search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் உலகம்"

    • ஷூவை வாஷிங்மெஷினில் போட்டு சுத்தப்படுத்துவது உறுதியை பாதித்து விடும்.
    • ஒவ்வொரு வாரமும் ஷூக்களை சுத்தமாக்குவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

    இல்லத்தரசிகளுக்கு ஒரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால் குழந்தைகளுடைய வெள்ளை நிற ஷூக்கள் அழுக்கடைந்து பழுப்பு நிறமாகிவிட்டால், அவற்றை பழைய தோற்றத்திற்கு எவ்வாறு கொண்டு வருவது என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.

    அந்த வகையில் வீட்டிலேயே உள்ள சில பொருட்களை பயன்படுத்தி வெள்ளை நிற ஷூக்களை புதியது போன்று தோற்றம் அளிக்கக்கூடிய வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.

    எலுமிச்சை சாற்றை ஒரு பவுல் நீரில் கலந்து, அந்த நீரை அழுக்கான ஷூ மீது தேய்க்கவும். ஷூவை வெயிலில் ஒரு மணிநேரம் வைத்து, பின்னர் சுத்தமாக கழுவி உலர வைத்து பயன்படுத்தலாம்.

    ஒரு பங்கு ப்ளீச்சிங் பவுடரோடு ஐந்து பங்கு தண்ணீர் கலந்து, காற்றோட்டமுள்ள இடத்தில் கைகளுக்கு கிளவுஸ் போட்டு ஷூவை சுத்தம் செய்யவும்.

    டூத் பிரஷ்ஷில் கலவையை எடுத்து ஷூவில் தேய்க்கவும். பின்னர் நீரில் கழுவிய பின்பு சில மணி நேரம் நன்கு உலர விட்டு பயன்படுத்தலாம்.

    லெதர் ஷூ, க்ராக்ஸ் என எந்த மெட்டீரியல் வெள்ளை காலணிகளை சுத்தம் செய்ய ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் பாத்திரம் கழுவும் திரவத்தை சேர்த்துக் கலந்து, துணி அல்லது பல் துலக்கும் பிரெஷ் பயன்படுத்தி, ஷூ சுத்தமாகும் வரை மெதுவாக ஸ்கிரப் செய்யலாம். பின்னர் தண்ணீரைத் துடைத்து, நன்கு உலர வைத்தால் வெள்ளை நிற ஷூ தயாராகி விடும்.

    ஒரு டேபிள்ஸ்பூன் வெந்நீரில், ஒரு டேபிள்ஸ்பூன் வெள்ளை வினிகர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து பேஸ்ட் போல செய்யவும்.

    டூத்பிரெஷ் கொண்டு அதில் தோய்த்து அதைக் கொண்டு ஷூ மீது வட்டமாக தேய்க்கவும். சில மணி நேரம் அப்படியே உலரவிட்டு, அந்த பேஸ்ட்டை ஈரத்துணி கொண்டு துடைத்து, ஷூவைக் கழுவி நிழலில் உலர்த்தி பயன்படுத்தலாம்.


    வெள்ளை க்ரீம் டூத்பேஸ்ட்டை டூத்பிரஷில் எடுத்து, ஷூ முழுக்க கறை உள்ள இடங்களில் தேய்க்கலாம். அதை அப்படியே சில நிமிடங்கள் உலர விட்ட பின்னர் ஈரமான துணி கொண்டு துடைக்கவும்.

    அதன் பின்பும் அழுக்கு இருந்தால் அந்த இடத்தில் மட்டும் மீண்டும் ரிப்பீட் செய்து, ஈரத்துணியால் துடைத்து உலர வைத்து பயன்படுத்தலாம்.

    ஒவ்வொரு வாரமும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் ஷூக்களை சுத்தப்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. ஷூக்களை வாஷிங்மெஷினில் போட்டு சுத்தப்படுத்துவது ஷீவின் உறுதியை பாதித்து விடும்.


    ஷூவில் அழுக்கு பட்டாலோ, ஏதேனும் திரவங்கள் பட்டாலோ உடனே சுத்தம் செய்துவிட்டால் பின்னர் சுத்தம் செய்வதில் சிரமம் எதுவும் இருக்காது.

    • மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும்.
    • புற்றுநோயிலும் அதிக ரத்தப் போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது.

    மாதவிடாய் காலம் என்பது மூன்று முதல் ஏழு நாட்கள் வரை இருக்கும். அப்போது சராசரியாக 100 முதல் 200 மி.லி ரத்தம் வெளியேறும். ரத்தப்போக்கு அளவு நபருக்கு நபர் வேறுபடும். மாதவிடாய் காலம் 7 நாட்களுக்கு அதிகமாகவும், ரத்தப்போக்கு அதிகரித்தும் காணப்படுவதை 'அதிகரித்த ரத்தப்போக்கு' அல்லது 'பெரும்பாடு' (மெனோரேஜியா) என்பார்கள். இதற்கான காரணங்கள் வருமாறு:-

    1) ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஹார்மோன்களுக்கு இடையில் உள்ள சமநிலை மாறுபாடு,

    2) கருப்பை உள்ளுறுப்புகளான சினைப்பாதை, சினைப்பை இவற்றில் கருப்பை புறணியான எண்டோமெட்ரியம் வளருதல், எண்டோமெட்ரியம் கடினமடைதல்,

    3) கருப்பையில் வளரும் சாதாரண தசைக்கட்டிகள், சினைப்பையில் வளரும் நீர்க்கட்டிகள் மற்றும் சாக்கலேட் கட்டிகள்,

    4) கருப்பை புறணியில் வளரும் பாலிப்ஸ், அடினோமயோசிஸ், கருப்பை நார்த்திசுக்கட்டிகள், கருத்தடைக்காக வைக்கப்படும் உபகரணங்களான காப்பர் டி இவை குறிப்பிட்ட நாட்களுக்கு அதிகமாக இருப்பது போன்ற பல காரணங்களால் மாதவிடாய் காலங்களில் அதிகரித்த குருதிப்போக்கு காணப்படுகிறது.

    இன்னும் கருப்பை புற்றுநோயிலும் ரத்தப் போக்கு ஒரு அறிகுறியாக உள்ளது. அதிக ரத்த இழப்பின் காரணமாக உடல் பலவீனம், சோர்வு, மூச்சு விட சிரமம் போன்ற உணர்வு வரலாம். எனவே, என்ன காரணத்தினால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுகிறது என்பதை மருத்துவர் மூலம் அறிந்து ஆலோசனை பெறுவது நல்லது.

    சித்த மருத்துவம்

    இந்த பிரச்சனைகளுக்கு கீழ்க்கண்ட சித்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்து பயன்பெறலாம்.

    1) திரிபலா சூரணம் 1 கிராம், அன்னபேதி செந்தூரம் 200 மி.கி., படிகார பற்பம் 100 மி.கி. அளவு காலை, மாலை இருவேளை தேனில் உட்கொள்ள வேண்டும்.

    2) கொம்பரக்கு சூரணம் 1 கிராம் எடுத்து, நெய் அல்லது தேனில் கலந்து காலை, மாலை என ஏழு நாட்கள் சாப்பிடவும்.

    3) திரிபலா சூரணம் 1 கிராம், அயப்பிருங்கராஜ கற்பம் 200 மி.கி, சங்கு பற்பம் 200 மி.கி. அளவு எடுத்து தேனில் காலை, மாலை இரு வேளை ஏழு நாட்கள் உண்ணவும்.

    4) வாழைப்பூ வடகம் 1-2 வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.

    5) பூங்காவி செந்தூரம் 200 மி.கி. காலை, இரவு இருவேளை சாப்பிடலாம்.

    6) இம்பூறல் மாத்திரை 1-2 காலை, இரவு இருவேளை சாப்பிட்டு வர வேண்டும்.

    7) கரிசாலை லேகியம் காலை 5 கிராம், இரவு 5 கிராம் வீதம் சாப்பிட வேண்டும்.

    உணவில் வாழைப்பூ, மாதுளம்பழம், நாவல் பழம், அத்திப்பழம், கறிவேப்பிலை, முருங்கை கீரை, சிவப்பு தண்டுக்கீரை, செவ்வாழைப்பழம் இவைகளை சேர்த்து கொள்ள வேண்டும்.

    • ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கொண்டிருக்கும் பெண்கள் எளிதாகவே இதை கண்டறிந்துவிட முடியும்.
    • கர்ப்பப்பை இறக்கத்தை முதல் மற்றும் இரண்டாம் நிலையில் கண்டறியும் போது சிகிச்சை பெறுவதும் எளிதாக இருக்கும்.

    கர்ப்பப்பை இயல்பாகவே நான்கு பக்கமும் சுருங்கி விரியும் தன்மை கொண்டதசைகளால் சூழப்பட்டவை. அதனால் தான் ஓர் அங்குல வயிற்றில் குழந்தை வளரும் போது அதற்கேற்ப தசைகள் விரிவடைவதும், பிறகு தனது இடத்துக்குள் சுருங்கி கொள்வதுமாய் இருக்கிறது.

    இவை இருக்குமிடத்தில் இருந்து தள்ளி கீழிறிங்கி வருவது தான் கருப்பை இறக்கம் என்று அழைக்கப்படுகிறது. இவை எல்லோருக்கும் வருவதில்லை. 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கர்ப்பப்பை நீக்கம் செய்வதற்கு இதுவும் ஒரு காரணமாகிறது. அதிக குழந்தைகள், பிரசவத்துக்கு பிறகு உடனடியாக அதிக எடைகளை தூக்குவது. அடி வயிற்றுக்கு அதிக உழைப்பு தருவது. உடல் எடை அதிகரிப்பது போன்றவற்றால் கர்ப்பப்பை பலவீனமடைந்து கர்ப்பப்பை இறக்கம் உண்டாகிறது.கர்ப்பப்பை இறக்கத்தை ஒரு சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ளலாம்.


    கர்ப்பப்பையைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுவிழந்து பலவீனம் அடையும் போது தான் கர்ப்பப்பை இறக்கம் நிகழ்கிறது. அப்போது கர்ப்பப்பை அருகில் இருக்கும் குடல், சிறுநீரகப்பை. மலக்குடல் மூன்றின் அருகில் இருப்பதால் இவை அழுத்தும் போது சிறுநீர் பிரச்சனை உண்டாகிறது.

    அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் கழிக்கும் உணர்வு இருப்பது, சிறுநீர் கழிக்கும் போது வலி உண்டாவது. வேகமாக சிரிக்கும் போதும், தும்மும் போதும் சிறுநீர் வெளியேறுவது, மலச்சிக்கல் ஏற்படுவது போன்றவை கர்ப்பப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக பெண்கள் நினைக்கலாம்.

    கர்ப்பப்பை இறங்கும் போது அவை சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடலை சேர்த்து இழுப்பதால் இடுப்பில் வலி உணர்வு அதிகரிக்கும். இயல்பாக வரும் இடுப்புவலியை போன்று இல்லாமல் இடுப்பில் சற்று அழுத்தமாக கைவைத்து நின்றாலே வலி உணர்வு குறையும். பிறகு மீண்டும் வலி உண்டாகக்கூடும்.

    ஒவ்வொரு முறை இடுப்பு வலி உண்டாகும் போதெல்லாம் இடுப்பில் கை வைத்து ஊன்றி இருந்தால் வலி குறைவாக இருக்கும். சாதாரனமாக இடுப்பு வலி இருக்கும் போது இப்படி இருக்காது. தொடர்ந்து வலி இருக்கும் போது உங்கள் கைகளை ஊன்றி வைத்து பாருங்கள். ஒரு வேளை கர்ப்பப்பை இறக்கமாக இருந்தால் வித்தியாசத்தை நன்றாக உணர்வீர்கள்.


    வெள்ளைப்படுதல் இயல்பானது. சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்துக்கு முந்தைய நாட்களில் வெள்ளைப்போக்கு இருக்கும். சிலருக்கு அதற்கு பின்பு இருக்கும் இவை சாதாரணமானது தான் ஆனால் எல்லா நேரங்களிலும் எப்போதும் வெள்ளைபோக்கு இருந்தால் அது கர்ப்பப்பை இறக்க அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

    வெள்ளைபோக்கு துர்நாற்றத்துடன், வெளிறிய நிறத்தில் இருப்பது கருப்பை பிரச்சனைகளை குறிக்கும்.ஆனால் கர்ப்ப்பை இறக்கத்தால் உண்டாகும் வெள்ளைபோக்கு சாதாரணமாக இருக்கும். தொடர்ந்து இருக்கும் என்பதால் இதை பல பெண்களும் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.

    பொதுவாக பெண்கள் குழந்தைபேறுக்கு பிறகு நடுத்தர வயதுக்கு மேல் தான் கர்ப்பப்பை இறக்க பிரச்சனையை அதிகம் சந்திக்கிறார்கள். ஆனால் பலரும் இது மெனோபாஸ் காலத்தில் பெண் உறுப்பில் உண்டாகும் வறட்சி என்று நினைக்கிறார்கள்.

    சிலருக்கு கர்ப்பப்பை இறக்கத்தின் அறிகுறியாக பெண் உறுப்பில் உலர்வுத்தன்மை, அந்த இடத்தில் அரிப்பு, சொரிந்து புண் இவை தொடர்ந்து ஏற்படும்.

    35 வயதுக்கு மேல் மெனோபாஸ் வருவது அதிகரித்துள்ளது என்றாலும் கூட உங்களுக்கு மாதவிடாய் சுழற்சியும் சீராக இருந்தால் அது கர்ப்பபை இறக்கமாக இருக்க அதிக வாய்ப்புண்டு.

    உடலுறவு கொள்ளும் போது யோனி பகுதி அருகில் கர்ப்பப்பை வாய் இறங்கியிருந்தால் அவை அதிக அசெளகரியத்தை உண்டு செய்யும். உடலுறவில் திருப்தியின்மை, உறவு கொள்வதில் சிக்கல், உறவுக்கு பின் ரத்தபோக்கு போன்ற அறிகுறிகள் கூட இதன் காரணமாக இருக்கலாம். இதை தொடர்ந்து தான் படிப்படியாக சிறுநீர்ப்பை, மலச்சிக்கல் பிரச்சனை உருவாகக்கூடும்.


    ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு கொண்டிருக்கும் பெண்கள் எளிதாகவே இதை கண்டறிந்துவிட முடியும். திடீரென வரும் தும்மல், தொடர்ச்சியான இருமல் போன்ற காலகட்டங்களில் வயிற்றுக்குள் குழந்தையின் அசைவு போன்று கருப்பை இறங்குவது போன்ற உணர்வு ஏற்படும். சதைப்பகுதி கீழ்ப்பாகத்தில் உரசுவது போன்று இருக்கும். வேகமாக நடக்கும் போது சிரமமாக இருக்கும்.

    கர்ப்பப்பை இறக்கத்தை முதல் மற்றும் இரண்டாம் நிலையில் கண்டறியும் போது சிகிச்சை பெறுவதும் எளிதாக இருக்கும். மேற்கண்ட இந்த அறிகுறிகள் எல்லாமே கர்ப்பப்பை இறக்கத்துக்கான அறிகுறிகள் என்று அச்சப்பட வேண்டாம். அதே நேரம் அலட்சியப்படுத்தவும் வேண்டாம். ஏனெனில் கர்ப்பப்பை இலேசாக இறக்கம் கொள்ளும் போது இந்த அறிகுறிகளையும் தீவிரமாகவெளிப்படுத்தாது.

    40 வயதுக்கு பிறகு மாதம் ஒருமுறை கர்ப்பபை குறித்த முழுபரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பாதுகாப்பாக இருக்கலாம்.

    • கருமுட்டை வளர்ச்சிக்கு சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.
    • மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள்.

    கருத்தரித்தலில் பெண்களுக்கு முக்கியமானது கருமுட்டை, அதே போன்று ஆண்களுக்கு விந்தணுக்களின் தரம் முக்கியமானது. இவற்றில் உண்டாகும் குறைபாடுகள் கருத்தரித்தலில் சிக்கலை உண்டு செய்துவிடும்.

    ஒரு பெண் குழந்தை பிறக்கும் போதே மூன்று லட்சம் கருமுட்டைகளை கொண்டு தான் பிறக்கின்றன. குழந்தை வளரும் போது இந்த கருமுட்டையின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வரும்.

    பெண் குழந்தை வளர்ந்து பூப்படையும் போது ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை மட்டுமே முழு வளர்ச்சி அடைந்து கர்ப்பபையை சென்றடையும். பிறகு இவை விந்துவுடன் இணைந்து கருத்தரித்தலை உண்டு செய்யும்.

    கருமுட்டையானது விந்தணுக்களுடன் இணையாத நிலையில் கர்ப்பப்பை சுவருடன் இணைந்து ரத்தமாக வெளியேறும். இந்த உதிரபோக்கு தான் மாதவிடாய் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.

    அதனால் தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருமுட்டை என்பது மிக முக்கியமானதாக பார்க்கபடுகிறது.

    கருமுட்டை மற்றும் விந்தணுக்களின் ஆரோக்கியம் என்பது உணவிலும் அடங்கியிருக்கிறது. முழு வளர்ச்சி அடைந்த ஆரோக்கியமான கருமுட்டை மற்றும் தரமான விந்தணுக்கள் மட்டுமே ஆரோக்கியமான குழந்தையை உருவாக்கும்.

    கருவுற விரும்பும் தம்பதியர்கள் மருத்துவரை அணுகும் போது கருமுட்டை வளர்ச்சி மற்றும் விந்தணுக்கள் குறைபாடு பற்றி கூறியிருந்தால் நீங்கள் உங்கள் உணவு திட்டத்தை மாற்றுங்கள்.

    அதில் முதலாவதாக புகைப்பழக்கம், மதுப்பழக்கம் தவிருங்கள். இருவரும் மன அழுத்தம் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை திட்டமிடுங்கள். தூக்கம் போதுமான அளவு இருக்கட்டும்.

    விந்தணுக்கள் அதிகரிக்க மாத்திரைகள் டாக்டர் கொடுத்திருந்தாலும் வீட்டில் உணவு முறையில் ஆரோக்கியத்தை கொண்டு வரலாம். அதில் முதலாவது பச்சைகாய்கறிகள். குறிப்பாக கீரைகள். கீரையில் முருங்கைக்கீரை கொடுக்கலாம்.

    பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் போன்றவை சேர்க்க வேண்டும். பழங்காளில் ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் போன்றவற்றை அதிகம் கொடுக்க வேண்டும்.

    அதே போன்று காய்கறிகள், பழங்கள் என எதுவாக இருந்தாலும் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிற பழங்கள், காய்கறிகள் எடுத்துகொள்ள வேண்டும்.

    பெண்களின் கருமுட்டை வளர்ச்சிக்கும் இந்த உணவுகள் உதவும் என்றாலும் அதோடு பெண்கள் சிட்ரஸ் பழங்களை சேர்க்க வேண்டும்.

    வாழைப்பழம், ஆரஞ்சு, அவகேடோ என இன்னும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்த பழங்களை எடுத்துகொள்ள வேண்டும்.

    மேலும் நல்ல ஊட்டச்சத்து என்பது நீங்கள் விரும்பும் உணவுகளை தவிர்க்க வேண்டுமென்பது அல்ல. சரியான உணவுகளை எடுத்துகொள்வது. குழந்தையை பெற முயற்சிக்கும் போது புரதம், கார்போஹைட்ரேட், ஆரொக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சீரான உட்கொள்ளலுடன் ஆரோக்கியமான ஊட்டச்சத்து அவசியம்.

    • 11 வயதிலேயே பருவமடைவது தற்போது சாதாரண விஷயம்.
    • ஹார்மோன் காரணமாக கர்ப்பப்பை வளரும்.

    பெண் குழந்தைகள் பருவ மடைதல் மற்றும் அதில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம். நாகரீகம் மற்றும் மருத்துவம் முன்னேற்றம் அடைந்துள்ள இப்போதைய காலகட்டத்தில் 92 முதல் 94 சதவீத பெண் குழந்தைகள் 12 வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள்.

    மேலும் சில பெண் குழந்தைகள் 11 வயதிலேயே பருவமடைவதும் தற்போது மிகவும் சாதாரண விஷயமாகவே கருதப்படுகிறது.

    இதற்கு முந்தைய கால கட்டத்தில் பெண் குழந்தைகள் 14 வயது மற்றும் 15 வயதில் பருவமடையும் சூழ்நிலை இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை மாறியுள்ளது. அதன் விளைவாக 11 முதல் 13 வயதுக்குள் பருவமடைய தொடங்குகிறார்கள். பல வருடங்களுக்கு முன்பு பெண் குழந்தைகள் பருவமடைதல் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தனர்.

    ஆனால் இப்போது ஆறாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு கூட பருவமடைதல் பற்றி நிறைய விஷயங்கள் தெளிவாகவே தெரிகிறது. அதனால் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பெண் குழந்தைகள் பருவமடையாவிட்டால் அதற்கான காரணத்தை தங்கள் பெற்றோரிடம் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

    மேலும் இதுபற்றி தங்கள் வகுப்பு தோழிகளிடமும் பேசி ஒருவருக்கொருவர் புரிதலை வளர்த்துக் கொள்கிறார்கள். அதே நேரத்தில் பருவமடையும் வயதை கடக்கும் போது இதை ஒரு பெரிய பூதாகரமான பிரச்சனையாக சில குழந்தைகள் எதிர்நோக்குகிறார்கள்.

    உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 10 ஆயிரம் பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை 15 வயதான பிறகும் பருவம டையாமல், மாத விலக்கு வராமல் இருக்கும் நிலை இன்றும் உள்ளது. பெண் குழந்தைகள் பருவமடையாமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன? இதை மருத்துவத்தில் பிரைமரி அனனோரியா என்று சொல்கிறோம்.

    15 வயதான பிறகும் ஒரு பெண் குழந்தை பருவமடைய வில்லை என்றால் அந்த பெண் குழந்தைக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். பொதுவாகவே பெண் குழந்தைகள் பருவமடைவதற்கு முன்பு உடல் ரீதியாகவே சில மாற்றங்கள் நடக்கிறது.

    பெண் குழந்தைகளுக்கு 12 வயது பிறந்ததுமே உடலின் உயரம் அதிகரிக்க தொடங்கும். மார்பக பகுதியில் வளர்ச்சி ஏற்படும். அந்த பெண் குழந்தையை பரிசோதிக்கும் போது பெண் உறுப்பில் ஏற்படுகிற மாற்றங்கள் எல்லாமே உருவாகத் தொடங்கி இருக்கும். அதுபோன்ற மாற்றங்களால் அந்த பெண் குழந்தை 13 வயதில் பருவமடைந்து விடும்.

    சிலநேரங்களில் அதுபோன்ற பெண் குழந்தைகளுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும், அடி வயிற்றில் வலி இருக்கும். ஆனாலும் அதுபோன்ற குழந்தைகள் சரியான வயதில் பருவமடைந்து விடுவார்கள். 11 வயதில் இருந்து அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களால் மாற்றங்களின் விளைவாக 12 அல்லது 13 வயதில் அவர்களுக்கு மாதவிலக்கு வந்துவிடும்.

    இவை அனைத்தும் எதைக் குறிக்கிறது என்று பார்த்தோம் என்றால் சினை முட்டைகள், சினைப்பையில் வளரும் பொழுது அந்த பெண்ணுக்கு உடல் அளவில் பலவிதமான ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது.

    அந்த வகையில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் காரணமாக மாதவிலக்கு வருகிறது.

    15 வயதாகியும் மாதவிலக்கு வரவில்லை என்று சில குழந்தைகள் சிகிச்சைக்கு வருவார்கள். அந்த குழந்தைகள் உயரம் மிகவும் குறைவாக இருப்பார்கள். உடல் அளவிலும் ஒல்லியாக இருப்பார்கள். அவர்களுக்கு மார்பக வளர்ச்சி இருக்காது. இப்படிப்பட்ட பெண் குழந்தைகளுக்கு மாத விலக்கு வராமல் இருக்கும்.

    ஆனால் பரிசோதனைகள் மூலமாக இதுபோன்ற குழந்தைகளுக்கு என்ன காரணத்தினால் மாதவிலக்கு வரவில்லை என்று பல நேரங்களில் மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியும்.

    பெண் குழந்தைகளுக்கு சினை முட்டைகள் வளரும் போது அந்த வளர்ச்சிக்கான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் தாக்கம் உடலில் எல்லா இடங்களிலும் மாற்றங்களை உண்டாக்கலாம். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இல்லாமல் சினை முட்டைகள் சரியாக வளராத பெண் குழந்தைகளுக்கு மார்பகத்தில் வளர்ச்சி இருக்காது. அந்த பெண் குழந்தை ஒல்லியாக இருப்பார்கள். உயரமும் குறைவாக இருப்பார்கள்.

    ஒரு பெண் குழந்தை பருவமடைந்ததும் மாதவிலக்கு வருவது எதைக் குறிக்கிறது என்றால் அந்த பெண் குழந்தைக்கு சினை முட்டைகள் வெளியாகத் தொடங்கி விட்டது என்று அர்த்தம். ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கும் போதே அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் முட்டைகள் இருக்கும்.

    அந்த பெண் குழந்தை வளர்ச்சி அடையும் போது சினைப்பையில் கோடிக்கணக்கில் முட்டைகள் காணப்படும்.

    இந்த முட்டைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஹைபோதலாமஸ் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வர ஆரம்பிக்கும். இதனுடைய தூண்டுதலின் காரணமாகத்தான் இந்த முட்டைகள் வளரும். முட்டைகள் வளர வளர அதில் இருந்து வரும் ஹார்மோன் காரணமாக கர்ப்பப்பை வளரும்.

    மேலும் அந்த பெண் குழந்தைக்கு மார்பக வளர்ச்சி உள்ளிட்ட அனைத்துமே ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் தாக்கம் தான். இந்த முட்டைகள் வளர்ந்து ஒரு காலகட்டத்தில் அது வெளிவர ஆரம்பிக்கும் போதுதான் கர்ப்பப்பை உள்சுவர் வளர்ச்சி அடைந்து மாதவிடாய் வருகிறது.

    பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சரியாக வராததற்கு முதல் முக்கியமான காரணம் முட்டை வளர்ச்சி இல்லாத நிலை தான். முட்டைகள் வளர்ச்சி யாருக்கு இல்லாமல் இருக்கும் என்பதை பார்க்கும்போது சிலருக்கு முட்டைகள் இருக்கும், ஆனால் அது வளர்வதற்கு தேவையான ஹார்மோன் இருக்காது.

    அதாவது அதுபோன்ற பெண்களுக்கு மூளையில் இருந்து வரும் ஹார்மோன் தூண்டுதல் இல்லையென்றால் முட்டைகள் இருந்தாலும் வளர்ச்சி இருக்காது. இதனால் பருவமடைதல் விஷயத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது.

    இன்னும் சில பெண் குழந்தைகளுக்கு சினை முட்டை இருக்கும். அந்த சினை முட்டை நன்றாகவே வளரும். அதற்கான ஹார்மோன் மாற்றங்களும் இருக்கும். மார்பகமும் வளரும். ஆனால் மாதவிலக்கு மட்டும் வராது. இது போன்ற சூழலுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகளே காரணமாகிறது.

    அவர்களுக்கு கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமல் இருக்கலாம் அல்லது கர்ப்பப்பையே உருவாகாமல் இருக்கலாம். அதுபோன்ற பெண் குழந்தைகளுக்கு மாதவிலக்கு வராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும் அதெல்லாம் சரியாக இருந்தும் மாதவிலக்கு வரவில்லை என்றால் முட்டைகள் இல்லாமல் இருக்கலாம்.

    • கர்ப்பப்பையைப் பாதிக்கும் அளவிற்குத் தீங்கானது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
    • நுண்ணுயிரிகள் எளிதாக நாப்கினில் தொற்றிக் கொள்ள வழிவகை செய்யும்.

    சானிட்டரி நாப்கினில் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் இதில் இருக்கிறது. சானிட்டரி நாப்கின் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய விதிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

    இன்றைக்கு அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருட்களில் முதலாவதாக இருப்பது சானிட்டரி நாப்கின். இவை பருத்தி மூலப்பொருளினால் செய்யப்பட்ட உற்பத்திப் பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம் என்றுதான் நாம் நினைத்துகொள்வோம். ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ ரசாயனங்கள் இதில் இருக்கிறது. பெரும்பாலான நாப்கின்கள், வண்ணம் போக்குகின்ற ரசாயனங்களாலும், மீள்சுழற்சி செய்யப்பட்ட காகிதங்களாலும் தயாரிக்கப்படுகின்றன. இதில் டயாக்சின் என்ற ரசாயனம் கலக்கப்படுக்கிறது. இவை கர்ப்பப்பையைப் பாதிக்கும் அளவிற்குத் தீங்கானது என்று ஆய்வுகள் கூறுகின்றன.


    சானிட்டரி நாப்கினில் ஈரத்தை உறிஞ்சுவதற்காக Hxcdf கலக்கப்படுகிறது. இந்த ரசாயனங்கள் நோய்த் தடுப்பாற்றலையும், கருமுட்டை உற்பத்தித் திறனையும் குறைக்கக்கூடியவை. பொதுவாகவே சானிட்டரி நாப்கின்கள் அசுத்தமான இடங்களில் தான் வைக்கப்படுகின்றன. கழிப்பறை சிங்க் அடியில், கழிப்பறை மேஜை மீது அல்லது பைக்குள், மற்ற பொருட்களின் நடுவில் குப்பை போல் வீசப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட்டும் முறையாக சீல் செய்யப்படுவது அவசியமாகும். பெரும்பாலான நுண்ணுயிரிகள் நேரடியாகக் காற்றோட்டமில்லாத சூழ்நிலையில் வாழக்கூடியவை. இதனால் சானிட்டரி நாப்கின் காற்றோட்டமாக இருப்பது அவசியமாகும். பெரும்பாலான கழிவறைகள் இருட்டாகவும், ஈரமாகவும் இருப்பதால் நுண்ணுயிரிகள் எளிதாக நாப்கினில் தொற்றிக் கொள்ள வழிவகை செய்யும்.

    நாப்கின் மாற்றும்போது கைகளைக் கழுவாமல் இருப்பது, புதிய நாப்கினை பயன்படுத்துவதற்குக் கைகளை கழுவாமல் உபயோகிப்பது தவறான பழக்கம். உபயோகித்த நாப்கினை எடுத்துவிட்டுக் கை கழுவாமல் புதிய நாப்கினை பாக்கெட்டில் இருந்து எடுப்பது, நுண்ணுயிரிகளை மேலும் பரவச் செய்யும். உணவுப்பொருட்களில் இருப்பது போல் எல்லா நாப்கின் பாக்கெட்களிலும் காலாவதி தேதி இருப்பதில்லை. ஆனால் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்கும் நாப்கினை வாங்கிப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது. ஒவ்வொரு நாப்கினையும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவது, தவறான அணுகுமுறை.


    நாப்கின்களைப் பயன்படுத்துவதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பதைப் போல், அதை அப்புறபடுத்துவதைப் பற்றித் தெரிந்துகொள்வதும் மிக அவசியம். உபயோகப்படுத்திய நாப்கினை டாய்லெட் பிளஷ்ஷில் போடுவது மிகவும் தவறான ஒன்றாகும். குறிப்பாக ஆண்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகப் பெண்கள் சில தவறுகளை செய்கின்றனர். மாதவிடாய் என்பது பெண் உடலில் ஏற்படும் இயற்கையான ஒரு வளர்சிதை மாற்றம் என்ற எண்ணத்தையும், விழிப்புணர்வையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். உபயோகித்த நாப்கினை பேப்பரில் சுற்றிக் குப்பைத் தொட்டியில் போடவும். மேலும் குப்பைத் தொட்டிகளை நீண்டகாலம் காலிசெய்யாமல் வைத்திருந்தால் கிருமிகள் தொற்றும் வாய்ப்புகள் உள்ளது. பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு அவசியம் வேண்டும். உங்கள் பெண் பிள்ளைகளுக்கு எந்த கூச்சமும் இல்லாமல் நாப்கினை வாங்குவதற்கு கற்று கொடுப்பது நல்லது.

    • பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது வெட்கம்.
    • வெட்கப்படுவதற்கு இணையாக கோபப்படும் போதும் கன்னங்கள் சிவக்கின்றன.

    பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது வெட்கம். குறிப்பாக திரைப்படங்களிலும், கதை புத்தகங்களிலும் வெட்கப்படும்போது முகம் சிவக்கும் அழகை வர்ணிக்காதவர்களே இல்லை. அதேவேளையில், வெட்கப்படுவதற்கு இணையாக கோபப்படும் போதும் கன்னங்கள் சிவக்கின்றன.

    குறிப்பாக டீன் ஏஜ் பருவம் என கூறப்படும் இளம்பெண்களுக்கு வெட்கத்தில் கன்னங்கள் சிவப்பாக மாறும். இது அவர்களின் அழகை மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.

    சிலருக்கு சிலரை பார்த்தால் இந்த வெட்கம் ஏற்படுகிறது. இந்த வெட்கத்தின் போது முகம் சிவப்பு நிறத்தை அடைகிறது. அது ஏன் அப்படி சிவப்பு நிறத்தை அடைகிறது என்ற ஆராய்ச்சியில் நெதர்லாந்தை சேர்ந்த அம்ஹர் டாம் பல்க லைக்கழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

    40 டீன் ஏஜ் பருவ இளம் பெண்களை ஆய்விற்காக எடுத்துக் கொண்டனர். சினிமா பாடல்களை ஒளிபரப்பி அதனோடு இளம்பெண்களை பாடுமாறு கூறினார்கள். அவ்வாறு பாடும் போது அவர்களின் கன்னங்கள் வெப்பம் மற்றும் மூளையில் ஏற்பட்ட சந்தோசத்தால் சிவப்பது கண்டறியப்பட்டது. மேலும் பெண்கள் தங்களுக்குள் பாடல்களை பாடும் போது கன்னங்கள் தானாகவே சிவந்ததை கண்டனர்.

    பாடல் வரிகளை கேட்டு வெட்கத்தில் பெண்களுக்கு கன்னம் சிவப்பதையும் கண்டனர். கூச்சத்தின் முக்கிய பங்கான வெட்கத்தை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர்.

    இந்த ஆராய்ச்சியில் வெட்கத்தில் கன்னம் சிவப்பதற்கான முழுமையான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை.

    • உடல்நல பிரச்சனைகள் இருந்தால் சி பிரிவை திட்டமிடலாம்.
    • சில பெண்கள் சுகப்பிரசவத்தில் தொடங்கினாலும் சி பிரிவுக்கு மாற்றலாம்.

    சிசேரியன் பிரசவம் என்பது கர்ப்பிணியின் வயிறு மற்றும் கருப்பையை திறக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுக்கும் ஒரு வழி. இது சிசேரியன் முறை பிரசவம் என்று அழைக்கப்படுகிறது.

    சி-பிரிவு காரணங்களாக பலவற்றை சொல்லலாம். கர்ப்பகாலத்தில் சிசேரியன் என்று உறுதியாக இருந்தாலும் சிலசமயங்களில் சுகப்பிரசவமும் யோனி வழி பிரசவமும் நடக்கலாம்.

    திட்டமிடப்பட்ட சிசேரியன்

    சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் என்று முன்கூட்டியே தெரிந்தால் நீங்கள் பிரசவ தேதியையும் மருத்துவர் மூலம் அறிவீர்கள். ஐவிஎஃப் முலம் மருந்துகள் மற்றும் திரவங்களை பெறுவீர்கள். அறுவை சிகிச்சையின் போது உங்கள் சிறுநீர்ப்பை காலியாக வைக்க ஒரு வடிகுழாய் வைக்கப்படும்.

    இந்த சி பிரிவுக்கு திட்டமிடும் பெரும்பாலான பெண்களுக்கு மயக்க மருந்து ஒரு எபிட்யூரல் அல்லது ஸ்பைனல் பிளாக் இடுப்பிலிருந்து கீழே இறங்கிவிடும். இதனால் எந்த வலியையும் நீங்கள் உணரமாட்டீர்கள். இந்த வகையான மயக்க மருந்து உங்களை இன்னும் விழித்திருக்கவும் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவும் உதவுகிறது.

    அறுவை சிகிச்சையின் போது இடுப்புக்கு குறுக்கே ஒரு திரை வைக்கப்படுவதால் அதை பார்க்க முடியாது. வயிற்றில் அதன் பிறகு கருப்பையில் ஒரு வெட்டு இருக்கும் என்றாலும் மயக்க மருந்து காரணமாக நீங்கள் அதை உணர மாட்டீர்கள்.

    கருப்பையில் இருந்து குழந்தையை அகற்ற மருத்துவர்கள் பணிபுரியும் போது நடுப்பகுதியை அவர்கள் தள்ளுவதையோ அல்லது இழுப்பதையோ நீங்கள் உணர முடியும். அல்லது அழுத்தமாக உணர்வீர்கள். குழந்தை பிறந்தவுடன் அழுவதை கேட்கவும், பார்க்கவும் முடியும்.

    எனினும் சிசேரியன் முடிந்ததும் மருத்துவர் உங்களை அனுமதித்தால் நீங்கள் தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கலாம். அதே நேரம் எல்லா கர்ப்பிணி பெண்களும் தங்கள் குழந்தையை உடன் வைத்திருக்க முடியாது.

    சில நேரங்களில் சி – பிரிவு மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிக்கல் மற்றும் மருத்துவரகளின் உதவி தேவைப்படலாம். குழந்தையின் நஞ்சுக்கொடியை அகற்றி தையல் போடப்படும். சிசேரியன் பிரசவம் செய்வதற்கு 1 மணி நேரம் வரை இருக்கலாம்.

    அதே நேரம் அவசரகால சிசேரியன் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சையின் வேகம் மற்றும் அவசரம் உட்பட சில வித்தியாசங்கள் இருக்கலாம். திட்டமிடப்பட்ட சி பிரிவு காட்டிலும் அவசரமாக செய்யப்படும் சி- பிரிவில் வேகம் அதிகமாக இருக்கும்.

    சிசேரியனுக்கான காரணங்கள்

    கர்ப்பிணிக்கு அல்லது குழந்தைக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதால் சி பிரிவு திட்டமிடலாம்.

    ஏற்கனவே சி- பிரிவு இருந்தால் அடுத்த குழந்தையை பிரசவிப்பதும் சிசேரியனாக இருக்கலாம்.

    யோனி பிரசவத்தின் போது தாய்க்கு அல்லது குழந்தைக்கு ஹெச்.ஐ.வி மற்றும் செயலில் உள்ள ஹெர்ப்ஸ் போன்ற சில நோய்த்தொற்றுகளை கொடுக்கலாம்.

    கர்ப்பிணி நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற சில நிபந்தனைகள் கொண்டிருக்கும் போது மருத்துவர் சி -பிரிவு அறிவுறுத்தலாம்.

    நஞ்சுக்கொடி கருப்பை வாயை தடுக்கலாம். சில பிரசவங்கள் சி பிரிவை அவசியமாக்கலாம். குழந்தை மிகவும் பெரியதாக இருக்கலாம். அல்லது பிரசவத்துக்கு தவறான நிலையில் இருக்கலாம். குழந்தைக்கு சி- பிரிவு பாதுகாப்பானதாக மற்றும் பிறப்பு குறைபாடுகள் இருக்கலாம். சில பெண்கள் சுகப்பிரசவத்தில் தொடங்கினாலும் சி பிரிவுக்கு மாற்றலாம்.

    வயிற்றில் குழந்தைக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு போன்ற மோசமான அறிகுறிகளை மருத்துவர் கவனிக்கலாம். ஏனெனில் பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு, கரு எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதற்கான நல்ல அறிகுறியாகும்.

    பிரசவத்தின் போது கருவின் இதயத்துடிப்பு கண்காணிக்கப்படும். சாதாரண விகிதம் நிமிடத்துக்கு 120 முதல் 160 வரை இடையில் மாறுபடும்.

    கருவின் இதயத்துடிப்பு ஏதேனும் சிக்கல் இருப்பதாக காட்டினால் மருத்துவர் உடனடி நடவடிக்கையை எடுப்பார். தாய்க்கு ஆக்சிஜனை வழங்குவது, திரவத்தை அதிகரிப்பது மற்றும் தாயின் நிலையை மாற்றுவது போன்றவை முயற்சிக்கப்படும். இதயத்துடிப்பு மேம்படவில்லை எனில் அவர் சி பிரிவு சிகிச்சைக்கு வலியுறுத்தலாம்.

    சில குழந்தைகள் பிறக்கும் போது கருவின் அசாதாரண நிலையில் இருக்கலாம். பிரசவத்தின் போது கருவின் இயல்பான நிலை தாயின் முதுகை எதிர்கொள்ளும் வகையில் தலை கீழாக இருக்க வேண்டும். சில நேரங்களில் கரு சரியான நிலையில் இருக்காது. இது பிறப்பு கால்வாய் அதாவது யோனி வழியாக பிரசவத்தை கடினமாக்கலாம்.

    பிரசவக்காலத்தில் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது கூட சி பிரிவு பிரசவத்தை தூண்டக் கூடும். இரட்டை குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் பிறப்பது.

    நஞ்சுக்கொடி பிரச்சனைகள், இது ப்ரீவியாவை உள்ளடக்கியது. இதில் நஞ்சுக்கொடி கருப்பை வாயை தடுக்கிறது. இது கருவில் இருந்து துண்டிக்கப்படும் ஒரு நிலைமை.

    • கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி உற்பத்தி செய்யும் ஒரு ஹார்மோன் ஆகும்.
    • கருப்பைச் சுவரை தடிமனாக்க உதவுகின்றன.

    எச்.சி.ஜி என்பது கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி உற்பத்தி செய்யும் ஒரு ஹார்மோன் ஆகும். எச்.சி.ஜி ஹார்மோன்கள் மாதவிடாய் செயல்முறையை நிறுத்த உடலை தயார் செய்கின்றன, மேலும் அவை கருவில் வளரும் குழந்தைக்கு உதவி செய்யும் வகையில் கருப்பைச் சுவரை தடிமனாக்க உதவுகின்றன. கர்பக்காலத்தில் 10 வாரங்கள் வரை hCG அளவு அதிகமாகவே இருக்கும்.

    HCG ஊசி என்றால் என்ன?

    மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் (HCG) ஊசி என்பது ஹார்மோன் ஊசி ஆகும், இது ஒரு பெண்ணின் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதற்க்காக மருத்துவரின் ஆலோசனையில் மூலம் செலுத்தப்படுகிறது.

    இது ஆண்களுக்கு, விந்து மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு உதவுகிறது, மேலும் கிரிப்டோர்கிடிசம் எனப்படும் டெஸ்டிகுலர் கோளாறுக்கு சிகிச்சையளிக்கிறது.

    HCG ஊசி எப்போது எடுக்க வேண்டும்?

    உங்கள் மாதவிடாய் முடிந்து 8 முதல் 12 நாட்களுக்குள் இந்த ஊசி செலுத்துவார்கள், இந்த செயல்முறை ஒவ்வொருவரின் மாதவிடாய் சுழற்சியை பொறுத்து மாறுபடும், இதனை கண்காணிக்க மருத்துவர் ஃபோலிகுலர் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வார்கள்.

    கருப்பையில் ஒரு முதிர்ந்த கரு முட்டை இருந்தால் இந்த மருந்து கொடுக்கப்படுகிறது. உங்கள் மருத்துவர் HCG ஊசிகளை எடுக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தை பரிந்துரைப்பார்.

    இதில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் பட்சத்தில், நீங்கள் சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்ளாவிட்டால், உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.

    • பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.
    • காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது.

    குழந்தைகளுக்கு எல்லா ஊட்டச்சத்துகளும் நிறைவாக கிடைக்கும் உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு தாய்ப்பால் தான். மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மையான உணவாகும்.

    குறிப்பிட்ட காலம் வரை குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டவது குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமானது. தாயிடமிருந்து கிடைக்கும் இந்த இயற்கையான உணவு ஆரோக்கியம், குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒரு சிலருக்கு தாய்பால் சுரப்பதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. எளிதில் சுரப்பை அதிகரிக்க சில உணவு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதை பற்றி பார்ப்போம்.

    தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்க கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், பட்டாணி மற்றும் பச்சை பயிறு, தட்டை பயிறு, இதுபோன்ற உணவுகளை ஊறவைத்து தாளித்து இதை சாப்பிட்டு வரலாம். இதில் ப்ரோட்டீன் சத்து அதிகமாக உள்ளதால் பால் சுரப்பி அதிகமாக ஆகும்.

    அதுமட்டும் அல்லாமல் நாட்டு கருது, வேகவைத்த வேர்க்கடலை இதெல்லாம் மாலை நேரத்தில் பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட்டால் ப்ரோட்டீன் சத்து அதிகமாய் கிடைக்கும்.

    கீரையை சுத்தம் செய்து கைப்பிடி அளவு பாசிப்பருப்பை அதனுடன் வேக வைத்து கூட்டாக சாப்பிட்டு வந்தால் தாய்ப் பால் சுரக்கும்.


    தாய்ப்பால் அதிகமாக சுரக்க தாய்மார்கள் அனைவரும் மட்டன், சிக்கன், கருவாடு, மீன் போன்றவை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் அனைவரும் முட்டை, சிக்கன், குழம்பு மீன் முக்கியமாக சாப்பிட வேண்டும்.

    காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது. அதோடு சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் பால் சுரக்கும் தன்மை இருக்காது. பகலில் கண்டிப்பாக தூங்கவேண்டும்.

    வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும். இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

    வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் முதலியவற்றை தினமும் உணவுடன் ஒரு வேளை சேர்த்துக் கொள்வது நல்லது.

    முருங்கைக்கீரையை கூட்டாகவோ, பொரியலாகவோ, சூப்பாகவோ ஏதோ ஒரு வகையில் சமைத்து சாப்பிடலாம். இதை சரியான முறையில் சமைக்காவிட்டால் வயிற்றுப் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

    பால் சுறா என்னும் கருவாடு (அ) மீன் மிகச்சிறந்த உணவு. தாய்ப்பால் கொடுப்பவர்கள் சமைத்த உடனே சாப்பிட வேண்டும் பதப்படுத்தி வைத்து சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

    பால் சுரக்க என்ன உணவுகளை சாப்பிடவேண்டும் என்று யோசிக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் 500 மில்லி பாலினை உணவில் அவசியம் சேர்த்து கொள்ளுங்கள். இதனால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.

    கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பாலை சுரக்க செய்வதுடன், இவற்றின் சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது.


    எனவே பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.

    கிழங்கு வகைகள் நல்லது தான் என்றாலும் குறைவாக சாப்பிடவும். அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மந்தம் வரும்.

    தாய்ப்பால் உற்பத்தி குறைவிற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். இச்சத்தில் குறைபாடு இருந்தால் தாய்ப்பாலை வறட்சியடையச் செய்து விடும்.

    மன அழுத்தம் வந்தால் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு இறுதியில் தாய்ப்பால் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மனதை ரிலாக்ஸாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம்.

    அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பொரித்தவை மற்றும் செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயணக் கலவை சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். குறிப்பாக குளிர் பானங்களைத் தவிர்க்கவும். சீதாப்பழத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்.

    குழந்தையின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் போடும் முதல் அடித்தளம் இந்த தாய்ப்பாலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதனால் வீட்டில் உள்ள நம்முடைய ஆரோக்கியமான சமையல் மூலமாகவே தாய்ப்பாலை அதிகரிக்க செய்யலாம்.

    • ‘ஷாப்பிங் டிஸார்டர்’ எனப்படும் ஒருவகையான மனநிலை கோளாறுக்கு வித்திடும்.
    • மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்காக ஷாப்பிங் செல்வார்கள்.

    பெண்களுக்கு பிடித்தமான விஷயங்களுள் முதன்மையானது, 'ஷாப்பிங்'. அதனை சிறந்த பொழுதுபோக்காக கொண்டாடவும் செய்வார்கள். அதிலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழும் பெண்களுக்கு வெளியே சென்று வருவதற்கான வாய்ப்பை ஷாப்பிங்தான் ஏற்படுத்திக்கொடுக்கும். அதனால் உற்சாகமாக கிளம்பிவிடுவார்கள்.

    மனதுக்கு பிடித்தமான பொருளை வாங்க செல்வதாக இருந்தால் இன்னும் குஷியாகிவிடுவார்கள். அப்படி நெடுநாட்களாக வாங்க விரும்பிய பொருட்களை தேடி சென்று வாங்குவதற்கு முனைப்பு காட்டுவதில் தவறில்லை. அந்த பொருளையும் தவிர்த்து அங்கு பார்த்ததும் பிடித்து போகும் பொருட்களை எல்லாம் வாங்குவதற்கு விரும்பும் மனநிலை சிலரிடம் தொற்றிக்கொள்ளும்.

    ஏற்கனவே ஆடை, அணிகலன்கள் நிறைய இருந்தாலும் மீண்டும் வாங்குவதற்கு முனைப்பு காட்டுவார்கள். அத்தகைய நிலைப்பாடு 'ஷாப்பிங் டிஸார்டர்' எனப்படும் ஒருவகையான மனநிலை கோளாறுக்கு வித்திடும்.

    இத்தகைய பாதிப்பு கொண்டவர்களுக்கு பிடித்தமான பொருட்களை வாங்குவதால் மட்டும் மன நிறைவு ஏற்படாது. தற்போது தேவைப்படாத அவசியமில்லாத பொருட்களை கூட வாங்குவார்கள். அந்த பொருட்கள் அவர்களுக்கு பிடித்தமானவையாக இருக்கும் என்பது மட்டுமே அதற்கான காரணமாக இருக்கும்.

    ஆனால் அவை தற்போது பயன்படாத பொருளாகவே இருக்கும். அப்படி அவசியமின்றி விரும்பிய பொருட்களை வாங்கிக்கொண்டே இருப்பது ஷாப்பிங்குக்கு அடிமைப்படுத்தி விடும்.

    அப்படிப்பட்டவர்களை வீட்டுக்குள்ளேயே இருப்பதால் பொழுது போக்குக்காக ஷாப்பிங் செல்கிறார்கள் என்றும் கூறி விட முடியாது. அடிப்படை தேவை பற்றியோ, கையிருப்பாக வைத்திருக்கும் பணம் பற்றியோ சிந்திக்காமல் செலவு செய்யும் எண்ண ஓட்டமே அவர்களிடம் எட்டிப்பார்க்கும்.

    அதனால் பணத்தை இழக்க வைக்கும் பொழுதுபோக்காக அவர்களின் ஷாப்பிங் மாறிவிடக்கூடும். மன நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சரியான திட்டமிடலுடன் செயல் படாவிட்டால் அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது சிரமமானது.

    தேவை அறிந்து பொருட்களை வாங்குவது வேறு. அவசியமின்றி பொருட்களை வாங்குவது வேறு. இவை இரண்டுக்கும் இடையே நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனை கருத்தில் கொள்ளாமல் ஏற்படும் 'ஷாப்பிங் டிஸார்டர்' எனப்படும் மனநிலை கோளாறு ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் பாதிக்கும். குறிப்பிட்ட பொருட்கள் மீது அலாதி பிரியம் கொள்வது அதற்கு காரணமாக இருக்கலாம்.

    இந்த ஷாப்பிங் டிஸார்டர் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதை ஒருசில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    * தினசரியோ அல்லது அடிக்கடியோ ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.

    * மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்காக ஷாப்பிங் செல்வார்கள்.

    * கிரிடிட் கார்டு வைத்திருப்பவர்களாக இருந்தால் பணத்தை பற்றி கவலைப்படாமல் அதில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் தொகை காலியாகும் வரை பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.

    * பிடித்தமான பொருட்களை பார்த்துவிட்டாலே மற்றவர்கள் முன்னிலையில் அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

    * தற்போது தேவைப்படாத பொருட்களை வாங்குவார்கள். அதனை உபயோகப்படுத்தபோகிறோமா என்பதை பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்கள். அந்த பொருள் பிடித்துவிட்டால் போதும். அதை வாங்கியே தீர வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்கள்.

    * ஷாப்பிங் செல்வதற்காக பொய் பேசக்கூட தயங்கமாட்டார்கள். சில சமயங்களில் மட்டுமே செய்த தவறுக்காக வருத்தப்படுவார்கள். ஆனாலும் ஷாப்பிங் செல்வதை ஒருபோதும் தவிர்க்கமாட்டார்கள்.

    * ஷாப்பிங் செல்வதற்காக மற்றவர்களிடம் கடன் வாங்கவும் தயங்க மாட்டார்கள். அதேவேளையில் வாங்கிய கடனை திருப்பி கொடுப்பதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள்.

    * ஏற்கனவே பட்ஜெட் போட்டுவிட்டு ஷாப்பிங் சென்றிருந்தாலும் கூட அதையும் மீறி தாராளமாக செலவு செய்வார்கள்.

    * மனக்கவலை தரும் ஏதாவதொரு பிரச்சினையை எதிர்கொண்டால் அதில் இருந்து மீள்வதற்காகவோ, அதை மறப்பதற்காகவோ ஷாப்பிங் செல்வார்கள்.

    • ஹார்மோன் பிரச்சனை இருப்பவருக்கு இது மாறுபடும்.
    • மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    கர்ப்பத்தை திட்டமிடும் அனைவருக்கு கருத்தரிக்க சிறந்த நாட்கள் எது என்பதை தெரிந்து கொள்ளுவதில் குழப்பமாக இருக்கும். இப்படி குழப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் அண்டவிடுப்பின் நாட்களை சரியாய் தெரிந்து வைத்துக்கொள்ளுவது அவசியம்.

    ஓவரியில் இருந்து கரு முட்டையை வெளியிடும் போது அண்டவிடுப்பு நிகழ்கிறது, உங்கள் மாதவிடாய் சுழற்சி முடிந்த பிறகு ஒவ்வொரு மாதமும் அண்டவிடுப்பு நிகழ்கிறது.

    அதாவது 28 நாள் சுழற்சியின் 11 நாள் முதல் 14-வது நாளில் அண்டவிடுப்பின் நடக்கிறது, இது எல்லோருக்கும் பொதுவானது இல்லை. ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது கருப்பை நீர்கட்டிகள் மற்றும் ஹார்மோன் பிரச்சனை இருப்பவருக்கு இது மாறுபடும்.

    நீங்கள் சரியான 28-நாள் சுழற்சியைக் கொண்டிருந்தால், 14 -ம் நாளில் அண்டவிடுப்பு நிகழும்.

    எனவே, நீங்கள் கர்ப்பம் தரிக்க விரும்பினால், உங்கள் மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருக்க சிறந்த நேரம்.

    ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அண்டவிடுப்பு வித்தியாசமாக இருக்கும், மேலும் இது பல காரணங்களால் கருவுறுதலை பாதிக்கலாம்.

    ஒருமுறை கருமுட்டை வெளியேற்றினால், விந்தணுவுடன் இணைந்து கருவுற கரு முட்டை 24 மணி நேரம் வரை மட்டுமே உயிர்வாழும்.

    எனவே ஒரு மாதத்தில் அண்டவிடுப்பு நடக்கும் நாள் தான் கருவுற சிறந்த நாட்கள், மற்ற நாட்கள் கர்ப்பம் தரிக்க சிறந்த நாட்கள் இல்லை.

    மாதவிடாய்க்குப் பிறகு கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், அப்போது தான் உங்கள் கரு முட்டை வெளியில் வரும், பிறகு அண்டவிடுப்பின் நிகழும் அந்த சமயத்தில் தாம்பத்தியம் கொள்ளுவதன் மூலம் கருத்தரிக்க முடியும்.

    இதைச் செய்வதன் மூலம் நீங்கள் கர்ப்பமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும்.

    ×