search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Obesity"

    • உடலுழைப்பு, உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணம்.
    • இனப்பெருக்கம் சார்ந்த கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வரலாம்.

    உடல் பருமன் என்பது உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் மருத்துவ பிரச்சனையாகும். இது குழந்தைகள், நடுத்தர வயதுள்ளவர்கள், பெரியவர்கள் என அனைவரிடமும் காணப்படுகின்றது.


    உடல்பருமனுக்கான காரணம்:

    நொறுக்குத் தீனி மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை உண்பது, சோம்பலான வாழ்க்கை முறை, புகை-மதுப்பழக்கம், குறைந்த உடலுழைப்பு, உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணம் ஆகும். இதுதவிர சில உடல் குறைபாடுகளும் இதற்கு காரணமாக அமைகின்றன.

    அதில் ஒன்று ஹார்மோன் குறைபாடுகள். குறை தைராய்டு நோய் உள்ளவர்கள் மற்றும் பெண்களுக்கு புரோலாக்டின், புரோஜெஸ்டிரான், ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களில் உள்ள குறைபாடுகளால் இயல்பாகவே உடல்பருமன் அதிகமாக இருக்கும்.


    மனச்சோர்வுகள், தூக்கமின்மை இவைகளுக்காக எடுக்கப்படும் மருந்துகள் மற்றும் பரம்பரையும் சில காரணங்களாகும்.

    உடல்பருமனால் டைப் 2 சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், கால்களில் வரும் நாள வீக்கங்கள், தூங்கும் போது குறட்டை விடல், திடீரென்று மூச்சு நின்றுவிடுவது போலிருத்தல், ஆண், பெண் இருபாலருக்கும் இனப்பெருக்கம் சார்ந்த கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வரலாம்.


    தீர்வுகள்:

    * மனதில் நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) மற்றும் உடற்பயிற்சிகள் செய்யலாம்.

    * தேயிலையுடன் லவங்கப்பட்டை சேர்த்து குடிக்க வேண்டும். பூனை மீசையிலை (ஜாவா டீ) என்ற டீ காலை, மாலை என இருவேளை குடித்து வரலாம். இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

    * தோல், விதை நீக்கிய வெண்பூசணி சாறு காலையில் 60 மில்லி வீதம் குடிக்கலாம்.


    * மடல் நீக்கிய சோற்றுக் கற்றாழைச்சாறு எடுத்து அதை ஏழுமுறை தண்ணீரில் கழுவி அதனுடன் இஞ்சி, சிறிதளவு பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மோரில் கலக்கி குடிக்கலாம்.

    * நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நத்தைச்சூரி விதையை வாங்கி, இளவறுப்பாக வறுத்து பொடி செய்து காப்பி போல போட்டுக் குடிக்கவும்.

    * சிறிதளவு கொள்ளு (கருப்பு, சிவப்பு, வெள்ளை ஏதாவது ஒன்று) அதனுடன் ஒரு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், மிளகுத்தூள் இவை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இரவு தூங்கும் முன்னர் ஒரு டம்ளர் வீதம் குடிக்கலாம்.


    * இஞ்சிச்சாறு, பூண்டுச்சாறு (பூண்டை சிதைத்து வெண்ணிற துணியில் வைத்து நெருப்பில் வாட்டி எடுத்து பிழிய சாறு வரும்), எலுமிச்சை சாறு, புதினாச்சாறு இவையாவும் 2.5 மில்லி வீதம் எடுத்து தேன் 5 மில்லி கலந்து காலை, இரவு சாப்பிட கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனைக் குறைக்க உதவும். (நீரிழிவு நோயாளிகள் தேனை தவிர்க்கவும்).

    * எலுமிச்சம் பழச்சாறு, தேன் இவற்றை வெந்நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

    • உணவை தவிர்த்தால் உடல் எடை குறைந்துவிடும் என்பது தவறான கருத்து.
    • வளர்சிதை மாற்றத்தை உருவாக்கும்.

    உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதனை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள். சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் இருக்கும் உடல் எடை குறைப்பு யுக்திகளை பின்பற்றுகிறார்கள்.

    அவற்றை முறையாக கடைப்பிடிக்காமலும், உடற்பயிற்சி நிபுணர்களிடம் கலந்தாலோசிக்காமலும் நடைமுறைப்படுத்துவதால் பல்வேறு பக்கவிளைவுகளை எதிர்கொள்கிறார்கள். உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் செய்யும் தவறுகள் பற்றியும், அதனை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பார்போம்...


    உணவை தவிர்ப்பது

    உணவை தவிர்த்தால் உடல் எடை குறைந்துவிடும் என்பது தவறான கருத்து. உணவை தவிர்ப்பது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். ஒரு வேளை உணவை சாப்பிடாமல் இருந்தால் அடுத்த வேளை அளவுக்கு அதிகமாக சாப்பிட தூண்டிவிடும்.

    அது உடல் பருமனை அதிகப்படுத்துமே தவிர குறைப்பதற்கு வழிவகுக்காது. அதற்கு பதிலாக வளர்சிதை மாற்றம் சுறுசுறுப்பாக நடைபெறுவதற்கு சமச்சீர் உணவுகளையும், ஆரோக்கியமான சிற்றுண்டிகளையும் உண்ண வேண்டும்.


    அதிகமாக உண்பது

    சத்தான உணவுகளை உண்பது முக்கியம் என்றாலும், அவற்றை அதிகமாக சாப்பிடுவதும் நல்லதல்ல. குறிப்பாக பாதாம், முந்திரி, வால்நட் உள்ளிட்ட நட்ஸ் வகைகள், அவகேடோ, முழு தானியங்கள் போன்றவை ஆரோக்கியமானவை, ஊட்டச்சத்துமிக்கவை என்றாலும் கூட அளவாகத்தான் உட்கொள்ள வேண்டும். அவற்றை அதிகம் உட்கொள்வதும் உடல் பருமன் விஷயத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.


    கடினமான பயிற்சியை புறக்கணிப்பது

    பெண்கள் பலரும் உடல் எடையை குறைப்பதற்கு கார்டியோ பயிற்சிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் பளு தூக்குதல் உள்ளிட்ட சில கடினமான பயிற்சிகளை புறக்கணிக்கிறார்கள்.

    அத்தகைய பயிற்சிகளை சமமாக மேற்கொள்வதும் முக்கியமானது. அவை தசையை கட்டமைப்பது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்வது, உடல் எடையை குறைத்து சீராக பராமரிக்க வழிவகை செய்வது போன்ற நன்மைகளை வழங்கக்கூடியவை.

    நிபுணர்களின் ஆலோசனையை புறக்கணிப்பது

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முதலில் உடற்பயிற்சி நிபுணரை அணுகி ஆலோசனை கேட்பது அவசியமானது. ஏனெனில் ஒவ்வொருவரின் உடல் எடை, உயரம், உடல் வாகுக்கு ஏற்ப உடற்பயிற்சி முறையை அமைத்துக்கொள்வதற்கு அவர்கள் வழிகாட்டுவார்கள். அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவதுதான் சரியான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு உதவிடும்.

    அடையமுடியாத இலக்குகளை அமைப்பது

    உடல் எடையை குறைக்கும் விஷயத்தில் அடைய முடியாத இலக்குகளை நிர்ணயிப்பது விரக்தியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும். யதார்த்தமான, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அதற்கேற்ப செயல்படுவது சிறப்பானது.

    உடல் சமிக்ஞையை கவனிக்காதது

    பசியாக இருக்கும்போதும், சாப்பிடும்போதும் போதுமான அளவு உட்கொண்டுவிட்டோமா என்பதை அறிவதற்கும் உடல் சமிக்ஞையை கேட்பது முக்கியமானது. வேலையின்போது கடும் பசியில் இருக்கும்போதுதான் பலரும் சாப்பிடுவது பற்றி சிந்திக்கிறார்கள்.

    லேசாக பசி எடுக்கும்போதே உடல் சமிக்ஞை கொடுத்துவிடும். அதுபோல் அதிகமாக சாப்பிடும்போது உடல் எச்சரிக்கை செய்யும். எனவே திருப்தியாக சாப்பிட்டுவிட்டதாக உணருவதற்கு முன்பே சாப்பிடுவதை நிறுத்திவிடுவது நல்லது.

    • கிராமப்புற இந்தியர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் 9.84% தொகையை செலவிடுகின்றனர்.
    • இருதய நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கின்றன.

    இந்தியர்கள் தங்கள் பட்ஜெட்டில் கணிசமான பகுதியை பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்களுக்காக செலவிடுகிறார்கள் என்று அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இது இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடையது.

    மத்திய அரசு வெளியிட்ட 2023-24 ஆம் ஆண்டிற்கான வீட்டு நுகர்வு செலவின கணக்கெடுப்பின்படி, கிராமப்புற இந்தியர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் 9.84% தொகையை இதுபோன்ற பொருட்களை வாங்க செலவிடுகின்றனர்.

    இதுவே நகர்ப்புற இந்தியர்கள் தங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் 11.09% தொகையை இதற்கு செலவிடுகின்றனர். சுமார் 20 ஆண்டுகளாக இந்த செலவினம் 10 சதவீதத்துக்கு கீழ் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த வரம்பை கடந்துள்ளது எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

    2.61 லட்சம் வீடுகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த அறிக்கை, உணவு நுகர்வு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

    நகர்ப்புறங்களில், உணவு செலவினங்களில் 39% க்கும் அதிகமானவை பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை வாங்குவதில் செலவிடப்படுகிறது. பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சிகள் போன்ற அதிக சத்தானவற்றை தவிர்த்து மக்கள் ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவை நோக்கி அதிகம் செல்வது புலனாகிறது.

    சர்க்கரை, உப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருதய நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    ஆனால் இந்த ஆரோக்கியமற்ற உணவுகளை விளம்பரப்படுத்தும் சந்தைப்படுத்தலின் மூலம் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களிடம் செலுத்தும் ஆதிக்கம் மற்றும் செல்வாக்கையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

    • மருந்து மாத்திரைகள் கூட உடல் பருமனை அதிகமாக்கிவிடும்.
    • கல்லீரலில் கொழுப்பு படிய வாய்ப்புண்டு.

    சமீப காலங்களில் நிறைய குழந்தைகள் உடல் பருமனாக இருக்கின்றனர் என்பது சரிதான். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உடலிலுள்ள ஹார்மோன்களின் ஏற்ற இறக்கம், ஆரோக்கியமற்ற உணவுத்தேர்வு, குறைவான உடலுழைப்பு, குடும்ப உணவுப் பழக்க வழக்கங்கள் இவைகளெல்லாம் குழந்தைகள் சிறுவயதிலேயே அதிக உடல் எடையுடன் குண்டாக வளர முக்கிய காரணங்கள் ஆகும். இதற்கான காரணங்கள் மற்றும் பாதிப்புகள் வருமாறு:-


    ஒரு குழந்தைக்கு வயதுக்கேற்ற, உயரத்துக்கேற்ற உடல் எடை இல்லாமல் இருக்கிறதென்றால் அதிகமாக இருக்கின்ற ஒவ்வொரு கிராம் எடையும் கூட பின்னாளில் அந்த குழந்தையை ஆரோக்கியமற்ற பாதைக்கு கொண்டு செல்லும். அதிக சர்க்கரை, அதிக கொழுப்பு, அதிக ரத்த அழுத்த அளவு முதலியவைகளை உண்டுபண்ணும்.

    உங்கள் குழந்தை உடல் பருமன் உள்ள பரம்பரையை சேர்ந்திருந்தால் அந்த குழந்தையும் குண்டாகவும், அதிக எடையுடனும் இருக்க வாய்ப்பு அதிகம்.

    தன்னால், பெற்றோர்களால், குடும்பத்தால், சுற்றுப்புறத்தால் அன்றாடம் ஏற்படும் சிறுசிறு பிரச்சனைகள் கூட கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தமாக மாறி, அதுகூட உடல் பருமனை ஏற்படுத்தச் செய்யும். சில மருந்து மாத்திரைகள் கூட உடல் பருமனை அதிகமாக்கிவிடும்.

    வாரக்கணக்கில் வீட்டுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் வாங்கி வைத்துக்கொண்டு எந்த நேரம் வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடாது. மிக நெரிசலான பகுதிகளில் வாழ்பவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய போதுமான இடம் கிடைக்காது. மாற்று இடத்தை தேடவும்.

    சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, அதனால் அதிக ரத்த அழுத்தம் பின்னாளில் வரலாம். அதிக எடையினால் மூட்டுவலி, இடுப்புவலி, முதுகு வலி வர வாய்ப்புண்டு. மூச்சுத் திணறல் ஆஸ்துமா, குறட்டை போன்றவை வர வாய்ப்புண்டு. கல்லீரலில் கொழுப்பு படிய வாய்ப்புண்டு.


    ஆரோக்கியமான, சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது என்று முடிவு பண்ண வேண்டும். கண்ட கண்ட இடத்தில் கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடக் கூடாது என்று முடிவு எடுக்க வேண்டும். குழந்தைகள் மட்டும் அல்ல அவர்களது குடும்பமும் அதை கடைப்பிடிக்க வேண்டும். நொறுக்குத் தீனிகள் அறவே கூடாது என்று முடிவு செய்ய வேண்டும்.

    குழந்தைகள் போதுமான நேரம் நன்றாகத் தூங்குகிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். தூக்கம் சரியாக இல்லை என்றால் ஹார்மோன்கள் தொந்தரவு ஏற்பட்டு உடல் எடை கூட வாய்ப்புண்டு. ஆண்டுக்கு ஒருமுறை உடல் பருமனான குழந்தைகளை உங்கள் குடும்ப டாக்டரிடம் காண்பியுங்கள்.

    சிறுவயதில் உடல் பருமனுக்கு சிகிச்சை அளித்து குணமாக்குவதும், வரவிடாமல் முன்னரே தடுப்பதும் குழந்தையின் உடல் ஆரோக்கியம் இப்பொழுதும் எப்பொழுதும் நன்றாக இருக்க உபயோகமாக இருக்கும்.

    • நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்.
    • ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை.

    நூடுல்ஸ் சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமான உணவுத் தேர்வாக மாறியுள்ளது. ஏனெனில் அவை மலிவானவை, தயாரிப்பதற்கு எளிதானவை மற்றும் வசதியானவை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நூடுல்ஸ் என்றாலே பிடிக்கும்.

    இருப்பினும், நூடுல்ஸை தொடர்ந்து உட்கொள்வதால் சில எதிர்மறையான உடல்நல பாதிப்புகள் உள்ளன. நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றி பார்க்கலாம்.

    நூடுல்சில் பெரும்பாலும் சோடியம் அதிகமாக உள்ளது. இது பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சோடியம் ஒரு அத்தியாவசியமான ஊட்டச்சத்து. ஆனால் அதை அதிகமாக உட்கொள்வதினால் உயர் ரத்த அழுத்தம், நீர் தக்கவைத்தல் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

    நூடுல்ஸ் சுத்திகரிக்கப்பட்ட மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. அவை போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதில்லை. மேலும் அவற்றை தொடர்ந்து உட்கொள்வது குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

    உடல் பருமன்

    நூடுல்சில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. இது தொடர்ந்து உட்கொண்டால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனை ஏற்படுத்தும். தென் கொரியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளது. இது உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

    புற்றுநோய்

    நூடுல்சில் பிஸ்பெனால் ஏ போன்ற தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. இது பேக்கேஜிங்கில் பயன்படுத்தப்படுகிறது. நூடுல்சை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும், குறிப்பாக வயிற்று புற்றுநோய். வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்ஸ் சாப்பிடும் பெண்களுக்கு வயிற்றில் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து 68 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    செரிமான பிரச்னைகள்

    நூடுல்சில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். இதில் உள்ள அதிக சோடியம் காரணமாக வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். உதாரணமாக, ஒரே நாளில் பல நூடுல்சை உட்கொள்வது வயிற்றில் அசௌகரியம் மற்றும் ஒழுங்கற்ற குடல் அசைவுகளை ஏற்படுத்தும்.

    நூடுல்ஸ் மனநலத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் அவற்றில் சோடியம் அதிகமாக உள்ளது. இது மூளையில் உள்ள இரசாயனங்களின் சமநிலையை சீர்குலைக்கும். வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் நூடுல்சை உட்கொள்வது மனச்சோர்வு, பதட்டம் மற்றும் பிற மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

    நூடுல்ஸ் ஒரு வசதியான மற்றும் மலிவான உணவு. விருப்பமாக இருந்தாலும், அவை பலவிதமான உடல்நல அபாயங்களுடன் வருகின்றன. அவற்றை மிதமாக உட்கொள்வது மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது முக்கியம். அவ்வாறு செய்வதன் மூலம், நூடுல்சை வழக்கமாக உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கலாம்.

    • சிலருக்கு இதய நோய், பக்கவாதம் ஏற்படக்கூடும் என்றும் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
    • நோயெதிர்ப்பு மண்டல உயிரணுக்களில் உள்ள புரதங்களை அடையாளம் கண்டுள்ளது.

    இரவுப் பணிபார்க்கும் ஊழியர்களுக்கு நீரிழிவு, உடல் பருமன் போன்ற உபாதைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சிலருக்கு இதய நோய், பக்கவாதம் ஏற்படக்கூடும் என்றும் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் வாஷிங்டன் மாகாண பல்கலைக்கழகம் மற்றும் பசிபிக் வடமேற்கு தேசிய ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், நைட் ஷிப்ட் பணியாளர்கள் ஏன் நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு அதிக வாய்ப்புள்ளது என்பதற்கான புதிய தகவல்களை வழங்குகிறது. 

    இதுகுறித்து ஹான்ஸ் வான் டோங்கன், பல்கலைக்கழகத்தின் எல்சன் எஸ். ஃபிலாய்ட் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் கூறியதாவது:-

    நமது "மூளையில் உள்ள முதன்மை உயிரியல் கடிகாரத்துடன்" தொடர்புடைய செயல்முறைகள் உள்ளன. அவை பகல் மற்றும் இரவு என்று தாளங்களை பின்பற்றுகின்றன.

    உள் தாளங்கள் சீர்குலைக்கப்படும் போது, அது நீடித்த மன அழுத்தம் நீண்ட கால ஆரோக்கிய விளைவுகளை ஏற்படுத்துகிறது.

    மேலும், ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், இந்த சீர்குலைந்த தாளங்கள் மூன்று நாட்கள் நீடித்தால் போதும், நீரிழிவு மற்றும் உடல் பருமனை தடுக்க ஆரம்பகட்ட தலையீடு சாத்தியமாகும்.

    இது, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்.

    ரத்த மாதிரிகளைப் பயன்படுத்தி, ரத்த அடிப்படையிலான நோயெதிர்ப்பு மண்டல உயிரணுக்களில் உள்ள புரதங்களை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் சில முதன்மை உயிரியல் கடிகாரத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன மற்றும் இரவு மாற்றங்களுக்கு எந்த மாற்றத்தையும் காட்டவில்லை.

    இருப்பினும், மற்ற பெரும்பாலான புரதங்கள் மாற்றத்தைக் காட்டின. குளுக்கோஸ் ஒழுங்குமுறையில் ஈடுபட்டுள்ள புரதங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், விஞ்ஞானிகள் இரவு-மாற்ற பங்கேற்பாளர்களில் குளுக்கோஸ் தாளங்களின் கிட்டத்தட்ட முழுமையான தலைகீழ் மாற்றத்தைக் கண்டறிந்தது.

    மேலும், இன்சுலின் உற்பத்தி மற்றும் உணர்திறன் ஆகியவற்றில் ஈடுபடும் செயல்முறைகள் இரவு-பணிமாற்றம் செய்யும் தொழிலாளர்களில் ஒத்திசைவு இல்லாமல் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். 

    • உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுத்து உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் குணம் இதன் மகத்துவம்.
    • உடற்பயிற்சிக்காக நடப்பவர்களைவிட உடல்பருமனைக் குறைக்க நடப்பவர்களே அதிகம்.

    கற்றாழையில் சோற்றுக் கற்றாழைதான் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மிகச் சாதாரணமாகக் கிடைப்பதும் சோற்றுக் கற்றாழைதான் என்பதால் அதைத்தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். எல்லாக் கற்றாழைகளையும்விட செங்கற்றாழை அதிக மருத்துவக் குணம் வாய்ந்தது என்றாலும் அது இப்போது கிடைப்பதில்லை. மற்ற கற்றாழை வகைகளும் கிடைப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் வேறு சில கற்றாழைகள் வெளி உபயோக மருந்தாகப் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது.

    கற்றாழையை முறைப்படி பொடியாக்கிச் சாப்பிட்டால் நூறு ஆண்டுகள் இளமையாக வாழலாம் எனத் தேரன் வெண்பா கூறுகிறது. உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுத்து உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் குணம் இதன் மகத்துவம். தவிர, ஈரல் மற்றும் குடல்களின் செயல்பாட்டைச் சரி செய்யக்கூடியது.

     சருமம் காக்கும் தோழன் இது. உடல் சூட்டைத் தணிப்பதில் கற்றாழைக்கு நிகர் கற்றாழையே. பெண்களின் கர்ப்பப்பை மற்றும் தொடை எலும்புகள் இடுப்பில் இணையும் பகுதியான கூபக உறுப்புகளில் வரும் நோய்களுக்கும், ஆண்களின் விந்தணு உற்பத்திக்கும் கைகண்ட மருந்து இது. உடல் பருமனைக் குறைக்கவும் பெரிதும் உதவும் மருந்து.

    இன்று உடற்பயிற்சிக்காக நடப்பவர்களைவிட உடல்பருமனைக் குறைக்க நடப்பவர்களே அதிகம். அதனால்தான் நடைப்பயிற்சிக்காக மக்கள் குவியும் அத்தனை இடங்களிலும் கற்றாழை ஜூஸ் வியாபாரம் கன ஜோராக நடக்கிறது. நடைப்பயிற்சியுடன் கற்றாழை ஜூஸ் குடிக்கக் கிடைத்தால் இரட்டை நன்மைதானே! கலோரி மற்றும் கொழுப்பைக் கரைக்க கற்றாழை மிகவும் நல்லது.

    சரி, சாலையோரத் தள்ளுவண்டிக் கடைகளிலும் ஜூஸ் கடைகளிலும் விற்கப்படும் கற்றாழை ஜூஸ் உண்மையிலேயே ஆரோக்கியமானதா என்றால், இல்லை என்றே சொல்லலாம். காரணம், பெரும்பாலான ஜூஸ் கடைகளில் கற்றாழையின் தோலை மட்டும் அகற்றிவிட்டு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை கழுவாமல் அப்படியே போட்டு இடித்து நசுக்கி மோர், உப்பு சேர்த்துக் கொடுக்கிறார்கள். ஆனால், கற்றாழை ஜெல்லை கழுவாமல் சாப்பிடக்கூடாது. கற்றாழை ஜூஸ் எப்படித் தயார் செய்ய வேண்டும், யாரெல்லாம் குடிக்கலாம் என்பது மிகவும் முக்கியம்.


    எப்படித் தயார் செய்வது?

    நான்கு ஆண்டுகள் வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் அத்தனை சத்துகளும் பொதிந்திருக்கும். அவற்றை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். கற்றாழைச் செடியின் வெளிப்புறமாக வளரும் மடல்கள் முதிர்ச்சி அடைந்திருக்கும். அவற்றை நறுக்கி எடுத்து, அதிலுள்ள மஞ்சள் நிறப் பாலை முழுமையாக வடிக்க வேண்டும். பிறகு அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும். ஏழு முறை கழுவும்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும். இல்லாவிட்டால் அது வயிற்றின் உள்ளே செல்லும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று எரிச்சல் உண்டாகும். மேலும் ஏழுமுறை கழுவினால்தான், கற்றாழையின் கசப்புச் சுவை மற்றும் நாற்றமும் விலகும்.

    • கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு.
    • சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம்.

    இன்றைய காலகட்டத்தில் வைத்தியசாலையில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகள் மூன்று முதல் மூன்றேகால் கிலோ வரை இருந்தால் ஆரோக்கியமான குழந்தை என கருதுகிறோம். சில குழந்தைகள் பிறக்கும் போது ஐந்து கிலோ எடைக்கு மேல் இருக்கும்.

    இத்தகைய குழந்தைகள் வளர்ச்சி அடையும் போது உடற்பருமன் பாதிப்பிற்கு ஆளாகி, எதிர்காலத்தில் அதாவது நாற்பது வயதிற்குள்ளாகவே இதய பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

    இருப்பினும் இந்த கொழுப்பு இயல்பான அளவைவிட கூடுதலாக உடலில் சேகரிக்கப்படும் போது அது ரத்த நாளங்களில் படிமங்களாக தங்கி, ரத்த ஓட்டத்தினை சீர்குலைத்து, இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மருத்துவர்கள் உங்களுடைய கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவு மீது எப்போதும் தீவிர கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள்.

    மேலும் நாற்பது வயதை கடந்த ஆண்களும், பெண்களும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் காலகட்டத்தில் கொழுப்பின் அளவை அறிவதற்கான பிரத்தியேக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

    கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளாகும். இது தண்ணீரில் கரையாத காரணத்தால் தானாகவே கொழுப்பு புரதங்களாக மாறி, ரத்த நாளங்களில் படிவுகளாக படிகின்றன.

    கொழுப்புகள் புரதங்களாக மாறி ஹார்மோன்கள், விட்டமின்கள், செல் கட்டமைப்பை உருவாக்குதல், பராமரித்தல் போன்றவற்றிற்கு இன்றியமையாத பணியை மேற்கொள்கிறது. இதன் காரணமாக அனைவருக்கும் கொழுப்பு என்பது அவசியம்.

    ஆனால் இயல்பான அளவை விட கூடுதலாக அதிகரிக்கும்போது அவை பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

     கொழுப்புகளில் நல்ல கொழுப்பு- கெட்ட கொழுப்பு என்ற இரண்டு வகை உள்ளது. இதில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் பாதிப்புகள் உயர்கிறது. அதீத கொழுப்பு சேர்வது என்பது சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். இவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி தங்களது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

     நீரிழிவு நோயாளிகள், நாள்பட்ட சிறுநீரக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள், ஹைபோதைராய்டிசம், புற்றுநோய், முகப்பரு, உயர் ரத்த அழுத்தம், சமசீரற்ற இதயத்துடிப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி அதீத கொழுப்பு பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள பிரத்தியேக ரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த பரிசோதனைகளின் முடிவுகளின் படி உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக முதலில் மருத்துவர்கள் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துவர்.

    இதனைத் தொடர்ந்து உங்களது வயது, ஆரோக்கிய நிலை, மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக பிரத்தியேக மருந்தியல் சிகிச்சைகளை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.

    • சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள் தான்.
    • சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது.

    உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களில் முக்கியமானவை வைட்டமின்கள். நாம் அன்றாடம் உண்ணும் காய்கறி, பழங்களில் இருந்து இந்த வைட்டமின் சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. அப்படி ஒரு நாளைக்கு போதுமான சத்துக்கள் உணவில் இருந்து கிடைக்கவில்லை என்றால் மருத்துவர்கள் வைட்டமின் மாத்திரைகளை பரிந்துரைப்பார்கள் இல்லையா?

    இந்த வைட்டமின்களில் பல பிரிவுகள் உள்ளன. அதில் முக்கியமானது வைட்டமின் டி. இது சூரிய சக்தியில் இருந்துதான் பெரும்பாலும் நமக்கு கிடைக்கிறது. அதிகாலை சூரிய ஒளியில் இருந்து ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின்கள் நமக்கு கிடைத்துவிடும்.

     ஆனால் தற்போது பலரும் வெயில் படாமலேயே இருந்துவிடுகின்றனர். தைராய்டு இருப்பவர்களுக்கு முக்கியமாக இந்த வைட்டமின் உடலில் போதுமான அளவு சென்றடைவதில்லை. இதனால்தான் திடீர் உடல்பருமன் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த வைட்டமின் டி குறைபாட்டால் உடல் பருமன் மட்டுமல்லாமல் இதயக் கோளாறுகள், புற்றுநாய் வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    மேலும் இந்த வைட்டமின் டி நேரடியாக நன்மை தருவதோடு மறைமுகமாகப் பல வேலைகளை செய்கிறது. வைட்டமின் டி நமது உடலில் கேல்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிரகிப்பதற்கு முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் உடலில் வைட்டமின் டி குறைபாட்டால் கால்சியமும் குறையும். அதனால்தான் எலும்பு வலி இருப்பவர்களுக்கு முதலில் வைட்டமின் டி டெஸ்ட் எடுக்கிறார்கள்.

    வைட்டமின் டி குறைபாட்டால் எப்படி உடல் பருமன் ஆகிறது?

    உடலில் உள்ள கொழுப்பு செல்களை குறைப்பது வைட்டமின் டியின் வேலை. மேலும் வைட்டமின் டி சீரான அளவு இருந்தால் செரொடின், டெஸ்டொஸ்டெரொன் போன்ற ஹார்மோன்கள் சீராக சுரக்க உதவுகிறது. இதனால் உடல் பருமனாவது தடுக்கப்படுகிறது.

    உடலில் உள்ள கொழுப்பின் அளவயும் கட்டுப்படுத்துகிறது. உடல் எடை குறைய டயட் இருப்பவர்கள் கண்டிப்பாக வைட்டமின் டி அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

    வைட்டமின் டி குறைபாட்டால் எவ்வளவு டயட் இருந்தாலும் உடல் எடை குறையாது. மேலும் கால்சியமும் குறைந்து போய், உடல் மிகுந்த சோர்வுற்றும், எலும்புகளில் வலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

    வைட்டமின் டி அதிகம் உடலில் சேர என்ன செய்யவேண்டும்?

    முதலில் உங்களுக்கு வைட்டமின் டி குறைவாக இருக்கிறதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து அவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

    இந்த வகை வைட்டமின்கள் வெயில் தவிர உணவுகளில் மிகவும் குறைவு என்பதால் உங்களுக்கு வைட்டமின் டி மிகவும் குறைவாக இருந்தால், வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள். தயவுசெய்து நீங்களாகவே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் இந்த வகை வைட்டமின் உடலில் அதிகமாக இருந்தால் அது கொழுப்பாக மாறிவிடும். இது மிகவும் கெடுதலான விஷயம்.

    பொதுவாகவே தினமும் வைட்டமின் டி கிடைக்கவேண்டும் என்றால், அதிகாலை வெயில் படுமாறு நடைப்பயிற்சி, யோகா ஆகியவற்றை செய்யத் தொடங்குங்கள். முடியாவிட்டாலும் காலையில் செய்தித் தாளையாவது வெயிலில் உக்கார்ந்து படியுங்கள்.

    தினமும் 20-30 நிமிடங்கள் காலை வெயில் உடலில் படுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். வைட்டமின் டி குறைபாட்டால் பாதிப்படைவது வயிறுதான் என்பதால், வைட்டமின் டி குறைந்தால் முதலில் எடை கூடுவது வயிற்றுப்பகுதிதான். அதனால் வயிறு தொப்பைப் போடுகிறது என்றால் உடனே மருத்துவரிடன் சென்று ஆலோசனைக் கேளுங்கள்.

    • ட்ரை கிளிசரைடுகள் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும்.
    • கார்போஹைட்ரேட் உணவுகள் ட்ரை கிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது.

    ட்ரை கிளி சரைடுகள் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு ஆகும். நாம் சாப்பிடும் உணவில், உடலுக்கு தேவையான அளவு கலோரியை விட அதிகளவு கார்போஹைட்ரேட் வகை உணவுகளை நாம் உட்கொண்டால், அவை ட்ரை கிளிசரைடுகளாக உடலில் சேமிக்கப்படுகிறது. இது ஹைபர் ட்ரை கிளிசெரிடெமியா எனப்படும்.

     ட்ரை கிளிசரைடுகளின் வேலை பயன்படுத்தப்படாமல் சேமிக்கப்பட்ட கலோரிகள் மூலம் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. ஆனால் இவை ரத்தத்தின் சராசரி அளவான 150-ஐ விட அதிகமாகும் போது இதய தமனிகள் மற்றும் ரத்த நாளங்களில் படிகிறது. இது அர்த்ரோஸ் கிளிரோசிஸ் என்ற நிலையை ஏற்படுத்துகிறது. இவை பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

    வளர்சிதை மாற்ற நோய்க்குறிகளான இடுப்பைச் சுற்றி அதிக கொழுப்பு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த சர்க்கரை அளவு, டைப் 2 வகை நீரிழிவு நோய் இவைகளை ஏற்படுத்துகிறது.

     ட்ரை கிளிசரைடுகளை கட்டுக்குள் வைப்பது எப்படி?

    1) தினசரி நடைப்பயிற்சி, சைக்கிள், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். குறைந்தது 30 நிமிட உடல் செயல்பாடுகள் ட்ரை கிளிசரைடுகளைக் குறைத்து, 'நல்ல' கொழுப்பை அதிகரிக்கும்.

    2) கார்போஹைட்ரேட் வகை உணவுகளான சர்க்கரை, மாவுப் பண்டங்கள், குளிர்பானங்கள். சோடா, பிரக்டோஸ், பீட்சா, பர்கர், பேக்கரி உணவுகள் கூடுதல் கலோரிகளைத் தருவதால் இவை ட்ரை கிளிசரைடுகளாக மாற்றப்பட்டு கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. அதிக கலோரிகளை தரும் உணவுகளை குறைப்பது ட்ரை கிளிசரைடுகளின் அளவை குறைக்கும்.

    சிவப்பு இறைச்சியை அளவுடன் எடுக்க வேண்டும். டிரான்ஸ் கொழுப்புகள், ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள் அல்லது கொழுப்புகள் சேர்ந்த உணவுகளை தவிர்க்கவும். மது அருந்துவது ட்ரை கிளிசரைடுகளின் அளவை உயர்த்துகிறது. ஆல்கஹாலில் அதிகமான கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. எனவே மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

    3) ஒமேகா-3, கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சாளை மீன் (சார்டின்). டூனா மீன், பாதாம், வால்நட்,ப்ளாக் சீட்ஸ் (அலிசி விதை). ஆளி விதை, பூசணி விதை, முழுத்தானியங்கள், பருப்பு வகைகள், வெள்ளரி விதை இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள் இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, புதினா, லவங்கப்பட்டை, சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம் இவைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    4) எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் அளவுடன் எடுக்க வேண்டும். செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய். ஆலிவ் எண்ணெய் சிறந்தது.

    சித்த மருத்துவம்:

    1) ஏலாதிச்சூரணம்-1 கிராம், குங்கிலிய பற்பம் -200 மி.கி. வீதம் மூன்று வேளை வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    2) வெண்தாமரை இதழ் பொடியை காலை, இரவு ஒரு கிராம் வீதம் வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    • 1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை இரு மடங்காகவும், ஆண்கள் எண்ணிக்கை சுமார் 3 மடங்காகவும் அதிகரித்துள்ளது.
    • கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே குறைந்த எடை பாதிப்பு கொண்ட பெரியவர்கள் எண்ணிக்கை பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    புதுடெல்லி:

    உலக அளவில் விஞ்ஞானிகளை கொண்ட 'என்.சி.டி.' என்ற அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து உடல் பருமன் குறித்து ஒரு ஆய்வில் ஈடுபட்டன. அதன் முடிவுகள், 'லான்செட்' பத்திரிகையில் வெளிவந்துள்ளன.

    கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே உடல் பருமனும், குறைந்த எடை பாதிப்பும் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை கண்டறிவதே இதன் நோக்கம் ஆகும். 5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் இளம் வயதினராகவும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர். இந்தியா உள்பட 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இப்பணியில் 1,500 ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். எடை, உயரத்தை பயன்படுத்தி, 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' கணக்கீடு அடிப்படையில், உடல் பருமன் கணக்கிடப்பட்டது.

    அதன்படி, 2022-ம் ஆண்டு உலக அளவில், 15 கோடியே 90 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினரும், 87 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அதாவது, 100 கோடிக்கு மேற்பட்டோர் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர்.

    1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை இரு மடங்காகவும், ஆண்கள் எண்ணிக்கை சுமார் 3 மடங்காகவும் அதிகரித்துள்ளது. ஆனால், சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரை, 2022-ம் ஆண்டில், 1 கோடியே 25 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமனுடன் இருந்தனர். இவர்களில், 73 லட்சம்பேர் ஆண்கள், 52 லட்சம்பேர் பெண்கள் ஆவர்.

    மேலும், இந்தியாவில் உள்ள பெரியவர்களில் 4 கோடியே 40 லட்சம் பெண்களும், 2 கோடியே 60 லட்சம் ஆண்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

    1990-ம் ஆண்டில், 1.2 சதவீதமாக இருந்த உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 9.8 சதவீதமாகவும், 0.5 சதவீதமாக இருந்த ஆண்கள் எண்ணிக்கை 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

    அதே சமயத்தில், கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே குறைந்த எடை பாதிப்பு கொண்ட பெரியவர்கள் எண்ணிக்கை பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் மஜித் எஸ்சாடி கூறியதாவது:-

    உடல் பருமனும், குறைந்த எடையும் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரு வடிவங்கள் ஆகும். இரண்டுமே மக்களின் ஆரோக்கியத்துக்கு கெடுதலானவை. இந்த ஆய்வு, கடந்த 33 ஆண்டுகளில் இருவகையான ஊட்டச்சத்து குறைபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.

    கடந்த 1990-ம் ஆண்டில், பெரியவர்கள்தான் உடல் பருமனுடன் இருந்தனர். ஆனால், இப்போது, பள்ளி செல்லும் சிறுவர்களும், இளம்வயதினரும் உடல் பருமன் கொண்டவர்களாக மாறியிருப்பது கவலை அளிக்கிறது. இருப்பினும், ஏழை நாடுகளில் இன்னும் கோடிக்கணக்கானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் கையாள ஆரோக்கியமான, ஊட்டச்சத்து கொண்ட உணவு தாராளமாக கிடைக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரியசஸ் கூறியதாவது:-

    குழந்தை பருவம் முதலே உடல் பருமனை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு உணர்த்துகிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய அக்கறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை தடுக்க வேண்டும். இதில், அரசுகளுக்கு மட்டுமின்றி தனியார் துறையினருக்கும் பொறுப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே இடத்தில் உட்கார்ந்து கொள்வதால் கலோரிகளை எரிக்க கடினமாக உள்ளது.
    • அடிக்கடி செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

    இன்றைய காலகட்டத்தில், பலர் வீட்டில் இருந்து வேலை (வொர்க் ஃப்ரம் ஹோம்) என்ற பெயரில் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இந்த வேலைகளில் பெரும்பாலானவை 8 முதல் 9 மணிநேர ஷிப்டுகளை அடிப்படையாகக் கொண்டவை. அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் 8 முதல் 9 மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இருப்பினும், இது ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    உட்கார்ந்து வேலை செய்பவர்கள் பல உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். உட்கார்ந்து வேலை செய்பவர்களிடையே அதிகரித்து வரும் பிரச்சனைகள் என்ன என்பத்தை இங்கே தெரிந்து கொள்வோம்..

    தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்து கொள்வதால் கலோரிகளை எரிக்க கடினமாக உள்ளது. அதனால் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் சில சமயம் உடல் பருமனாக மாறுகிறார்கள். இது கெட்ட கொழுப்பாக உடலில் சேரும். உடல் பருமன் உடலில் பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

    அதுபோல், உட்கார்ந்து வேலை செய்பவர்கள் அடிக்கடி செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். ஏனெனில், ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவதால் அவை செரிமானம் ஆகாது. அத்தகையவர்களுக்கு மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளும் இருக்கும்.

     நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால் தசைகள் பலவீனமடைகின்றன. முழங்கால் வலியும் தொல்லை தரும். இப்போதெல்லாம் 9 மணி நேரம் உட்கார்ந்திருக்கும் வேலையில் உடலில் ரத்த ஓட்டம் மிகவும் மெதுவாக உள்ளது. இதனால் கால்களில் கூச்சம் ஏற்படும்.

    மேலும் இவர்களின் உடல் செயல்பாடு மிகவும் குறைவாக இருக்கும். இதன் காரணமாக, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. அவர்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். அத்தகையவர்கள் முடிந்தால் தவறாமல் உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும்.

    உட்கார்ந்து வேலை செய்பவர்கள் பெரும்பாலும் கணினிகள் அல்லது மடிக்கணினிகளில் வேலை செய்கிறார்கள். ஒருவர் 8 முதல் 9 மணி நேரம் கணினித் திரையைப் பார்ப்பதால், அதிலிருந்து வெளிப்படும் நீலக்கதிர்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதன் தாக்கம் கண்பார்வையை பலவீனப்படுத்துகிறது.

    தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இதை தவிர்க்க நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் மற்றும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

    ×