிற்சி செய்யும்போதும், உடல் நலமற்று இருக்கும்போதும், அதிக வெப்பநிலை காரணமாக நீர் உட்கொள்ளலை மீறும் போதும் நீர்ப்போக்கு ஏற்படுகிறது.

    மனிதர்கள் உடலில் உள்ள மொத்த நீரில் 3 முதல் 4 சதவீதம் நீர் குறையும்போது ஏற்படுகிற உடல் பாதிப்புகளை பொறுத்துக்கொள்ள முடியும். அது 5 முதல் 8 சதவீதமாக உயரும்போது உடல் சோர்வையும் தலைச்சுற்றலையும் ஏற்படுத்தும். மொத்த உடல் நீரில் 10 சதவீதத்துக்கும் மேலாக நீர் இழப்பு ஏற்படுகிறபோது கடுமையான தாகத்துடன் உடலும் மனமும் பலவீனம் அடைந்து கீழே சரிந்து விழுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

    உடல் நீரில் 15 முதல் 25 சதவீதம் வரை இழப்பு ஏற்பட்டால் மரணம் ஏற்படுகிறது. நீரிழப்பு பாதிப்பால் ரத்தத்தில் சோடியம் அயனிகளின் அளவு அதிகமாகி, ரத்த பிளாஸ்மா குறைகிறது. இதுவே, உடலை சோர்வாக்கி, கடுமையான விளைவுகளை உண்டாக்குகிறது. எனவே குழந்தைகளே பெற்றோர்களே தண்ணீர் குடியுங்கள். உங்கள் உடலில் உள்ள தண்ணீர் அளவு குறையாமல் பார்த்து கொள்ளுங்கள். நீர்ச்சத்து மிகுந்த பழங்களை உண்ணுங்கள்.

    வீட்டு வாசல்களில் மண்பானையில் தண்ணீர் வைக்கும் பழக்கமுறையை உங்கள் வீடுகளில் செயல்படுத்துங்கள். தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் விலைமதிப்பற்ற உயிர்களை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும்.

    ×