search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Depression"

    • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
    • இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    சென்னை:

    தென் மேற்கு பருவமழை படிப்படியாக விலகி வருகிறது. தமிழகத்தில் இன்னும் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகமாக உள்ளது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள்.

    இந்த நிலையில், வட கிழக்கு பருவ மழை 3-வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர் கள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    வடக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை (4-ந் தேதி) ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில் அது குறைந்த காற்றழுத்தமாக உருவாகும் என்று கணிக்கப்படுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக் கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். 6-ந் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    • வாழ்க்கையில் ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பலன் தரும்.
    • நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள்.

    அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க ஒருசில பழக்கவழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுவது பலன் தரும்.

    1. நட்பு வட்டம் உங்கள் நலனில் அக்கறை கொள்வதாக அமைய வேண்டும். உங்களுடைய செயல்பாடுகளை நேர்மறையாக விமர்சித்து நல்வழிப்படுத்தும் நல் உள்ளங்களுடன் நட்புறவை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு செயல்பாடுகளையும் ஊக்குவித்து நிறை, குறைகளை தவறாமல் சுட்டிக்காட்டுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.

    2. மற்றவர்கள் உங்களிடம் கருத்து கேட்டாலோ, உதவி கேட்டாலோ உங்கள் மனதில் எழும் எண்ணங்களை தயங்காமல் வெளிப்படுத்திவிடுங்கள். உங்கள் மனம் `இல்லை' என்று சொல்ல நினைக்கும். அதன் விருப்பத்துக்கு மாறாக `ஆம்' என்று சொல்லாதீர்கள். நீங்கள் விரும்பாத விஷயங்களை செய்தால் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்வதாக அமைந்துவிடும். அது தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். மகிழ்ச்சியையும், மன நிம்மதியையும் குலைத்துவிடும்.

    3. தினமும் உறுதிமொழி எடுங்கள். `இன்று என்னால் முடிந்ததை செய்துள்ளேன்' என்பது போன்ற மந்திரமாக அது அமையட்டும். பிறருக்கு உங்களால் இயன்ற உதவிகளை தயங்காமல் செய்யுங்கள். அது உங்களுக்கு நேர்மறை உணர்வைத் தரும்.

    4. கடினமான காலங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றியுடன் இருங்கள். பிறர் செய்யும் சின்னச்சின்ன உதவிகளுக்கு கூட நன்றி சொல்ல மறக்காதீர்கள். நேர்மறையான எண்ணங்களை மனதில் விதையுங்கள். அது மன வலிமையை தரும்.

    5. இசை கூட ஒரு வகையான சிகிச்சை முறைதான். அதற்கு மனதை சாந்தப்படுத்தி மகிழ்ச்சியான சூழலை உருவாக்கும் சக்தி உண்டு. வேகமான, உற்சாகமான வரிகள் கொண்ட பாடல்கள் நேர்மறை உணர்ச்சிகளை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    6. கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள். எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக சிந்தித்தும் கவலை கொள்ளாதீர்கள். தற்போது கிடைத்ததை சிறப்பாகப் பயன்படுத்துங்கள். வாழ்க்கையை மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் அனுபவிக்கும் திருப்தியை அது தரும்.

    7. எப்போதும் நண்பர்களிடம் ஆலோசனை கேட்பது ஏற்புடையதாக இருக்காது. உங்கள் உள்ளுணர்வின் அடிப்படையில் முடிவுகளை எடுங்கள். அது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சிறப்பாக செயல்பட வழிகாட்டும்.

    • தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம்.
    • வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும்.

    தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம். வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும். வலி நிவாரண மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனையின்றி சாப்பிட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடுவது, மன நோயாகவும் மாற வாய்ப்புள்ளது.

    தலைவலி ஏன் வருகிறது?

    நீண்ட நாள் தலைவலி, குறுகிய கால தலைவலி என, இரண்டு வகைகள் உண்டு. நெற்றியின் இரண்டு பக்கத்திலும், காற்று சிற்றலைகள் உள்ளன. குளிர் தாக்குதலால், இவற்றின் உள்பக்க ஜவ்வு, வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில், சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதால், தலைவலி ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டை நிபுணர் அறிவுரையின்படி, 5 நாட்கள் மாத்திரை உட்கொண்டால், சீராகி விடும்.

     கண் பார்வை குறைபாடும் ஒரு காரணமா?

    மூக்கின் நடுச்சுவர் வளைவு, ஜவ்வு வீக்கம் இருந்தாலும், அடிக்கடி தலைவலி வரும். இதை, அறுவை சிகிச்சை மூலமே, சரி செய்ய முடியும். கண் பார்வை குறைபாடு உள்ளோருக்கும், பின்பக்க தலைவலி வரும். கண்ணில் நீர் அழுத்தம் அதிகமானால், தலைவலி வரும்.

     ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது?

    தலையின் ஒரு பக்கத்தில் ஒற்றைத் தலைவலி வரும். நீண்டநேரம் இருக்கும். வாந்தி வந்தால் குறைந்துவிடும். சில பேருக்கு, ஆண்டுக்கணக்கில் பாதிப்பு வரும். வலி நிவாரணிகளை, டாக்டரின் ஆலோசனை இன்றி சாப்பிடுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், ஒற்றைத் தலைவலி வரலாம். நரம்பியல் நிபுணர்களை பார்த்து, சிகிச்சை எடுப்பது அவசியம்.

    தலைவலி வந்தால் நடக்கும்போது தள்ளாட்டம் வருமா?

    இரவில் அதிகம் கண் விழிப்போர், நீண்ட நேரம் புத்தகம் படிப்போர், இரவு ஷிப்டில் தொடர்ந்து வேலை செய்வோர், `வெப்சைட்'டில் மூழ்கி கிடப்போர், `டிவி'யை நீண்ட நேரம் பார்ப்போருக்கும் தலைவலி வர வாய்ப்பு உள்ளது. தூக்கத்தை தொலைப்பது தான், இதற்கு முக்கிய காரணம். சிலருக்கு முன்பக்க தலை வலிக்கும். நடக்கும்போது தள்ளாட்டம் வரும். மயக்கம் வரும். இத்தகைய பாதிப்பு உடையோர் நல்ல மனநல நிபுணரை சந்திப்பது நல்லது.

    விட்டு விட்டு தலைவலி வருவது ஏன்?

    தாழ்வான கட்டிடங்களுக்கு குனிந்து செல்லும்போதோ, கிரிக்கெட் விளையாட்டாலோ, எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு கவனிக்காமல் விட்டால், உள் காயங்கள் ஏற்படலாம். இவர்களுக்கு, விட்டு விட்டு தலைவலி வரும். தலையில், எக்ஸ்-ரே, `ஸ்கேன்' எடுத்து, பாதிப்பின் காரணம் அறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

     தீராத தலைவலி, புற்றுநோயின் அறிகுறியா?

    இடைவிடாத தலைவலி உள்ளோர், தூக்கத்தில் அடிக்கடி எழுந்து உட்கார்ந்து கொள்வோருக்கு, மூளையில் நீர் கட்டி, புற்றுநோய் கட்டி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு, நீண்ட கால சிகிச்சை பெற வேண்டிய நிலை வரும். அதற்காக தலைவலி வருவோருக்கெல்லாம், புற்றுநோயாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    தலைவலிக்கும், உணவில் சேர்க்கும் உப்புக்கும் தொடர்பு உண்டா?

    பெரும்பாலான வைரஸ் காய்ச்சல்களுக்கு, தலைவலி, ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். காரணம் கண்டறிந்து, உரிய முறையில் சிகிச்சை பெறுவது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவு குறைந்தாலும், உப்பின் அளவு கூடி அல்லது குறைந்தாலும், அளவுக்கு அதிகமாக தலைவலி வர வாய்ப்புண்டு.

     மன அழுத்தம் தலைவலிக்கு காரணமா?

    தலைவலி என, கடைகளில் இஷ்டம்போல் வலி நிவாரண மாத்திரை வாங்கிப்போட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடக்கூடாது. அப்படி செய்தால், மனநோயாக மாற வாய்ப்புள்ளது. தொழில் வர்த்தகர்கள், பணிகளை இழுத்துப்போட்டுச் செய்வோர், வங்கி அதிகாரிகளுக்கும் தலைவலி வர வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தாலும் பாதிப்பு வரலாம். வேலையை கண்டபடி இழுத்துப்போட்டு செய்யாமல், பணிகளை முறைப்படுத்தி செய்வதும், இடைஇடையே ஓய்வு எடுப்பதும் நல்லது.

    சரியான நேரத்தில் உணவு கட்டாயம் என்கிறீர்களே?

    சாப்பிடாமல் பட்டினி கிடப்போர், உரிய நேரத்திற்கு சாப்பிடாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவோர், முறையாக உணவு பழக்கம் இல்லாதோருக்கும், தலைவலி வரும். சரியான உணவு பழக்கம் அவசியம். இந்தியாவில், பெரும்பாலும் தலைவலியால் பாதிக்கப்படுவதற்கு, ரத்தக்கொதிப்பு காரணமாக உள்ளது. இதற்காக, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    பெரிய மருத்துவமனைகளில், தலைவலிக்கென பிரத்தியேக பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், சரியான நேரத்தில் உணவு, சரியான தூக்கம், மன அழுத்தத்தால் பாதிக்காத வகையில் திட்டமிட்டு பணியாற்றுதல் ஆகியவற்றால், தலைவலி பாதிப்பில் இருந்து தப்பலாம்.

    • அலுவலகங்களில் நட்பு வட்டம் அனைவருக்கும் உண்டு.
    • உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது.

    பள்ளி, கல்லூரி நாட்களை நினைத்துப் பார்த்தால் நம் நண்பர்களுடன் கழித்த இனிய தருணங்களே முதலில் நம் மனதில் சிறகடிக்கும். இந்த இலையுதிர் காலத்துக்கு பிறகான வாழ்வில், பெரும் பகுதியை நாம் பணிபுரியும் இடத்தில்தான் செலவிடுகிறோம். ஒரு நாளில் முக்கால்வாசி நேரம் பணி இடங்களில் தான் உள்ளோம். அவ்வாறு நம் வாழ்வில் இன்றியமையாத நேரத்தைப் பிடித்திருக்கும் அலுவலகங்களில் நட்பு வட்டம் அனைவருக்கும் உண்டு. பள்ளி, கல்லூரிகளில் இருந்ததைப் போல இங்கும் புதிதாக முளைக்கும் உயிர்த் தோழமைகள் நம் வாழ்வில் இன்றியமையாதது. அதுதான் நம்மை பணியில் உயிர்ப்புடன் செயல்பட வைக்கும்.

    ஆம்...! அலுவலக நண்பர் என்றால் நீங்கள் பணியாற்றும் அதே சூழலில் இருப்பார், உங்களின் பிரச்சினைகளை எளிதாகப்புரிந்துகொள்வார். பிரச்சினையில் இருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்க சரியான நபராக இருப்பார். உயர் அதிகாரியுடன் பிரச்சினை, அலுவலக அரசியல், வேலைப்பளுவால் மனச்சோர்வு, எதுவாக இருந்தாலும் நமக்கு உறுதுணையாக இருக்கப்போவது `ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ்தான்.' அவர்களின் பங்களிப்பு அலுவலக வாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் ரொம்பவே அவசியம் என்பதை இந்த கட்டுரை வாயிலாக அறிந்து கொள்வோம்.

    உற்சாகம்

    `ஒவ்வொரு நாளும் நாம் காலையில் எழுகையில் இன்று அலுவலகம் போக வேண்டுமா?' என்ற அலுப்பு பலருக்கும் தோன்றும். அதைப் போக்குவதே நம் நண்பர்களின் நினைப்புதான். ஒவ்வொரு நாளும் நம் வேலையை அழகாக்குவது அவர்கள்தான். நமக்கு அவர்கள் செய்யும் சிறு மோட்டிவேஷனும் சிறந்த உந்து சக்தியாக நம்மைச் செயல்பட வைக்கும். அதனால் ஒரு ஆபீஸ் பெஸ்ட் பிரெண்ட்ஸ் நம்முடன் பணியில் இருப்பது நம்மை நாள் முழுவதும் உற்சாகத்துடன் வேலை செய்ய வைக்கும்.

    உதவி

    எந்த ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு முதல் உதவி நண்பர்களிடம் இருந்துதான் கிடைக்கும். மனநலம், உடல்நலம் என அனைத்திலும் நம் மீது அக்கறையோடு உடன் இருப்பவர்கள் அவர்கள்தான். நண்பர்கள் நம் நலனைப் பாதுகாத்து வேலைப்பளுவால் ஏற்படும் மனச்சோர்வை விரட்டி வேலையின் மேல் நமக்கு ஒரு காதல் ஏற்பட உதவும் அருமருந்தாக இருப்பார்கள்.

     மதிய உணவு

    அரைநாள் நன்கு உழைத்துக் களைத்த பின்பு கிடைக்கும் மதிய உணவு இடைவேளை என்பது நாம் நினைப்பதை விடவும் வேலை சூழலில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அந்த நேரத்தை நண்பர்களுடன் செலவழிப்பதுதான் அந்த நாளின் சிறந்த பொழுதாக இருக்கும். அந்த சிறிய பொழுதில் கிடைக்கும் உற்சாகம் நம்மை மீதி நாள் வேலையில் உற்சாகமாகச் செயல்பட வைக்கும். ஆபீஸ் கதைகளைப் பேசுவதற்கு உணவு இடைவேளைதானே பெஸ்ட் டைம்!

     குழு

    நீங்களும் உங்கள் உயிர் நண்பரும் ஒருத்தரை ஒருவர் நன்கு அறிந்தவர்களாக இருப்பீர்கள், நிறை குறைகள் தெரிந்தவர்களாக இருப்பீர்கள். ஆதலால் நீங்கள் இருவரும் கூட்டாகப் பணி செய்தால் சிறப்பாக செயல்பட முடியும். உயர் அதிகாரிகள் உங்களை ஒன்றாகப் பணியாற்ற அழைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    • அழுவதும் உடல் நலனுக்கு நல்லது.
    • மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.

    சிரிப்பின் மகிமையை நாம் அனைவரும் அறிவோம். அது கவலையை போக்கும் சிறந்த மருந்துகளில் ஒன்று என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். முழுமனதுடன் சிரிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என கூறப்படுவது போல, அழுவதும் உடல் நலனுக்கு நல்லது.

    அழுவது எப்படி உடலுக்கு நன்மை சேர்க்கும்? என்று நீங்கள் யோசிக்கலாம். சிரிப்பதால் மட்டும் அல்ல, அழுவதாலும் நமக்கு பல நன்மைகள் கிடைப்பதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிரிப்பு எந்த அளவிற்கு நம் மனதுக்கும், உடலுக்கும் நன்மையை கொடுக்கிறதோ, அதற்கு சமமான அளவிற்கு அழுகையும் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    மனித உணர்வுகளில் சிரிப்பு ஒரு முனை என்றால், அழுகை மறு முனையாகும். மனிதர்கள் ஏன் அழ மறுக்கிறார்கள்? என்ற கேள்விக்கு பலரது பதிலாக இருப்பது அழுகை பலகீனத்தின் அடையாளம் என்பதே. உலகில் கண்ணீரை பலகீனத்துக்குரியதாகவும், வெட்கத்துக்குரியதாகவும் மற்றும் குழந்தைத் தனத்துக்கும் அடையாளப்படுத்து கின்றனர். அழுகை, பலகீனத்தின் அடையாளமாகக் கருதப்பட்டாலும், உண்மையில் அது நன்மையை அளிக்கக் கூடியதுதான்.

    அழுகை பலகீனத்தின் அடையாளம் அல்ல:

    பல சினிமாக்களில் `ஆண்கள் அழக்கூடாது' என்றும், `நான் அழவில்லை, கண்ணு வேர்க்குது' என்று சொல்வதை கேட்டிருப்போம். எவ்வளவு பிரச்சினைகளும், கஷ்டங்களும் வந்தாலும் சிலர் அழ மாட்டார்கள். அப்படி அழக்கூடிய தருணங்கள் வரும்போது, நாம் அழுகையை கட்டுப்படுத்தினால் அதனால் வரும் பாதிப்புகள் அதிகம் என்கின்றனர் மனநல மருத்துவர்கள். மனம் தாங்க முடியாத அளவிற்கு கஷ்டங்கள் வரும் சமயங்களில் அழுதால் அந்த பிரச்சினையினால் உண்டாகும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும்.

     மன அழுத்தம் அதிகமாக உள்ளபோது, மனம் விட்டு அழுவோமானால், மனம் மிகவும் அமைதியாகி தூக்கம் வருவதை உணரலாம். பின்னர் தூங்கி எழுந்தவுடன், நம் மனச்சோர்வு அனைத்தும் நீங்கியிருப்பதை உணரலாம். அழுவது நிலைமையை மாற்றாது என்றாலும், அது உடனடியாக நிவாரணத்தையும், தற்காலிகமாக ஆறுதலையும் தருகிறது.

    அழுகையை ஒருபோதும் அடக்கக்கூடாது என்று சிலர் சொல்ல கேட்டிருப்போம். அப்படி அடக்கும்போது, காலப்போக்கில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனப்படலாம். மேலும் அழுகை உணர்வை கட்டுப்படுத்துவதால், மகிழ்ச்சி மற்றும் அன்பு போன்ற நேர்மறை உணர்வுகளை அனுபவிக்கும் திறன் குறையலாம். அழுகையை மறைக்க முயற்சிப்பவர்கள் மன அழுத்தத்தால் அவதிப்படுவது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.

    நாம் மிகுந்த உணர்ச்சியோடு அழும்போது புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதுதொடர்பாக 30 நாடுகளை சேர்ந்த 4,300 இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அழுகைக்கு பிறகு அவர்களின் மன மற்றும் உடல்நலம் இரண்டிலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. மேலும் அந்த ஆய்வில், அழுகை 88.8 சதவீத மக்களின் மனநிலையை மேம்படுத்தியது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

     அழுகை - ஆரோக்கியமான செயல்பாடு:

    அழுகை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் கொண்டது. கோபத்தில் இருக்கும் ஒருவர், மனம் விட்டு உடனேயே அழுதால், அவரின் ரத்த அழுத்தம் குறையும். லாக்ரிமல் என்ற சுரப்பி கண்ணீரை உருவாக்குகிறது. கண்களை ஆரோக்கியமாக வைக்கவும் அழுகை உதவுகிறது.

    கண்ணீரில் லைசோசைம் என்ற திரவம் உள்ளது. இது பாக்டீரியாவை கொல்லும் சக்தி வாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. 5 முதல் 10 நிமிடங்கள் அழுவது கூட 90 முதல் 95 சதவீதம் பாக்டீரியாக்களை கண்களில் இருந்து அகற்ற உதவும்.

    வியர்வை, சிறுநீர் உடலில் இருந்து பல நச்சுக்களை வெளியேற்றுவது போல கண்ணீரும் நச்சுகளை வெளியேற்றும். மேலும் கண்ணீர் கண்களில் இருக்கும் சவ்வு வறண்டு போகாமலும் பாதுகாக்கும். இதனால் பார்வை நீண்ட காலத்திற்கு நன்றாக இருக்கும்.

    சரி அழுவது நல்லது தான் என்றாலும், எதற்கெடுத்தாலும் அழுதால் அதுவும் நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் அதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டாம் எனவும் எச்சரிக்கின்றனர். இனி உங்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத பிரச்சினை காரணமாக மனம் கடினமாக இருந்தால், கைக்குட்டையை வைத்துக்கொள்ளுங்கள். அழுது விடுங்கள்!

    • பிரசவத்துக்குப் பிறகு மனநிலையில் மாற்றங்கள் வருவதுண்டு.
    • சிலருக்கு மாதக் கணக்கிலும் இருக்கலாம்.

    சில பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு மனநிலையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் வருவதுண்டு. அந்த மனநிலை, இரண்டு, மூன்று வாரங்களுக்குத் தொடரலாம். சிலருக்கு மாதக் கணக்கிலும் இருக்கலாம்.

    பிரசவமாகி 2-3 வாரங்களுக்குப் பிறகும் டிப்ரெஷன் தொடர்ந்தால் அதை உளவியலில் 'பேபி ப்ளூஸ்' என்று சொல்வோம். 3-4 வாரங்களுக்கு மேலும் தொடர்ந்தால் அதை 'போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷன்' என்று சொல்வோம். இன்னும் சில பெண்களுக்கு கர்ப்ப காலத்திலேயே டிப்ரெஷன் ஏற்படுவதும் நடக்கும். அது பிரசவத்துக்குப் பிறகும் தொடரலாம். அதை 'பெரி பார்ட்டம் டிப்ரெஷன்' என்று சொல்வோம்.

    பிரசவத்துக்குப் பிறகான 'போஸ்ட் பார்ட்டம் டிப்ரெஷனு'க்கு, சிசேரியன் பிரசவம் என்றால் அந்த வலி, தாய்ப்பால் கொடுப்பதில் அசௌகர்யங்கள், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் என பல விஷயங்கள் காரணங்களாக இருக்கலாம். அது இயல்பானதுதான். பெரும்பாலும் தானாகவே சரியாகிவிடும்.

     மற்றபடி, 3-4 வாரங்களுக்குப் பிறகும் மன அழுத்தம் நீடிப்பது, குழந்தையைப் பார்த்தாலே வெறுப்பாக இருப்பது, கணவர் அருகில் வந்தாலே பிடிக்காமல் இருப்பது, தனிமை, அழுகை, சோகம் போன்றவற்றை உணர்ந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள். உங்களுடைய மனநிலையைக் கேட்டறிந்து மருந்துகள் தருவார் அல்லது உளவியல் மருத்துவர் அல்லது ஆலோசகரை அணுக பரிந்துரைப்பார்.

    ஒருவேளை அந்த டிப்ரெஷனுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தாலும் அவை உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பானவையாகவே இருக்கும். தாய்ப்பால் கொடுப்பது குறித்தும் நீங்கள் கவலைப்படத் தேவை இருக்காது.

    முக்கியமாக, நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பதை வீட்டாருக்குத் தெரியப்படுத்துங்கள். அவர்களிடம் உதவி கேளுங்கள். இப்படிச் சொன்னால் உங்களைத்தவறாக நினைப்பார்களோ, நல்ல அம்மா இல்லையோ என்பது போன்ற குற்ற உணர்வுகளில் இருந்து வெளியே வாருங்கள்.

     போதுமான ஓய்வு எடுங்கள். தூக்கமின்மையால்தான் பெரும்பாலான அம்மாக்களுக்கு டிப்ரெஷன் வருகிறது. எனவே, குழந்தை தூங்கும்போது நீங்களும் தூங்கி ஓய்வெடுங்கள். மற்ற நேரங்களில் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வீட்டாரிடம் உதவி கேளுங்கள்.

    பிரசவத்துக்கு முன்பே உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இதுகுறித்துப் பேசி, மன அழுத்தத்தைத் தவிர்க்க ஆலோசனை பெறுங்கள்.

    • மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்ல மனநலனுக்கான அறிகுறி.
    • வாழ்வின் பொருள் மற்றும் இலக்கு என்பது மன மகிழ்ச்சிதான்.

    மனதை அலையவிட ஆயிரம் விஷயங்கள் இந்த உலகில் வந்துவிட்டன. தேவையற்றவற்றைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டத்தில் மனநலனைப் பாதுகாக்க மறந்துவிட்டோம். முடிவில், மனமகிழ்ச்சியின்றி இருக்கின்றோம். வாழ்வின் பொருள் மற்றும் இலக்கு என்பது மன மகிழ்ச்சிதான். மன மகிழ்ச்சியோடு இருப்பதுதான் நல்ல மனநலனுக்கான அறிகுறி, நம்மைச் சுற்றிலும், நமக்குள்ளேயும் மன மகிழ்ச்சி மற்றும் மனநலனுக்கான வாசல்கள் திறந்தே உள்ளன. அந்த வழிகள் இதோ:

    இயற்கையோடு இணையலாம்

    பூங்கா, காடு, வயல் போன்ற பச்சை நிறம் கொண்ட இடங்களில் மற்றும் ஏரி, கடல் போன்ற நீலநிறம் கொண்ட இடங்களில் நம்முடைய நேரத்தைச் செலவிடும்போதோ, வசிக்கும்போதோ மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவை குறைவதாகவும் மேலும், கவலையும் அச்சமும் கலந்த மனநிலை கொண்டவர்கள் தெளிவான மனநிலையைப் பெறுகிறார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    ஆகவே கான்கிரீட் காடுகள் என்று அழைக்கப்படும் நகரங்களுக்கு வெளியே வந்து செயற்கை கருவிகளான கைபேசி, மடிக்கணினி ஆகியவற்றுக்கு விடுப்பு வழங்கிவிட்டு இயற்கையின் அழகை ரசிக்கப் பழகுவோம். உங்களிடம் நீங்களே அக்கறை காட்டுங்கள்

    மனித வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. அத்தகைய சவால்களை எதிர்கொண்டு பாதிக்கப்படும்போது, சிக்கலுக்கு ஆளாகின்ற போதும் நம்மை நாமே குறை விமர்சனம் கூறிக் கொண்டு சுருங்கிவிடக் கூடாது. வாழ்க்கைப் பாடங்கள்தான் நம்மை முழு முனிதனாக ஆக்குகின்றன என்பதை அறிந்து, நீங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டாலோ, உங்களிடம் குறைகளைக் கண்டறிந்தாலோ அடுத்தமுறை இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து உங்களை நீங்களே மன்னிக்கப் பழகுங்கள்.

    மற்றவர்களுக்கு உதவலாம்

    தன்னார்வ சேவை செய்யும்போதும், பிறருக்கு உதவி செய்யும்போதும் மூளையின் குறிப்பிட்ட பகுதிகள் தூண்டப்பட்டு மனமகிழ்ச்சியை நமக்கு கொடுப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும், அன்பு மற்றும் உதவி செய்யும் குணத்துடன் இருப்பதால் நாம் வாழ்வின் நோக்கமான நற்பெயரையும் அடையலாம்.

    நிகழ்காலத்தில் வாழ்வோம்

    நேற்றில் இருந்து கற்றுக் கொள், இன்றைய நாளில் வாழ், நாளை மீது நம்பிக்கை கொள் என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறிய பொன்மொழி. கடந்தகால தவறுகள், கசப்புகளை நினைத்துப் பார்க்காமல், எதிர்காலம் பற்றி பயப்படாமல், தேவையில்லாமல் பிரச்சினைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காமல் இருப்பதன் மூலம், நிகழ்காலத் தருணங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழமுடியும்.

    உறவுகள் இனிமை தரும்

    நமக்கு எது மகிழ்ச்சியும், உடல் நலனும் தருகின்றது என்று 80 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த அறிவியல் ஆய்வின் முடிவுகள் கூறும் ஒரே பதில் என்ன தெரியுமா இனிமையான உறவுகள் என்பதுதான். இனிய உறவுகளுடன் நாம் நேரம் செலவிடும்போது மகிழ்ச்சியை பெறுகின்றோம். அப்படி மகிழ்ச்சியுடன் இருப்பதால் நல்ல உடல்நலம் கிடைக்கின்றது. தனிமையில் இருப்பவர்களின் மகிழ்ச்சியும் வாழ்நாளும் குறைகின்றன. ஆகவே, இனிமையான உறவுகளைப் போற்றிப்பாதுகாப்போம்.

    அறிவை வளர்க்கலாம்

    ஓவியம், இசை, எழுத்து போன்ற கலைகளில் ஈடுபடுதல், புத்தகம் வாசித்தல், கலை மற்றும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், புதிய திறன்கள் மற்றும் மொழிகளைக் கற்றல், மூளைக்கு வேலை தரும் விளையாட்டுகளை விளையாடுதல் போன்ற செயல்பாடுகளால் நம் மூளை தூண்டப்படுகின்றது.

    உடம்பை உறுதியாக்கலாம்

    தினமும் உடற்பயிற்சிகள் செய்வது, சரிவிகித உணவு உண்பது, போதுமான தண்ணீர் குடிப்பது, நல்ல தூக்கம், மன அழுத்தம் குறைக்கும் விதம் யோகா மற்றும் மூச்சுப்பயிற்சிகள் செய்வது, தீமை விளைவிக்கும் புகை மற்றும் மதுப்பழக்கம் தவிர்ப்பது போன்ற செயல்பாடுகளால் நமது உடல்நலனை அதிகரிக்கலாம். உடல் நலம் மேம்படும்போது மனநலனும் சேர்ந்தே மேம்படும்.

    நேர்மறைக் கண்ணோட்டம் வேண்டும்

    வாழ்வில் இன்பமும் துன்பமும் இயற்கையே. துன்பங்களில் இருந்து மீண்டெழுவதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். தோல்விகளில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். தடைக்கற்களை படிக்கற்களாக பார்க்கப் பழகுங்கள். உங்களிடம் இல்லாதவற்றை நினைத்து வருத்தப்படாமல், உங்களிடம் இருப்பவற்றை நினைத்து நன்றி உணர்வுடன் இருங்கள். எதிர்மறையான செய்திகள், உறவுகள் மற்றும் சூழல்களை தவிர்த்துவிடுங்கள்.

    உங்களைச் சுற்றிலும் நேர்மறை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொண்டிருங்கள். மனதை ஒருமுகப்படுத்தி செயல்களை ரசித்துச் செய்யுங்கள். அது அந்த நாளுக்கு நாம் காட்டும் நன்றியாகும். நேர்மறையான விஷயங்கள் மீது கவனம் செலுத்தி நேர்மறைப் பார்வையில் வாழ்க்கையை நோக்கி, வாழும் வாழ்க்கைக்கு நன்மைகளை ஈர்த்து மனமகிழ்ச்சி பெறுவோம்.

    • மன அழுத்தம் காரணமாக இஷான் கிஷன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்
    • டிப்ரஷன், பிரஷர் என்பதெல்லாம் அமெரிக்க வார்த்தைகள் என்றார் கபில்

    தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி இரு-போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பாக்ஸிங் டே (Boxing Day) எனப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுதினமான டிசம்பர் 26-ல் முதல் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடுவதாக இருந்த தொடக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன், மன அழுத்தம் காரணமாக போட்டியிலிருந்து விலகி கொண்டுள்ளார்.

    இப்பின்னணியில், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் என தொடர்ச்சியாக விளையாடும் வீரர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்த பிரச்சனைகள் குறித்து 1983ல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக இந்தியாவிற்காக கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவ் 2022ல் "சாட் வித் சாம்பியன்ஸ்" (chat with champions) எனும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அதில் கபில் தேவ் தெரிவித்ததாவது:

    ஐபிஎல் போட்டிகளில் வீரர்களுக்கு தங்கள் திறமையை வெளிக்காட்டவும், மேம்படுத்தி கொள்ளவும் வாய்ப்பு இருப்பது உண்மைதான். ஐபிஎல் போட்டியிலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிகமாக விளையாடுவதாக வீரர்களுக்கு தோன்றினால் ஐபிஎல்-லில் விளையாடுவதை குறைத்து கொள்ளுங்கள். ஐபிஎல் தேசத்திற்கான விளையாட்டு அல்ல. உங்களுக்கு மனதளவில் களைப்பு உருவானால் ஐபிஎல் தொடரின் போது ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். பணம் சம்பாதிப்பதற்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் தவறில்லை. க்ளப் கிரிக்கெட் (ஐபிஎல்) வேறு, நாட்டிற்காக விளையாடுவது வேறு. டிப்ரஷன், பிரஷர் என்பவை அமெரிக்க வார்த்தைகள்; அவை எனக்கு புரிவதில்லை. நான் ஒரு விவசாயி. விளையாட்டை மகிழ்ச்சியுடன் அணுகும் போது பிரஷர் ஏற்பட வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு கபில் கூறினார்.

    • மனம் விசித்திரமான குணம் கொண்டது.
    • கவலையும், சிந்தனையும் மனதை துவண்டுபோகச் செய்து விடும்.

    மனம் கஷ்டப்படும்படியான சம்பவம் ஏதாவது நடந்துவிட்டால் அதை பற்றியே சிந்தித்து புலம்பிக்கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பிறர் சாதாரணமாக கருதும் விஷயத்தை கூட இவர்கள் மனதில் போட்டு குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அதில் இருந்து மீள்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள்.

    அதுவரை நடந்த சம்பவத்தை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். `நாம் இப்படி செய்திருக்கலாமோ? அப்படி செய்திருந்தால் இந்த அளவுக்கு பிரச்சினை வந்திருக்காதோ? அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமோ?' என்று சிந்தித்து மனதை ரணமாக்கிவிடுவார்கள்.

    மனம் விசித்திரமான குணம் கொண்டது. மனதை உலுக்கும் ஏதாவதொரு சம்பவம் நடந்துவிட்டால் உடனே சிந்திக்க ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் மனதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கவலையும், சிந்தனையும் மனதை துவண்டுபோகச் செய்து விடும்.

    மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு கூடுமானவரை மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகள்தான் மனச்சோர்வுக்கோ, மன நோய்க்கோ காரணமாக அமைந்துவிடும். மூளையின் செயல்பாடுகளையும் முடங்க செய்து விடும். அதனால்தான் மன நலன் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    அதிகம் சிந்திப்பது மன நலனுக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். மன அழுத்தமும், பதற்றமும் உடல் செயல்பாடுகளில் தாக்கத்தை உண்டாக்கும். மனம் கட்டுக்குள் இல்லாமல் போனால் சிந்தனையை கட்டுப்படுத்த வேண்டும்.

    மனம் கட்டுப்பாட்டை இழப்பதாக உணரும் சமயங்களில் சிந் தனைகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது. மூச்சை ஆழமாக உள் இழுத்து வெளியே விட வேண்டும். அது மனதை சாந்தப்படுத்த உதவும். தியானம் செய்யலாம். அமைதியான சூழல் கொண்ட இடத்தில் அமர்ந்து ஓய்வும் எடுக்கலாம்.

    அந்த சமயத்தில் கூட தேவையற்ற சிந்தனை எழுந்தால் வேறு ஏதாவதொரு விஷயத்தில் கவனம் செலுத்தலாம். மற்றவர்களுக்கு ஏதாவதொரு நல்ல விஷயத்தை செய்து கொடுக்கலாம். அதனால் அவர் மகிழ்ச்சி அடைந்தால் அது உங்களுக்கும் மன நிறைவை கொடுக்கும். விசித்திரமான ஆற்றலையும் தரும். எல்லாம் நன்றாக நடக்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள். கவலைப்பட ஒன்றுமில்லை என்பதையும் உணருவீர்கள்.

    சாதாரணமாக கடந்து போகக்கூடிய விஷயத்திற்கெல்லாம் சிலர் சட்டென்று பதற்றமடைந்து விடுவார்கள். நடந்ததையே மிகையாக சிந்திப்பதுதான் அதற்கு காரணம். சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். மனதை ஆழ்ந்த சிந்தனையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

    ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் மனம் வேதனைக்குள்ளாகும். அந்த சமயத்தில் ஏதாவதொரு வேலையில் கவனம் செலுத்தலாம். சைக்கிள் ஓட்டலாம். நடக்கலாம். மனதை திசைதிருப்பக்கூடிய ஏதாவதொரு செயலில் ஈடுபடலாம். அது மூளை தசைகளை தளர்த்த உதவும்.

    மனதில் எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்கும் போது சந்தோஷமான தருணங்களை பற்றி நினைத்து பார்ப்பது சாத்தியமில்லாததுதான். ஆனால் குறைந்தபட்சம் முயற்சி செய்தாவது பார்க்கலாம். மன அழுத்தத்திலோ, கவலையிலோ இருக்கும்போது பலவீனங்களை அடையாளம் கண்டு அதனை சரி செய்வதற்கான முயற்சியில் கவனம் செலுத்த முடியும்.

    கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைவில் வைத்திருந்தால், ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாது. அது தொடர்ந்து துயரத்தில் மூழ்க வைத்துவிடும். மன நலனையும் பாதிக்கும்.

    பழைய விஷயங்களை மனதை விட்டு விரட்டி, எதிர்காலத்தை பற்றி சிந்திக்க பழக வேண்டும். அந்த சிந்தனையும் கூட அதிக நேரம் நீடிக்க கூடாது. எப்போதும் இயல்பாக இருப்பதுதான் மன ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

    • உறுதியான உடல்தான் பதற்றமில்லாத மனதுக்கு ஆதாரம்.
    • விழிப்புணர்வுடன் இருந்தாலே பதற்றம் வராது.

    உடல் மற்றும் மனம் என இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு மனப்பதற்றமும் ஒரு காரணமாக இருக்கலாம். மனப்பதற்றத்தை தணிப்பதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது, வாழ்க்கை முறையில் மாற்றங்கள்.

    உடல் எடை அதிகமாக இருந்தால். எடையைக் குறைத்தாலே பாதி பிரச்சினைகள் சரியாகும்.

    தவறாமல் உடற்பயிற்சி செய்தாலே, மனப்பதற்றமும் மனச் சோர்வும் வெகுவாகக் குறையும். ஆரோக்கியமான, உறுதியான உடல்தான் பதற்றமில்லாத மனதுக்கு ஆதாரம்.

    குறிப்பாக யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை பயன்தரும். காபி, டீ போன்ற பானங்களை அதிகம் அருந்துவதும் மனப்பதற்றத்தை அதிகரிக்கும். அவற்றைக் குறைத்துக்கொண்டு நிறைய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள்.

    எதிர்மறையான சிந்தனையையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். சிறு விஷயங்களுக்கு கூட பதற்றப்பட்டு, பின்னர் அதுவே ஒரு பழக்கமாக ஆகிவிடும். பிறகு பல நேரம் நம்மை அறியாமலேயே பதற்றம் வந்துவிடும்.

    'ஒரு விஷயம் நடந்துவிடுமோ' என்று நாம் கற்பனை செய்வதால், எதுவும் நடக்கப்போவதில்லை. ஏன் பதற்றப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் இருந்தாலே பதற்றம் வராது. இந்த வழிமுறைகள் எல்லோருக்கும் தெரிந்தவைதான். அவற்றைச் செயல்படுத்துவதில்தான் இருக்கிறது, சூட்சுமம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
    • தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கியது. தொடா்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தற்போதும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சியும், அரபிக்கடல் பகுதியில் சோமாலியா அருகே புயல் சின்னமும், குஜராத்தில் நிலபரப்பில் காற்று சுழற்சியும் நிலவுகிறது.

    இதனால் நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்தும், வங்கக் கடலில் இருந்தும் மழையைத் தரும் காற்று தமிழகத்தின் ஊடாகச் செல்வதால் வட தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆங்காங்கே பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துக் கூறியபடி, தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் திங்கள்கிழமை புயல் சின்னம் உருவாகியுள்ளது. தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருக்கும் இந்தப் புயல் சின்னம் நாளை (புதன் கிழமை) மேலும் வலுவடையும்.

    அதன் பிறகு அந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    இது அடுத்த 2 நாள்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயலுக்கு மியான்மா் நாடு பரிந்துரை செய்த 'மிச்சாங்' என்ற பெயா் சூட்டப்படும். இந்தப் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு வருமா? அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் துல்லியமாகத் தெரியவரும்.

    இன்று (செவ்வாய்க் கிழமை) தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

    நாளை (புதன்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் இன்றுக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புயல் சின்னம் தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் இன்று கேட்டபோது, அவர் கூறிய தாவது:-

    திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை பொறுத்தவரையில் அது வருகிற 2-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் வலுப்பெற்ற பின்னர் அது புயலாக மாறுவது எப்போது? என்பதில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் தற்போதைய சூழலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    • தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    அந்தமான் மற்றும் அதை சுற்றியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகிற 27-ந்தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது வலுப்பெற்று புயலாக மாறலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கடலோர மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டுள்ள புயல், சுனாமி, நிலநடுக்கம் உள்ளிட்ட பேரிடர் பாதுகாப்பு எச்சரிக்கை ஒலிபெருக்கி அனைத்தும் தயாராக பயன்படுத்தும் நிலையில் இயங்கி வருகிறதா என ஆய்வு செய்ய கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள மீனவர் கிராமங்களில் வைக்கப்பட்டிருந்த 60-க்கும் மேற்பட்ட புயல் எச்சரிக்கை பிரகடன ஒலிப்பான் கருவிகள் பயன்பாட்டில் தயாராக இருக்கிறதா? அதில் தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் உள்ளதா என அந்தந்த பகுதி தாசில்தார்கள், மீன்வளத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    ×