2 நிமிடத்தில் அறுவை சிகிச்சை - 175 பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த அவலம்

மயக்க நிலையில் இருந்த பெண்கள் குப்பைத் தொட்டிக்கு அருகிலும், திறந்தவெளி தரையிலும், கடும் வெயிலிலும் படுக்க வைக்கப்பட்டனர்.குடிக்கத் தண்ணீரும் இல்லை. அழுக்கான அந்த இடத்தில் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே எங்களை விட்டுவிட்டார்கள்.
2 நிமிடத்தில் அறுவை சிகிச்சை - 175 பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த அவலம்
Published on

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள பாக் பகுதியில் உள்ள சமூக நல மையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அரசு திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாட்டு முகாம் நடைபெற்றது.

சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 180 பழங்குடியினப் பெண்கள் இந்த முகாமிற்கு வந்திருந்தனர்.

30 படுக்கைகள் மட்டுமே கொண்ட அங்கு, வந்திருத்தவர்களில் 175 பெண்கள் அனுமதிக்கப்பட்டனர்.

முகாம் மருத்துவரான ராகேஷ் தாவர், மதியம் 3 மணிக்கு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அவர் ஒரு அறுவை சிகிச்சையை வெறும் 2 முதல் 5 நிமிடங்களுக்குள் முடித்துள்ளார். சில மணி நேரங்களிலேயே 175 அறுவை சிகிச்சைகளை அவர் செய்துள்ளார்.

அறுவை சிகிச்சை முடிந்த பின், மயக்க நிலையில் இருந்த பெண்கள் குப்பைத் தொட்டிக்கு அருகிலும், திறந்தவெளி தரையிலும், கடும் வெயிலிலும் படுக்க வைக்கப்பட்டனர்.

பெண்களுக்குக் குடிநீர், உணவு, நிழலுக்குக் கூடாரம் என எதுவுமே வழங்கப்படவில்லை. நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் இருந்தும், சுகாதாரமற்ற முறையில் தரையில் கிடத்தப்பட்டுள்ளனர்.

"எங்களை காலை 8 மணிக்கே வரச் சொன்னார்கள். ஆனால், நாள் முழுவதும் எங்களுக்கு உணவோ அல்லது தண்ணீரோ கூட வழங்கப்படவில்லை" என்று பாதிக்கப்பட்ட ஒரு பெண் தெரிவித்தார்.

மற்றொரு பெண், "மயக்க மருந்து கொடுத்ததால் உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்ததும் என்னை வெளியே தூக்கி வந்து வெயிலில் தரையில் கிடத்தினார்கள்.

அங்கு படுக்கைகள் இல்லை, குடிக்கத் தண்ணீரும் இல்லை. அழுக்கான அந்த இடத்தில் தொற்று ஏற்படும் என்று தெரிந்தே எங்களை விட்டுவிட்டார்கள்." என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து செய்தி பரவியதை அடுத்து, சுகாதாரத் துறை, சம்பந்தப்பட்ட பி.எம்.ஓவை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com