search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Home Remedies"

  • கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி உள்ளது.
  • கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

  இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையே தனது கட்டுக்குள் வைத்திருந்த கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்டத் தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நம் முன்னோர்கள் உபயோகித்த ஆயுர்வேத பொருட்களை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து கொரோனா வைரசை விரட்டி அடிக்கலாம்.

   துளசி:

  ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, சளி, காய்ச்சலை கட்டுப்படுத்தும் சிறந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. அதன் சாறை பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும். சுவாசம் சார்ந்த நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடவும், சுவாசக் கோளாறுகளை போக்கவும் துணை புரியும். மேலும் மனஅழுத்தம், பதற்றம் சோர்வு போன்றவற்றில் இருந்து நிவாரணம் தரும்.

   இஞ்சி:

  இஞ்சியில் நுண்ணுயிர் மற்றும் தொற்று எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தொண்டை புண்ணுக்கு தீர்வு காண உதவும். நோய் எதிர்ப்பு அமைப்பையும் அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் தடுப்பு பண்புகளையும் கொண்டது. இஞ்சி, தேன், துளசி இவை மூன்றையும் சேர்த்து கசாயம் தயாரித்தும் சாப்பிடலாம்.

   நெல்லிக்காய்

  இதுவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத பொருட்களுள் ஒன்றாக விளங்குகிறது. வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டல செயல்பாட்டை மேம்படுத்தும் சேர்மங்களும் நெல்லிக்காயில் உள்ளன. தினமும் வெறும் வயிற்றில் நெல்லிச்சாறு பருகி வருவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வருவதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

   ஜிலோய்:

  ஆங்கிலத்தில் `ஜிலோய்', தமிழில் `அமிர்தவல்லி' என்று அழைக்கப்படும் இது பல்வேறு ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. உடலில் சேரும் நச்சுகளை வெளியேற்றவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும், நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிர் கிருமிகளை எதிர்த்து போராடவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் இது உதவும். சளி மற்றும் இருமலுக்கும் நிவாரணம் தரும். ஜிலோய் தண்டுகளை தண்ணீரில் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை பருகி வரலாம்.

   மஞ்சள்:

  இதில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமின்றி உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்யும். இரவில் தூங்குவதற்கு முன்பு மஞ்சள் பால் பருகலாம். அது ஆழ்ந்த தூக்கத்திற்கும் வழிவகை செய்யும். குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும் உதவும்.

   அஸ்வகந்தா:

  தூக்கமின்மை பிரச்சினைக்கு தீர்வு காணவும், மன அழுத்தத்தை போக்கவும் இது உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதுடன் மூட்டு சார்ந்த நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவும். அஸ்வகந்தா மாத்திரைகள், பொடியை வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீருடன் கலந்து பருகலாம். அதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமானது.

  • உணவு வழியாகவே பெருமளவு தொற்றை தடுத்துவிட முடியும்.
  • வெந்நீரில் இருந்து உங்கள் நாளை தொடங்குங்கள்.

  மழைக்காலம் தொடங்கிவிட்ட சூழலில், சளி-இருமல் தொல்லையும், காய்ச்சல் நோய் பாதிப்புகளும் வேகமாக பரவத் தொடங்கிவிட்டன. தொண்டையில் உண்டாகும் மாற்றத்தை கண்டு சளி பிடிப்பதை உணர்ந்துகொள்ள முடியும். அடிக்கடி மருந்து மாத்திரைகள் என்று பயன்படுத்துவதை விட காய்ச்சலின் ஆரம்பத்திலேயே, சில உணவு பழக்க வழக்கங்களை மாற்றுவதனால், சளி-காய்ச்சல் தொல்லையின் வீரியத்தை குறைத்துவிடலாம். இதற்கென பிரத்தியேகமான தயாரிப்புகள் எதுவும் தேவையில்லை. அதிக மெனக்கெடலும் தேவையில்லை. உணவு வழியாகவே பெருமளவு தொற்றை தடுத்துவிட முடியும். சாதாரண காய்ச்சல், சளி, தலைவலியாக இருந்தால் இந்த உணவு வகைகளை பின்பற்றினால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

  வெந்நீரில் இருந்து உங்கள் நாளை தொடங்குங்கள். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூடாக இருக்கும் போது சிட்டிகை சீரகத்தூள் சேர்த்து குடிக்க வேண்டும். அல்லது சீரகம் போட்ட நீரை கொதிக்க வைத்து குடிக்கவும். இதனால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

  நாள் முழுக்க அரை மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் நீரை குடிப்பதன் மூலம் உடலில் நச்சு சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். அதோடு காய்ச்சலின் போது உடலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையெனில் வைரஸ், பாக்டீரியா கிருமித்தொற்று வேகமாக பரவக்கூடும்.

  காலை உணவு

  காய்ச்சல் காலங்களில் பிரட் உணவை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக ஆவியில் வேக வைத்த இட்லி அல்லது இடியாப்பம் சேர்க்கலாம். தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி சேர்த்த துவையல், தாளிப்பு தேவையெனில் நல்லெண்ணெய்யில் தாளித்து தொட்டு கொள்ளலாம். இதனால் வாய் கசப்பு நீங்கும். காரத்துக்கேற்ப புளி, வரமிளகாய் சேர்க்க வேண்டும்.

  வயிறார சாப்பிடக்கூடாது. வயதுக்கேற்ப இரண்டு முதல் நான்கு இட்லிகள் வரை சாப்பிட வேண்டும். அரை வயிறாக சாப்பிட வேண்டும். அப்போதுதான் வாந்தி, குமட்டல் இருக்காது. அதேபோன்று இளஞ்சூட்டில் சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்ததும் பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் இளஞ்சூட்டில் நீர் குடிக்க வேண்டும்.

  மதிய உணவு

  புழுங்கலரிசியை வெறும் வாணலியில் வறுத்து மிக்சியில் ரவை போன்று பொடியாக மாற்றவும். இரண்டு டம்ளர் நீருக்கு கால் டம்ளர் அரிசி ரவை சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் அதில் சீரகப்பொடி, பெருங்காயம் சிட்டிகை, உப்பு சேர்த்து குடிக்கவேண்டும். தேவையெனில் தொட்டுகொள்ள புதினா சட்னி எடுத்துகொள்ளலாம். பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான சீரக நீரை குடிக்க வேண்டும். பூண்டு சேர்த்த மிளகு ரசத்தையும் இளஞ்சூட்டில் அருந்தலாம்.

  அரிசி சாதத்துடன் கூடிய மிளகு ரசம் என்பது நிச்சயம் நன்மையே என்றாலும் சளி, இருமல், காய்ச்சல் நேரத்தில் முதல் இரண்டு நாட்கள் இதை தவிர்க்க வேண்டும்.

  மாலை நேரத்தில்

  அரை வயிறு உணவு என்பதால் வயிற்றில் பசி உணர்வு அதிகமாகவே இருக்கும். மாலையில் இஞ்சி கஷாயம், சுக்கு கஷாயம் குடிக்கலாம். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி அதில் 5 உலர் திராட்சை, 2 ஏலக்காய், 3 மிளகு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வைக்கவும். பாகுக்கு முந்தைய பதம் வரும் போது அதில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு அதை இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது தேன் சேர்த்து கொடுக்க வேண்டும்.

  இரவு உணவு

  ஆவியில் வேகவைத்த உணவு அல்லது கஞ்சி போதுமானது. அதிக காய்ச்சல் இல்லையெனில் எண்ணெய் அதிகம் சேர்க்காத சப்பாத்தி சாப்பிடலாம். இரவு நேரத்தில் துவையல் சேர்க்க வேண்டாம். பால், காபி, தேநீர் போன்றவைகளையும் தவிர்க்க வேண்டும். இடையில் பசி எடுத்தாலும் இளஞ்சூடான சுக்கு மல்லி காபி அல்லது வெந்நீர் மட்டும் அருந்துங்கள். பகல் வேளையில் 4 அல்லது 5 உலர் திராட்சையுடன் மிளகு 3 சேர்த்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாறை விழுங்குங்கள். தொண்டை கரகரப்பு, இருமல் வேகமாக குறையும்.

  மேற்கண்ட இந்த உணவு பட்டியல் தான் ஒரு நாளுக்கான உணவாக இருக்க வேண்டும். இந்த உணவு உங்களின் சளி, அதனால் உண்டான இருமல், காய்ச்சலின் தீவிரத்தை வெகுவிரைவாக குறைத்துவிடும். பெரும்பாலும் காய்ச்சல் நேரத்தில் திட உணவுகள் அதிலும் கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவை எடுத்துகொள்ள வேண்டும்.

  அதிகப்படியான சளி, காய்ச்சல் பிரச்சினை இருக்கும் போது நாள் முழுக்க இதை கடைப்பிடித்தால் அடுத்த நாள் தூங்கி எழும்போது உடல் சோர்வு நீங்கியிருப்பதை உணர்வீர்கள். ஏனெனில் இவை எல்லாமே உடலுக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடியவை. பெரும்பாலும் தொற்று தீவிரமாகாமல் தடுத்துவிடும் என்பதால் நிச்சயம் இது கைகொடுக்கும்.

  சூப் வகை

  சளி, இருமலின் போது சூடாக குடிக்கும் காபி, தேநீரை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக சுக்கு, மல்லி, காபி பொடி கலந்து காபி குடிக்கலாம். சிறுவர்களுக்கு சூப் கொடுக்க வேண்டும்.

  முருங்கைக்கீரை காம்புகளை வேகவைத்து மசித்து வடிகட்டி அதில் சீரகம், பூண்டு தட்டி சேர்த்து, மிளகுத்தூள், உப்பு சிட்டிகை சேர்த்து கொத்தமல்லித்தழை, புதினா இலைகளை சேர்த்து தாளித்து கொடுக்கவும். சிறு குழந்தைகளாக இருந்தால் கொத்தமல்லி, புதினாவின் சாறு சேர்த்து குடிக்கலாம். இந்த நேரத்தில் காய்கறிகள் சூப்பை தவிர்க்கலாம். அதற்கு பதிலாக சளியை முறிக்கும் முருங்கை, தூதுவளை போன்றவற்றை சூப்பாக்கி கொடுக்கலாம். இளஞ்சூடாக குடிக்க வேண்டும்.

  கூடுதல் கவனம்

  தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். ஓய்வும் மிக அவசியம். காலையும், மாலையும் கல் உப்பு சேர்த்த வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். தலையை உயரமாக தலையணையில் வைத்து படுக்க வேண்டும். அதிக தலைபாரம், சளி, காய்ச்சல் மூன்றும் இருக்கும் போது மூச்சுவிடுவதிலும் சிரமம் இருக்கும். படுக்கை அறையில் மண்சட்டியில் வெந்நீர் கொதிக்க வைத்து அதில் துளசி, புதினா, தூதுவளை, கற்பூரவல்லி என அருகில் கிடைக்கும் மூலிகைகளை கைப்பிடி சேர்த்து அதிக சூட்டில் அருகில் வைக்க வேண்டும். அதிலிருந்து வரும் சூடான ஆவியை மூக்கினுள் நன்றாக இழுக்க வேண்டும். தினமும் மூன்று முறையாவது இதை செய்ய வேண்டும்.

  படுக்கையிலேயே கிடக்காமல் அறைக்குள் நடக்க வேண்டும். தூங்கும் போதும் பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதில் சில துளி யூகலிப்டஸ் தைலம் விட்டு, சுத்தமான துணியை நனைத்து பிழிந்து மூக்கின் மேல் பற்று போல் போட்டால் மூக்கடைப்பு இருக்காது. சளி அடர்த்தியாக இருந்தால் கரைந்து வெளியேறும். அதேநேரம் சுகாதாரம் பேணுவதும் அவசியம்.

  • மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாகும்.
  • மூட்டுகளில் ஜவ்வு குறைந்து நாளடைவில் வலி அதிகரிக்க செய்யும்.

  எலும்பின் நடுவில் இருக்கும் மூட்டுகளில் தேய்மானம் உண்டாகும் போது வலி உண்டாக்க கூடும். பொதுவாக வயதான பிறகு தான் தேய்மானம் உண்டாகும் ஆனால் தற்போது வயதானவர்களை காட்டிலும் இளம் வயதினரையும் மூட்டு வலி பிரச்சினை விட்டுவைக்கவில்லை. தலைவலி வந்தால் மாத்திரை போட்டுக்கொள்வது போல் மூட்டு வலிக்கு அவ்வப்போது வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துகொள்வதால் தற்காலிகமாக வலி குறையும். ஆனால் மூட்டு எலும்புகளில் ஜவ்வு குறைந்து நாளடைவில் வலி அதிகரிக்கச் செய்யும்.

  நடக்கும் போதும், உட்கார்ந்து எழும் போதும் படிகளில் ஏறும் போதும் ஒருவித சத்தம் கேட்கும். இவைதான் தொடக்க கால மூட்டுவலியின் அறிகுறிகள். இதற்கு முன்னோர்கள் மூலிகை எண்ணெய் தைலத்தை காய்ச்சி பயன்படுத்துவார்கள். தொடர்ந்து ஒரு மண்டலம் தேய்த்து வந்தால் வலி குறைந்து மூட்டுகளின் உள் இருக்கும் ஜவ்வு பகுதியும் பாதுகாப்பாக இருக்கும்.

  எல்4, எல்-5, எஸ்-1 முதுகு தண்டுவட பாதிப்பு, டிஸ்க் பஞ்ச் ஆகிவிட்டது, முதுகு தண்டுவடப்பகுதியில் வலி அதிகமாக உள்ளது, என்னால் பாத்ரூம் கூட செல்ல முடியவில்லை என்று பலரும் புலம்புவார்கள். அவர்களுக்கு இந்த விராலி இலை போட்டு காய்ச்சிய எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  வீட்டிலேயே இந்த மூலிகை எண்ணெய்யை தயாரிக்க முடியும். எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள்:

  விராலி இலை- ஒரு கைப்பிடி

  நல்லெண்ணெய்- 250 கிராம்

  செய்முறை:

  ஒரு இரும்பு கடாயில் சுத்தமான நல்லெண்ணெய் சேர்த்து அது காய்ந்ததும் இதில் ஒரு கைப்பிடி விராலி இலைகளை கழுவி விட்டு உலர்ந்த பிறகு அந்த எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். நன்றாக இலை காய்ந்து பிரவுன் கலர் வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி அப்படியே ஒரு நாள் முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு தேவையான போது உபயோகப்படுத்த வேண்டும்.

  மூட்டுவலி இருக்கும் போது லேசாக சூடுபடுத்தி மூட்டுகளில் தேய்த்து வந்தால் வலி குறையும். தொடர்ந்து 10 நாட்கள் தேய்த்துவந்தாலே அதன் பலனை நன்றாக உணர முடியும்.

  • ரேசர் கொண்டு முடியை நீக்கும்போது காயங்கள் ஏற்படாலாம்.
  • உதட்டுக்கு மேல் முடி முளைப்பது முக அழகையே கெடுத்து விடும்.

  உதட்டுக்கு மேல் முடி முளைப்பது பெண்களின் முக அழகையே கெடுத்து விடும். மன ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். எப்படியாவது இந்த முடியை நீக்க வேண்டுமென்று ரேசர் பயன்படுத்துவது, ஹேர் ரிமூவல் க்ரீம்கள் பயன்படுத்துவது ஆகியவற்றை செய்வார்கள். ஆனால் ரேசர் கொண்டு முடியை நீக்கும்போது காயங்கள் ஏற்படாலாம். அதோடு முடி வளர்ச்சியும் வேகமாகத் தூண்டப்படும். ஆனால் கீழ்வரும் சில இயற்கையான வழிமுறைகள் மூலம் பக்க விளைவுகள் இல்லாமல் உதட்டுக்கு மேலே உள்ள முடிகளை நீக்க முடியும்.

  வசம்பு

  அரை ஸ்பூன் வசம்பு பொடியை எடுத்து தண்ணீரில் திக்காக குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டுக்கு மேல் முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு தண்ணீர் கொண்டு கழுவிக் கொள்ளுங்கள். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதை பயன்படுத்தும் போது உதட்டுக்கு மேலுள்ள முடிகள் உதிர ஆரம்பிக்கும்.

  மஞ்சள்

  ஒரு ஸ்பூன் மஞ்சளை காய்ச்சாத பால் சேர்த்து திக்கான பேஸ்ட்டாக்கி உதட்டுக்கு மேலே முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். அது நன்கு உலர்ந்ததும் தண்ணீரில் கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் முடிகள் நிரந்தரமாக வளராமல் தடுக்க முடியும். இதற்கு சாதாரணமாக சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் இரண்டுமே பயன்படுத்தலாம். ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் பாலுக்கு பதிலாக ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம்.

  படிகாரம்

  படிகாரம் என்பது ஒருவகையான உப்புக்கல். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த படிகாரம் சருமத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்கி மென்மையாக வைத்திருக்க உதவி செய்யும். ஆண்களும் ஷேவிங் செய்யும்போது இதை பயன்படுத்தலாம். ரேசர் உள்ளிட்டவற்றால் ஏற்படும் காயங்கள், தழும்புகள் ஆகியவற்றை சரிசெய்யும் தன்மை கொண்டது.

  கல்போன்று கடினமாக இருக்கும் இந்த படிகாரத்தை இடித்து பொடி செய்து கொள்ளுங்கள். அரை ஸ்பூன் அளவு படிகாரத்துடன் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட்டாக்கி இந்த பேஸ்ட்டை உதட்டுக்கு மேலே முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முதல்முறையிலேயே உங்களுக்கு நல்ல வித்தியாசம் தெரியும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்துவர வேகமாக உதட்டுக்கு மேலே உள்ள முடி நிரந்தரமாக உதிர ஆரம்பிக்கும்.

  சர்க்கரை

  சர்க்கரை ஸ்கிரப்பை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது நிரந்தரமாக உதடு மற்றும் சருமத்தில் தேவையற்ற முடி வளர்வதைத் தடுக்க முடியும். ஆனால் சர்க்கரையை லேசாக நுணுக்கி பயன்படுத்துங்கள். பெரிய பெரிய துகள்களாக இருந்தால் அவை சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

  ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் பொடித்த சர்க்கரையை சேர்த்து அதோடு சிறிது ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை உதட்டின்மேல் முடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 - 20 நிமிடங்கள் உலர விடுங்கள். பிறகு மெதுவாக விரல்களால் ஸ்கிரப் செய்து கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம் உதட்டுக்கு மேலே உள்ள மெல்லிய முடிகள் உதிர ஆரம்பிக்கும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வரும்போது நிரந்தரமான முடிகள் நீங்கும்.

  ஜெலட்டின்

  ஜெலட்டின் பீல் ஆஃப் மாஸ்க் போல செயல்படும். இதை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் சருமம் நெகிழ்வுத் தன்மையோடு இருக்கும். அதோடு சருமத்திலுள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து சருமம் மென்மையாக மாறும். காசு கொடுத்து விலையுயர்ந்த மாஸ்க்குகள் வாங்கிப் பயன்படுத்துவதை காட்டிலும் இது சிறந்தது.

  ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் ஜெலட்டின் பவுடரை எடுத்துக் கொண்டு அதில் கால் ஸ்பூன் மஞ்சள் சேர்த்து அதோடு சிறிது ஆரஞ்சு பழத்தின் சாறையும் சேர்த்து கலந்து நன்கு ஸ்மூத்தான பேஸ்ட்டாக செய்து கொள்ள வேண்டும். இதை உதட்டின் மேற்பகுதியில் முடிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருங்கள். சருமத்தில் அது நன்கு இறுக்கிப் பிடிக்க ஆரம்பிக்கும். பீல் ஆஃப் மாஸ்க் மாதிரி மெதுவாக பிரித்து எடுக்க அந்த ஜெலட்டின் மாஸ்க்கோடு சேர்த்து சின்ன சின்ன முடிகளும் வருவதை பார்க்க முடியும். இதை அடிக்கடி பயன்படுத்தும் போது சருமத்திலுள்ள முடிகள் நிரந்தரமான நீங்கும்.

  முட்டை

  சருமத்திலுள்ள முடிகளை நீக்குவதற்கும் சருமத்துக்குத் தேவையான புரதத்தைக் கொடுக்கவும் முட்டையின் வெள்ளைக் கரு உதவுகிறது. இதை தொடர்ந்து மாஸ்க்காக சருமத்தில் அப்ளை செய்து வர மேல் உதட்டுக்கு மேலுள்ள முடி மற்றும் கன்னங்கள் என முகத்திலுள்ள மென்மையான முடிகள் நீங்கும்.

  ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து பேஸ்ட்டாக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இதை மேல் உதட்டின்மீது உள்ள முடிகளையும் முகத்திலுள்ள வேறு மெல்லிய முடிகளும் உள்ள இடத்தில் அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்ததும் மென்மையாக விரல்களால் தேய்த்து ஸ்கிரப் செய்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

  • காதுகளில் உண்டாகும் தொற்று சிலசமயங்களில் வலியை உண்டுபண்ணலாம்.
  • பெரியவர்களுக்கு காதுவலி தொற்று காரணமாக ஏற்படுகிறது.

  காதுகளில் உண்டாகும் தொற்று சிலசமயங்களில் வலியை உண்டுபண்ணலாம். சில நேரங்களில் மந்தமான வலியையும், மற்ற நேரங்களில் ஊசியை வைத்து குத்துவது போன்ற வலியையும் ஏற்படுத்தலாம். காதில் உள்ள குழாய் திரவத்தால் நிரப்பப்பட்டு தடுக்கப்படும் போது அவை செவிப்பறை அல்லது காது தொற்றுக்கு பின்னால் அழுத்தம் அதிகரிக்க செய்கிறது. இதனால் காது வலி உண்டாகலாம். பெரியவர்களுக்கு காதுவலி தொற்று காரணமாக ஏற்படுகிறது. இவை பற்கள், தாடை அல்லது தொண்டை போன்ற வேறு சில பகுதிகளின் வலியாலும் உண்டாகிறது.

  காதுவலியை ஏற்படுத்தும் காரணங்கள்:

  தொண்டை வலி

  சைனஸ் தொற்று

  பல் தொற்று

  குறுகிய கால அல்லது நீண்ட கால காது தொற்று

  தாடையின் கீல்வாதம்

  ஜாயிண்ட் சிண்ட்ரோம்

  காதில் காயம்

  மெழுகு அல்லது சில பொருள் காதில் மாட்டிகொள்வது

  நீச்சல் காது (காதுகால்வாயின் தொற்று)

  மண்டை ஓட்டின் எலும்புகளில் தொற்று மற்றும் சேதம்

  குழந்தைகளுக்கு குளிக்கும் போது சோப்பு உள்ளே செல்வது, ஷாம்பு உள்ளே சென்று விடுவது மற்றும் குளியலுக்கு பிறகு காது சுத்தம் செய்கிறேன் என்று பருத்தி நுனி கொண்ட துணியால் காதினுள் விடுவது போன்ற காரணங்களால் காதுவலி உண்டாகலாம்.

  வீட்டு வைத்தியம்:

  * காதுவலி இருக்கும் போது எளிமையான வீட்டு சிகிச்சை முறையே முக்கியமானது. சுத்தமான துணி அல்லது துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து நீரை பிழிந்து துணியை கையடக்கமாக மடித்து காதுக்கு எதிராக சூடான அழுத்தத்தை ஒற்றி எடுங்கள். இப்படி 15 நிமிடங்கள் வரை செய்தால் காது வலி, வீக்கம் குறையும்.

  * காதுவலி சமயங்களில் சைனஸ் அல்லது நாசி நெரிசலால் வந்தால் நீராவியை உள்ளிழுப்பது நிவாரணம் அளிக்கும். தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி உடல் முழுவதும் கனமான போர்வை கொண்டு போர்த்தி முகம் நன்றாக பானையின் மீது இருக்கும்படி சாய்ந்து கொள்ளவும். மூக்கு வழியாக நீராவியை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும் சில நிமிடங்கள் வரை வைத்திருந்து மீண்டும் உள்ளிழுக்கவும். இது காதுகளுக்கு அழுத்தம் குறைத்து நெரிசலை குறைக்கும்.

  * இது பெரும்பாலும் நீச்சல் பயில்பவர்களுக்கு வரக்கூடிய காதுவலிக்கு உதவும். அதேபோன்று காற்று மற்றும் மழை நாட்களில் வெளியில் இருப்பதும் தொற்றுநோயை உண்டு செய்யலாம். காதுக்கு அருகில் குறைந்த வெப்பத்தில் ப்ளோ- ட்ரையரை காட்டுவது காதில் எஞ்சியிருக்கும் ஈரப்பதத்தை உலர வைக்க உதவும். நீங்கள் மழையில் நீச்சல் பழகிய பிறகு காதில் ஈரப்பதம் இருந்தால் இம்முறை உங்களுக்கு காதுவலியை தவிர்க்கும்.

  * காது வலியை குணப்படுத்த வெங்காயசாறு உதவும் என்பது 1800-களில் இருந்ததாக சொல்லப்படுகிறது. வெங்காயத்தில் உள்ள குர்செடின் என்னும் ஃப்ளவனாய்டு அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. ஒரு முறை வெங்காயத்தை 450 டிகிரி ஃபாரன்ஹீட்டில் வைத்து 15 நிமிடங்கள் சூடாக்க வேண்டும். பிறகு அது ஆறியதும் வெங்காயத்தை இரண்டாக வெட்டி, பாத்திரத்தில் சாற்றை பிழிந்து சில துளிகள் காதுகளில் விட வேண்டும் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் வெங்காயத்தை நேரடியாகவும் வைக்கலாம். எனினும் மூன்று நாட்கள் கடந்தும் வலி உணர்வு குறையாத நிலையில் நீங்கள் மருத்துவரை பார்ப்பது பாதுகாப்பானது.

  * காதில் ஆலிவ் எண்ணெய் விடுவது வலியை ஆற்றும் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆலிவ் எண்ணெய் மெழுகு திரட்டி அல்லது இலேசான காது தொற்று வலிகளுக்கு நிவாரணம் அளிக்கும். சிறிது ஆலிவ் எண்ணெயை சூடாக்கி வெதுவெதுப்பான நிலையில் ஒரு துளியை காதில் விடலாம். சூடான எண்ணெய் காதை பாதிக்கலாம். அதனால் கவனம் வேண்டும். இந்த ஆலிவ் எண்ணெய் காதில் விட்டு அப்படியே எதிர்புறமாக படுத்தபடி இருந்தால் அது வலியை குறைத்து அசவுகரியத்தை குறைக்கும் காதில் இருக்கும் மெழுகை மென்மையாக்கும்.

  * இஞ்சியில் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இஞ்சி சாறு அல்லது இஞ்சி சேர்த்து சூடுபடுத்தப்பட்ட எண்ணெயை இளஞ்சூட்டில் காதை சுற்றி தடவ வேண்டும். இப்படி செய்தால் வலி ஓரளவு கட்டுப்படும். வெளிப்புறமாக காது பகுதியை சுற்றி தடவ வேண்டும். இதனை காதுகளின் உள்ளே விடக்கூடாது.

  * பூண்டு ஆண்டிபயாடிக் மற்றும் வலி நிவாரணி பண்புகள் கொண்டவை. பூண்டை சூடான ஆலிவ் அல்லது நல்லெண்ணெயில் ௩௦ நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு இதை வடிகட்டி காது பகுதியில் தடவி விடவும். இதை காதுக்குள் விட வேண்டாம். இது எரிச்சலை உண்டு செய்துவிடலாம்.

  * ஹைட்ரஹன் பெராக்சைடு காதுவலிக்கு இயற்கையான தீர்வாக பயன்படுத்தலாம். காதுவலிக்கு காரணம் மெழுகு கட்டியாக இருந்தால் சிகிச்சையில் இந்த முறை சிறப்பாக உதவும். காதுவலி இருக்கும் பகுதியில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சொட்டுகள் வைத்து சில நிமிடங்கள் உட்காரவும். பிறகு சுத்தமான காய்ச்சி வடிகட்டிய நீரில் காதை சுத்தம் செய்யவும். இது மெழுகு கட்டியை பாதுகாப்பாக வெளியேற்ற செய்யும்.

  இதனை எல்லாம் செய்தும் காதுவலி சரியாக வில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகலாம்.

  • பொடுகு உள்ளதா என்பதை சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
  • வெளியில் செல்லும் போது தலைக்கு எண்ணெய் வைக்கக் கூடாது.

  எண்ணெய் பசையான கூந்தல் உள்ளவர்களுக்கு வரக்கூடிய முதல் முக்கிய பிரச்சனை எண்ணெய் பசையான பொடுகு எனப்படுகிற ஆயிலி டாண்டிரஃப். டிரை டாண்டிரஃப் எனப்படுகிற வறண்ட பொடுகைக் கூட சுலபமாக சரி செய்து விடலாம். ஆனால், ஆயிலி டாண்டிரஃபை அத்தனை சுலபத்தில் சரி செய்ய முடியாது. இது இருக்கும்வரை தலையில் ஒருவித மோசமான வாடையும் அடிக்கும். எண்ணெய் பசை கூந்தல் உள்ளவர்கள், ரொம்பவும் நீளமாக கூந்தலை வளர்க்காமல் மீடியமான அளவில் வெட்டிக் கொள்வது பராமரிக்க சுலபமாக இருக்கும்.

  சாதாரணமாக வெளியில் நடக்கும் போதும், டூ வீலரில் பயணம் செய்கிற போதும் சுற்றுப்புற மாசும் தூசும் மிகச் சுலபமாக இவர்களது மண்டையில் படிந்து, ஆயிலி டாண்டிரஃபுக்கு வழி வகுத்து விடும். இந்த வகையான பொடுகு வறண்ட பொடுகு மாதிரி உதிராது என்பதால் இருப்பதும் தெரியாது. அடிக்கடி அலசி சுத்தப்படுத்தினால்தான் பொடுகு இன்றி பாதுகாக்க முடியும். இந்தப் பொடுகு உள்ளதா என்பதை சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். டெயில் கோம்ப் என்று கேட்டு வாங்கவும். அதன் கூரிய பின் பகுதியால் தலைமுடியில் பகுதி பகுதிகளாகப் பிரித்து, லேசாகச் சுரண்டவும். அப்போது பொடுகு இருந்தால் வெளியே வரும். இருப்பது தெரிந்தால் சிகிச்சை அவசியம்.

  வெளியில் செல்லும் போது தலைக்கு எண்ணெய் வைக்கக் கூடாது. தவிர்க்க முடியாமல் எண்ணெய் வைத்தே ஆக வேண்டும் என்றாலும், வைத்த சிறிது நேரத்தில் தலையை அலசி விட வேண்டும். வெளியில் செல்லும் போது தலைமுடிக்கு ஸ்கார்ஃப் அவசியம்.

  * பாதாம் எண்ணெயை லேசாக சூடாக்கி, தலையில் மிதமாக மசாஜ் செய்யவும். செம்பருத்திப் பூவின் விழுது 1 டேபிள்ஸ்பூன், வெந்தய விழுது கால் டீஸ்பூன், நெல்லிக்காய் விழுது கால் டீஸ்பூன்... இவை எல்லாவற்றையும் கலந்து, எண்ணெய் மசாஜ் செய்த தலையில் தடவவும். அதையே கூந்தலின் இடையிலும் விட்டு விரல்களால் நீவி விடவும். அரை மணி நேரம் வைத்திருந்து சீயக்காய் அல்லது எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் ஷாம்பு உபயோகித்து அலசவும்.

  * தயிரில் சிறிது பாதாம் ஆயில், 2 துளிகள் எலுமிச்சைச்சாறு, சிறிது வேப்பிலை விழுது, துளசி விழுது சேர்த்துக் குழைத்து தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து அலசவும். தலையை அலசும்போதும் கவனம் அவசியம். முதலில் தலைமுடியை இட, வலப் பக்கமாக இரண்டாகப் பிரிக்கவும். இடப்பக்க முடியை நன்கு விரல்களை விட்டு சுத்தம் செய்து, நிறைய தண்ணீர் விட்டு அலசி சுத்தப்படுத்திய பிறகு, வலப்பக்க முடியையும் அதே போலச் செய்யவும். பிறகு மொத்த கூந்தலையும் மீண்டும் அலசவும். முதலில் வெறும் தண்ணீரில் இப்படி அலசிய பிறகு, சீயக்காயோ, ஆயில் கன்ட்ரோல் ஷாம்புவோ உபயோகித்து அலசி, வெயிலில் சிறிது நேரம் நின்று உலர்த்தவும்

  * ஒரு கைப்பிடி அளவு சீயக்காய், 3 பூந்திக் கொட்டை, கைப்பிடி அளவு குண்டு மல்லி ஆகியவற்றை முதல் நாள் இரவே சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் இந்தத் தண்ணீரை வடித்து, தலைக்கு ஷாம்புவாக உபயோகிக்கலாம். எண்ணெய் பசை கட்டுப்படும். தலைமுடிக்கு இயற்கையான நறுமணமும் கிடைக்கும்.

  * 2 கைப்பிடி அளவு பன்னீர் ரோஜாவை எடுத்து வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதிலுள்ள நிறமெல்லாம் போனதும் அந்த ரோஜாவை எடுத்து வேறு தண்ணீரில் போட்டு, கொஞ்சம் மரிக் கொழுந்தும் சேர்த்து ஊற வைக்கவும். மறுநாள் இந்தத் தண்ணீரைக் கசக்கி, வடிகட்டி, தலையை அலச உபயோகிக்கலாம்.

  * தலைக்குக் குளித்ததும் அவர்கள் உபயோகிக்கிற சீப்பு, பிரஷ் போன்றவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.

  * தலையைத் துவட்ட டர்கி டவல் உபயோகிக்காமல், கதர் டவல் உபயோகிப்பதே சிறந்தது.

  • பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம்.
  • சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள்.

  வயதை கடந்ததுமே சருமத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கக் கூடும். வயதுக்கு ஏற்பவே கொலாஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்களை சருமம் உற்பத்தி செய்கிறது. அவை சருமத்தை குண்டாகவும், இறுக்கமாகவும், மீள்தன்மையுடனும், இளமையுடனும் வைத்திருக்க உதவுகிறது. வயது அதிகரிக்கும்போது இவற்றின் உற்பத்தி குறைந்துவிடும். அதனால் சருமம் மெல்லியதாக மாறிவிடக்கூடும். அதுவே சுருக்கங்கள் எட்டிப்பார்க்க காரணமாகிவிடுகிறது.

  ஒருசில முக பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் விரைவாகவே சருமத்தில் சுருக்கங்கள் தோன்றுவதை தவிர்த்துவிடலாம். கண்களைச் சுற்றியுள்ள தோல் முகத்தின் மற்ற பகுதிகளை விட மெல்லியதாக இருப்பதால், முதுமைக்கான அறிகுறிகளான சுருக்கங்களை சட்டென்று வெளிப்படுத்த தொடங்கிவிடும்.

  பயிற்சி 1: தாடை எலும்பை உறுதியாக வைத்துக்கொண்டு, இரு கண்களையும் வலமிருந்து இடமாகவும், பின்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் சுழலவிடவும். கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைத் தடுக்க உதவும் இந்த பயிற்சியை ஒவ்வொரு திசையிலும் ஐந்து முறை செய்யவும்.

  பயிற்சி 2: இரு விரல்களை கண்களின் உள் மற்றும் வெளிப்புற மூலைகளிலும், மற்ற விரல்களை தாடைப்பகுதியிலும் வைக்கவும். பின்பு கண்களை மூடி இறுக்கமாக அழுத்தவும். இதற்கிடையில், விரல்களை பயன்படுத்தி, கண்களின் வெளிப்புற மூலைகளை வெளிப்புறமாகவும் சற்று மேல்நோக்கியும் அழுத்தி தேய்க்கவும். இந்த நிலையில் சுமார் 5-10 விநாடிகள் வைக்கவும். பின்பு ஓய்வெடுக்கவும். அது போன்று 10 முதல் 25 முறை செய்யவும்.

  மல்லார்ந்த நிலையில் தூங்குவது முக தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க உதவும். சுருக்கங்களும் எட்டிப்பார்க்காது. மென்மையான தலையணையையும் உபயோகிக்கலாம். பட்டு துணியிலான தலையணை சிறந்தது.

  சுருக்கங்களை தடுக்கும் உணவுகள்: வெண்ணெய், ஆளிவிதை, சோயாபீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கொண்ட உணவு பொருட்கள், கருப்பு எள், பூசணி விதை போன்ற சருமத்தை அழகுபடுத்தும் ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் கரும் பச்சை இலை கீரைகள், மிளகுத்தூள், ஆரஞ்சு, பப்பாளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி உள்ளடங்கிய பொருட்கள், ஆலிவ் எண்ணெய், முழு கோதுமை, பாதாம், காலே போன்ற வைட்டமின் ஈ நிரம்பிய பொருட்களை உட்கொள்வதன் மூலம் சரும சுருக்கங்களை கட்டுப்படுத்தலாம்.

  சருமத்திற்கான மசாஜ்: தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வரலாம். கற்றாழை ஜெல்லையும் சருமத்திற்கு உபயோகிக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவை சருமத்தில் தடவுவதும் சுருக்கங்களை விரட்டக்கூடும். வாழைப்பழத்தை மசித்து சருமத்தில் தடவலாம். வெள்ளரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி 'பேஸ் பேக்'காக பயன் படுத்தலாம். காய்ச்சாத பாலில் பருத்தி பஞ்சுவை முக்கியும் சருமத்தில் பூசி வரலாம்.

  சரும சுருக்கத்தை தடுக்கும் வழிகள்: சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருங்கள். சருமம் எண்ணெய் பசை தன்மையுடன் இருந்தால் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துங்கள். அது உங்கள் சரும வகைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது குறிப்பாக வெயிலின் ஆதிக்கம் நிலவும் சமயங்களில் மறக்காமல் சன்ஸ்கிரீனை உபயோகியுங்கள். கெட்டுப்போகாத ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்தை பேணுங்கள். மதுப்பழக்கம், புகைப்பழக்கத்தை தவிருங்கள். அடிக்கடி முகம் சுளிப்பது, பற்களை கடிப்பது போன்ற பழக்கங்களை தவிருங்கள்.

  • ஸ்பிட் அப் பிரச்சனையைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்.
  • அதிகமாக உணவுக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

  சில குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள். உணவு உண்ட பிறகு, பால் குடித்த பிறகு என வாந்தி எடுக்கும் பிரச்சனை இருக்கும். இந்த பிரச்னை ஏன் ஏற்படுகிறது? தடுக்க வழிகள் இருக்கிறதா? விளக்கமாகப் பார்க்கலாம்.

  ஸ்பிட் அப் என்பது 0-1 வயது குழந்தைகளுக்கு பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை. வயிற்றில் உள்ளவை ஏப்பம் மூலமாக, வாய் வழியாக வெளியேறுவது. கை குழந்தைகள் தாய்ப்பால் குடித்த பின் குழந்தைகள் 'ஸ்பிட் அப்' செய்வார்கள். இது இயல்பான விஷயம், குழந்தைகள் பொதுவாக ஏப்பம் விடும்போது சிறிதளவு ஸ்பிட் செய்வது சாதாரணமான விஷயம்தான். குழந்தை வளர வளர இந்த ஸ்பிட் அப் பிரச்சனைத் தானாக சரியாகிவிடும்.

  10-12 மாத குழந்தைகளாக வளரும்போது தானாக குழந்தைகள், இந்த ஸ்பிட் அப் பிரச்சனையிலிருந்து வெளி வருவார்கள். ஸ்பிட் அப் பிரச்சனையைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்.

  மிகவும் இயல்பற்ற நிலையில், வலுகட்டாயமாக ஸ்பிட் அப் அல்லது வாந்தி எடுப்பதைத் தொடர்ந்து செய்வது போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே மருத்துவரிடம் குழந்தையை அழைத்து செல்லுங்கள். குழந்தை பால் குடிக்கவோ உணவு சாப்பிடவோ அவஸ்தை பட்டால் நிச்சயம் நீங்கள் மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.

  குழந்தைக்கு கொடுக்கும் உணவைக் கொஞ்சம் திக்காக, கெட்டியான கூழ் வடிவில் கொடுக்கலாம். அதிகமாக உணவுக் கொடுப்பதைத் தவிர்க்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக உணவுகளை நிறைய முறை கொடுக்கலாம். குழந்தை ஏப்பம் விட வசதியாக, சாப்பிட்ட பின் லேசாக முதுகைத் தட்டுங்கள். உணவு உண்ட பிறகு, அமைதியான, பாதுகாப்பான, நிமிர்ந்த நிலையில் 20-30 நிமிடங்கள் குழந்தையை வைத்திருங்கள்.

  வாந்தி, குமட்டலைத் தடுக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

  இங்கு சொல்லப்படும் கைவைத்தியங்கள் குழந்தைகளுக்கு ஏற்றது. இது கொடுக்கலாமா அது கொடுக்கலாமா குழப்பிக் கொள்ளாமல் எது கொடுத்தாலும் சரியான அளவில் மருந்தாகக் கொடுக்கும் போது குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது. மருந்தை அளவாகத் தருவதில் தவறில்லை.

  லேசான வெஜிடபிள் சூப், கிளியர் சூப், ஜூஸ், கஞ்சி, கூழ் போன்ற திரவ உணவுகள் அதிகமாகக் கொடுக்கலாம். எந்த உணவு கொடுத்தப் பின்னும் உடனடியாகப் படுக்க வைக்க கூடாது.

  சின்ன துண்டு இஞ்சியை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அதில் இருந்து சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாறில் சிறிது தேன் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம். இஞ்சியும் தேனும் செரிமானத்துக்கு உதவும்.

  வாந்தி, குமட்டலை தீர்க்க புதினாவுக்கு சிறப்பான ஆற்றல் உண்டு. ஃப்ரெஷ்ஷான புதினா இலைகளை எடுத்து, அரைத்து, ஜூஸ் எடுக்கவும். அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். சுவைக்காக, சிறிது தேன் சேர்த்துக்கொள்ளுங்கள். இதைக் குழந்தைக்கு கொடுத்தாலும் வாந்தி, குமட்டல் பிரச்சனை இருக்காது.

  வயிற்றின் இயக்கத்தை சீராக்குவதில் பட்டை சிறந்தது. குமட்டல், வாந்தி ஆகிய தொல்லைகளை நீக்கும். பட்டை டீ தயாரிக்க, ஓரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பட்டை தூள் போட்டு, கொதிக்க விட்டு நிறுத்தி விடலாம். இதைக் குடிக்க வாந்தி, குமட்டல் இருக்காது.

  அரிசி வடித்த கஞ்சி தண்ணீரைக் குழந்தைகளுக்கு கொடுக்க வாந்தி, குமட்டல் நிற்கும்.

  ஏலம் விதைகளுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்து, அந்த பவுடரை சிறிதளவு குழந்தைகளுக்கு கொடுக்க வாந்தி, குமட்டல் பிரச்னை இருக்காது.

  பட்டை டீ தயாரித்தது போலவே கிராம்பு டீ தயாரித்து, சுவைக்குத் தேன் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.

  பட்டை டீ, கிராம்பு டீ போல சோம்பு டீ தயாரித்து வைத்துக் கொள்ளவும். ஒரு நாளைக்கு 4-5 வேளை ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.

  ஒரு ஸ்பூன் வெங்காய சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு. இதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு 3 முறை கொடுக்கலாம். வாந்தி, குமட்டல் தொல்லை வராது.

  சீரகத்தை வறுத்து பவுடராக்கி கொள்ளுங்கள். குழந்தைக்கு குமட்டல், வாந்தி வருவது போல பிரச்சனை இருக்கும் போது, சூடான ஒரு டம்ளர் தண்ணீரில் சீரக பவுடரைக் கலந்து அந்தத் தண்ணீரை ஒரு ஸ்பூன் அளவுக்கு அரை மணி நேரம் இடைவெளி விட்டு கொடுத்து வாருங்கள். மேலும் சீரக பவுடருடன் ஒரு சிட்டிகை பட்டைத் தூள், தேன் குழைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு குழந்தைக்கு தரலாம்.

  • வீட்டில் உள்ள சில பொருள்களை வைத்தே அழகை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
  • பார்லர் செல்வதால் கிடைக்கும் அழகை வீட்டிலேயே பெறமுடியும்.

  தினமுமோ அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறையோ கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகள் போட்டுக்கொள்வதன் மூலம், இழந்த அழகைத் திரும்பப் பெறமுடியும்.

  பளிச் சருமத்துக்கான ஃபேஸ் பேக்:

  தேவையானவை:

  அரிசி கழுவிய நீர்- 6 டீஸ்பூன்

  மஞ்சள்தூள்- 2 டீஸ்பூன்

  பாசிப்பயறு மாவு- ஒரு டீஸ்பூன்

  மூன்றையும் ஒன்றாகக் கலந்து பேக்காகப் போடவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். சரும துவாரங்களில் அடைந்துள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிச் என மிளிரும்.

  முகச்சுருக்கத்துக்கான பேக்:

  தேவையானவை:

  தேங்காய் எண்ணெய் - அரை டீஸ்பூன்

  முட்டை வெள்ளைக் கரு - ஒரு டீஸ்பூன்

  எலுமிச்சை சாறு - கால் டீஸ்பூன்

  தேவையான எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, அரை மணி நேரம் பேக் போட்டு, பின்னர் முகத்தைக் கழுவவும். மாதம் நான்கு முறை இப்படிச் செய்துவந்தால், சருமச் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் பெறலாம்.

  முகத்தொய்வை நீக்கும் பேக்:

  தேவையானவை:

  யோகர்ட் - 5 டீஸ்பூன்

  காபித்தூள்- கால் டீஸ்பூன்

  தேன் - 2 டீஸ்பூன்

  மூன்றையும் பேஸ்ட் பதத்துக்குக் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு ஈரமான துணியால் முகத்தைத் துடைத்துவிட்டு, ரோஸ் வாட்டரால் முகத்தை லேசாக ஒற்றி எடுக்கவும். வாரம் ஒருமுறை இதைச் செய்துவர, முகத்தொய்வு சரியாகும்.

  கருவளையத்திற்கான பேக் :

  தேவையானவை:

  தக்காளிச்சாறு - கால் டீஸ்பூன்

  உருளைக்கிழங்கு சாறு - கால் டீஸ்பூன்

  மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

  தக்காளிச்சாறு, உருளைகிழங்குச்சாறு, மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, கருவளையம் உள்ள இடத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து கண்களைக் குளிர்ந்த நீரால் துடைக்க, கருவளையத்துக்கு டாட்டா சொல்லலாம்.

  வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பொதுவாக பார்லர் செல்ல நேரம் இருப்பதில்லை. அந்த மாதிரியான சூழலில், வீட்டில் உள்ள சில பொருள்களைவைத்தே அழகை தக்கவைத்துக்கொள்ள முடியும். வீட்டில் கிடைக்கும் பொருள்களைவைத்து எளிமையான பேக்குகளை முயற்சிசெய்து, உங்களின் அழகை மெருகேற்றுங்கள். இனி பார்லர் செல்வதால் கிடைக்கும் அழகை வீட்டிலேயே பெறமுடியும்.