என் மலர்
நீங்கள் தேடியது "இன்று உலக இதய தினம்"
- இதயம் நான்கு அறைகளைக் கொண்டுள்ளது.
- இதயத்தின் அறைகளில் உள்ள ரத்தத்தை தமனிகள் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செலுத்துகிறது.
மனித உடலின் முக்கிய உறுப்பு இதயம். அந்த இதயமானது உடலின் ரத்த ஓட்ட அமைப்புக்கு ஆதாரமான, தசைத்திறன் கொண்ட ஒரு உறுப்பு ஆகும். இதன் முக்கிய வேலை, தமனிகள் மற்றும் நரம்புகள் வழியாக உடலின் அனைத்து செல்களுக்கும் திசுக்களுக்கும் ரத்தத்தை பம்ப் செய்வதாகும்.
இதயம் நான்கு அறைகளைக் கொண்டுள்ளது. இதயத்தின் முக்கிய பணி, ரத்தத்தை சுற்றியுள்ள திசுக்களுக்கும் உறுப்புகளுக்கும் செலுத்துவதும், அதிலிருந்து ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு, கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதுமாகும்.
இதயத்தின் முக்கிய பணிகள்:
ரத்தத்தை பம்ப் செய்தல்: இதயம் சுருங்கி விரிவடைந்து, இதயத்தின் அறைகளில் உள்ள ரத்தத்தை தமனிகள் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் செலுத்துகிறது.
ரத்த ஓட்டத்தை உறுதி செய்தல்: இதயத்தில் உள்ள நான்கு அறைகள், மற்றும் வால்வுகள் சரியான நேரத்தில் திறந்து மூடப்படுவதன் மூலம் ரத்தமானது ஒரே திசையில் பாய்வதை உறுதி செய்கின்றன.
ஊட்டச்சத்துக்கள் வழங்குதல்: இதயத்தின் மூலம் ரத்தமானது உடல் முழுவதும் ஆக்சிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டு சென்று, செல்களுக்கு கிடைக்க உதவுகிறது.
கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல்: உடலால் உருவாகும் கழிவுப் பொருட்களை திசுக்களில் இருந்து சேகரித்து, அவற்றை வெளியேற்ற உதவுவதற்கும் ரத்த ஓட்டம் உதவுகிறது.
இதயத்தின் துடிப்பு: இதயத்தில் உள்ள சிறப்பு இதயத்தசை செல்கள், ஒன்று சேர்ந்து, இதயத்துடிப்புக்கான சமிக்ஞைகளை அனுப்புகின்றன. இதயமும், ரத்த நாளங்களும் இணைந்து இருதய அமைப்பு என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை உடலின் சீரான செயல்பாட்டிற்கு அவசியமானவை.
- இதயம் மனித உடலின் முக்கிய உறுப்பாகும்.
- உயர் ரத்த அழுத்தமே இதய பலவீனத்தின் ஆரம்ப அறிகுறியாகும்.
உலக இதய தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதய நோய்களை தடுக்கவும், அது பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் இந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இதய நோயின் அறிகுறி, நோயை தடுக்க செய்ய வேண்டிய முதலுதவி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பற்றி இந்த தினத்தில் பல நாடுகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.
இதயம் மனித உடலின் முக்கிய உறுப்பாகும். அதில் பாதிப்பு ஏற்பட்டால் உயிழப்பு உண்டாகும். எனவே ஒவ்வொருவரும் இதயத்தை ஆரோக்கியமாக கவனித்துக்கொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.7 கோடி பேர் இதய நோயால் இறக்கின்றனர். இது உலகளாவிய இறப்புகளில் சுமார் 31 சதவீதமாகும்.
"இதயத்தைப் பயன்படுத்து, இதயத்தை அறி" என்பதே இந்த ஆண்டு உலக இதய தினத்தின் கருப்பொருளாக கூறப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டை குறைத்தால் பொதுவாக மனிதர்களுக்கு வரும் இதய நோய்களை கனிசமாக குறைக்க முடியும். அதற்கு ஒவ்வொருவரும் மரம் வளர்ப்பது. தேவையற்ற புகையை வெளியிடுவதை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்கி உதவலாம்.
மன அழுத்தம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவையே மாரடைப்புக்கான முக்கிய காரணங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடற்பயிற்சி, தரமான தூக்கம் போன்றவற்றால் நமது உடல் சீராகும். இதயம் பலப்படும்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். உயர் ரத்த அழுத்தமே இதய பலவீனத்தின் ஆரம்ப அறிகுறியாகும். உடனே மருத்துவர்களை அணுகி தேவையான மருந்துகளையும், ஆலோசனைகளையும் பெறவேண்டும். அதேபோல் உடலில் அதிக கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். உணவில் தேவையானவற்றை அதிகரித்து, தேவையில்லாததை தவிர்க்க வேண்டும். உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பவர்கள் முறையான உடற் பயிற்சியில் ஈடுபடவேண்டும். அடிக்கடி சிறிது தூரம் நடக்கவேண்டும். புகை இதயத்துக்கு முதல் பகையாகும். அதனால் புகை பிடிக்கும் பழக்கத்தையும், மது அருந்தும் பழக்கத்தையும் கைவிடவேண்டும்.
எண்ணெய்யில் பொரித்த தின்பண்டங்களை குறைத்து உண்ணலாம். வயதானவர்கள் தவிர்ப்பது சிறந்தது. இதேபோல் சவர்மா, பீட்சா, பர்கர், துரித முறையில் சமைக்கும் கோழி இறைச்சி, மைதா மாவால் செய்யப்படும் உணவுகளும் ஜீரணத்தை பாதித்து, நுரையீரலையும், இதயத்தையும் சேதமாக்கும். பிரியமானவர்களிடம் பேசும்போது இதயத்தில் வைத்து உன்னை பாதுகாப்பேன் என்று உதாரணத்துக்கு கூறுவோம். ஆனால் பலர் அந்த இதயத்தை பாதுகாக்கவே தவறிவிடுகிறார்கள். ஒருவர் இறக்கும்போது அவருக்கு மட்டும் பாதிப்பில்லை. அவருடைய மொத்த குடும்பமே பாதிக்கும். எனவே விலை மதிப்பில்லாத உயிரை காக்க இதயத்தை காப்போம். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.






