search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    இளமையை தக்கவைக்க வேண்டுமா?
    X

    இளமையை தக்கவைக்க வேண்டுமா?

    • வயதாகும்போது நம் சருமத்திற்கும் வயதாகிறது.
    • வயதாகும்போது சருமம் ஈரப்பதத்தை இழக்கிறது.

    வயதாகும்போது நமது வயதின் எண்ணிக்கை மட்டும் கூடுவதில்லை. நம் சருமத்திற்கும் வயதாகிறது. அதுவரை பொலிவாக இருந்த சருமத்தில் சுருக்கங்களும், கோடுகளும் அதிகரிக்கத் தொடங்கும். வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. ஆனால், நம் சருமத்திற்கு வயதாவதை தள்ளிப்போட முடியும். அதற்கான ஆன்டி ஏஜிங் சருமப் பராமரிப்பு முறைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

    க்ளென்சர்

    வயதாகும்போது சருமம் ஈரப்பதத்தை இழக்கிறது. இயற்கையாக முகத்தில் சுரக்கும் எண்ணெய் மற்றும் ஊட்டச்சத்துகள் போன்றவற்றையும் இழக்கிறது. அந்த காலகட்டத்தில் நுரை வரும் வகையிலான சோப்புகளை உபயோகிப்பது சருமத்துக்கு மென்மையாக இருக்காது. எனவே க்ரீம் க்ளென்சரை பயன்படுத்தலாம். க்ளென்சர்கள் சருமத்தின் மேற்பரப்பில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும். தினமும் காலையிலும், மாலையிலும் க்ளென்சரால் சருமத்தில் மெதுவாக மசாஜ் செய்து முகம் கழுவி வர வேண்டும்.

    எக்ஸ்ஃபோலியேட்

    எக்ஸ்ஃபோலியேட்டிங் என்பது தோலின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை அகற்றுகிறது. இதனால் முகத்தில் அடைபட்ட சருமத் துளைகளை சுத்தம் செய்வதோடு, ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. சருமம் பிரகாசமாகும். இதற்கு ஸ்கிரப் பயன்படுத்தலாம். ஆனால் வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை மட்டுமே எக்ஸ்ஃபோலியேட் செய்ய வேண்டும்.

    முகத்தை கழுவியவுடன் சீரம் அப்ளை செய்வது நல்லது. வயதாகும்போது செல் மீளுருவாக்கம் குறையும். அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் குறையும். இதனால் சருமம் வறண்டு மந்தமாக தோற்றமளிக்கும். சீரம் சருமத்தை உடனடியாக மென்மையாக்கி, புத்துணர்ச்சியாக உணர வைக்கும்.

    மாய்ஸ்ச்சரைசர்

    சருமத்தை ஈரப்பதத்தோடு வைக்க மாய்ஸ்ச்சரைசர்கள் உதவும். காலை மற்றும் மாலை நேரத்தில் முகத்தில் மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்தும்போது, முகத்தில் மட்டும் இல்லாமல், கழுத்து மற்றும் மார்பு பகுதியிலும் சேர்த்து அப்ளை செய்யலாம். ஏனெனில் இந்த பகுதிகளிலும் வறண்டு கோடுகள் விழ வாய்ப்புண்டு.

    கண்களுக்குக் கீழே ஏற்படும் வீக்கங்கள், கருவளையம் மற்றும் கோடுகளை சரிசெய்வதும் முக்கியம். எனவே முகத்துக்கு அப்ளை செய்யும் க்ரீமை கண்களுக்கு கீழ் அப்ளை செய்யும்போது மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அங்கு ரத்தம் ஓட்டம் கிடைக்கப்பெற்று கருவளையம் மற்றும் வீக்கம் குறையும்.

    வயதான சரும தோற்றத்துக்கான மற்றொரு காரணம், முகத்தில் இயற்கையாக உருவாகும் எண்ணெய் உற்பத்தி குறைவது. தினமும் காலையில் மாய்ஸ்ச்சரைசர் அப்ளை செய்த பின் ஃபேஷியல் ஆயில் தடவுவதன் மூலம் ஆன்டி ஏஜிங் சருமத்தை சீரமைக்கலாம்.

    ஹைட்ரேட்டிங் ஃபவுண்டேஷன்

    சருமம் வறட்சியாக பொலிவிழந்து இருக்கும்போது, காஸ்மெடிக்கையும் அதற்கு தகுந்தார்போல் தான் பயன்படுத்த வேண்டும். உங்கள் ஸ்கின் டைப்புக்கு ஏற்றார்போல் ஹைட்ரேட்டிங் ஃபவுண்டேஷன் பயன்படுத்தலாம்.

    தூங்குவதற்கு முன் மேக் அப்பை அகற்றுவது முக்கியம். நன்றாக முகத்தை கழுவி விட்டு தூங்கச் செல்லவும். இதனால் சருமத்தில் காஸ்மெடிக் ரசாயனங்களால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கலாம்.

    தூக்கம் உங்கள் மனதுக்கு மட்டுமல்ல, சருமத்துக்கும் புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியது. சருமம் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள நேரம் கொடுக்கிறது தூக்கம். அந்த நேரத்தில் சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை சரிசெய்ய நைட் க்ரீம் பயன்படுத்தலாம்.

    Next Story
    ×