search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    நீங்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா?
    X

    நீங்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குகிறீர்களா?

    • டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.
    • செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது.

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். செல்போன் மோகம் தூங்க செல்லும் நேரத்தை தாமதப்படுத்திவிடுகிறது. இரவில் திடீரென்று கண் விழித்தாலோ, காலையில் எழுந்தாலோ கைகளின் முதல் தேடல் செல்போனாகத்தான் இருக்கிறது. செல்போனில் இருந்து வெளிப்படும் ஒளி கண்களை சோர்வுக்குள்ளாக்குகிறது.

    இரவில் போதுமான அளவு தூங்காவிட்டால் ஏற்படும் சோர்வு மறுநாள் முழுவதும் எதிரொலிக்கும். ''தூக்கமின்மை உடல் நலனில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். போதிய நேரம் தூங்காவிட்டால் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயநோய், பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு வித்திடும்'' என்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு நாள் இரவும் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மாரடைப்பு, மனச்சோர்வு உள்ளிட்ட உடல்நலப்பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மேலும் தூக்கமின்மை ரத்த அழுத்த அளவை அதிகரிக்கச்செய்யக்கூடும். இதய செயலிழப்பு மற்றும் சிறுநீரக நோய்க்கும் வழிவகுக்கும். தினமும் இரவில் 7 மணி முதல் 9 மணி நேரம் வரை தூங்குமாறு அமெரிக்க இதய சங்கம் பரிந்துரை செய்துள்ளது.

    தூக்கத்தின்போது உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்ளும் இயல்புடையது. இதன் மூலம் சிறு, சிறு உடல்நல குறைபாடுகள் நீங்கிவிடும். இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும். ''நீங்கள் போதுமான நேரம் தூங்க முடியாமல் அவதிப்படும்போது உடல் அதிக மன அழுத்த ஹார்மோனை உற்பத்தி செய்யும். அப்போது ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்துவிடும்'' என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

    நன்கு ஆழ்ந்து தூங்கும்போது இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வழிவகை ஏற்படும். மன அழுத்தத்தில் இருந்து மீளவும் உதவும். போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டாலோ, ஆழ்ந்து தூங்க முடியாவிட்டாலோ இதயம் மற்றும் ரத்த நாளங்கள் ஓய்வெடுக்க வாய்ப்பில்லாமல் போகும். நாள்பட்ட அழற்சி, ஆக்சிஜனேற்ற அழுத்தத்திற்கு வித்திடும். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்து இதய அமைப்பை சேதப்படுத்தும். நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும்.

    Next Story
    ×