என் மலர்
நீங்கள் தேடியது "ரத்த அழுத்தம்"
- ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்குள் இருப்பதே சிறந்தது.
- ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவ கட்டுக்கோப்பான உணவு பழக்கத்துடன் உடலளவில் சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும்.
அமெரிக்க இதய சங்கம் மற்றும் அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரி ஆகியவை இணைந்து இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. அதன் முக்கிய சாராம்சங்கள் குறித்து பார்ப்போம்.
ஆபத்து
இதய செயலிழப்பு, கரோனரி தமனி நோய், இதயத்தின் மேல் அறைகள் (ஏட்ரியா) ஒழுங்கற்றதாகவும், வேகமாகவும் துடிப்பதால் ஏற்படும் பாதிப்பான ஏட்ரியல் பைப்ரிலேஷன் உள்ளிட்ட இதயம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம் ஏற்பட உயர்ரத்த அழுத்தமே காரணமாக இருக்கிறது. அதுவே இதயத்துக்கு மிகப்பெரிய ஆபத்து காரணியாக இருக்கிறது என்று அமெரிக்க இதய சங்கம் கூறுகிறது.
அவசர சிகிச்சை
ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவுக்குள் இருப்பதே சிறந்தது. இந்த அளவை விட கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம். மார்பு வலி, மூச்சுத்திணறல், முதுகுவலி, உணர்வின்மை, பலவீனம், பார்வை திறனில் மாற்றம், பேசுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அவசர சிகிச்சை மிகவும் முக்கியமானது. உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெற வேண்டும்.
வழக்கமான பரிசோதனை
ஒவ்வொருவரும் ரத்த அழுத்தத்தை தவறாமல் சரிபார்க்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த பரிசோதனை செய்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
உணவு
பெரியவர்கள் தினமும் 2,300 மி.கி. சோடியம் (சுமார் ஒரு டீஸ்பூன் உப்பு) அல்லது அதற்கும் குறைவான அளவையே உணவு மூலம் உட்கொள்ள வேண்டும். 1,500 மி.கி. என்ற அளவுக்கு படிப்படியாக உப்பின் பயன்பாட்டை குறைத்துக்கொள்வது சிறந்தது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான எண்ணெய்கள் போன்ற இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுத்திட்டத்தை பின்பற்ற வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க அல்லது குறைக்க மதுப்பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.
உடல் எடை
உடல் பருமன் கொண்டவர்களாக இருந்தால், உங்கள் உடல் எடையில் 5 சதவீதம் குறைப்பது கூட உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் அல்லது தடுப்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் எடையை 5 சதவீதம் குறைப்பது சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அது ரத்த அழுத்தம் மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
உடல் செயல்பாடு
ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவ கட்டுக்கோப்பான உணவு பழக்கத்துடன் உடலளவில் சுறுசுறுப்பாகவும் இயங்க வேண்டும். தியானம், சுவாச பயிற்சி, யோகா உள்ளிட்ட மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்பாடுகளிலும் கவனம் பதிக்க வேண்டும்.
- வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும்.
- வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
வாழைப்பழம் ஊட்டச்சத்துமிக்கதாகவே இருந்தாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான நபர் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. ஏனெனில் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அதிகமாகவே உள்ளன. உடல் எடை அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை தவிர்க்க மிதமான அளவு சாப்பிடுவதே முக்கியமானது. அதனை அதிகமாக சாப்பிடும்போது அதில் இருக்கும் நார்ச்சத்து காரணமாக வயிறு உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
* வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். இதயம் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்காது.
* புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கிறீர்களா? வாழைப்பழங்கள் உதவும். அதிலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையானது நிக்கோடின் ஏற்படுத்தும் ஏக்கங்களை குறைக்க உதவும்.
* வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.
* மன அழுத்தமாகவோ, சோகமாகவோ உணர்கிறீர்களா? வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, செரோடோனின் மற்றும் டோபமைன் என்ற நல்ல ரசாயனங்களை உற்பத்தி செய்ய மூளையை ஊக்கப்படுத்தும். எனவே பரபரப்பாக இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடுவது மனதை அமைதிப்படுத்தவும், கடினமான தருணங்களை நிர்வகிக்கவும் உதவிடும்.
* பகலில் சோர்வாக உணர்ந்தால், உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கலாம். வாழைப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் அதிக ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும். ரத்த சோகையை எதிர்த்து போராடவும் வித்திடும்.
- அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது.
- இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெண்டைக்காய் ஏ பிரிவு ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது
இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்தது. செரிமானம், நீரேற்றம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது.
இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இது வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துகிறது.
நீரழிவு நோயாளிகள் 8 வாரங்களுக்கு ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் 1000 மைக்ரோகிராம் வெண்டைக்காயை உட்கொள்வது சர்க்கரை குறைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெண்டைக்காயை காய்கறி உணவாகச் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், வெண்டைக்காய் தண்ணீரைக் குடிக்கலாம்.
2அல்லது 3 வெண்டைக்காய்களை எடுத்து, அவற்றை நன்கு கழுவி, முனைகளை வெட்டி, சிறிய பிளவுகளை உருவாக்குங்கள்.
அவற்றை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
நார்ச்சத்து நிறைந்த இந்த பானம் செரிமானத்தை மெதுவாக்குகிறது. சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், அதிகப்படியான நார்ச்சத்து வீக்கம் அல்லது லேசான வயிற்று அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும்,
வெண்டைக்காய் நீர் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் தீரும், அதே நேரத்தில் வலிமை இயற்கையாகவே அதிகரிக்கும்," என்று இருதயநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு இரண்டுமே இருக்கின்றன.
- வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முழு அவித்த முட்டை சாப்பிடலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் அவித்த முட்டையில் அடங்கியுள்ளன. நாம் உண்ணும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நிறைவுறா கொழுப்பு இரண்டுமே இருக்கின்றன.
கொழுப்பு நீக்கப்படாத முழுமையான பால், வெண்ணெய், பாலாடைக்கட்டி, தேங்காய் எண்ணெய், சில தாவர எண்ணெய்கள், சிவப்பு இறைச்சி, வறுத்த வேர்க்கடலை, சாக்லெட், எண்ணெய்யில் முக்கி தயாரிக்கப்பட்ட அனைத்து வறுத்த உணவுகள், இன்னும் பல உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு அதாவது கெட்ட கொழுப்பு அதிக அளவில் இருக்கின்றது. அதனால் நல்ல கொழுப்பு இந்த உணவுகளில் இல்லை என்று அர்த்தமில்லை.
வால்நட் அதாவது அக்ரூட் பருப்பு, கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அவகேடோ பழம், பாதாம் பருப்பு, பூசணி விதை, எள், முட்டை, சால்மன் மீன், டூனா மீன், சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன் எண்ணெய், இன்னும் பல உணவுகளில் நிறைவுறா கொழுப்பு அதாவது நல்ல கொழுப்பு அதிக அளவில் இருக்கின்றது. அதனால் கெட்ட கொழுப்பு இந்த உணவுகளில் இல்லை என்று அர்த்தமில்லை.
முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், செலினியம், பாஸ்பரம், கொலின், லூட்டின், ஆன்டிஆக்ஸிடன்ட் என்று சொல்லப்படும் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் மற்றும் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்கள் உள்ளன.
நாம் அன்றாடம் சாப்பிடும் வழக்கமான உணவுகளில் என்ன கொழுப்புச் சத்துள்ள உணவை எடுத்துக் கொள்கிறோமோ அதே அளவு கொழுப்புதான் முட்டையின் மஞ்சள் கருவிலும் இருக்கின்றது. ஆனால் உங்களுக்கு இதயப் பிரச்சனை, அதிக ரத்த அழுத்தம் எதுவும் இல்லையென்றால், அதிக புரதச்சத்து உங்கள் உடலுக்கு வேண்டுமென்றால் 2 முட்டையின் வெள்ளைப் பகுதியுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து சாப்பிடலாம். வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முழு அவித்த முட்டை சாப்பிடலாம்.
இதயப் பிரச்சனை, அதிக ரத்தக் கொழுப்பு, சர்க்கரை நோய் இருப்பவர்கள் வாரத்துக்கு 3 அல்லது 4 முட்டைகள் சாப்பிடலாம். ஏனென்றால் மஞ்சள் கருவில் நிறைவுற்ற கொழுப்பு அதாவது கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கிறது. இது ரத்தக் கெட்ட கொழுப்பு அளவைக் கூட்டும். வயது அதிகம், நடமாட்டம் குறைவு என்றால் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் செரிமானப் பிரச்சனை ஏற்படலாம். தினமும் உடற்பயிற்சி செய்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
- நிலைமை சீரடையும்போது ரத்த அழுத்தம் குறைய தொடங்கும்.
- உயர் அழுத்தங்களினால் உடலில் விரும்பத்தகாத பாதிப்புகள் உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தை போல மன நலனையும் பேண வேண்டும். சிலர் எப்போதும் சிடுசிடுவென இருப்பார்கள். சிலரோ பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பார்கள். மனதை நிதானமாக வைத்திருக்காமல் ஒருவித பதற்றத்துடனே காணப்படுவார்கள். அப்படி இயல்பற்ற நிலையில் இருப்பது ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். இதயத்திலிருந்து ரத்தம் சீரான அழுத்தத்தோடு வெளிப்படும்போது அது உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும், திசுக்களுக்கும் பரவலாக சென்றடையும்.
அப்படி சீரான அழுத்தத்தோடு தொடர்ச்சியாக ரத்தம் சென்றால் தான் திசுக்களால் சீராக இயங்க முடியும். அதற்கு இடம் கொடுக்காமல் உடலில் மாற்றங்கள் ஏற்படும்போது ரத்த அழுத்த அளவுகளும் மாறுபடக் கூடும். மிகவும் குறைந்த அளவு ரத்த அழுத்தம் இருந்தாலோ, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டாலோ அது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். ரத்தமானது, ரத்த நாளங்களின் வழியே பாய்ந்து செல்லும்போது ரத்தநாளச்சுவர்களில் ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தமாகும்.
120 அளவுக்கு மேலுள்ள அழுத்தம், 'சிஸ்டோலிக்' அழுத்தம் எனப்படும். 80 அளவுக்கு கீழுள்ள தளர் அழுத்தம் 'டயஸ்டோலிக்' அழுத்தம் எனப்படும். ஒரு மனிதருக்கு பொதுவாக 'சிஸ்டோலிக்' அழுத்தம், 100-ல் இருந்து 120 மி.மீ பாதரச அளவில் இருக்க வேண்டும். அதுபோல் 'டயஸ்டோலிக்' அழுத்தம், 70-ல் இருந்து 80 மி.மீ பாதரச அளவில் இருக்க வேண்டும்.
ஒருவருக்கு ரத்த அழுத்தமானது தொடர்ச்சியாக 120/80 மி.மீ. பாதரச அளவிற்கு மேல் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தம் எனப்படும். அந்த உயர் அழுத்தங்களினால் உடலில் விரும்பத்தகாத பாதிப்புகள் உண்டாகும். ஒருவருடைய உடல், மன நல செயல் பாடுகளில் ஏற்படும் மாற்றம் ரத்த அழுத்த அளவுகளில் வெளிப்படும். மன உளைச்சல், பதற்றம், பீதி, அச்சம், கோபம், கடுமையான உடற்பயிற்சி, கடும் உடல் உழைப்பு, கடும் குளிர் போன்ற சமயங்களின் போது வழக்கத்தை விட ரத்த அழுத்தம் உயர்ந்தே காணப்படும்.
நிலைமை சீரடையும்போது ரத்த அழுத்தம் குறைய தொடங்கும். இப்படி உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்படும் ரத்த அழுத்தம், நாளடைவில் நிலையானதாகி உயர் ரத்த அழுத்த அளவுகளிலேயே நிலைத்து விடும். சிலருக்கு ஏன் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்ற காரணத்தை உடனே கண்டறிய முடியாது. அப்படி காரணத்தை கண்டறிய முடியாமல் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகுபவர்களின் பெற்றோர் மற்றும் முன்னோர்கள் பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வித்திடும் வகையிலான உடல் செயல்பாடுகளை கொண்டிருப்பார்கள். மன நலனினும் அதன் தாக்கத்தை உணர முடியும். குறிப்பாக மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இவர்களால் அமைதியான முறையில் வாழ்க்கை நடத்த முடியாது. சாப்பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பது ரத்த நாளங்களை முறுக்கேறச் செய்து ரத்த அழுத்தத்திற்கு வித்திட்டுவிடும் என்பது அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும்.
- உலக அளவில் இருக்கிற நோய்களில் முதலிடத்தில் இருப்பது மன அழுத்தம் தான்.
- மனஅழுத்தம் ஏற்படுகிற போது ஒருவரின் செயலும், குணமும் மாறுபடுகிறது.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் என்பது சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி ஆகும்.
எனவே மனதை சரியான திசையில் செலுத்தினால் மனஅழுத்தம் இன்றி நிம்மதியாக இருக்கலாம். உடல் ரீதியாக ஒருவர் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் மனரீதியில் பலவீனமாக இருந்தால் எளிதாக வீழ்த்தி விட முடியும். எனவே உலக அளவில் இருக்கிற நோய்களில் முதலிடத்தில் இருப்பது மன அழுத்தம் தான்.
மனஅழுத்தம் ஏற்படுகிற போது ஒருவரின் செயலும், குணமும் மாறுபடுகிறது. இது அவர்களின் முன்னேற்றம் தடைபடுகிறது. தோல்வி அடைகிற போது எழும் கவலை மன அழுத்தமாக மாறுகிறது. நினைத்தது நடக்காத போது வரும் ஏமாற்றம், விரக்தி ஆகிறது. விரும்பியதை அடைய முடியாத போது ஏற்படும் கோபம் ஆத்திரமாக மாறுகிறது.
குடும்பம், தொழில், வாழ்வியல் சூழல்களில் சிக்கல் ஏற்படும் போது மனரீதியாக அழுத்தம் ஏற்படுகிறது. அதை சரியாக கையாள கற்றுக் கொள்ளவேண்டும். இல்லை என்றால் மனிதர்க ளிடம் உளவியல் சிக்கல்கள் அதிகரித்து தவறுகளும், குற்றங்களும் அதிகரிக்க தொடங்கி விடும். எனவே மனதை சமநிலையில் நிறுத்தி நிதானமாக செயல்பட முயற்சிக்க வேண்டும்.
- ரத்த அழுத்தம் ஒருவரது வயது, உடல்நிலை, பரம்பரை ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது.
- ரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பார்க்கலாம்.
ஒரு மனிதனின் சராசரியான ரத்த அழுத்த அளவாக 120/80 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு கீழாக செல்வது குறைந்த ரத்த அழுத்தம் என்றும், அதிகமானால் உயர் ரத்த அழுத்தம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம் ஒருவரது வயது, உடல்நிலை, பரம்பரை ஆகியவற்றை பொறுத்து மாறுபடுகிறது. ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கவும், ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதை குறைப்பதற்கான இயற்கை மருத்துவ முறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
செம்பருத்தி இதழ் 5, வெண் தாமரை இதழ் 5, எலுமிச்சை பழச்சாறு போன்றவைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம்.
சீரகம், கொத்தமல்லி போன்றவைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.
வெண்தாமரை சூரணம் ஒரு டீஸ்பூன் காலை, இரவு சாப்பிடலாம்.
சீரகம் சேர்ந்த அசைச்சூரணம் ஒரு டீஸ்பூன் வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.
இதயத்தை வலுப்படுத்த மருதம்பட்டை சூரணம் ஒரு கிராம் வீதம் மூன்று வேளை சாப்பிடலாம்.
வெள்ளைப்பூண்டு 5 பல் எடுத்து சுட்டு அல்லது தண்ணீரில் வேக வைத்து சாப்பிடலாம்.
தூக்கமின்மைக்கு ஒரு கிராம் கசகசாவை அரைத்து பாலில் கலந்து காய்ச்சி தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக குடிக்கலாம்.
சின்ன வெங்காயம் 5 எடுத்து சிறு துண்டுகளாக்கி மோரில் கலந்து சாப்பிட்டு வர பல்லாண்டு வாழலாம்.
- ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம்.
ரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம். ரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் ரத்த அழுத்த அளவீட்டை காட்டும்.
இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும். ரத்த அழுத்த கண்காணிப்புக்கான தடையை குறைக்க மலிவான தீர்வை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த சாதனம் மற்ற ரத்த அழுத்த கண்காணிப்பில் இருந்து வேறுபடுகிறது. ரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர்.
- வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை செய்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
- ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள செய்ய வேண்டிய விஷயங்கள்:
உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உடல் எடை அதிகரிப்பது, உடலில் கொழுப்பு அதிகம் படிவது, மன அழுத்தத்தில் இருப்பது, கார்போஹைட்ரேட் உள்ளடங்கிய உணவுப்பொருட்களை அதிகம் சாப்பிடுவது, ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காரும் நிலைமை போன்ற காரணங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படலாம்.
அதனை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்துகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. உணவு பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் சில மாறுதல்களை செய்வதன் மூலம் இயற்கையாகவே ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:
* உடல் எடையை குறைப்பது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் உடனடி பலன் தரக்கூடியது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் அதனை குறைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமானது.
* உயர் ரத்த அழுத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தினமும் தவறாது நடைப்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும். அதனை தொடர்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.
* வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மீன் சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் விஷயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.
* மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இரண்டுமே உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியவை. அந்த பழக்கங்களை அறவே தவிர்ப்பது அவசியமானது.
* உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்வதும் நல்லது. காய்கறி ஜூஸ் பருகுவதும், குறிப்பாக கோதுமை புல் ஜூஸ் பருகுவது நன்மை அளிக்கும்.
* பூண்டு, ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பையும் குறைக்கக்கூடியது. அதனால் தினமும் உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது அவசியமானது.
* செலரி எனப்படும் கீரையின் தண்டு பகுதியை சாப்பிடுவதும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த துணைபுரியும். அத்துடன் உடல் எடையை குறைப்பதற்கும் இந்த கீரை உதவி புரியும்.
* மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதும் ரத்த அழுத்தத்தை சீராக நிர்வகிக்க உதவும்.
- சிறுநீரகங்கள் உடலில் பல்வேறு செயல்களை செய்கிறது.
- சிறுநீரகங்கள் ரத்தத்தை வடிகட்டுகின்றன.
இந்த காலக்கட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலருக்கும் சிறுநீரக கோளாறு ஏற்படுகின்றது. சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களும், உணவுப்பொருட்களும் தான். சிறுநீரகங்கள் உடலில பல்வேறு செயல்களை செய்கிறது. சிறுநீரகங்கள் ஹார்மோன்களை உற்பத்தி செய்வது. ரத்தத்தை சுத்திகரிப்பது, கனிமச்சத்துக்களை உறிஞ்சுவது, சிறுநீரை பிரிப்பது, உடலின் அல்கலைன் அமிலத்தை சீராக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நமது உடலில் சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமானவை. சிறுநீரகங்கள் ரத்தத்தை வடிகட்டுகின்றன. செரிமான அமைப்பில் இருந்து வெளியேறும் கழிவுகள் அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன. அதேபோல் இதய நோய்கள், சர்க்கரை நோய், புற்றுநோய் போல சிறுநீரக பிரச்சனைகளும் தீவிரத்தன்மை கொண்டவை.
தண்ணீர் அவசியம்
தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் சிறுநீரக இயக்கம் பாதிக்கப்படும். நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடித்து வருகிறீர்கள் என்பதை சிறுநீர் கொண்டு கண்டுபிடிக்கலாம். உங்களின் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளிவந்தால், நீங்கள் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
சிறுநீரை அடக்கி வந்தால், சிறுநீர்ப்பையின் அழுத்தம் அதிகரித்து, அதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதோடு, சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டுவிடும். ஆகவே சிறுநீர் வந்தால் அதனை அடக்காமல் உடனே வெளியேற்றிவிடுங்கள்.
உடலுக்கு உப்பு மிகவும் இன்றியமையாதது தான். ஆனால் அந்த உப்பு அளவுக்கு அதிகமானால், அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகத்தில் அழுத்தத்தை அதிகமாக்கும். வலி நிவாரணி மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்டால், அது முதலில் சிறுநீரகத்திற்கு தான் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி பெரிதும் உதவியாக இருக்கும். உடற்பயிற்சி செய்வதால் சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
சிறுநீரகத்தில் கால்சியம் அதிகம் தேங்கினால் சிறுநீரக கற்கள் ஏற்படும். எனவே இவற்றைத் தவிர்க்க காய்கறிகள், பீன்ஸ், நட்ஸ், அவகேடோ போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும்.
இரவு நேரத்தில் தான் சிறுநீரக திசுக்கள் புதுப்பிக்கப்படும். இரவு நேரத்தில் சரியான தூக்கம் இல்லை என்றாலும் சிறுநீரகமானது நேரடியாக பாதிக்கப்படும்.
சிறுநீரக பாதிப்பில் அறிகுறிகள்:
சிறுநீரின் நிறம் மாறினால் அல்லது சிறுநீர் அசாதாரணமாக இருந்தால், அது சிறுநீரக பிரச்சனையாக இருக்க வாய்ப்புள்ளது.
சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால், கழிவுகளை சுத்தம் செய்யும் செயல்முறை பிரச்சினைக்கு உள்ளாகும். இதனால், அந்த கழிவுகள் ரத்தத்தில் கலந்து, வாயில் துர்நாற்றம் வீசுகிறது.
சிறுநீரகங்கள் முற்றிலும் சேதமடைந்தால், சுவை மற்றும் பசியின்மை திறன் வெகுவாக குறையும்.
ரத்தத்தில் உள்ள கழிவுகளின் விளைவாக அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும்.
சிறுநீரக செயல்பாடு குறைவது ரத்த சிவப்பணு உற்பத்தியை பாதித்து சோர்வு மற்றும் மூளை தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சிறுநீரகம் அமைந்துள்ள பின் பகுதியில் வலி அதிகமாக இருக்கும், இது சிறுநீரக செயலிழப்புக்கான பொதுவான அறிகுறியாகும்.
- முதல் தளத்திற்கு செல்வதற்கு கூட லிப்ட் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
- படிக்கட்டுகளை பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் இதயத்திற்கு பலன் அளிக்கும்.
அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் என உயரமான கட்டுமானங்களை கொண்ட இடங்களுக்கு செல்லும்போது பலரும் லிப்ட், எஸ்கலேட்டர் பயன்படுத்துகிறார்கள். முதல் தளத்திற்கு செல்வதற்கு கூட லிப்ட் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். நவீன சாதனங்களால் உடல் உழைப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தொழில்நுட்ப சாதனங்களை சார்ந்திருப்பது உடல் நலனை பலவீனப்படுத்திவிடும்.
சமீப காலமாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் சார்ந்த பிரச்சினைகள் விஸ்வரூபமெடுத்துக்கொண்டிருக்கின்றன. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது வேகமான நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இதயத்தின் ஆயுளை அதிகரித்து உடலை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
தினமும் நடைப்பயிற்சிக்கு செல்ல போதிய நேரம் இல்லாவிட்டாலும், ஏதாவதொரு வகையில் உடல் இயக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும். அதற்கான வழிகளில் ஒன்றாக, படிக்கட்டுகளை தேர்ந்தெடுக்கலாம். லிப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் இதயத்திற்கு பலன் அளிக்கும். அது குறித்து பார்ப்போம்.
இதயத் துடிப்பு
நீங்கள் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கும்போது, தசைகள் வேலை செய்ய அதிக ஆக்சிஜன் தேவைப்படும். அதன் தேவையை பூர்த்தி செய்ய இதய துடிப்பு அதிகரிக்க தொடங்கும். அதனால் இதயம் ரத்தத்தை வேகமாக பம்ப் செய்யும். அப்போது தசைகளுக்கு ஆக்சிஜன் மட்டுமின்றி ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
ஆற்றல்
படிக்கட்டுகளில் நடக்க தொடங்கியதும் இதய துடிப்பு ஒவ்வொரு முறை அதிகரிக்கும்போதும் இதயத்தின் தசை சுவர்கள் அதிக அளவு ரத்தத்தை அழுத்துவதற்கு அதிக ஆற்றலுடன் சுருங்குகின்றன. இப்படி அதிக ஆற்றல் வெளிப்படுவது கால் தசைகள் உள்பட உடலின் திசுக்களுக்கு போதுமான ரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவும்.
ரத்த நாளங்கள்
படிக்கட்டு ஏறும்போது ரத்த ஓட்டத்திறன் அதிகரிக்கும். அது ரத்த நாளங்கள் விரிவடைவதற்கு வித்திடும். உடல் முழுவதும் ரத்த ஓட்டத்திற்கான தேவை பூர்த்தி செய்யப்படும். இதனால் மற்ற சமயங்களில் ரத்த ஓட்டம் எளிதாக நடப்பதற்கு வழி செய்கிறது. தசைகளுக்கு போதுமான ரத்தம் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.
ரத்த ஓட்டம்
ஒரு நிமிடத்திற்கு இதயம் பம்ப் செய்யும் ரத்தத்தின் அளவு 'கார்டியாக் அவுட்புட்' என குறிப்பிடப்படுகிறது. படிக்கட்டு ஏறும்போது இதயம் பம்ப் செய்யும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். உடலின் ஆக்சிஜன் தேவையையும் பூர்த்தி செய்துவிடும். உடல் உறுப்புகள் அனைத்திற்கும் ரத்தம் சென்றடைவதை உறுதி செய்வதாகவும் அமைந்துவிடும்.
காற்றில் இருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுத்து ரத்த ஓட்டத்தில் கலக்க செய்வதற்கு நுரையீரல் கடினமாக உழைக்கிறது. இந்த ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் பின்னர் இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு தசைகளுக்கு செலுத்தப்படுகிறது. இது உடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை உருவாக்க பயன்படுகிறது.
ரத்த உறைவு
படிக்கட்டு ஏறுவதும் கார்டியாக் உடற்பயிற்சிகளின் ஒரு அங்கம்தான். தசை வலிமையை அதிகரிக்க செய்யும். எலும்புகளை வலுப்படுத்தும். மேலும் படிக்கட்டுகளில் ஏறும்போது உடலில் கலோரிகள் எரிக்கப்படும்.
படிக்கட்டு போன்ற பயிற்சியின் காரணமாக இதயத் துடிப்பு அதிகரிக்கும். அப்போது தமனிகளின் சுவர்களை தளர் வடைய செய்யும். வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை ரத்தக்குழாயில் அடைப்பதை தடுக்கும். அதனால் ரத்த உறைவு பிரச்சினை தவிர்க்கப்படும்.
- இதயம் மனித உடலின் முக்கிய உறுப்பாகும்.
- உயர் ரத்த அழுத்தமே இதய பலவீனத்தின் ஆரம்ப அறிகுறியாகும்.
உலக இதய தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதய நோய்களை தடுக்கவும், அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் இந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இதய நோயின் அறிகுறி, நோயை தடுக்க செய்ய வேண்டிய முதலுதவி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பற்றி இந்த தினத்தில் பல நாடுகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.
இதயம் மனித உடலின் முக்கிய உறுப்பாகும். அதில் பாதிப்பு ஏற்பட்டால் உயிழப்பு உண்டாகும். எனவே ஒவ்வொருவரும் இதயத்தை ஆரோக்கியமாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.7 கோடி பேர் இதய நோயால் இறக்கின்றனர். இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31 சதவீதமாகும்.
"இதயத்தைப் பயன்படுத்து, இதயத்தை அறி" என்பதே இந்த ஆண்டு உலக இதய தினத்தின் கருப்பொருளாக கூறப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டை குறைத்தால் பொதுவாக மனிதர்களுக்கு வரும் இதய நோய்களை கனிசமாக குறைக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் மரம் வளர்ப்பது. தேவையற்ற புகையை வெளியிடுவதை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி உதவலாம்.
மன அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவையே மாரடைப்புக்கான முக்கிய காரணங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சி, தரமான தூக்கம் போன்றவற்றால் நமது உடல் சீராகும். இதயம் பலப்படும்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். உயர் ரத்த அழுத்தமே இதய பலவீனத்தின் ஆரம்ப அறிகுறியாகும். உடனே மருத்துவர்களை அணுகி தேவையான மருந்துகளையும், ஆலோசனைகளையும் பெறவேண்டும். அதேபோல் உடலில் அதிக கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உணவில் தேவையானவற்றை அதிகரித்து, தேவையில்லாததை தவிர்க்க வேண்டும். உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பவர்கள் முறையான உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அடிக்கடி சிறிது தூரம் நடக்கவேண்டும். புகை இதயத்துக்கு முதல் பகையாகும். அதனால் புகை பிடிக்கும் பழக்கத்தையும், மது அருந்தும் பழக்கத்தையும் கைவிடவேண்டும்.
எண்ணெய்யில் பொரித்த தின்பண்டங்களை குறைத்து உண்ணலாம். வயதானவர்கள் தவிர்ப்பது சிறந்தது. இதேபோல் சவர்மா, பீட்சா, பர்கர், துரித முறையில் சமைக்கும் கோழி இறைச்சி, மைதா மாவால் செய்யப்படும் உணவுகளும் ஜீரணத்தை பாதித்து, நுரையீரலையும், இதயத்தையும் சேதமாக்கும். பிரியமானவர்களிடம் பேசும்போது இதயத்தில் வைத்து உன்னை பாதுகாப்பேன் என்று உதாரணத்துக்கு கூறுவோம். ஆனால் பலர் அந்த இதயத்தை பாதுகாக்கவே தவறிவிடுகிறார்கள். ஒருவர் இறக்கும்போது அவருக்கு மட்டும் பாதிப்பில்லை. அவருடைய மொத்த குடும்பமே பாதிக்கும். எனவே விலை மதிப்பில்லாத உயிரை காக்க இதயத்தை காப்போம். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.






