search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "insomnia"

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது, சவால்கள் நிறைந்தது.
  • ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை.

  முரண்கள் நிறைந்த வாழ்வு விந்தையானது மட்டுமல்ல, சவால்கள் நிறைந்ததும்கூட. ஆசை நிராசையாவதும் உறவு பிரிவதும் வாழ்வில் வாடிக்கை. சமநிலையில் இருக்கும் மனத்துக்கும் அது தெரியும். இருப்பினும், உண்மையை எதிர்கொள்ளும்போது, வாழ்வின் ஏமாற்றத்தையும் பிரிவின் துயரையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனித மனம் தடுமாறும், தடம் மாறும். பின் சில நிமிடங்களிலோ சில மணி நேரத்திலோ சில நாட்களிலோ மனம் தன் இயல்புக்குத் திரும்பும்.

  ஏமாற்றங்களும், பிரிவுகளும், இழப்புகளும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு ஆழமானதாக இருந்தால், மனம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல், சோகத்தில் தேங்கிவிடும். இந்த தேக்க நிலை, அதாவது நிஜத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனத்தின் போராட்டம் மன அழுத்தத்தின் ஒருவகை என்றால், மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்களின் குறைபாட்டால் ஏற்படும் மன அழுத்தம் மற்றொரு வகை ஆகும்.

  மன அழுத்தம் என்றவுடன், அதனால் பாதிக்கப்படவர்கள் சோகமாக வலம் வருவார்கள் என்றோ எந்நேரமும் அழுவதற்குத் தயாராக இருப்பார்கள் என்றோ எண்ண வேண்டாம். வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் மீதான ஈடுபாட்டுக் குறைவே மன அழுத்தம். மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ குறைவாகவோ சாப்பிடுவார்கள், தூங்குவார்கள், சுற்றத்தை விட்டு விலகுவார்கள், நட்பைத் தவிர்த்துத் தனிமையை விரும்புவார்கள், வழக்கமான செயல்களில் நாட்டமின்றி இருப்பார்கள்.

  இப்பொழுது உள்ள இளைய தலைமுறையினருக்கு மேலோங்கி உள்ள பெரிய பிரச்சனையே மன அழுத்தம் தான். பள்ளி குழந்தைகளுக்கு கூட மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு காரணம் மாறி வரும் பழக்கவழக்கங்கள் தான். மனஅழுத்தத்தை குறைக்க சில வழிமுறைகள் இதோ....

  மனஅழுத்தம்:

  சில வழிமுறைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்வது மூலம் மனஅழுத்தத்தை தூண்டும் ஹார்மோன் எண்ணிக்கையை குறைக்கலாம் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் நாம் வேலை என்றே ஓடி கொண்டிருக்கிறோம். நம்மை நாமே பார்த்துக்கொள்ள கூட நேரமிருப்பதில்லை.

  சிறிதும் ஓய்வின்றி வேலைகள் செய்வதால் கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகளுக்கு கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. வயதிற்கு மீறிய சுமைகளை அவர்கள் மீது சுமத்தும் போது மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம் இன்றைய வாழ்க்கை முறை. இதனை விரட்ட சில வழிமுறைகளை மேற்கொண்டால் போதும்.

   தவிர்க்கும் முறை:

  * உடற்பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்றாகும். தினமும் காலையில் மூச்சு பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தம் குறைந்து உடலும் மனமும் லேசாகும்.

  * வீட்டிலேயே முடங்கி கிடப்பதை விட்டுவிட்டு சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். அனைத்தையும் கவனித்துக் கொண்டு நடக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மனஅழுத்தம் சற்று குறையும்.

  * ஓய்வாக இருக்கும் வேளைகளில் உங்களுக்கு பிடித்த பாடலை கேளுங்கள். இது மனதிற்கு ஆறுதல் அளிப்போதோடு மன அழுத்தத்தையும் குறைக்கும்.

  * மனஅழுத்தத்தின் போது கார்டிசால் என்ற ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அப்பொழுது வயிறு குலுங்க சிரிப்பதால் அந்த ஹார்மோன் சுரப்பது குறைந்து மூளையை தூண்டுவதற்கு உதவும். எனவே வயிறு குலுங்க சிரித்து பழகுங்கள். மனஅழுத்தம் குறையும். உங்களை சிரிக்க வைப்பவர்கள் மகிழ்ச்சியாக வைத்து கொள்பவர்களிடம் அதிகமாக பழகுங்கள்.

  * இனிப்பு வகைகளை அளவாக சாப்பிட்டு வருவதால் மனஉளைச்சலை தூண்டும் ஹார்மோன்கள் குறைக்க உதவும் என ஆய்வு கூறுகிறது. எனவே வாரத்திற்கு ஒரு முறை சாக்லேட் போன்ற இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டு வந்தால் மனஅழுத்தம் குறையும்.

  • வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில்தான் கழிகிறது.
  • இரவுநேர தூக்கத்தைவிட சிறந்த வரம் வேறு இருக்க முடியாது.

  நம் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்தில்தான் கழிகிறது. நமது தூக்கத்தின் தரத்தைப் பொறுத்தே, மீதமிருக்கும் வாழ்க்கையின் தரம் அமைகிறது. நல்ல இரவு நேரத் தூக்கத்தைவிடச் சிறந்த வரம் வேறு இருக்க முடியாது. தூக்கம் நமக்கு அளிக்கும் நன்மைகள் அப்படி. தூக்கம் நம் உடலுக்கு மட்டுமல்லாமல் மூளைக்கும் மனத்துக்கும் ஓய்வை அளிக்கிறது. மறுநாளைப் புத்துணர்வோடு எதிர்கொள்ளத் தேவைப்படும் ஆற்றலையும் தருகிறது. சொல்லப்போனால், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் இரவுத் தூக்கமே அடிப்படை.

  நமது வயது எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதிக தூக்கம் தேவை. குழந்தையாக இருக்கும்போது நீண்ட நேரத் தூக்கம் தேவை. குழந்தைகள் வளர வளர தூங்கும் நேரமும் குறைகிறது. ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ஏழு முதல் எட்டரை மணிநேரத் தூக்கம் தேவைப்படும். சராசரியாக குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தேவைப்படும் தூக்கத்தின் அளவு:

  0 - 3 மாதங்கள் 14 -17 மணிநேரம்

  4 - 12 மாதங்கள் 12-16 மணிநேரம்

  1 - 2 வயது 11-14 மணிநேரம்

  3 - 5 வயது 10-13 மணிநேரம்

  6 - 12 வயது 9-12 மணிநேரம்

  13- 18 வயது 8-10 மணிநேரம்

  19 - 64 வயது 7- 9 மணிநேரம்

  65 வயதுக்கு மேல் 7-8 மணிநேரம்

  புத்துணர்வையும் ஓய்வையும் உணர்வதற்கு ஒவ்வொரு நாளும் 4 முதல் 6 தூக்க சுழற்சிகள் நமக்குத் தேவை. இதில் 4 நிலைகள் உள்ளன. முதல் 3 நிலைகளில் விரைவற்ற கண் அசைவு தூக்கமும், 4-ம் நிலையில் விரைவான கண் அசைவு தூக்கமும் இருக்கின்றன.

  நாம் தூங்கும் அளவைப் பொறுத்து ஒவ்வொரு நிலையிலும் தூங்கும் நேரம் மாறுபடும். பொதுவாக, முதல் நிலை 5 முதல் 10 நிமிடங்களும், 2-ம் நிலையில் 25 நிமிடங்களும், 3-ம் நிலையில் 20 முதல் 40 நிமிடங்களும், 4-ம் நிலையில் 10 நிமிடங்களும் நீடிக்கும்.

   முதல் நிலையில் நாம் தூக்கத்தை உணரமாட்டோம். ஆனால் உடல், மூளையின் செயல்பாடுகள் குறையும். 2-ம் நிலையில் இது நம்மை ஆழ்ந்த தூக்கத்துக்குத் தயார்படுத்தும். இந்நிலையில் தசைகள் தளர்வடையும். உடல் வெப்பநிலை குறையும். இதயத் துடிப்பும் சுவாசமும் குறையத் தொடங்கும். 3-ம் நிலையில் ஆழ்ந்த தூக்கம் ஏற்படும்.

  இந்த கட்டத்தில் நம்மை எழுப்புவது மிகவும் கடினம். நாம் ஒருவேளை விழிக்க நேர்ந்தால், என்ன நடக்கிறது என்று தெரியாத ஒருவிதக் குழப்ப நிலையில் இருக்க நேரிடும். 4-ம் நிலை என்பது நாம் கனவு காணும் நிலை. இந்தநிலையில் மூளையின் செயல்பாடுகள் பெருமளவில் அதிகரிக்கும். கண்கள் வேகமாக நகரும். சுவாசம் வேகமடையும். இதயத் துடிப்பும், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும்.

  வெந்நீர் குளியல், புத்தகம் வாசிப்பு, ஓய்வெடுத்தல், தூங்கச் செல்வதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை நிறுத்துதல், விளக்குகளை அனைத்து அறையை இருட்டாக்குதல். தினமும் ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் விழித்துப் பழகுதல் போன்றவை நமது தூக்கத்துக்கு உதவுபவை.

  • இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள்.
  • வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள்.

  தற்போது பலரும் ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்து எப்போதும் செல்போனில் மூழ்கி இருக்கிறார்கள். அதை வசதியாக மட்டுமின்றி, ஸ்டைலாகவும் கருதுகிறார்கள். இருசக்கர வாகனத்தில் பறக்கும் போதும், பஸ், ரெயிலில் பயணிக்கும் போதும் பல பெண்களை இயர்போனும் காதுமாய் காண முடிகிறது. தொடர்ந்து இயர்போன் போன்றவற்றை பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா? இதோ பட்டியல்...

   இயர்போன் அல்லது ஹெட்போன் மூலம் உரத்த இசையை கேட்பது, கேட்கும் திறனைப் பாதிக்கும். இயர்போன் மூலம் ஒலியலைகள் தொடர்ந்து செவிப்பறையைத் தாக்குவது நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும். நிபுணர்களின் கூற்றுப்படி, இயர்போன்களை மணிக்கணக்கில் அணிந்துகொண்டு இசை கேட்பது காதுகளுக்கும் மட்டுமல்ல, இதயத்துக்கும் நல்லதல்ல. இதனால் இதயம் வேகமாக துடிப்பதுடன், படிப்படியாக பாதிப்புக்கு உள்ளாகும்.

  இயர்போன்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதனால் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சினைகள் உண்டாகின்றன. பலர் தூக்கமின்மை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

  இயர்போன்கள் நேரடியாக காதில் வைக்கப்படுவதால் காற்றுப்பாதையைத் தடுக்கிறது. இந்த அடைப்பு, பாக்டீரியாவின் வளர்ச்சி உள்பட பல்வேறு வகையான காது நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்.

  இயர்போன்களை நீண்டகாலமாக பயன்படுத்துவது ஒரு நபரின் சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதற்றத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.

   இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால், கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகளுக்கு வழிவகுக்கிறது.

  இயர்போன்களை காதுகளில் பொருத்தி இசை. பேச்சு என கேட்டு ரசிப்பது சுகமாக இருக்கும்தான். ஆனால் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளையும் மனதில்கொள்ள வேண்டும். விவேகமாகவும், குறைந்த நேரத்துக்கும் மட்டும் இயர்போன்களை பயன்படுத்துவது எப்போதுமே பாதுகாப்பு.

  • ஒற்றைத் தலைவலி சாதாரண தலைவலியை விட நீண்ட நேரம் இருக்கும்.
  • பெரும்பாலும் தலையின் ஒரு பக்கத்தில் கடுமையாக துடிக்கும்.

  ஒற்றைத் தலைவலி அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக மன அழுத்த நிலைகள், கல்வி, வேலை மற்றும் தனிப்பட்ட மன அழுத்தங்கள், ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், அதிக நேரம் மொபைல், டி.வி., கம்ப்யூட்டர் போன்ற டிஜிட்டல் சாதனங்களில் செலவிடுதல், இரவு அதிக நேரம் கண் விழிப்பது, தூக்க முறைகள் மாறுபடுதல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் ஒற்றைத் தலைவலிக்கான தூண்டுதல்களாக உள்ளது.

  இன்னும் மரபியல் ரீதியாக ஒரு குடும்ப உறுப்பினர் ஒற்றைத் தலைவலியால் பாதித்தால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் இந்த நிலை வரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பெண்களுக்கு, குறிப்பாக பருவமடைதல், மாதவிடாய் மற்றும் இளமை பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் இந்நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது.

  நோய் அறிகுறிகள்:

  ஒற்றைத் தலைவலி சாதாரண தலைவலியை விட நீண்ட நேரம் இருக்கும். பெரும்பாலும் தலையின் ஒரு பக்கத்தில் கடுமையாக துடிக்கும். கூடவே சிலருக்கு குமட்டல், வாந்தி, ஒளி மற்றும் ஒலி உணர் திறன் மற்றும் சில சமயங்களில் பார்வைக் கோளாறுகள் இருக்கும். ஒற்றைத் தலைவலி இருக்கும் காலம் சில மணிநேரங்கள் முதல் சில நாட்கள் வரை நீடிக்கும்.

  சித்த மருத்துவம்:

  1) திரிகடுகு சூரணம் 1 கிராம், கௌரி சிந்தாமணி 200 மி.கி. ஆறுமுகச் செந்தூரம் 200 மி.கி. வீதம் இருவேளை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

  2) அமுக்கரா சூரணம் அல்லது லேகியம் 1 அல்லது 2 கிராம் வீதம் இருவேளை சாப்பிடவேண்டும்.

  3) ஒற்றைத் தலைவலி உள்ள இடத்தில் நீர்க் கோவை மாத்திரையை வெந்நீரில் உரசிபற்றிட வேண்டும்.

  4) மஞ்சள் அல்லது நொச்சி இலை வைத்து ஆவி பிடிக்க வேண்டும்.

  5) மன அழுத்தம் நீங்க பிரம்மி நெய் இரவு 5 மி.லி. வீதம் சாப்பிட வேண்டும்.

  • வலிப்பு நோய் ஏற்பட்டவரை உடனே ஒரு பக்கமாக திருப்பிவிட வேண்டும்.
  • சிறிது நேரம் ஓய்வெடுக்க விடவேண்டும்.

  மூளை மற்றும் நரம்பு செல்களில் இயற்கையாக தகவல் பரிமாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் போது, இயற்கையாக அவற்றுக்கு இடையே இயல்பாக மிகச்சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது அதிக அழுத்தத்தினாலோ, திடீரென்று மூளைக்கு கட்டுப்பாடில்லாத அளவுக்கு அதிகமான மின் தூண்டுதல்கள், கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து, மின் தொல்லையை மூளையில் ஏற்படுத்துகிறது. இது மூளையிலுள்ள நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குப் பாய்கின்றன.

  இந்த நேரத்தில் உடல் உறுப்புகளின் செயல்பாடு மாறுபட்டு, கை மற்றும் கால்கள் கட்டுப்பாடில்லாமல் இழுக்கத் தொடங்குகின்றன. இதைத்தான் வலிப்பு நோய் என்கிறோம்.

  வலிப்பின் போது வாயில் சேரும் எச்சில் நுரை, தொண்டையை அடைத்துக் கொண்டால் சுவாசம் தடைபடும். இது உயிருக்கு ஆபத்தானது. எனவே வலிப்பு நோய் ஏற்பட்டவரை உடனே ஒரு பக்கமாக திருப்பிவிட வேண்டும். வலிப்பு அடங்கும் வரை காத்திருந்து, பின் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து, ஆசுவாசப்படுத்த வேண்டும்.

  அவரை சிறிது நேரம் ஓய்வெடுக்க விடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து குடிக்க தண்ணீர் கொடுக்க வேண்டும். அவரைச் சுற்றி நாற்காலி, டேபிள் மற்றும் காயத்தை உண்டாக்கக்கூடிய பொருட்கள் ஏதாவது இருப்பின் அப்புறப்படுத்த வேண்டும்.

  முதல் முறை வலிப்பு வந்தவராக இருந்தால், அவரது குடும்ப டாக்டரை உடனடியாகப் பார்க்கச் சொல்லவும். அடிக்கடி வலிப்பு வருபவராக இருந்தால், வலிப்பு மாத்திரைகளை ஒழுங்காகச் சாப்பிடுகிறாரா என்று விசாரிக்க வேண்டும். வலிப்பு சில நொடிகளில், அதிகபட்சமாக ஓரிரு நிமிடங்களில் நின்றுவிடும்.

   அந்த நேரத்தில் அவரது கையில் இரும்புத் துண்டையோ, சாவிக் கொத்தையோ கொடுப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை. ஆனால் இரும்பை கையில் கொடுத்ததனால் தான் வலிப்பு நின்றுவிட்டது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். இந்த சமயத்தில் கையில் கொடுக்கப்படும் இரும்புக் கம்பி, சாவி முதலியவைகளின் கூரான பகுதி, வலிப்பு வந்தவரின் உடலில் எங்காவது குத்தி காயத்தை உண்டுபண்ணி விட்டால், மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்ல வேண்டிவரும்.

  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டு மானாலும் வலிப்பு வரும். பெரும்பாலான வலிப்புகளை தொடர்ந்து மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மூளைக் காய்ச்சல், மூளைக்கட்டி, மூளையில் ரத்தக் கசிவு, சில போதை மருந்துகள் உபயோகித்தல், சரியான தூக்கம் இல்லாமை. சில வலி போக்கும் மருந்துகள், ரத்தத்தில் சோடியம் குறைந்து விடுதல் இவைகள் எல்லாம் வலிப்பை உண்டாக்கலாம்.

  குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிக அளவில் போய்விட்டால் வலிப்பு வரலாம். இதை பிள்ளைக் காய்ச்சல் வலிப்பு என்று சொல்வார்கள். காய்ச்சலை உடனே கட்டுப்படுத்தினால், வலிப்பு சரியாகிவிடும். வலிப்பு நோயை பொறுத்தவரை மருத்துவரின் உதவியின்றி, வீட்டிலேயே சிகிச்சை செய்து கொள்வது நல்லதல்ல. மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.

  • உடல் இயக்கம் சீராக நடைபெறுதற்கு தூக்கம் முக்கியமானது.
  • நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்தை பாதிக்கும்.

  நம்முடைய உடல் இயக்கம் சீராக நடைபெறுதற்கு தூக்கம் முக்கியமானது. பிறந்த குழந்தைகள் ஒரு நாளில் 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்குவார்கள். வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த இரவுத் தூக்கம் அவசியமானது.

  தினசரி சீராக தூங்குவதன் மூலம் உடலையும், மனதையும் புத்துணர்வாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். அதே சமயம். ஒரு நாளில் 8 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் தூங்கினால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

  இரவு நேரத்தில் சீரான தூக்கம் கொள்ளாமல் பகல்பொழுதில் தூங்குவதும். நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்தை பாதிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

  நீண்டநேரம் தூங்கும்போது தொடர்ச்சியாக உடல் அசைவின்றி இருக்கும். இதன் காரணமாக தசைகளின் இயக்கம் குறைந்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டில் இடையூறு ஏற்படும்.

  இதன்மூலம் சோம்பல் உணர்வு அதிகரிக்கும். எந்த வேலையும் செய்ய முடியாமல் அலுப்பு உண்டாகும். நீண்ட நேரம் ஒரே மாதிரியான அமைப்பில் படுத்திருக்கும் போது முதுகுவலி ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

   அதிக நேரம் தூங்கும்போது மூளையில் உள்ள நரம்புக் கடத்திகளின் செயல்பாடு குறைந்து நாளடைவில் நினைவாற்றல் இழப்பு ஏற்படக்கூடும். நீண்ட நேரம் தூங்கினால் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் செரோடோனின் அளவு குறையும்.

  இதன் காரணமாக தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதுமட்டுமல்லாமல், சிந்திக்கும் திறன், தீர்வுகாணும் திறன் குறைந்து எதிர்மறையான மனநிலை மாற்றத்துக்கும் வழிவகுக்கும்.

  அதிகப்படியான தூக்கம் ஹார்மோன் சுரப்பில் இடையூறை ஏற்படுத்துவதோடு, சீரற்ற நேரத்தில் தூங்கும் பழக்கத்தை உண்டாக்கும். இதன் மூலம் மனஅழுத்தம், மனச்சோர்வு, மறதி போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

  சீரற்ற தூக்கத்தால் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதோடு உடல் இயக்கத்தின் அளவும் குறையும். இதனால், உடலில் தேவை யற்ற கொழுப்பு அதிகரிக்கும். இது உடல் பருமன் நோய்க்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

  • மெதுவாக சாப்பிடாமல் வேகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
  • உணவை நான்கு, ஐந்து வேளையாக பிரிந்து சாப்பிட வேண்டும்.

  உடற்பயிற்சி, `டயட்' எனப்படும் உணவுக்கட்டுப்பாடு இவை இரண்டும் தான் உடல் எடையை குறைப்பதிலும், கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பேணுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் பலரும் இவை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும், உடற்பயிற்சி திட்டங்களையும் பின்பற்றுவது கடினம் என்று கருதுகிறார்கள்.

  அப்படிப்பட்டவர்கள் சில எளிய பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும், அந்த பழக்கவழக்கங்களை முறையாக பின்பற்றுவதன் மூலம் உடல் எடையை குறைப்பதற்கும் சாத்தியம் இருக்கிறது என்பது உடல் நல வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. அவை குறித்து பார்ப்போம்.

  உணவு சாப்பிடும் முறை:

  உண்ணும் உணவு முழுவதையும் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்படி செய்யும்போது மெதுவாக சாப்பிடுவீர்கள். அது உணவு உட்கொள்ளும் அளவை குறைத்துவிடும். உணவை வேகமாக சாப்பிடும்போது தட்டில் இருக்கும் அனைத்தையும் சாப்பிட்டுவிடுவீர்கள்.

  தினமும் அதே அளவு சாப்பிட பழகிவிடுவீர்கள். ஆனால் நன்றாக மென்று உட்கொள்ளும்போது இயல்பாக சாப்பிடும் அளவு குறைந்துவிடும். `மெதுவாக சாப்பிடாமல் வேகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும். வேகமாக சாப்பிடுபவர்கள் உடல் பருமனாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்' என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

  உணவை அதிகம் உட்கொள்ளும்போது அது வயிற்றின் அளவை அதிகரிக்க செய்கிறது. அதனால் அதிகம் சாப்பிட தோன்றுகிறது. இது இயற்கையாகவே உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. எனவே, உணவை நான்கு, ஐந்து வேளையாக பிரிந்து குறைவாக சாப்பிட முயற்சி செய்ய வேண்டும்.

   ஆரோக்கியமற்ற உணவுகள்:

  இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளை முற்றிலும் விலக்குவது சாத்தியமில்லை. அவை உடலுக்கு கேடு தரும் என்று தெரிந்திருந்தும் ருசியும், மோகமும் அதற்கு அடிமைப்படுத்திவிடுவதுதான் காரணம். அதேவேளையில் ஆரோக்கியமற்ற உணவை சிறிதளவு மட்டுமே சாப்பிடுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

  அதுவும் நிச்சயமாக உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு உதவும். ஆரோக்கியமற்ற உணவுகள், அவற்றை தயார் செய்வதற்கான ரெசிபி வகைகளை வீட்டில் சேமித்து வைப்பதை கூடுமானவரை தவிருங்கள்.

  புரதம்:

  பசி உணர்வை குறைப்பதிலும், குறைவான கலோரிகளை உட்கொள்ள வைப்பதிலும், முழுமையாக சாப்பிட்ட திருப்தியை தருவதிலும் புரதத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. கோழி, மீன் இறைச்சி, யோகர்ட், பருப்பு, பாதாம் போன்றவை புரதம் நிறைந்த உணவுகளில் முக்கியமானவை. உணவில் புரதத்தை அதிகம் சேர்ப்பது, உடற்பயிற்சி மற்றும் கலோரி கட்டுப்பாடு இல்லாமல் கூட உடல் எடையை குறைப்பதற்கு வித்திடும்.

  நார்ச்சத்து:

  நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு எழாமல் முழுமையாக உணர வைக்கும். நார்ச்சத்து எடை இழப்புக்கு உதவியாக இருக்கும் என்று ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. ஏனெனில் உணவு உண்ட திருப்தியை அதிகரிக்கச் செய்து உணவு உட்கொள்ளும் அளவை குறைத்துவிடும்.

  `விஸ்கோஸ் பைபர்' எனப்படும் ஒருவகையான நார்ச்சத்து ஜெல்லை உருவாக்கி ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் நேரத்தை அதிகரிக்கச் செய்கிறது. அதனால் செரிமானம் தாமதமாகி வயிறு காலியாகும் செயல்முறை மெதுவாக நடக்கும். எனவே பசி எழாது. பீன்ஸ், ஓட்ஸ், அஸ்பாரகஸ், ஆரஞ்சு, ஆளி விதைகள் போன்றவற்றில் `விஸ்கோஸ் பைபர்' காணப்படுகிறது.

   தூக்கமின்மை:

  தூக்கமின்மை பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களான லெப்டின், கிரெலின் ஆகியவற்றின் செயல்பாடுகளை சீர்குலைக்கும். அதேபோல் தூக்கமின்மையால் அவதிப்படுவது ஹார்டிசோல் எனப்படும் மன அழுத்த ஹார்மோனின் செயல்பாடுகளை அதிகரிக்க செய்துவிடும். அதனால் மன அழுத்தம் தொற்றிக்கொள்ளும்.

  இந்த ஹார்மோன்களின் செயல்பாடுகளில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் ஆரோக்கியமற்ற உணவுகள் மீது ஏக்கத்தை உண்டாக்கி அவற்றை அதிகம் சாப்பிட வைத்துவிடும். அதிக கலோரிகளை உட்கொள்வதற்கும் வழிவகுத்துவிடும். நாள்பட்ட தூக்கமின்மை, மன அழுத்தம் தொடர்ந்தால் டைப்- 2 நீரிழிவு, உடல் பருமன் உட்பட பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

   தண்ணீர்:

  சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் பருகுவதன் மூலம் குறைவாக சாப்பிடலாம். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அரை லிட்டர் தண்ணீர் குடிப்பதால் பசி குறைகிறது, அதிக கலோரி உட்கொள்வதும் குறைகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

  தொடர்ந்து 12 வாரங்கள் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் பருகாதவர்களுடன் ஒப்பிடும்போது தண்ணீர் பருகியவர்களின் உடல் எடை 44 சதவீதம் வரை குறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. கலோரி பானங்களுக்கு மாற்றாக தண்ணீர் பருகுவது நல்ல பலனை கொடுக்கும்.

  கவனச்சிதறல்:

  டி.வி., செல்போன் பார்த்துக்கொண்டோ, லேப்டாப்பில் வேலை செய்து கொண்டோ சாப்பிடும்போது எவ்வளவு சாப்பிட்டோம் என்பதை தெரிந்துகொள்ள முடியாமல் போகலாம். இந்த பழக்கம் அதிகமாக சாப்பிடுவதற்கும், காலப்போக்கில் உடல் எடை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். உணவு உண்ணும் போது இத்தகைய கவனச்சிதறல் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள் 10 சதவீதம் அதிகமாக சாப்பிட்டதாக ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

   சர்க்கரை பானங்கள்:

  சோடா போன்ற சர்க்கரை சேர்ந்த பானங்கள் பல நோய் அபாயத்துடன் நெருக்கமான தொடர்புடையவை. அதில் இருக்கும் அதிகப்படியான கலோரிகள் எளிதாக உடலுக்குள் சென்றுவிடும். ஏனெனில் திட உணவுகளை விட திரவ உணவுகளை உட்கொள்வது எளிதானது. அதனால் சுலபமாக உடல் எடை அதிகரித்துவிடும். இவற்றை தவிர்ப்பதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம்.

  • பிரசவத்துக்குப் பிறகு மனநிலையில் மாற்றங்கள் வருவதுண்டு.
  • சிலருக்கு மாதக் கணக்கிலும் இருக்கலாம்.

  சில பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு மனநிலையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் வருவதுண்டு. அந்த மனநிலை, இரண்டு, மூன்று வாரங்களுக்குத் தொடரலாம். சிலருக்கு மாதக் கணக்கிலும் இருக்கலாம்.

  பிரசவமாகி 2-3 வாரங்களுக்குப் பிறகும் டிப்ரெஷன் தொடர்ந்தால் அதை உளவியலில் 'பேபி ப்ளூஸ்' என்று சொல்வோம். 3-4 வாரங்களுக்கு மேலும் தொடர்ந்தால் அதை 'போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' என்று சொல்வோம். இன்னும் சில பெண்களுக்கு கர்ப்ப காலத்திலேயே டிப்ரெஷன் ஏற்படுவதும் நடக்கும். அது பிரசவத்துக்குப் பிறகும் தொடரலாம். அதை 'பெரி பார்ட்டம் டிப்ரெஷன்' என்று சொல்வோம்.

  பிரசவத்துக்குப் பிறகான 'போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷனு'க்கு, சிசேரியன் பிரசவம் என்றால் அந்த வலி, தாய்ப்பால் கொடுப்பதில் அசௌகர்யங்கள், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் என பல விஷயங்கள் காரணங்களாக இருக்கலாம். அது இயல்பானதுதான். பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும்.

   மற்றபடி, 3-4 வாரங்களுக்குப் பிறகும் மன அழுத்தம் நீடிப்பது, குழந்தையைப் பார்த்தாலே வெறுப்பாக இருப்பது, கணவர் அருகில் வந்தாலே பிடிக்காமல் இருப்பது, தனிமை, அழுகை, சோகம் போன்றவற்றை உணர்ந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். உங்களுடைய மனநிலையைக் கேட்டறிந்து மருந்துகள் தருவார் அல்லது உளவியல் மருத்துவர் அல்லது ஆலோசகரை அணுக பரிந்துரைப்பார்.

  ஒருவேளை அந்த டிப்ரெஷனுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும் அவை உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பானவையாகவே இருக்கும். தாய்ப்பால் கொடுப்பது குறித்தும் நீங்கள் கவலைப்படத் தேவை இருக்காது.

  முக்கியமாக, நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பதை வீட்டாருக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களிடம் உதவி கேளுங்கள். இப்படிச் சொன்னால் உங்களைத்தவறாக நினைப்பார்களோ, நல்ல அம்மா இல்லையோ என்பது போன்ற குற்ற உணர்வுகளில் இருந்து வெளியே வாருங்கள்.

   போதுமான ஓய்வு எடுங்கள். தூக்கமின்மையால்தான் பெரும்பாலான அம்மாக்களுக்கு டிப்ரெஷன் வருகிறது. எனவே, குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்கி ஓய்வெடுங்கள். மற்ற நேரங்களில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டாரிடம் உதவி கேளுங்கள்.

  பிரசவத்துக்கு முன்பே உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இதுகுறித்துப் பேசி, மன அழுத்தத்தைத் தவிர்க்க ஆலோசனை பெறுங்கள்.

  • தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.
  • மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  ஒரு பக்க தலைவலி பிரச்சினையால் உலகெங்கும் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தலையின் ஒரு பக்கத்தில் தான் இது பலருக்கு வரும். சில நேரங்களில் சிலருக்கு இரண்டு பக்கமும் வலி வருவதுண்டு. சாதாரணமாக வந்து சாதாரணமாக போய்விடும் இந்த ஒற்றைத் தலைவலி. சில சமயங்களில் 10 சுத்தியல், 10 சம்மட்டி போன்றவைகளைக் கொண்டு அடித்தால் ஏற்படுவது போன்ற மிகக் கடுமையான வலியை உண்டுபண்ணி, ஆளையே பிழிந்து எடுத்துவிடும்.

  உடலில் நீர்ச்சத்து குறைவு, அதிக மன அழுத்தம், அதிக தூர பயணம், போதுமான தூக்கமின்மை, சைனஸ் பாதிப்பு, மூளையில் நோய், மூளையில் கட்டி, அதிர்ச்சியான விஷயங்கள், அதிக களைப்பு, அதிக கோபம், மலச்சிக்கல் பிரச்சினை, அஜீரணம், கழுத்து எலும்பு பிரச்சினை, மூளைப் புற்றுநோய், பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்காக வராமலிருத்தல், மாதவிடாய் சுத்தமாக நின்று விடுதல், தலையில் காயம் ஏற்படுதல், மது அருந்துதல், சரியாக சாப்பிடாமல் இருத்தல், பதப்படுத்தப்பட்ட மற்றும் கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுதல், ஜலதோஷம், அலர்ஜி, சில மருந்துகளின் பக்க விளைவுகள், ரத்தசோகை, மூளைக் காய்ச்சல், பிடிக்காத சென்ட், பெயிண்ட் வாசனை, அதிக வெளிச்சத்தில் நீண்ட நேரம் நிற்பது, அதிக சத்தத்தைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பது, அதிக நேரம் செல்போன் பேசுவது - இது போன்ற இன்னும் பல காரணங்களால் ஒற்றைத் தலைவலி வரக்கூடும்.

  ஒற்றைத் தலைவலி அடிக்கடி வராமலிருக்க, தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். பதற்றம், கோபம் கூடாது. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக சத்தமுள்ள இடத்தில் இருந்து தள்ளி வந்துவிட வேண்டும். அதிக ஒளியை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கி வைக்க வேண்டும்.

  உங்கள் வாழ்நாளில் இதுமாதிரி ஒரு ஒற்றைத் தலைவலியை அனுபவித்ததில்லை என்று நீங்கள் உணர்ந்தால், வலி தூக்கத்தைத் தொந்தரவு பண்ணி எழுப்பிவிட்டால், அதிக குழப்பத்தினால் வலி வந்தால், அதிக காய்ச்சலோடு வலி வந்தால், கண் பார்வைக்கோளாறுடன் வலி வந்தால், கண் சிவந்து போய் கண் வலியோடு தலைவலி வந்தால், நினைவு இழந்து வலி வந்தால், உடனடியாக உங்கள் குடும்ப டாக்டரைச் சந்திப்பது தான் மிகமிகச் சிறந்தது.

  தலைவலி தானே என்று முடிவு செய்து நீங்களாகவே மருந்து, மாத்திரை, கை வைத்தியம் பண்ணிக் கொண்டு வீட்டிலேயே இருக்காதீர்கள். ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நோய்க்கான அறிகுறிதான். இதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்து, அதற்கு சிகிச்சை செய்தால் ஒற்றைத் தலைவலி காணாமல் போய்விடும்.

  மேலும் திடீர் தலைவலி, நாட்பட்ட தலைவலி, குமட்டல், கண் பார்வையில் மாற்றம், கால் மூட்டுகள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஊசியால் குத்துவது போன்ற உணர்வு, உணவின் மணத்தை உணர இயலாத தன்மை என பல்வேறு அறிகுறிகளை, நாள்பட்ட மற்றும் தற்காலிக ஒற்றை தலைவலியின் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.

   இத்தகைய பாதிப்பிற்கு நடைமுறையில் பல்வேறு நிவாரண சிகிச்சைகள் இருப்பினும், தற்போது 'கிரீன் லைட் தெரபி' என்ற சிகிச்சை, நாள்பட்ட ஒற்றைத் தலைவலி பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் வழங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

  இத்தகைய சிகிச்சையை நாள்பட்ட ஒற்றைத்தலைவலி பாதிப்புக்குள்ளானவர்கள் பெறும் பொழுது, இத்தகைய பாதிப்பில் இருந்து அவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் குணமடைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.