என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அழகுகுறிப்பு"
- கிரீம்களில் இந்த ரோஜா இதழ்கள் பயன் படுத்துவார்கள்.
- ரோஜா இதழ்களில் பல வகையான சத்துகள் உள்ளது.
இயற்கையாகப் பயன்படுத்தும் அனைத்து க்ரீம்களில் இந்த ரோஜா இதழ்கள் பயன்படுத்துவார்கள். அந்த ரோஜா இதழ்கள் பயன்படுத்தி தனியாக பவுடர் செய்தால் எப்படி இருக்கும். ரோஜா இதழ்களில் பல வகையான சத்துகள் உள்ளது.
தேவையான பொருள்கள்:
எலுமிச்சை பழம் – 1
வெள்ளை வினிகர் -2 ஸ்பூன்
ரோஜா பூ இதழ்கள் – 1கப்
புதினா இலைகள் – 1கப்
செய்முறை:
* முதலில் ஓரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதை இரண்டாக வெட்டி அதில் உள்ள விதைகளை எடுத்து விட்டு நன்றாகப் பிழியவும்.
* அதில் வரும் சாற்றை இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். ரோஜா இதழ்கள் மற்றும் புதினா இலைகள் இரண்டையும் வெயிலில் காய வைத்து அரைக்க வேண்டும்.
* அரைத்த பிறகு, அதை ரோஜா இதழ்கள் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். அதில் புதினா இலைகளை அரைத்து ஒரு கப் அளவிற்கு அதில் சேர்க்கவும்.
* அதில் பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் கலக்கினால் முகம் மற்றும் உடலுக்குப் பயன்படுத்த பேஸ்ட் தயார்.
* எலுமிச்சை சாறு சிலருக்குச் சேராமல் உடலில் அரிப்புகள் மற்றும் அலர்ஜிகள் வரும். அப்படி வந்தால் எலுமிச்சை சாற்றுக்குப் பதிலாக வெள்ளை வினிகர் கூட சேர்த்துப் பயன்படுத்தலாம்.
* இதை உடல் மற்றும் முகம் முழுவதுமாக அப்ளை செய்து ஒரு அரை மணி நேரம் உலர விடவும். அதற்குப் பின், தண்ணீரில் குளிக்கலாம். இதை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்யலாம். பெண்கள் பயன்படுத்தும் போது இதனுடன் மஞ்சள் சேர்த்துக் குளிக்கலாம்.
ரோஜா இதழ்கள் பயன்கள்
ரோஜா இதழ்கள் பல இயற்கையாகத் தயாரிக்கும் க்ரிம்களில் இது கண்டிப்பாக இருக்கும் அதற்குக் காரணம். இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீக்கி அழகாகவும் மற்றும் மிருதுவாகவும் மாற்றித் தரும். இது சருமத்தில் உள்ள ஈரப்பதம் குறையாமல் மற்றும் வறட்சியான சருமம் ஆக இருந்தால் இது ஈரப்பதம் ஆக மாற்றித் தரும்.
இந்த ரோஜா இதழைச் சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு மற்றும் சீதபேதி போன்ற பிரச்சினைகளைச் சரி செய்யும். உடலுக்குக் குளிர்ச்சி தன்மை அதிகரிக்கும். இது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
- குளிர்காலங்களில் சருமம் அதிக வறட்சியாக காணப்படும்.
- சருமம் எரிச்சலின்றி பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும்.
பொதுவாகவே குளிர்காலங்களில் சருமம் அதிக வறட்சியாக காணப்படும். இந்த சமயங்களில் சிலர் சருமத்தை ஈரப்பதமாக வைத்து கொள்ள மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துகின்றனர். சிலர் இதற்கென பேசியல் செய்து சருமத்தை பேணுகின்றனர். சரும வறட்சி பிரச்சினைகளில் இருந்து விடுபட ஒவ்வொரு முறைகளை பெண்கள் பின்பற்றினாலும் கிளிசரின் சோப் அதற்கு நல்ல தீர்வாக இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
தற்போது சமூக வலைதளங்களில் பலரும் ஆர்கானிக் சோப்புகளை தயார் செய்து விற்று வருகின்றனர். ஆனால் செலவு அதிகம் இருக்கும் என எண்ணி அதனை வாங்கி உபயோகம் செய்ய மக்கள் தயங்குகின்றனர். குறைந்த செலவில் நாமே வீட்டில் ஆர்கானிக் சோப்புகளை செய்ய முடியும். கிளிசரின் சோப் எளிய முறையில் செய்யக் கூடியது. நாம் வீட்டிலேயே சோப்களை தயார் செய்து பயன்படுத்தலாம். திரவ வடிவில் இருக்கும் கிளிசரின் சருமத்தை அழகுபடுத்துவதோடு ஈரப்பதமாகவும் வைக்கிறது. இதனை சோப்பாக செய்து பயன்படுத்தும் சருமம் எரிச்சலின்றி பஞ்சு போல மென்மையாகவும் இருக்கும். இதனை வீட்டிலேயே செய்து உபயோகம் செய்ய முடியும்.
கிளிசரின் சோப் செய்ய சில வாசனை திரவியங்கள் (ரோஸ் ஆயில், லாவெண்டர் எண்ணெய், பெப்பர்மின்ட் எண்ணெய்), கிளிசரின் பேஸ், இயற்கை நிறமூட்டிகள் ஆகியவை தேவை. இயற்கை நிறமூட்டியாக மஞ்சள் தூள், குங்குமப்பூ பயன்படுத்தலாம். சோப் தயார் செய்ய சிலிக்கான் மோல்ட் எனும் அச்சுகளை வாங்க வேண்டும்.
கிளிசரின் பேசை எடுத்து குட்டி துண்டுகளாக நறுக்கி வையுங்கள். ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து அதனை மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். நல்ல கைபிடியுடன் வாட்டமான பாத்திரத்தில் நறுக்கிய கிளிசரினை எடுத்து ஏற்கனவே சூடாகி கொண்டிருக்கும் நீரில் வைக்க வேண்டும். கவனமாக இருங்கள் பாத்திரம் மூழ்க கூடாது. இதை தான் டபுள் பாயிலிங் என்பார்கள். இந்த கிளிசரின் துண்டுகள் நன்கு உருகும் வரை சுத்தமான கரண்டியால் கிளறிவிடுங்கள். உருகிய பிறகு அதனை இறக்கி வையுங்கள். இதனுடன் தேவையான வாசனை திரவியங்களை ஊற்றி கொள்ள வேண்டும். இந்த செயல்முறைக்கு பிறகு அறை வெப்பநிலையில் 2 மணி நேரம் குளிர விடவேண்டும். சருமத்திற்கு ஏற்ற ஆர்கானிக் சோப் தயார்.
வாசனை திரவியங்கள் கலந்த கிளிசரின் கலவையினை தாமதிக்காமல் சோப் மோல்டில் ஊற்ற வேண்டும். கிளிசரின் தன்மையே உடனடியாக குளிர்வதுதான். ஆகவே அடுத்தடுத்த செய்முறைகளுக்கு கிளிசரின் உறையும் முன்பு தயாராக இருப்பது அவசியம். சோப் மோல்டில் ஊற்றிய பிறகு நமக்கு தேவைப்பட்டால் ரோஜா, பன்னீர் சோப், நலங்கு மாவு சோப், கற்றாலை சோப், சந்தனம் சோப், வேப்பிலை சோப், துளசி சோப் ஆகியவற்றை செய்யலாம்.
- ஹோம்மேட் ஆர்கானிக் சோப்புகளில் பல நன்மைகள் இருக்கிறது.
- வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் தயார் செய்யலாம்.
குளிர்காலமோ, வெயில் காலமோ எந்த காலமாக இருந்தாலும் சிலருக்கு எந்த குளியல் சோப்பும் ஒத்துக் கொள்வதே இல்லை அவர்களும் தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டப்படும் அத்தனை நிறங்களிலான சோப்புகளையும் ஒன்று விடாமல் பயன்படுத்தி ஓய்ந்திருப்பார்கள். சிலர் கலர், கலராக சோப் எதற்கு என்று வெள்ளை நிற சோப்புக்கு மாறிய பின்னரும் கூட சருமம் என்னவோ அவர்களது ஆசைப்படி பளபளக்காமல் மேலும் பொலிவிழந்து வறண்டும், வெடித்தும் தோற்றமளிப்பதைக் கண்டு மனச்சோர்வில் வீழ்ந்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள்.. சோப்போடு நிறுத்திக் கொள்வதில்லை. சோப்பில் கிடைக்காத சரும மென்மை மாய்சரைசர்களில் கிடைக்கிறதா பார்க்கலாம் என பல்வேறு நிறங்களில் மாய்சரைசர்களைப் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள முயன்று கொண்டிருப்பார்கள்.
இந்த தொல்லைகளை எல்லாம் தவிர்க்க வேண்டுமானால் கடைகளில் விற்கப்படும் விதம், விதமான செங்கல் கட்டிகளை தூக்கிக் கடாசி விட்டு நமக்கே, நமக்கேயான நேச்சுரல் பாடி வாஷ் மற்றும் சோப்களை நாமே தயாரித்துக் கொள்வது ஒன்று தான் சிறந்த வழி.
திரவ சோப்பின் சிறப்பு என்னவென்றால் அது சருமத்தோடு ஒட்டி உறவாடி பின் பிரிய மாட்டேன் என்று படிந்து சரும வறட்சிக்கு காரணமாவதில்லை. அதனால் தான் நட்சத்திர விடுதிகளில் பெரும்பாலும் திரவ சோப்களையே தங்கள் விருந்தினர்களுக்கு காம்ப்ளிமெண்ட்டரியாகத் தருகிறார்கள். ஆர்கானிக் முறையில் ஹோம்மேட் சோப்களின் கை வண்ணத்தில் அனைவரது சருமமும் விரும்பிய வண்ணம் பொலிவு பெற்றால் சரி தான்.
ஹோம்மேட் ஆர்கானிக் சோப்புகளில் பல நன்மைகள் இருக்கிறது. ஆயில் சருமம், உலர் சருமம்... என சரும வகைகளுக்கு ஏற்ற சோப்புகளை நாமே நம் சருமத்திற்கு ஏற்றவாறு வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் தயார் செய்யலாம். குப்பைமேனி இலையில் தயாராகும் சோப்புக்கு சரும அலர்ஜிகளை கட்டுப்படுத்தும் திறன் உண்டு. உருளைக்கிழங்கு சோப் 'பிளிச்' செய்த உணர்வை தரும்.
ரோஜா இதழ் சோப் சருமத்தை மென்மையாக்கும். கற்றாழை முகத்தை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும். இப்படி, சரும தேவைக்கு ஏற்ப, தக்காளி, கேரட், வேப்பிலை-துளசி, அஸ்வகந்தா, ஆவாரம் பூ, ஆட்டுப்பால், தேங்காய்ப்பால்... என பலவிதமான மூலிகைகளில் சோப்புகளை தயாரிக்கலாம். இதனால்தான், ஆர்கானிக் ஹோம்மேட் சோப்புகளை டீன்-ஏஜ் வயதினர் விரும்பி வாங்குகிறார்கள்.
உதாரணத்திற்கு, சோப் போன்ற பொருட்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்போது, அதற்கென ஒருசில ரசாயனங்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதை தவிர்க்க வேண்டுமானால், அந்த கெமிக்கலுக்கு ஒத்துபோகும், இயற்கை பொருளை சரிவர சேர்க்க வேண்டும். அப்போதுதான், அது 100 சதவிகித ஆர்கானிக் பொருளாகிறது.
- உடம்பில் முக சருமம் மிகவும் சென்சிடிவ் ஆனது.
- முகத்திற்கு தினமும் ஃபேஸ் மசாஜ் செய்யுங்கள்.
நம்முடைய உடம்பில் முக சருமம் மிகவும் சென்சிடிவ் ஆனது என்பதால் எளிதாக தூசு, மாசுகளால் பாதிக்கப்படுகிறது. சருமத்திற்கு லேசாக நீங்கள் குளிக்க போகும் முன்பு இரண்டு நிமிஷம் தினமும் ஃபேஸ் மசாஜ் செய்யுங்கள். கன்னம், கண்களுக்கு கீழே இருக்கும் பகுதி, நெற்றி, மூக்கு ஆகிய இடங்களில் லேசாக அழுத்தி சர்குலர் மோஷனில் மசாஜ் செய்யுங்கள். கிளாக் மற்றும் ஆன்டி கிளாக் வைஸ் எல்லா இடங்களிலும் மிருதுவாக ஒரு விரலை வைத்து மசாஜ் செய்யும் பொழுது அல்லது முன்னிருந்து பின்னாக நீவி விடும் பொழுது சருமமானது இலகுவாகிறது. ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் சருமம் முதிர்வை சந்திப்பதை காலதாமதம் செய்கிறது. இதனால் இளமையான தோற்றம் எப்பொழுதும் நமக்கு கிடைக்கும்.
அந்த வகையில் நாம் இன்று பலவகையான ஃபேஸ் மாஸ்க்குகளை பற்றி பார்க்கலாம்.
ஸ்கின் டோன் ஃபேஸ் பேக்
அரிசிமாவு- 2 ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன், தயிர்- ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர்- ஒரு மூடி இவை அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு பேஸ்ட் மாதிரி கலந்து அதனை முகம், கை, கழுத்து பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவி வர முகம் கண்ணாடி மாதிரி பளபளப்பாக இருக்கும். இதனை வாரத்திற்கு 2 முறை என்று தொடர்ந்து பயன்படுத்தி வர நல்ல மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.
பீட்ருட் ஃபேஸ் மாஸ்க்
பீட்ருட்டை எடுத்து துருவி அதனை சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த பீட்ருட் சாறுடன், 2ஸ்பூன் அரிசிமாவு, ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தேன், கால் டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் செய்துகொள்ள வேண்டும். பீட்ருட் மாஸ்க் தயார். இந்த கலவையினை வாரம் இருமுறை இரவில் மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது வெயிலினால் முகம், கைகளில் ஏற்படும் கருமை நீங்கவும், முகம் பளபளப்பாகவும், சருமம் பொலிவாகவும் காணப்படும்.
டீ-டேன் ஃபேஸ் பேக்
ஒரு கப்பில் கடலைமாவு 3 ஸ்பூன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து பேக்காக செய்து இதனை கை, கால்களில் தினமும் தேய்த்து வரலாம். இவ்வாறு பயன்படுத்தி வரும் போது நாம் ஒவ்வொரு நாளும் வெளியின் சென்று வரும் போது சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதற்கும், கருமை நிறம், இறந்த செல்களை களைவதற்கும் இந்த பேக் பெரிதும் பயன்படுகிறது.
குளியல் பொடி
ஆரஞ்சு பழ தோல்கள் ஒரு கப், கடலைமாவு அரை கப், மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், காய்ந்த ரோஜா இதழ்கள் ஒரு கப் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மிக்சி ஜாரில் நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். சோப் பயன்படுத்துவதற்கு பதிலாக இந்த பொடியை குளிப்பதற்கு பயன்படுத்தலாம். இந்த பொடியுடன் தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வர அன்றைய நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியாக இருப்பதை உணரலாம்.
க்ரீன் டீ ஃபேஸ் பேக்
ஒரு பவிலில் க்ரீன் டீ பேக்கை போட்டு அது மூழ்கும் அளவிற்கு சூடான தண்ணீரை ஊற்ற வேண்டும். 15 நிமிடம் கழித்து டீ பேக்கை எடுத்துவிட்டு அந்த தண்ணீரில் கடலைமாவு, காபி தூள் ஒரு ஸ்பூ, தேன் ஒரு ஸ்பூன் சேர்த்து பேஸ் போல கலந்து பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி வர முகம் பளபளப்பாகவும், வலுவலுப்பாகவும் மாறும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள தேவையற்ற கரும்புள்ளிகள் மறையும்.
- ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல்.
- இளமை பொலிவைத் தக்கவைக்க உதவும்.
இயற்கையான அணுகுமுறைகளை உங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம், உங்களை அழகாகக் காட்டலாம். உங்கள் சருமத்தைப் பாதுகாத்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல், மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் சீரான தோல் பராமரிப்பு வழக்கத்தை பின்பற்றுதல் ஆகியவை உங்கள் இளமை பொலிவைத் தக்கவைக்க உதவும். என்றும் இளமையுடன் அழகாக இருப்பதற்கு உதவும் இயற்கை முறைகளை குறித்து இங்கு காணலாம்.
* பப்பாளி பழத்தை எடுத்து துருவிக்கொள்ள வேண்டும். அதில் காபி தூள் கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், தேன் கால் டீஸ்பூன் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து மிதமான தண்ணீரில் கழுவ வேண்டும்,
* ஒரு பவுலை அடுப்பில் வைத்து அதில் 100 கிராம் பாலை ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அந்த கலவை கெட்டியானதும் இறக்கி வைத்து அதில் கால் டீஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கற்றாலை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கி பயன்படுத்தலாம்.
முகத்தில் உள்ள கருமை நீங்கவும், முகம் பொலிவு பெறவும், சருமம் வறண்டு விடாமல் இருப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்து வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம். முகத்திற்கு நல்ல பளபளப்பு கிடைக்கும்.
* 2 ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து ஒரு வாணலியில் போட்டு அதனை நன்றாக நிறம் மாறி வருகிற அளவுக்கு வறுத்து எடுக்க வேண்டும். அது பார்ப்பதற்கு மஞ்சள் நிறம் மாறி காபி பொடி கலரில் இருக்கும். இதனை ஒரு கின்னத்தில் போட்டு அதில் ஒரு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ள வேண்டும். இதனை முகம், கை, கழுத்து பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவ வேண்டும். இது ஒரு சிறப்பான டீடேன் பேக்காக இருக்கும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது வெயிலினால் ஏற்படும் கருமை மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மாறி முகம் மென்மையாக இருக்கும்.
* உதடு கருமை நீங்க பீட்ருட்டை மிக்சி ஜாரில் போட்டு அதில் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை வடிகட்டி அதில் நெய் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இந்த கலவை கெட்டியானதும் அதனை ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இப்போது இயற்கையான முறையில் லிப் பாம் தாயார்.
* முதலில் உதட்டை ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இதனை உதட்டில் ஸ்க்ரப்பாக பயன்படுத்தி தேய்த்து எடுக்க வேண்டும். அதன்பிறகு தயார் செய்து வைத்துள்ள லிப் பாமை பயன்படுத்தலாம்.
* முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகளை அகற்றுவதற்கு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் கடலை மாவு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், காய்ச்சாத பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பேஸ்ட் மாதிரி தயார் செய்து அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து ஒரு ஈரமான துணிகொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகள் நீங்கி விடும்.
- குங்குமாதி க்ரீம் முகத்துக்கு பல நன்மைகளை அளிக்கிறது.
- 6 மாதத்திற்கு கெடாமல் இருக்கும்.
முகம் எப்போதும் ஒளிர வேண்டும். நமது சருமத்துக்கு ஊட்டச்சத்து வேண்டும். பராமரிப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குங்குமப்பூ க்ரீமை பயன்படுத்தலாம்.
கடைகளில் குங்குமாதி தைலம் என்று பல புராடக்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. பெயருக்கேற்றபடி இது சற்று கூடுதலான விலைதான். அதேநேரம் நாம் வீட்டிலேயே தயார்செய்யும் குங்குமாதி க்ரீம், பார்லருக்கு சென்று அழகை பராமரிக்க செய்வதை காட்டிலும் குறைந்த விலை தான். இந்த குங்குமாதி க்ரீம் முகத்துக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கற்றாலை ஜெல்
குங்குமப்பூ
ஆலிவ் ஆயில்
பாதாம் ஆயில்
ரோஸ் வாட்டர்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
செய்முறை:
ஒரு சிறிய டப்பாவில் குங்குமப்பூவை போட்டு அது மூழ்கும் அளவிற்கு ரோஸ் வாட்டர் சேர்த்து 10 நிமிடத்திற்கு அப்படியே வைக்க வேண்டும். அதன்பிறகு ஒரு பாத்திரத்தில் கற்றாலை ஜெல்லை போட்டு அதில் பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில், சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதில் நாம் ஏற்கனவே கலந்து வைத்துள்ள குங்குமப்பூ கலவை மற்றும் வைட்டமின் ஈ எண்ணை, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக க்ரீம் பதத்திற்கு கலக்க வேண்டும். இல்லை என்றால் பிளெண்டர் கொண்டும் பேஸ்ட் மாதிரி அடித்து எடுத்துக்கொள்ளலாம். இப்போது குங்குமாதி க்ரீம் தயார்.
இதனை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம். 6 மாதத்திற்கு கெடாமல் இருக்கும். இதனை முகம், கை, கழுத்து என அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.
முகத்தில் இறந்த செல்கள் இருக்கும் போது முகம் எப்போது மந்தமாக இருக்கும். முகத்தில் சருமத்தை பழுப்பு நிறமாக காண்பிக்கும். குங்குமாதி க்ரீம் பயன்படுத்தும் போது முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதோடு சருமத்துளைகளில் படிந்திருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றுகிறது.
குங்குமாதி க்ரீம் முகத்தில் இருக்கும் சரும பிரச்சனைகளை வெளியேற்ற உதவுகிறது. சரியான முறையில் இதை பயன்படுத்தினால் நீங்கள் விரும்பும் பேரழகை பெறமுடியும்.
- அழகு பராமரிப்பில் இன்று பல புதுமைகள் வந்துவிட்டன.
- பேஷியலுக்கு ஈடாக, குறைந்த நேரத்தில் அதே பலனை கொடுக்கக்கூடியது
அழகு பராமரிப்பில் இன்று பல புதுமைகள் வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் 'பேஸ் ஷீட்' மாஸ்க். இது பல்வேறு வகைகளில், சருமத்தின் பொலிவை அதிகரிக்கக்கூடிய திரவங்களை உள்ளடக்கி தயாரிக்கப்படும் ஒருவகை காகிதம் போன்ற தாளாகும். அழகு நிலையங்களில் செய்யப்படும் பேஷியலுக்கு ஈடாக, குறைந்த நேரத்தில் அதே பலனை கொடுக்கக்கூடியது பேஷியல் ஷீட் மாஸ்க். யார், எதை தேர்வு செய்யலாம்? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
வறண்ட சருமம்:
வறட்சியான சருமத்தை கொண்டவர்கள் ஈரப்பதம் நிறைந்த மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும். எலுமிச்சை மாஸ்க், கற்றாழை மாஸ்க், கடற்பாசி மாஸ்க் என இதில் பல வகைகள் உள்ளன. எலுமிச்சை மாஸ்க் ஷீட், சருமத்தை ஈரப்பதமாகவும், பிரகாசமாகவும் மாற்றும். கடற்பாசி மாஸ்க் இறந்த செல்களை அகற்றி சருமத்தை சுத்தமாக்குவதுடன், ஈரப்பதமாகவும் வைத்திருக்கும். கற்றாழை ஷீட் மாஸ்க் உபயோகித்தால், கற்றாழையின் முழு பலனும் கிடைக்கும். இதில் உள்ள ஜெல் முகத்தில் ஆழமாக ஊடுருவி சருமத்தை மென்மையாக மாற்றும்.
இது தவிர, பாதாம் எண்ணெய்யின் சத்துக்கள் நிறைந்த மாஸ்க்கையும் வறண்ட சருமம் கொண்டவர்கள் தேர்வு செய்யலாம்.
எண்ணெய்ப் பசை சருமம்:
எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்தினர், எண்ணெய் பசையை நீக்கி பொலிவை அதிகரிக்கும் வகையிலான மாஸ்க் ஷீட்டை பயன்படுத்த வேண்டும். இதற்கு டி ஃபிரீ ஷீட் மாஸ்க், இயற்யைான தேன் நிறைந்த ஹனி மாஸ்க்குகளை தேர்வு செய்யலாம். டீ ட்ரீ மாஸ்க் முகத்தை மென்மையாக்குவதுடன். அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்கி பளபளப்பாக்கும். ஹனி மாஸ்க்கில், சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்கி, திறந்திருக்கும் துளைகளையும் அடைக்கும்.
சென்சிடிவ் சருமம்:
சென்சிடிவ் சருமத்தினருக்கு. சிலவகை பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவர்கள் உருளைக்கிழங்கை அடிப்படையாக கொண்ட ஷீட் மாஸ்க்கை பயன்படுத்தலாம். இந்த மாஸ்க்கில் வைட்டமின் சி, பி6, காப்பர், ஜிங்க் ஆகிய சத்துக்கள் நிறைந்திருக்கும். இவை சருமத்தின் பொலிவை அதிகரிக்கச்செய்யும்.
முகப்பரு உள்ள சருமம்:
முகப்பரு மற்றும் அதன் தழும்புகள் உள்ள சருமத்தினர் அரிசி ஷீட் மாஸ்க், அவகோடா ஷீட் மாஸ்க் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அரிசி ஷீட் மாஸ்க்கில் ஸ்டார்ச், புரதம், வைட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. அவகோடாவில் வைட்டமின் ஈ, லெசித்தன் ஆகிய சத்துக்கள் உள்ளது. இது முகத்தை சுத்தமாக்கி புத்துணர்வூட்டும். முகத்தில் உள்ள தழும்பு, கருந்திட்டுக்கள் ஆகியவற்றை குறைக்கும். முகத்தில் அதிகப்படியான சுருக்கங்கள் இருப்பவர்கள் ரெட் ஒயின் ஷீட் மாஸ்க், புளுபெர்ரி ஷீட் மாஸ்க், மாதுளம் பழ ஷீட் மாஸ்க் ஆகியவற்றை பயன்படுத்துவது சிறந்தது.
எப்படி பயன்படுத்துவது?
ஷீட் மாஸ்க்கை போடுவதற்கு முன்பு முகத்தை நன்றாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் உங்களுடைய முக வடிவத்திற்கு சரியாக பொருந்தும் வகையில் மாஸ்க்கை பொருத்த வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து அதை நீக்கலாம். இந்த ஷீட் மாஸ்க்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தலாம்.
- முக அழகை கெடுக்கும் வகையில் மங்கு எனும் கருப்பு நிற படைகள் இருக்கும்.
- பெண்களுக்கு தான் அதிகமாக வரும்.
உங்கள் முக அழகை கெடுக்கும் வகையில் மங்கு எனும் கருப்பு நிற படைகள் இருக்கும். இதனை போக்க வீட்டு வைத்தியங்களை நீங்கள் பின்பற்றினால் போதும்.
சிலருக்கு ஒவ்வாமை அல்லது அலர்ஜி காரணமாக அவர்கள் பலவித தோல் நோய்களால் தாக்கப்படுகின்றனர். அதில் ஒன்றுதான் மங்கு. கன்னத்தில் கருப்பு நிறத்தில் வரக்கூடிய இதனை மெலஸ்மா என்று அழைப்பர். மங்கு வருவதே நீங்கள் முன்கூட்டியே அறிந்தால் அதனை வீட்டில் இருந்தபடியே சரி செய்து விடலாம்.
பொதுவாக இது கண்ணம் மூக்கு நிச்சயம் மற்றும் முழங்கால் பகுதியில் வரும். குறிப்பாக இது முகத்தில் கருப்பான புள்ளிகள் படர்ந்து காணப்படும். பொதுவாக இது பெண்களுக்கு தான் அதிகமாக வரும். அதுபோலவே ஹார்மோன் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மொனோபாஸ் இது போன்ற காரணத்தினால் மங்கு வரக்கூடும்.
செய்முறை:
முதலில் உங்கள் முகத்தை நன்கு தண்ணீரால் கழுவிக்கொள்ள வேண்டும். குறிப்பாக மங்கு உள்ள இடத்தை நன்கு கழுவ வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் காய்ச்சாத பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு பஞ்சை தொட்டு முகத்தில் தேய்த்து 5 நிமிடம் கழித்து நன்றாக கழுவ வேண்டும். பால் கொண்டு நம் முகத்தை சுத்தம் செய்யும் போது முகத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகள் நீங்கும்.
அதன்பிறகு கொழுந்தாக இருக்கும் வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து அதனை விழுந்தாக அரைத்து எடுத்து அதனை மங்கு எங்கு இருக்கிறதோ அதன் மீது தடவி நன்றாக காய்ந்த பிறகு கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் போது முகத்தில் மங்கு சிறிது சிறிதாக மறைவதை கண்கூடாக பார்க்கலாம்.
- ரேசர் கொண்டு முடியை நீக்கும்போது காயங்கள் ஏற்படாலாம்.
- உதட்டுக்கு மேல் முடி முளைப்பது முக அழகையே கெடுத்து விடும்.
உதட்டுக்கு மேல் முடி முளைப்பது பெண்களின் முக அழகையே கெடுத்து விடும். மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். எப்படியாவது இந்த முடியை நீக்க வேண்டுமென்று ரேசர் பயன்படுத்துவது, ஹேர் ரிமூவல் க்ரீம்கள் பயன்படுத்துவது ஆகியவற்றை செய்வார்கள். ஆனால் ரேசர் கொண்டு முடியை நீக்கும்போது காயங்கள் ஏற்படாலாம். அதோடு முடி வளர்ச்சியும் வேகமாகத் தூண்டப்படும். ஆனால் கீழ்வரும் சில இயற்கையான வழிமுறைகள் மூலம் பக்க விளைவுகள் இல்லாமல் உதட்டுக்கு மேலே உள்ள முடிகளை நீக்க முடியும்.
வசம்பு
அரை ஸ்பூன் வசம்பு பொடியை எடுத்து தண்ணீரில் திக்காக குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டுக்கு மேல் முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதை பயன்படுத்தும் போது உதட்டுக்கு மேலுள்ள முடிகள் உதிர ஆரம்பிக்கும்.
மஞ்சள்
ஒரு ஸ்பூன் மஞ்சளை காய்ச்சாத பால் சேர்த்து திக்கான பேஸ்ட்டாக்கி உதட்டுக்கு மேலே முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். அது நன்கு உலர்ந்ததும் தண்ணீரில் கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் முடிகள் நிரந்தரமாக வளராமல் தடுக்க முடியும். இதற்கு சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் இரண்டுமே பயன்படுத்தலாம். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் பாலுக்கு பதிலாக ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம்.
படிகாரம்
படிகாரம் என்பது ஒருவகையான உப்புக்கல். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த படிகாரம் சருமத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்கி மென்மையாக வைத்திருக்க உதவி செய்யும். ஆண்களும் ஷேவிங் செய்யும்போது இதை பயன்படுத்தலாம். ரேசர் உள்ளிட்டவற்றால் ஏற்படும் காயங்கள், தழும்புகள் ஆகியவற்றை சரிசெய்யும் தன்மை கொண்டது.
கல்போன்று கடினமாக இருக்கும் இந்த படிகாரத்தை இடித்து பொடி செய்து கொள்ளுங்கள். அரை ஸ்பூன் அளவு படிகாரத்துடன் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி இந்த பேஸ்ட்டை உதட்டுக்கு மேலே முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முதல்முறையிலேயே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்துவர வேகமாக உதட்டுக்கு மேலே உள்ள முடி நிரந்தரமாக உதிர ஆரம்பிக்கும்.
சர்க்கரை
சர்க்கரை ஸ்கிரப்பை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நிரந்தரமாக உதடு மற்றும் சருமத்தில் தேவையற்ற முடி வளர்வதைத் தடுக்க முடியும். ஆனால் சர்க்கரையை லேசாக நுணுக்கி பயன்படுத்துங்கள். பெரிய பெரிய துகள்களாக இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.
ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் பொடித்த சர்க்கரையை சேர்த்து அதோடு சிறிது ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டின்மேல் முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 - 20 நிமிடங்கள் உலர விடுங்கள். பிறகு மெதுவாக விரல்களால் ஸ்கிரப் செய்து கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் உதட்டுக்கு மேலே உள்ள மெல்லிய முடிகள் உதிர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வரும்போது நிரந்தரமான முடிகள் நீங்கும்.
ஜெலட்டின்
ஜெலட்டின் பீல் ஆஃப் மாஸ்க் போல செயல்படும். இதை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் சருமம் நெகிழ்வுத் தன்மையோடு இருக்கும். அதோடு சருமத்திலுள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து சருமம் மென்மையாக மாறும். காசு கொடுத்து விலையுயர்ந்த மாஸ்க்குகள் வாங்கிப் பயன்படுத்துவதை காட்டிலும் இது சிறந்தது.
ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் ஜெலட்டின் பவுடரை எடுத்துக் கொண்டு அதில் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது ஆரஞ்சு பழத்தின் சாறையும் சேர்த்து கலந்து நன்கு ஸ்மூத்தான பேஸ்ட்டாக செய்து கொள்ள வேண்டும். இதை உதட்டின் மேற்பகுதியில் முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். சருமத்தில் அது நன்கு இறுக்கிப் பிடிக்க ஆரம்பிக்கும். பீல் ஆஃப் மாஸ்க் மாதிரி மெதுவாக பிரித்து எடுக்க அந்த ஜெலட்டின் மாஸ்க்கோடு சேர்த்து சின்ன சின்ன முடிகளும் வருவதை பார்க்க முடியும். இதை அடிக்கடி பயன்படுத்தும் போது சருமத்திலுள்ள முடிகள் நிரந்தரமான நீங்கும்.
முட்டை
சருமத்திலுள்ள முடிகளை நீக்குவதற்கும் சருமத்துக்குத் தேவையான புரதத்தைக் கொடுக்கவும் முட்டையின் வெள்ளைக் கரு உதவுகிறது. இதை தொடர்ந்து மாஸ்க்காக சருமத்தில் அப்ளை செய்து வர மேல் உதட்டுக்கு மேலுள்ள முடி மற்றும் கன்னங்கள் என முகத்திலுள்ள மென்மையான முடிகள் நீங்கும்.
ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து பேஸ்ட்டாக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதை மேல் உதட்டின்மீது உள்ள முடிகளையும் முகத்திலுள்ள வேறு மெல்லிய முடிகளும் உள்ள இடத்தில் அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்ததும் மென்மையாக விரல்களால் தேய்த்து ஸ்கிரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.
- டேன் இருந்தால் சருமமே பொலிவிழந்து காணப்படும்.
- தயிர் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
நாம் அதிகமாக வெளியில் சூரிய ஒளியில் பயணிக்கும்போது நமது முகம், கை மற்றும் கால்களில் டேன் ஏற்படுவது சகஜம். பொதுவாக வெளியில் வேலை செய்பவர்களுக்கு இது சிரமமானதாக கூட இருக்கலாம். வீட்டிலேயே இந்த டானை எப்படி சரிசெய்யலாம் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
சருமப் பராமரிப்பு என்றாலே முகத்தை ஆரோக்கியமாகவும் பளிச்செனவும் வைத்துக் கொள்வது முக்கியம். நம்முடைய முகம், கை மற்றும் கால்களின் ஒரு சில பகுதிகளில் மட்டும் சருமம் அதிக கருமையுடன் டேனாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. டேன் இருந்தால் சருமமே பொலிவிழந்து காணப்படும்.
நம் வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தக்காளி. தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளதால் இது இயற்கையான சன் ஸ்கிரீனாக நமது சருமத்தில் செயல்படுகிறது. மேலும் வயதானது போல தோற்றத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
தேவையான பொருட்கள்:
கடலைமாவு
தேங்காய் எண்ணெய்
கஸ்தூரி மஞ்சள்
தயிர்
தக்காளி சாறு
எலுமிச்சை சாறு
செய்முறை:
ஒரு பவுலில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து இதில் தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்கி ஃபேஸ் பேக் தயார் செய்துகொள்ள வேண்டும். இதை நீங்கள் குளிக்கச் செல்வதற்கு முன் இந்த கலவையை உங்கள் முகம், கழுத்து, கைகளில் தடவி குறைந்தது 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும், அதன்பிறகு மிதமான நீரில் கழுவலாம்.
இந்த பேஸ்டை தொடர்ந்து வாரத்திற்கு 2 தடவை பயன்படுத்தி வர முகம், கழுத்து, கைகளில் உள்ள கருமை நிறம் நீங்கி பளபளப்பாகும். தயிர் உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
- கணினி துறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
- கண்களுக்கு எப்போதும் குளிர்ச்சி தேவை.
கணினி துறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மூளை போன்று கண்ணுக்கும் அதிகப்படியான வேலையை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இன்றைய தலைமுறைகள். இதனால் உடல்ரீதியிலான குறைபாடுகளையும் அவ்வப்போது சந்தித்து வருகிறார்கள்.
ஆரோக்கியத்தோடு அதிகம் சந்திக்கும் பிரச்சினைகள் என்றால் அது அழகு சார்ந்த பிரச்சினை தான். குறிப்பாக கண்கள் பொலிவிழந்து காணப்படும். முகத்தில் அழகாய் இருக்க கூடியவை கண்கள். ஆனால் கண்களுக்கு கீழ் கருவளையங்கள், கருமை நிறம், கண் இரைப்பைக்கு கீழ் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் வரகூடும்.
ஒருவகையில் இது ஆரோக்கியம் குறைபாடு என்பதையும் குறிப்பிட வேண்டும். உடலில் வைட்டமின் சத்துகள் குறையும் போதும், நச்சுகள் வெளியேறாத போதும் இந்த பிரச்சனைகள் வந்தாலும் கூட மறுபுறம் சருமத்தை கண்களை உரிய பாதுகாப்பில்லாமல் வைக்கும் போதும் இந்த பிரச்சனையின் தீவிரம் அதிகரித்துவிடும்
சுட்டெரிக்கும் வெயில் வாட்டவும் தொடங்கியுள்ளது. வெப்பம் மிகுந்த நமது நாட்டில் இயல்பாகவே உடல் வெப்பம் அதிகரிக்கும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும் போது இயல்பாக உண்டாகும் ஆரோக்கிய குறைபாட்டில் அழகு சார்ந்த பிரச்சினையும் உண்டாகக் கூடும். அதில் முக்கியமானது கண்கள்.
கண்களுக்கு எப்போதும் குளிர்ச்சி தேவை. ஓய்வும் தேவை. ஆனால் இரண்டும் கொடுக்காமல் அதிக வேலை கொடுக்கும் இந்த வெயில் காலத்தில் உரிய முறையில் கண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தால் கண் பார்வை பிரச்சனை, கருவளையம் பிரச்சனை போன்றவற்றை தவிர்க்கலாம் என்கிறார்கள் கண் மருத்துவ நிபுணர்கள்.
இந்த கண்களை எப்போதும் பாதுகாக்கும் பொருளாக இருக்கிறது பாதாம். ஆரோக்கியமான உணவின் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெற்றிருப்பது போலவே இது அழகு சார்ந்த குறிப்பிலும் சருமத்துக்கு சத்து கொடுக்கும் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறது. பாதாம் பருப்பை முகத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் கண்கள் சத்துக்களையும் பொலிவையும் இழக்காமல் இருக்கும்.
எப்படி பயன்படுத்துவது பார்க்கலாம்
பாதமை பொடித்து வைத்துகொள்ளுங்கள். வாரம் ஒரு முறை 30 எண்ணிக்கை பாதாமை மிக்சியில் பொடித்து வைத்துகொள்ளுங்கள். தினமும் தூங்குவதற்கு முன்பு அரை டீஸ்பூன் பாதாம் பருப்புடன் மூன்று டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக குழைத்துக்கொள்ளுங்கள். பிறகு கண்களின் கீழ் தடவி லேசாக மசாஜ் செய்யுங்கள். மீதி இருப்பதை முகத்திலும் தடவிக் கொள்ளுங்கள். சற்று காய்ந்ததும் முகத்தை கழுவாமல் அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை எழுந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் போதுமானது.
தினமும் இரவில் இதை பயன்படுத்தி வரும் போது கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தால் அவை படிப்படியாக குணமடையக்கூடும். கண்களில் கருவளையத்தால் உண்டான கருமையும் சிறிது சிறிதாக மறைய கூடும். கண்களுக்கு கீழ் இருக்கும் வீக்கம், கண்களை சுற்றியுள்ள கருமை, முகத்தில் படிந்திருக்கும் கரு மையான நிறம் அனைத்துமே நீங்கும். குறிப்பாக கண்கள் புத்துணர்ச்சியோடு இருக்கும். இதனால் கண்கள் மேக்- அப் போடாமலேயே அழகாக இருக்கும். லேசான ஒப்பனையிலும் கண்கள் பளிச்சென்று இருக்கும். சோர்வு இல்லாத கண்களை எப்போதும் பெறுவீர்கள்.
முக பராமரிப்பு என்னும் போது கண்களுக்கு பராமரிப்பு கொடுப்பதும் முக்கியம். பாதாம் அதிக விலை என்பவர்கள் முகத்துக்கு இல்லையென்றாலும் கண்களுக்கு மட்டும் பயன்படுத்துவதற்காக பாதாமை பயன்படுத்தலாம். பாதாம் பருப்பை பொடித்து பயன்படுத்துவது சிரமமாக இருக்கிறது என்பவர்கள் பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம். நிச்சயம் கண் ஆரோக்கிய மாகவே அழகு கூடும்.
பராமரிப்பு கடந்து அன்றாட வாழ்க்கையிலும் சில மாற்றங்களை கடைபிடியுங்கள். கோடைக்காலம் மட்டுமல்ல எல்லா காலங்களிலும் உடலுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துகொள்வது அவசியம். பழச்சாறுகள், கீரைகள், காய்கறிகள் இவை எல்லாவற்றையும் தாண்டி தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கம் அவசியம். தூங்குவதற்கு முன்பு ஒரு மணி நேரம் முன்புவரை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
கம்ப்யூட்டர், டீவி முன்பு அதிக நேரம் செலவழிக்ககூடாது. செல்போன் அதிக நேரம் பார்க்க கூடாது. போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அதற்கேற்ப சிறுநீரையும் வெளியேற்ற வேண்டும். இவையெல்லாம் சரியாக இருந்தால் கண்ணை கண் போல் ஆயுள் வரையும் பாதுகாக்கலாம். கண்கள் காந்த கண்களாக எப்போதும் அழகாய் மிளிர தேவதையாய் வலம் வரவும் செய்யலாம்.
- பாலில் ரெட்டினோல் உள்ளது.
- பால் பொருட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும்.
பாலில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை எலும்புகள் மற்றும் பற்களுக்கு வலுசேர்க்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் பால் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதனை ஆய்வுகளும் உறுதிபடுத்தி உள்ளன.
* கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை சருமத்திற்கு அழகூட்டும் இரண்டு முக்கியமான ஊட்டச்சத்துக்கள். இவை இரண்டுமே பாலில் உள்ளன. இவை சருமத்திற்கு மட்டும் நன்மை செய்யாமல் மற்ற ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகின்றன.
* பாலில் ரெட்டினோல் உள்ளது. இது வைட்டமின் ஏ-ன் வடிவமாகும். விரைவில் வயதாகும் அறிகுறிகள் வெளிப்படுவதை தடுக்கும் எதிர்ப்பு பண்புகளை கொண்டது. அத்துடன் முகப்பருவை தடுத்து சருமத்திற்கு பொலிவு சேர்க்கக்கூடியது.
* பாலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் சரும செல்கள் சேதம் அடைவதை தடுக்கின்றன. சருமத்தை அழகாக்கவும், இயற்கையான பிரகாசத்தை மீட்டெடுக்கவும் துணைபுரிகின்றன. சருமத்திற்கு கூடுதல் பளபளப்பு சேர்க்கவும் உதவுகின்றன.
* சருமத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பண்புகளைக் கொண்டிருந்தாலும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். பாலுக்கும், முகப்பருவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் பால் அதிகம் பருகும்போது பாதிப்பு அதிகரிக்கக்கூடும். ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள்தான் அதற்கு காரணமாகும்.
* பால், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உட்கொள்வது முகப்பருவை ஏற்படுத்தும் ஆண்ட்ரோஜன்கள் போன்ற ஹார்மோன்களின் செயல்பாடுகளை தூண்டிவிடும்.
* தயிர் போன்ற புளிக்கவைக்கப்படும் பால் பொருட்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், தோல் அழற்சி போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் அதில் இருக்கும் புரோபயாட்டிக்குகள் உதவும். ஆனால் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.
* முகப்பரு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், முகப்பரு ஏற்பட வாய்ப்புள்ளவர்கள் பால் அருந்துவதை கூடுமானவரை தவிர்க்கவும். சரும நிபுணரிடம் ஆலோசனை பெற்று அதன்படி செயல்படுவது சிறந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்