என் மலர்
நீங்கள் தேடியது "மத்தியப் பிரதேசம்"
- மயக்க நிலையில் இருந்த பெண்கள் குப்பைத் தொட்டிக்கு அருகிலும், திறந்தவெளி தரையிலும், கடும் வெயிலிலும் படுக்க வைக்கப்பட்டனர்.
- குடிக்கத் தண்ணீரும் இல்லை. அழுக்கான அந்த இடத்தில் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே எங்களை விட்டுவிட்டார்கள்.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள பாக் பகுதியில் உள்ள சமூக நல மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் நடைபெற்றது.
சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 180 பழங்குடியினப் பெண்கள் இந்த முகாமிற்கு வந்திருந்தனர்.
30 படுக்கைகள் மட்டுமே கொண்ட அங்கு, வந்திருத்தவர்களில் 175 பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.
முகாம் மருத்துவரான ராகேஷ் தாவர், மதியம் 3 மணிக்கு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அவர் ஒரு அறுவை சிகிச்சையை வெறும் 2 முதல் 5 நிமிடங்களுக்குள் முடித்துள்ளார். சில மணி நேரங்களிலேயே 175 அறுவை சிகிச்சைகளை அவர் செய்துள்ளார்.
அறுவை சிகிச்சை முடிந்த பின், மயக்க நிலையில் இருந்த பெண்கள் குப்பைத் தொட்டிக்கு அருகிலும், திறந்தவெளி தரையிலும், கடும் வெயிலிலும் படுக்க வைக்கப்பட்டனர்.
பெண்களுக்குக் குடிநீர், உணவு, நிழலுக்குக் கூடாரம் என எதுவுமே வழங்கப்படவில்லை. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் இருந்தும், சுகாதாரமற்ற முறையில் தரையில் கிடத்தப்பட்டுள்ளனர்.
"எங்களை காலை 8 மணிக்கே வரச் சொன்னார்கள். ஆனால், நாள் முழுவதும் எங்களுக்கு உணவோ அல்லது தண்ணீரோ கூட வழங்கப்படவில்லை" என்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் தெரிவித்தார்.
மற்றொரு பெண், "மயக்க மருந்து கொடுத்ததால் உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்ததும் என்னை வெளியே தூக்கி வந்து வெயிலில் தரையில் கிடத்தினார்கள்.
அங்கு படுக்கைகள் இல்லை, குடிக்கத் தண்ணீரும் இல்லை. அழுக்கான அந்த இடத்தில் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே எங்களை விட்டுவிட்டார்கள்." என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து செய்தி பரவியதை அடுத்து, சுகாதாரத் துறை, சம்பந்தப்பட்ட பி.எம்.ஓவை பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
- அதர்வா தானே ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.
- உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தினர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்தவர் 19 வயது இளைஞர் அதர்வா சதுர்வேதி.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான EWS கோட்டாவின் கீழ் இரண்டு முறை இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வில் அதர்வா தேர்ச்சி பெற்றார். இரண்டாவது முறை 530 / 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆனால் மத்தியப் பிரதேச அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் EWS இடஒதுக்கீட்டை அமல்படுத்தாததால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அதர்வா வழக்கு தொடர்ந்தார். ஆனால் அங்கு நீதி கிடைக்காததால், உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் வாயிலாக அதர்வா தானே ஆஜராகி தனது வாதங்களை முன்வைத்தார்.
மாணவனின் வாதத்தைக் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒரு வார காலத்திற்குள் அதர்வாவிற்கு 2025-26 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் தற்காலிக சேர்க்கை வழங்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் மாநில அரசிற்கும் உத்தரவிடப்பட்டது.
தனியார் கல்லூரிகள் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்றவில்லை என்றால், அவற்றைப் பூட்டிவிடுங்கள் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் காட்டமாக தெரிவித்தார்.
- கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அடையாளம் காணப்பட்டார்.
- தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் வீசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிஷத்புரா பகுதியில் கமல் நகர் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை, இங்குள்ள ஒரு செப்டிக் டேங்கிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
செப்டிக் டேங்கிற்குள் சோதனை செய்தபோது, ஒரு இரும்புப் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்த டாட்டூவை வைத்து அவர் மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவைச் சேர்ந்த அஷ்ரபி என்று அடையாளம் காணப்பட்டார்.
போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தது.

மத்தியப் பிரதேசத்தை சமீர் கான் என்ற ஆட்டோ ஓட்டுநருக்கும், அஷ்ரபிக்கும் ஓராண்டிற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக அஷ்ரபி போபாலில் சமீருடன் வசித்து வந்துள்ளார்.
ஏற்கனவே திருமணமான சமீரைத் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அஷ்ரபி வற்புறுத்தியதாகவும், பணம் தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சமீர், கடந்த பிப்ரவரி 7 இல் அஷ்ரபியை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, தனது மனைவி, தாய், சகோதரன் மற்றும் சகோதரியின் உதவியுடன் சடலத்தை ஒரு இரும்புப் பெட்டிக்குள் திணித்து, வீட்டின் அருகே இருந்த செப்டிக் டேங்கிற்குள் சமீர் வீசியுள்ளார்.
இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி சமீர் கான் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.
- தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் பால்காவாடா பகுதியில் பால்காட் என்ற கிராமம் அமைந்துள்ளது.
கடந்த 1980 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் இருந்து ரூ.100 மதிப்புள்ள கோதுமை திருடு போனது.
கோதுமையை திருடியதாக சலீம் மற்றும் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.
தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.
மறுபுறம் மாநில அளவிலான நீண்ட கால வழக்குகளளில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணிகளை மத்தியப் பிரதேச காவல்துறை தீவிரப்படுத்தியது.
இந்நிலையில் சலீமின் முன்னாள் கூட்டாளி ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சலீமை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
- கோயிலில் வழிபட வந்திருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது.
- வைஷ்ணவி (11), சாயா (7) மற்றும் கரிஷ்மா (9) ஆகிய மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் ரூலி பகுதியில் உள்ள அஹ்ரௌலி கிராமத்தில் மாதா கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் பழைய கூரையை இடித்துவிட்டு, அங்கு கோபுரம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இன்று (பிப்ரவரி 9) மதியம் 2 மணியளவில் பணியின்போது எதிர்பாராதவிதமாக கூரை இடிந்து விழுந்தது.
கோயிலில் வழிபட வந்திருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி வைஷ்ணவி (11), சாயா (7) மற்றும் கரிஷ்மா (9) ஆகிய மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் ஆசிரியர் செய்த செயலைக் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் வகுப்பறையில் வைத்து 1 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
திகம்கர் மாவட்டம் பலேரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்ற அந்த 6 வயது சிறுமியை ஆசிரியர், பள்ளியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் ஆசிரியர் செய்த செயலைக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பலேரா காவல் நிலையத்தில் திரண்டு புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போக்சோவின் கீழ் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
- குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தியாவின் தூய்மையான நகரம் எனப் பெயர் பெற்ற இந்தூரில், மீண்டும் அசுத்தமான குடிநீரைக் குடித்ததால் ஒரே பகுதியில் 22 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தூரின் மௌ பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 22 பேருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இவர்களில் நிலைமை மோசமாக இருந்த 9 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் சிவம் வர்மா மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நிலைமையைக் கேட்டறிந்தார்.
குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே சில வாரங்கள் முன் இந்தூரின் பாகீரத்புரா பகுதியில் இதேபோல அசுத்தமான குடிநீரால் 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- அந்த பெண்ணைக் கொண்டே சோனுவைத் தொலைபேசியில் அழைக்கச் செய்து, அவரை வரவழைத்துள்ளனர்.
- வீடியோவாகப் பதிவு செய்து சோனுவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த 18 வயது இளைஞர் சோனு.
இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு அந்தப் பெண் தன் வீட்டிலிருந்து வெளியேறி, போபாலில் சோனுவுடன் வசித்து வந்தார்.
இதையறிந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரைப் பலவந்தமாக ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர், அந்த பெண்ணைக் கொண்டே சோனுவைத் தொலைபேசியில் அழைக்கச் செய்து, அவரை ராஜஸ்தானுக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு சென்ற சோனுவைக் கடத்திய பெண்ணின் குடும்பத்தினர், அவரை ஒரு இடத்தில் மூன்று நாட்கள் அடைத்து வைத்துத் தடியால் அடித்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
மேலும், ஒரு பாட்டிலில் சிறுநீரை நிரப்பி அவரை வலுக்கட்டாயமாகக் குடிக்க வைத்துள்ளனர்.
இந்தக் கொடூரச் செயலை வீடியோவாகப் பதிவு செய்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், அதனைச் சோனுவின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சோனுவின் பெற்றோர், போபால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் இணைந்து இந்த புகாரை விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை ராஜஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை வீதிகள் வழியாக 1.5 கி.மீ தூரம் தரதரவென இழுத்துச் சென்றனர்.
- நூற்றுக்கணக்கான மக்கள் இதனை வேடிக்கை பார்த்த போதிலும், யாரும் தடுக்க முன்வரவில்லை.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் 16 வயது சிறுவனை கும்பல் ஒன்று நிர்வாணப்படுத்தி தாக்கி 1.5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனும், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததை தொடர்ந்து, சிறுவன் சிறையிலும், சிறுமி சீர்திருத்தப் பள்ளியிலும் வைக்கப்பட்டனர் என்று கூறபடுகிறது.
இந்தச் சம்பவத்தால் சிறுமியின் குடும்பத்தினர் சிறுவன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர்.
சிறையில் இருந்து விடுதலையான சிறுவன், தனது மாற்றுத்திறனாளி தாயுடன் உஜ்ஜைன் இல் இருந்து வெளியேறி தேவாஸ் பகுதியில் வசித்து வசித்து வந்தான்.
தனது தாயின் மருத்துவச் செலவுக்காகப் பணம் திரட்ட இந்த வாரம் உஜ்ஜைன் திரும்பியபோது, சிறுமியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிறுவனை வழிமறித்துள்ளனர்.
சிறுவனைப் பிடித்து ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்திய கும்பல், சிறுவனின் கைகளைக் கயிற்றால் கட்டி, மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தை வீதிகள் வழியாக 1.5 கி.மீ தூரம் தரதரவென இழுத்துச் சென்றனர்.
நூற்றுக்கணக்கான மக்கள் இதனை வேடிக்கை பார்த்த போதிலும், யாரும் தடுக்க முன்வரவில்லை.
மாறாக, பலர் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர்.
இறுதியாக காவல் நிலையத்திற்கு அருகே வந்தபோது சிறுவனை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக சிறுவன் நேற்று முன் தினம் அளித்த புகாரின் பேரில், நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- தன்னைவிட 41 வயது இளையவரின் காலில் விழுந்து வணங்க முயன்ற தேவேந்திர குமாரின் இந்தச் செயல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இது முற்றிலும் கலாசார வெளிப்பாடு.
பாஜக எம்.பி.யும் மத்திய தகவ்லதொடர்புத் துறை அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் காலில் 73 வயது பாஜக எம்எல்ஏ, விழுந்து வணங்க முற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ வான தேவேந்திர குமார் ஜெயின் (73) உடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில், ஜோதிராதித்ய சிந்தியாவின் மகன் மஹாரியமான் சிந்தியாவும் கலந்து கொண்டார்.
இதன்போது, கேக் வெட்டி, தேவேந்திர குமாருக்கு மஹாரியமான் ஊட்டி விட்டார்.
இதைத்தொடர்ந்து 31 வயதேயான மஹாரியமானின் காலில் 73 வயதான தேவேந்திர குமார் விழுந்து வணங்க முயன்றார்.
தன்னைவிட 41 வயது இளையவரின் காலில் விழுந்து வணங்க முயன்ற தேவேந்திர குமாரின் இந்தச் செயல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பேசிய தேவேந்திர குமார் , "எனக்காக மஹாரியமான் பிறந்தநாள் வாழ்த்து பாடியதால் நான் உணர்ச்சிவசப்பட்டேன். இதனால்தான், அவரது கால்களைத் தொட முயன்றேன்.
இது முற்றிலும் கலாசார வெளிப்பாடு. இளம் வயதினரின் கால்களைத் தொடுவது குறித்து அரசியலமைப்பில் எதுவும் எழுதப்படவில்லை" என்று தெரிவித்தார்.
- பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- இறந்த பறவைகளின் வயிற்றில் அரிசி மற்றும் சிறிய கூழாங்கற்கள் காணப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் உணவு விஷம் காரணமாக 200 கிளிகள் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்வா பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் உள்ள ஒரு நீர்வழிப் பாலம் அருகே இறந்து கிடந்த கிளிகள் கண்டெடுக்கப்பட்டன. மீட்பு நடவடிக்கைகளின்போது சில கிளிகள் உயிருடன் இருந்தன. ஆனால் உணவின் நச்சுத்தன்மை மிகவும் கடுமையானதாக இருந்ததால் அவை சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டன என்று மாவட்ட வனவிலங்கு காப்பாளர் டோனி சர்மா தெரிவித்தார்.
வனத்துறை அதிகாரிகள் நீர்வழிப் பாலத்தின் அருகே கிளிகளுக்கு உணவளிப்பதை தடைசெய்து, அந்த இடத்தில் ஊழியர்களை நியமித்துள்ளனர்.
பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கால்நடை துறை அதிகாரிகள் கூறுகையில்,
கிளிகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர் டாக்டர் மனிஷா சவுகான், கிளிகளில் உணவில் விஷத்தின் அறிகுறிகள் காணப்பட்டதாகவும், பறவைக் காய்ச்சலுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை. மக்கள் பெரும்பாலும் அறியாமலேயே பறவைகளுக்கு உணவளிக்கிறார்கள். இது அவற்றின் செரிமான அமைப்புக்கு ஆபத்தானது என்று கூறினார்.
கால்நடை விரிவாக்க அதிகாரி டாக்டர் சுரேஷ் பாகேல் கூறுகையில், இறந்த பறவைகளின் வயிற்றில் அரிசி மற்றும் சிறிய கூழாங்கற்கள் காணப்பட்டது. இறப்புகள் முறையற்ற உணவினால் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட வயல்களில் உணவளிப்பது மற்றும் நர்மதா நதியிலிருந்து வரும் நீர் ஆகியவை இதற்கு காரணங்களாக இருக்கலாம் என்று கூறினார்.
பாலத்திற்கு வருபவர்கள் சமைத்த அல்லது மீதமுள்ள உணவை பறவைகளுக்கு உணவளிப்பதால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- எனது மக்கள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்
- வீணான அல்லது பயன்றற கேள்விகளை கேட்காதீர்கள்
இந்தியாவின் தூய்மையான நகரம் என 8வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி தற்போதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த உயிரிழப்புகள் தொடர்பாக மத்தியப்பிரதேச அமைச்சரும், அத்தொகுதியின் பாஜக எம்.எல்.ஏவுமான கைலாஷ் விஜயவர்க்கியாவிடம் ஆங்கில ஊடக நிரூபர் ஒருவர் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், Phokat prashn mat puchiye எனக் கூறியுள்ளார். அதாவது வீணான அல்லது பயன்றற கேள்விகளை கேட்காதீர்கள் எனக் கூறியுள்ளார். மேலும் "கண்டா" (ghanta) என்றும் கூறியுள்ளார்.
ஹிந்தியில் "கண்டா" என்ற சொல் பேச்சுவழக்கில் பயன்றறது, குப்பை, ஒன்றுமில்லை என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. சில வார்த்தைகள் பேசத் தடுமாறிய பிறகு, அந்த பாஜக அமைச்சர் கண்டா என்ற சொல்லை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு உடனே எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரை ஒழுங்காகப் பேசுமாறு பத்திரிக்கையாளர் கூறினார். இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பத்துபேர் செத்ததெலாம் ஒரு விஷயமா? என்ற தொனியில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த தற்போது மன்னிப்பு கோரியுள்ளார் பாஜக அமைச்சர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
"நானும் எனது குழுவினரும் கடந்த இரண்டு நாட்களாக உறக்கமின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமையைச் சீரமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். அசுத்தமான நீரினால் எனது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், சிலர் நம்மை விட்டு பிரிந்தும் சென்றுவிட்டனர். இந்த ஆழ்ந்த துயரமான நிலையில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது எனது வார்த்தைகள் தவறாக வெளிவந்துவிட்டன. இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆனால், எனது மக்கள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் வரை நான் அமைதியாக இருக்க மாட்டேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.






