என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை வளர்ப்பு"

    • குழந்தையின் மூளை வளர்ச்சி பத்து வயதுக்குள் 80 சதவிகிதம் முழுமை பெற்றுவிடும்.
    • 10 வயதில் குழந்தையின் கற்றல் திறனும் வேகமாக இருக்கும்.

    தங்கள் குழந்தைகள் பல மொழிகளிலும் புலமை பெற்று பன்முகத் திறமையாளராக விளங்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் ஆசைப்படுகிறார்கள். இதற்கு, பிறமொழிகளை கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு எந்த வயது சிறந்தது, எவ்வாறு கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமானதாகும். குழந்தையின் மூளை வளர்ச்சி அவர்களின் பத்து வயதுக்குள் 80 சதவிகிதம் முழுமை பெற்றுவிடும். எனவே, அந்த வயதில் அவர்களின் கற்றல் திறனும் வேகமாக இருக்கும்.

    குழந்தைகளால் அவர்களின் 7 வயதுக்குள் ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசவும், மூன்று மொழிகளை எழுதவும் கற்றுக்கொள்ள முடியும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும்போது கேட்டல், உணர்தல், பேசுதல் முதலிய செயல்களே முதன்மை வகிக்கின்றன. தாய்மொழி அல்லாத பிற மொழிகளைப் பேசும் சமூகத்தில் வளரும் குழந்தைகளால், அந்த மொழியை எளிமையாகப் புரிந்து கொண்டு நாளடைவில் பேசவும் முடியும். இது இயல்பாகவே அவர்களுக்கு புதிய மொழியைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும் வளர்க்கும்.

    ஒரே வார்த்தையைத் தனக்கு அறிமுகமான பல மொழிகளில் எப்படிப் பேசுகிறார்கள் என்று, தொடர்ந்து கவனிப்பதன் மூலம் பன்மொழி சொல்லாடலில் குழந்தைகளின் ஆர்வம் அதிகரிக்கும். உதாரணமாக, ஒரு குழந்தைக்கு வீட்டில் பேசும் தாய்மொழி தமிழாகவும், அந்த வீட்டின் பணிப்பெண் பேசுவது தெலுங்கு மொழியாகவும், சுற்றி இருக்கும் அக்கம் பக்கத்தினர் பேசுவது மலையாளம், இந்தி போன்ற பிற மொழியாகவும் இருக்கும்பட்சத்தில், அந்தக் குழந்தை தொடர்ந்து பல மொழிகளின் ஓசையைக் கேட்கும் வாய்ப்புகள் உள்ளதால் மொழித்திறன் வளர்ச்சிக்கு மேம்படும்.

    குழந்தைகைள சிறுவயதிலே அவர்களைப் பயிற்சி வகுப்புகளில் சேர்க்காமல், வீட்டில் வைத்தே முதலில் சிறு சிறு பயிற்சிகள் வழங்கலாம். ஒரு மொழியில் புது வார்த்தையைச் சொல்லி 'இது என்ன மொழி என்று கண்டுபிடி?' என்றோ, ஒரே வார்த்தையை பல மொழிகளில் எப்படிச் சொல்வார்கள் எனக் குழந்தைகளிடம் கேட்டு, அவர்களுக்கு புது மொழி வார்த்தைகளை அறிமுகப்படுத்தவோ செய்யலாம்.

    முதல் மொழியை நன்றாகக் கற்ற பின்னர் 2-வது மொழியை சொல்லிக்கொடுங்கள். அதேசமயம் பொது இடங்களில் தாய் மொழியில் பேசக் கூச்சப்படாதீர்கள். தாய் மொழியில் பேசுவதைப் பெருமையாக நினைத்துக் கற்றுக் கொடுங்கள். தாய்மொழியில் குறும்பாடல்கள், கதைகள் சொல்ல பயிற்சி அளிக்கலாம். குழந்தைகளிடம் பேசுவதற்கு பிரத்தியேகமாக நேரம் ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் டி.வி., அலைபேசி, வானொலி போன்ற உபகரணங்களால் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் குழந்தையின் பேசும் திறன் மேம்படும்.

    • குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜி.
    • கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது.

    மற்ற பாடங்கள் எல்லாவற்றையுமே ஆர்வத்தோடு படிக்கும் குழந்தைகள் சிலருக்கு, கணக்குப் பாடம் என்றால் மட்டும் அலர்ஜியாக இருப்பதுண்டு. இதை அலர்ஜி என்பதைவிட, 'ஃபோபியா' (பயம்) என்றே குறிப்பிட வேண்டும்.

    ஆம்...! அமெரிக்காவின் ஒஹையோவில் உள்ள கிளீவ்லேண்ட் ஸ்டேட் யூனிவர்சிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் ஆஷ்கிராப்ட் இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்திருக்கிறார். அதில் பல அதிர்ச்சியான தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

    கணித பயம் குறித்து பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர் செய்த ஆய்வில், கணக்கு தொடர்பான பயம், மற்ற விஷயங்களிலும் அவர்களின் ஞாபக சக்தியைக் குலைக்கிறது. கூடவே படிப்பு மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடுகிறதாம். இதனால், அவர்கள் மிகச் சாதாரணமான இரண்டு எண்களைக் கூட்டுவது போன்ற விஷயங்களுக்குக் கூட பதற்றமும், திணறலும் அடைகிறார்கள். சிலருக்கு ரத்த அழுத்தத்தின் அளவும், இதயத் துடிப்பின் அளவும் எகிறியதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

    இதற்கான காரணம் குறித்து விளக்குகையில், ''எண்களைப் பார்த்ததும் இவர்களது மனதில் ஏராளமான சிந்தனைகள் அலைமோதுகின்றன. அதனால் கணக்கிடத் தேவையான சிந்தனையோ, பொறுமையோ அவர்களிடம் இல்லாமல் போகிறது. இதனால் நாளடைவில் அவர்களின் தன்னம்பிக்கை தளர்ந்து போகிறது.

    இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி... கணிதம் தொடர்பான பயத்தை மழலை பருவத்திலேயே அகற்றி, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதுதான். கணக்கு என்றவுடனே, முகம் சுழிக்கும் குழந்தைகளுக்கு, அதை உற்சாகமாக எதிர்கொள்ளும் வழிமுறைகளை கற்றுக்கொடுங்கள். அப்போது அவர்களது பதற்றமும், கணக்கு பயமும் குறைந்துவிடும்'' என்கிறார் ஆஷ்கிராப்ட்.

    • அப்துல்கலாம் குழந்தைகளுக்கு கற்பிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டினார்.
    • குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு பலவகையான சட்டங்கள் காணப்படுகின்றன.

    இந்தியாவின் முன்னாள் பிரதமரும் இந்திய சுதந்திர போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பு உடையவராக இருந்தமையால் அவரது பிறந்த தினமான நவம்பர்14-ந் தேதியன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.

    இவரது பிறந்த தினத்தை இந்திய அரசு குழந்தைகள் தினமாக அங்கீகரித்துள்ளது. வருங்கால இந்தியாவின் சொத்துக்களான குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கமுடையதாக இத்தினம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    கற்றுத்தருவார்கள்

    ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் வடிவில் இறைவனே வாழ்கிறான் என்பது போல அந்த மழலைகளின் உலகம் மனிதர்களின் மன காயங்களுக்கு மருந்திடும். குழந்தை பருவத்தில் குழந்தைகள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ந்தால் தான் அவர்களது எதிர்காலம் சிறப்பானதாய் அமையும் என்பது நம்பிக்கையாகும்.

    இந்த குழந்தை பருவத்தில் குழந்தைகள் தமது சூழலில் இருந்து நிறைய கற்றுக்கொள்ளுவார்கள் அவை நல்ல சாதகமான விஷயங்களாக இருக்க வேண்டும்.

    அப்துல்கலாம்

    அன்னியர்களது ஆதிக்கத்தில் இருந்து போராடி வெற்றி பெற்ற இந்திய தேசமானது சுதந்திரமடைந்த வேளையில் பாரத பிரதமர் நேரு தனது கனவு இந்தியா குழந்தைகளின் கையிலே தங்கியிருக்கிறது என்பதை நன்கறிந்து அவர்களோடு நேரம் செலவிடுவதில் அதிக விருப்பம் காட்டினார்.

    அவரை போலவே கனவுகளின் நாயகன் அப்துல்கலாம் குழந்தைகளுக்கு கற்பிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டினார். இத்தகைய தலைவர்கள் அனைவருமே வருங்கால இந்தியா குழந்தைகளால் அமையும் என கனவு கண்டனர்.

    பல சட்டங்கள்

    இந்தியாவை பொறுத்தவரையில் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு பலவகையான சட்டங்கள் காணப்படுகின்றன. இவை அதிகம் குழந்தை உரிமைகள் எனும் பெயரில் அறியப்படுகின்றது.

    பாதுகாப்பான வாழ்விடம், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், விரும்பியவாறு கல்வி கற்கும் உரிமை, மகிழ்ச்சியாக விளையாடும் உரிமை என பல உரிமைகளும் சட்டங்களும் சட்டரீதியாக நடைமுறையில் உள்ளன. இவற்றை கடைப்பிடிக்காத பெற்றோர்களை கூட தண்டிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்பது சிறப்பான விஷயமாகும்.

    எதிர்கால தேசத்தைஆளும் குழந்தைகள்

    எதிர்கால தேசத்தைஆளவிருக்கும் இன்றைய குழந்தைகள் புத்திசாலித்தனமாகவும், புதுமையான ஆற்றல் உடையவர்களாகவும் வளர வேண்டும். இந்திய அரசாங்கம் குழந்தைகள் தினத்தை சிறப்பாக கொண்டாடுவதன் மூலமாக சில குறிக்கோள்களை அடைந்து கொள்ள முயல்கின்றது.

    குழந்தைகளின் முக்கியத்துவத்தையும் அவர்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பலமான ஒரு தேசத்தை கட்டியெழுப்பும் தமது குறிக்கோளில் உறுதியாக இருக்கின்றனர். இவற்றுக்கு பெற்றோர்களும் வலு சேர்க்க வேண்டும் என்பது அவர்களது நிலைப்பாடாகும்.

    பள்ளிக்கூடங்களில் கொண்டாட்டம்

    இந்த குழந்தைகள் தினத்தையொட்டி நாடெங்கும் விழாக்கோலமாக குழந்தைகள் கல்வி நிலையங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. ஒரு தேசத்தின் சொத்து களஞ்சியங்களில் இல்லை அவை பள்ளிக்கூடங்களில் உள்ளது.

    எனவே நாட்டின் அதிகாரிகளும் குழந்தைகளது பெற்றோர்களும் குழந்தைகளை பாதுகாத்து அவர்களை சிறப்பான நிலைக்கு கொண்டு வருவதன் மூலமாக நாட்டை சிறப்பானதாக கட்டியெழுப்ப முடியும்.

    • கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
    • மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    கையெழுத்து அழகாக இருந்தால் வாழ்க்கையும் அழகாக மாறும் என்பார்கள். அந்த அளவுக்கு கையெழுத்து மாணவர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. கையெழுத்து மோசமாக இருந்தால் அதை படிப்பவர்கள் புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கும். தேர்வில் அதன் தாக்கம் வெளிப்படும்.

    மோசமான கையெழுத்தால் மதிப்பெண்களை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பேனா கொண்டு எழுதும் நடைமுறை குறைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் மாணவர்களை பொறுத்தவரை கையெழுத்து முக்கியமானது. அதுதான் அவர்களின் மதிப்பெண்ணையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். கையெழுத்தை மேம்படுத்துவதற்கு உதவும் சில டிப்ஸ்கள் குறித்து பார்ப்போம்.

    * தினமும் எழுதி பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அது கையெழுத்தை மேம்படுத்துவதற்கு சிறந்த தொடக்கமாக அமையும். குழந்தைகள், மாணவர்களை பொறுத்தவரை வீட்டு பாடங்கள் எழுதுவதுடன் நிறுத்திவிடக்கூடாது. படிக்கும் பாடங்களை எழுதி பார்க்கலாம். அது நன்றாக நினைவில் பதிவதற்கு வழிவகுக்கும். புத்தகங்கள், பத்திரிகை செய்திகளை எழுதி பார்த்தும் பயிற்சி பெறலாம். இந்த விஷயத்தில் குழந்தைகளின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்களுக்குள்ளாகவே ஆர்வம் எழ வேண்டும். அதற்கேற்ப அவர்களை கவரும் வகையிலான எழுது பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அவர்கள் எண்ணத்தில் உதிக்கும் வார்த்தைகளை எழுதுமாறு ஊக்குவிக்கலாம்.

    * இவ்வளவு நேரத்திற்குள் எழுதி முடிக்க வேண்டும் என்று கால நிர்ணயம் செய்யக்கூடாது. அவ்வாறு நிர்பந்திப்பது அவசர அவசரமாக எழுதி பார்க்கும் மன நிலைக்கு தயார்படுத்திவிடும். முக்கியமான தேர்வுக்கு தயாராகும்போது வேண்டுமானால் சற்று வேகமாக எழுதி பார்க்க அனுமதிக்க வேண்டும். அந்த வேகம் எழுத்தின் தரத்தை பாழ்படுத்திவிடக்கூடாது. கையெழுத்து எப்போதும் மாறாமல் ஒரே நிலையில் இருப்பதற்கு ஏதுவாக பயிற்சி எடுத்துக்கொள்ளலாம்.

    * எழுதி பார்க்கும்போது குழந்தைகள் சரியான தோரணையில் அமர்ந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேஜையில் கைகளை வைத்தபடி நிமிர்ந்த நிலையில் அமர்ந்து எழுதுவதுதான் சரியான தோரணையாகும். எழுதும்போது மணிக்கட்டு பகுதியைவிட கைவிரல்களுக்குத்தான் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது பேனாவை கைவிரல்கள் அழுத்தி பிடித்திருக்க வேண்டும். அப்போதுதான் எழுத்து முழு வடிவம் பெறும். அழகாகவும் மாறும். கைவிரல்களும், பேனா முனையும் நேர் நிலையில் இருக்க வேண்டும். சில குழந்தைகள் எழுதும்போது கைகளை வளைப்பதுண்டு. இது சரியான தோரணை கிடையாது.

    * பேனா தேர்விலும் கவனம் தேவை. சரியான பேனாவை தேர்ந்தெடுத்தால்தான் எழுத்து வடிவம் அழகு பெறும். எழுத்தின் மீது ஈடுபாடும் அதிகரிக்கும். எழுதும்போது குழந்தைகளின் கைகள் நிதானமாக இருக்க வேண்டும்.

    * காகித தேர்வும் எழுத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்யும். அடிக்கோடிட்ட வரிகள் கொண்ட பேப்பரில் குழந்தைகளை எழுத வைப்பது பொருத்தமாக இருக்கும். எழுத்துக்கள் நேர் வரிசையில் இருப்பது உறுதிப்படுத்தப்படும்.

    * இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து போய்விட்டது. காலங்கள் கடந்தும் நினைவுகளை அசைபோடவைக்கும் அசாத்திய ஆற்றல் கடிதத்துக்கு உண்டு. குடும்பத்தை பிரிந்து தொலைதூரத்தில் படிக்கும், வேலை பார்க்கும் இளம் வயதினர் குடும்பத்தினர், உறவினர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கத்தை பின்பற்றலாம். அது அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை என்றென்றும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.

    • ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான குழந்தைப் பருவ அனுபவம் இருக்கும்.
    • இன்றைய தலைமுறையைச் சீர்படுத்துவது என்பது சற்று சிரமமானது.

    ஒவ்வொரு குழந்தைக்கும் தனது பெற்றோர் குறித்த கண்ணோட்டம் வெவ்வேறாக இருக்கும். ஆனால், அவர்களின் வெற்றிக்கும், நிறைவான வாழ்க்கைப் பயணத்துக்கும் பெற்றோரும், அவர்களது வளர்ப்பு முறையும்தான் படிக்கட்டுகளாக அமை கின்றன. அதுதான் ஒரு குழந்தை எவ்வாறு மற்றவர்களுடன் பேச, பழக, நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது. குழந்தைகளின் மனநலம், ஆரோக்கியம், நம்பகத்தன்மை, குடும்பம் மற்றும் சமூகத்துடனான உறவை மேம்படுத்த உதவுகிறது. இந்த உலகில் அனைத்து வேலையைச் செய்வதற்கும் அதுசார்ந்த தனிப்பட்ட பயிற்சி இருக்கிறது. ஆனால், குழந்தையை வளர்ப்பதற்கான பயிற்சி என்பது, சிறுவயதில் நாம் நமது பெற்றோரைப் பார்த்துத் தெரிந்துகொண்ட அனுபவமாக மட்டுமே உள்ளது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான குழந்தைப் பருவ அனுபவம் இருக்கும். இந்த அனுபவத்தைக் கொண்டு இன்றைய தலைமுறையைச் சீர்படுத்துவது என்பது சற்று சிரமமானது. இது சிறந்த பெற்றோராக நடந்துகொள்வதற்கும், அவர்களது கடமைகளைச் சரியாகச் செய்வதற்கும் உதவும்.

    வேலைச்சூழலில், பெற்றோரின் மன நிலையை புரிந்துகொண்டு, அவர்களுக்குக் குழந்தை வளர்ப்பு பற்றிய வழிகாட்டுதலை உருவாக்கிக் கொடுப்பதில் அதிகப்படியான சவால்கள் இருக்கும். ஒவ்வொரு பெற்றோரின் மனநிலையும், ஒவ்வொரு விதமாக இருக்கும். குழந்தைகளைச் சிறந்த முறையில் வளர்ப்பதற்காக, அவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்கு எந்த அளவுக்கு முயற்சிக்கிறார்கள்? அவர்களின் உணர்ச்சிகளையும், சூழலையும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை வகைப்படுத்துவதில் அதிக சவால்கள் இருக்கின்றன.

    அப்ப எல்லாம்.. என்று நாங்க குழந்தைகளை எப்படி வளர்த்தோம் என்று பெருமைப்பட்டாலும் அங்கும் நிறைய சிக்கல்கள் இருக்கவே செய்தன. பெண் – ஆண் குழந்தை பாகுபாடு தற்காலத்தில் வெகுவாக குறைந்து விட்டது. அது பூஜ்ஜியத்தை நோக்கி நகரவேண்டும். குழந்தை வளர்ப்பில் பெரும்பாலும் பெண்களின் பங்கே அதிகமாக உள்ளது. ஆண்களின் பங்கும் இன்னும் பெரும்பாலும் குறைச்சலாகவே உள்ளது.

    நாம் ஆண்டாண்டாக பெற்ற கல்வியும் தொழில்நுட்பமும் எப்படி குழந்தை வளர்ப்பில் வலுசேர்க்கப்போகின்றது என்பதில் கவனம் தேவை. தொழில்நுட்பம் நிறைய கவனச்சிதைவினை நோக்கிச்செல்கின்றது. நாமும் எதனை நோக்கி செல்கின்றோம் என்றே பலசமயம் புரிவதில்லை. குழந்தை என்னவாக வேண்டும் என்ற கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தால் அது ஒவ்வொரு முறையும் புதிய புதிய பரிமாணத்தினை எடுக்கும். சிறப்பாக வளர்க்க வேண்டும் என்பதில் சிறந்த என்பதற்கான அர்த்தம் கூர்மையாகிக்கொண்டே செல்லும்.

    வாழ்க்கை, வேலை என எதுவாக இருந்தாலும் தோல்வி ஏற்படுவது இயல்பானது. அதை நேர்மறையாக எடுத்துக்கொண்டு, தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து, அதில் இருந்து வெற்றிக்கான வழியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களையும், உங்கள் முயற்சிகளையும் முழுமையாக நம்புகிற நபரைத் தேர்ந்தெடுத்து, அவருடன் சேர்ந்து பயணிப்பதே வளமான எதிர்காலத்துக்கான சரியான பாதைக்கு வழிவகுக்கும்.

    • குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் விஷயங்களில் ஈடுபட வேண்டும்.
    • மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும்.

    குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான பொருட்களை கேட்டு அடம்பிடிப்பது இயல்பானது. அவர்கள் விரும்பிய விஷயங்களை செய்வதற்கும் அனுமதி கேட்பார்கள். அவற்றுக்கு மறுப்பு தெரிவிக்கும்பட்சத்தில் அழுது அடம்பிடிப்பார்கள்.

    அப்படி அழுது அடம்பிடித்த உடனேயே அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது தவறான செயலாகும். அவர்கள் விரும்பும் பொருட்கள், விஷயங்கள் ஏற்புடையதா? என்பதை உறுதிப்படுத்திய பின்னரே அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். அவை ஏற்புடையதாக இல்லாதபட்சத்தில் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறானது.

    எதற்காக மறுப்பு தெரிவிக்கிறீர்கள் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு விளக்கி புரியவைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் பிடிவாதம் அதிகரித்துவிடும். அது அவர்களுடைய செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும். பெற்றோர் மீதான நம்பிக்கையை இழக்கவும் வைத்துவிடும்.

    'நீ அழுது அடம்பிடிப்பதற்காக உன் விருப்பப்படி எதுவும் செய்ய மாட்டேன்' என்று அவர்களுடன் விவாதம் செய்வதும் கூடாது. அது பலனும் தராது. ஏனெனில் அதனை காதுகொடுத்து கேட்கும் மன நிலையில் அவர்கள் இருக்கமாட்டார்கள். அதனால் அது குறித்து பேசாமல் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்பும் விஷயங்களில் ஈடுபட வேண்டும்.

    அவர்களுக்கு பிடித்தமான மற்றொரு விஷயம் குறித்து பேசி, அதனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். அது அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு உதவும். அந்த சமயத்தில் அவர்களின் கோரிக்கையை மறுப்பதற்கான காரணத்தை விளக்கி புரியவைத்துவிடலாம். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வந்துவிடும்.

    • குழந்தைகள் தவறு செய்யும் போது சுட்டிக் காட்ட பெற்றோர் தவறி விடுகிறார்கள்.
    • குழந்தைகளின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.

    நவீன தொழில்நுட்ப காலத்தில் பிறந்து வளரும் குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பின் மூலம் நிறைய செய்திகளை தெரிந்து கொள்கிறார்கள். வயதிற்கும், மனவளர்ச்சிக்கும் தொடர்பு இல்லாத அளவிற்கு பல நேரங்களில் நடந்து கொள்கிறார்கள். ஆனால் உறவு குறித்த புரிதலோ, வாழ்வின் நடைமுறை சிக்கல்களோ அறிந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

    குழந்தைகள் தவறு செய்யும் போது சுட்டிக் காட்ட பெற்றோர் தவறி விடுகிறார்கள். இதனால் எது சரியானது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ள முடியாமல் போய் விடுகிறது. ஏதோ ஒரு கோபத்தில் லேசாக கண்டித்தாலே தாங்கி கொள்ள முடியாத மனநிலைக்கு ஆளாகின்றனர்.

    குழந்தை எது கேட்டாலும் அதை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்த விரும்புகிறார்கள். குழந்தைகளை கஷ்டம் தெரியாமல் வளர்க்க வேண்டும் என்று பெற்றோர் நினைக்கிறார்கள். இந்த இடத்தில் தான் குழந்தைகளின் உலகம் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. தான் நினைத்ததை அடைய அடம் பிடிக்கும் குழந்தைகளால் யாரோடும் இணங்கி செல்லவோ, விட்டுக் கொடுத்து போகவோ முடிவது இல்லை.

    குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து தான் எதையும் முதலில் கற்றுக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகள் நம்பிக்கையோடு அணுகும் வகையில் பெற்றோரின் செயல்பாடு இருக்க வேண்டும். அவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள் எந்த பிரச்சினை என்றாலும் தீர்வு கேட்டு அணுகுவார்கள். மனரீதியாக சிரமப்படும் குழந்தைகளுக்கு நம்பிக்கை அளித்து தேற்ற முடியும். தோல்வியே கண்டாலும் தொடர்ந்து முயன்று வெற்றி வீரர்களாக வலம் வர குழந்தைகளை தயார்படுத்த முடியும்.

    • குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன.
    • கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

    சுகாதாரமற்ற குடிநீர், சுகாதார சீர்கேடு, தூய்மையின்மை போன்றவைதான் நோய்களுக்கு அடிப்படை. இவற்றின் மூலமே பலவிதமான தொற்றுநோய்கள் பரவுகின்றன.

    குறிப்பாக. உலகம் முழுவதும் தினமும் வாந்திபேதி நோய்க்கு ஆளாகி 5 வயதுக்கு உட்பட்ட 1,400 குழந்தைகள் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

    தூய்மையின்மை காரணமாகவும், கை சுத்தம் இல்லாமல் இருப்பதும் நோய்த்தொற்று ஏற்பட வசதியாக உள்ளது. அதனால் தூய்மையை கடைபிடித்தாலே வாந்தி, பேதியை ஏற்படுத்தும் நோய்த் தொற்றுகளில் இருந்து தப்பித்துவிடலாம். அதற்கு மிகவும் எளிய வழி, வெளியே எங்காவது சென்று வந்த பிறகு, கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவுவதுதான்.

    பல குழந்தைகள் நோய்த்தொற்றுக்கு ஆளாக மருத்துவமனைகளும் காரணமாக உள்ளன. மருத்துவமனையில் உள்ள குழந்தைகளையும் நோயாளிகளையும் கூட்டம் கூட்டமாக பார்க்கச் செல்லும் உறவினர்களும் இதற்கு ஒரு காரணம். மேலும் கழிவறை, குளியல் அறை, பொது இடங்களைப் பயன்படுத்தும் போதும் குழந்தைகள் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறார்கள். எனவே அதுபோன்ற இடங்களுக்கு செல்லும்போது கைசுத்தம் மிக அவசியம்.

    கை கழுவுவதன் அவசியத்தை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும். குழந்தைகள் மட்டுமல்லாமல், பெரியவர்களும் கை கழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கை கழுவ வேண்டும்.

    தாய்மார்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போதும், பால் புகட்டும்போதும், உணவு ஊட்டும்போதும், குழந்தைகளின் துணி, உடைகளை கையாளும்போதும் கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும். அப்படிச்செய்தால் நோய் பாதிப்பின்றி, ஆரோக்கியமாக வாழலாம்.

    கை கழுவுவதன் அவசியம் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உலகக் கை கழுவும் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள், பள்ளிக்கூடங்களில் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்காக இந்த நாள் ஏற்படுத்தப்பட்டது.

    • மாணவர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
    • குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும்.

    கோவை கே.ஐ.டி.- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரி துறை தலைவர் (இ.இ.இ.) பேராசிரியை மைதிலி கூறியதாவது:-

    பள்ளி படிப்பு முடிந்தது கல்லூரிக்குள் வரும் மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது. நல்ல வேலை கிடைக்குமா என்ற கவலையும் ஏற்படுகிறது. கல்லூரி படிப்பு தொடர்பாக பெற்றோர் தங்களின் விருப்பம் மற்றும் முடிவுகளை மாணவர்கள் மீது திணிக்க கூடாது. அதை தவிர்க்க வேண்டும்.

    மாணவர்கள் விரும்பும் படிப்பில் சேர முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். முதல் மதிப்பெண் எடுக்க வற்புறுத்துவதால் மாணவர்கள் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடும் நிலை உள்ளது.

    மதிப்பெண் அவசியம் என்றாலும் சாதனை படைப்பதற்கு தன்னம்பிக்கை, தனித்திறன்கள் மிகவும் முக்கியம். குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுப்பதோடு பெற்றோர் அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். குடும்பத்தின் நிலை தெரியும் வகையில் குழந்தைகளுக்கு வளர்க்க வேண்டும்.

    மாணவர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஆனால் தங்களின் மனஉணர்வுகளை நண்பர், உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் மனநிலை அறிந்து பெற்றோர் உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் சமமாக நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவர்களின் ஆங்கில வாசிப்பு, கணிதம் பாடங்களில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
    • குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் நல்லதுதான்.

    கொரோனா நோய்த் தொற்று குறைந்தபோதிலும், அதனால் விளைந்த பாதிப்புகள் ஒவ்வொரு துறையிலும் மறைந்தே இருக்கத்தான் செய்கின்றன.

    தொழில், கல்வி, சுகாதாரத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருந்து வருவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். அதில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகளும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

    கல்வியைப் பொறுத்த அளவில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    அதிலும் ஆரம்பக் கல்வியை தொடங்கும் மாணவர்களின் கல்வித் திறனே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை பல்வேறு தரப்பிலான ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

    பல குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படைகூட தெரியாத நிலை இருப்பது வேதனை அளிப்பதாக அவைகள் சுட்டிக்காட்டுகின்றன.

    இதற்கு முக்கிய காரணம், கொரோனா காலத்தில் 19 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போனதுதான். அதனால் 1-ம் வகுப்பு பாடங்கள் பற்றி முழுமையாக தெரியாமலேயே 2-ம் வகுப்பிற்கும், அதுபோல் 2-ம் வகுப்பைப் படிக்காமலே 3-ம் வகுப்புக்கும் குழந்தைகள் தாவி வந்திருக்கிறார்கள்.

    இதனால் ஏற்பட்ட கற்றல் இடைவெளியால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியின் பலன்களை குழந்தைகள் முழுமையாகப் பெறவில்லை.

    எண்ணும் எழுத்தும் திட்டம்

    இவ்வாறு கல்வியில் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் கற்றல் இடைவெளியைச் சீர்செய்வது, கல்வித்துறையின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது.

    அதற்காக உருவானதுதான், எண்ணும் எழுத்தும் திட்டம். 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது.

    எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு அந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்தது.

    அதை செயல்படுத்த, தனியாக ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.) மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அரும்பு, மொட்டு, மலர்...

    குழந்தைகளின் கற்றல் இடைவெளியை அடையாளம் கண்டு அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் வகையில் அவர்கள், "அரும்பு, மொட்டு, மலர்" என்று 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள்.

    அரும்பு என்பது படிக்கத் தெரியாத குழந்தைகளையும், மொட்டு என்பது கொஞ்சம் படிக்கத் தெரிந்த குழந்தைகளையும், மலர் என்பது நன்கு படிக்கத் தெரிந்த குழந்தைகளையும் குறிக்கிறது.

    இதில் அரும்பு, மொட்டு வகையில் இருக்கும் குழந்தைகளை மலராக பூக்க வைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் ஒரே நோக்கம் ஆகும்.

    ஆடல், பாடல், கதை சொல்லல்...

    தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களை கற்றுக் கொடுக்கும் போது, குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் ஆடல், பாடல், கதை சொல்லல், வாசித்தல், செயல்பாடு, படைப்பு, பொம்மலாட்ட களங்கள் போன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.

    • உணவை வீணாக்க வேண்டாம் என்று பொதுவாகச் சொல்வது தீர்வாகாது.
    • எந்த விஷயம் குறித்தும் அவர்களிடம் சின்னச்சின்ன கேள்விகள் எழுப்பலாம்.

    நம் குழந்தைகளின் பிஞ்சு மனதிலேயே நல்ல பழக்கங்களை விதைக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு அவசியம். 

    அனுபவங்களின் வழியாகக் கற்றுக்கொள்பவையே குழந்தைகளின் கேரக்டரை வடிவமைக்கின்றன. பிறந்தது முதல் ஆறு வயது வரை மனதில் விதைக்கப்பட்ட விஷயங்களே வளர்ந்து, அவர்களை வாழ்க்கை முழுக்க வழிநடத்துகின்றன.

    இந்த வயதில் நாம் எதைச் சொன்னாலும், அவர்கள் எதிர்க் கேள்வியின்றி கேட்டுக்கொள்கிறார்கள். நாம் சொல்வது உண்மையாக இருக்கும் என்று நம்புகின்றனர்.

    * குழந்தைகளுக்கு முதலில் பழக்கப்பட வேண்டியது பல் துலக்குவதைப் பற்றியே. ஆரம்பத்தில் இதற்கென நேரம் ஒதுக்கி மெனக்கெட வேண்டும். நீங்கள் அவர்கள் முன் பல்லைத் தேய்த்துக் காட்டுங்கள். அதற்கு முன்பு நீங்கள் பல்தேய்க்கும் முறை சரிதானா என்பதை பல் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். நாம் சரியாகச் செய்தால்தான் குழந்தைகளுக்கும் அந்த முறை கைக்கூடும்.

    * எந்த விஷயத்தைச் சொல்லிக் கொடுக்கும்போதும் அதை எதற்காகச் செய்கிறோம். செய்யாவிட்டால் என்ன ஆகும் என்பதையும் விளக்கமாகச் சொல்லவும். குறிப்பாக, ஏன் இரண்டு வேளை குளிக்க வேண்டும், அப்படிக் குளிப்பதால் என்ன நன்மை என்பதைச் சொல்லலாம். குளிப்பதையே ரசனையான அனுபவமாக மாற்றலாம். குளித்த பிறகு மனமும் உடலும் அடையும் உற்சாகத்தைப் புரிந்துகொள்ளச் செய்யலாம்.

    * மிகச் சிறு வயதிலேயே தானாகச் சாப்பிடுவது, உடுத்துவது, தூங்குவது என எல்லாவற்றையும் திணிக்காமல் அவர்களிடம் அனுமதி கேட்கலாம். எந்த விஷயம் குறித்தும் அவர்களிடம் சின்னச்சின்ன கேள்விகள் எழுப்பலாம். அந்தக் கேள்விகளின் வழியாகவே, குழந்தைகளின் கற்றல் துவங்குகிறது. எந்த விஷயத்தையும் ஆர்வத்துடன் தெரிந்துகொள்ள இதுபோன்ற விஷயங்களைப் பெற்றோர் பழக்கப்படுத்தலாம்.

    * பெரும்பாலான வீடுகளில் காலையில் எழுவதும் பள்ளிக்குக் கிளம்புவதும் போர்க்கோலமாக இருக்கும். இது அவ்வளவு சிக்கலான விஷயமில்லை. தூங்கப்போகும் முன்பு, வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் அடுத்த நாள் வேலைகள், அதற்கான நேரத் திட்டமிடல் பற்றிப் பேச வேண்டும். பள்ளிக்குக் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும் எனில், உங்கள் குழந்தை எந்த நேரத்தில் எழுந்து என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், எல்லோருக்குமே காலை நேரம் இனிமையாக மாறும்.

    * தினமும் குறிப்பிட்ட நேரத்தில் காலைக்கடன் கழிப்பதைப் பழக்கப்படுத்த வேண்டும். இதைச் செய்யாமல்விடுவதே பல நோய்களுக்குக் காரணம். காலை வேளையில் இதற்கான நேரமும் அவசியம். சிறுநீர் மற்றும் காலைக்கடன் கழிப்பதை அடக்குவதால், உடல் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து குழந்தைகளுக்குப் புரியும்படி சொல்லலாம். தினமும் குழந்தைகள் எழுந்ததும் மிதமான சூட்டில் சுடுநீர் கொடுத்து பத்து நிமிடம் கழித்துக் குளிக்க வைத்தால், காலைக் கடன் பிரச்னை என்பது இருக்கவே இருக்காது.

    * தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டை வைத்து வாயை மூடிக்கொள்ளப் பழக்க வேண்டும். குழந்தைகளின் இந்தச் செயல்களைப் பார்த்து, அந்தப் பழக்கம் இல்லாத பெரியவர்களும் மாறிக் கொள்வார்கள்.

    * விடுமுறை நாள்களில் வீடு, டாய்லெட் சுத்தம் செய்வது, தேவையற்ற பொருள்களைத் தேடிப்பிடித்துக் கழிப்பது போன்றவற்றையும் அவர்களுடன் இணைந்து செய்வது அவசியம். தனது இடத்தையும் தன்னையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர இது வாய்ப்பாக அமையும்.

    * உணவை வீணாக்க வேண்டாம் என்று பொதுவாகச் சொல்வது தீர்வாகாது. உணவு தயாரிக்கும்போது சின்னச் சின்ன வேலைகளிலும் குழந்தைகளின் பங்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். உணவு டைனிங் டேபிளுக்கு வருவதற்கு முன்பு அதற்காகச் செய்த உழைப்பைக் குழந்தைகள் புரிந்துகொள்ளச் செய்தால், உணவை வீணாக்கும் பழக்கம் மறைந்துவிடும்.

    • நாய் இனங்களும் குழந்தைகளுடன், நட்பாக விளையாடக்கூடியவை.
    • குழந்தைகளுக்கு, எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது.
    • குழந்தைகளுடன் அதிகம் நட்புறவு காட்டும்.

    நாய்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானோருக்கு பிடித்தது, நன்கு புசு... புசு... என்று இருக்கும் நாய்கள் தான். குறிப்பாக இந்த மாதிரியான நாய்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஏனெனில் இந்த வகை நாய்களுக்கு ரோமமானது அதிகமாக இருக்கும். ஆகவே இவைகள் பார்ப்பதற்கு பொம்மை நாய்க் குட்டி போலவே இருப்பதால், அவற்றுடன் குழந்தைகள் நன்றாக விளையாடுவார்கள். அதேபோல கோல்டன் ரிட்ரைவர், லாப்ரடார், பூடில், சிஸ்டூ, கோமண்டர், கோம்பை... போன்ற நாய் இனங்களும் குழந்தைகளுடன், நட்பாக விளையாடக்கூடியவை. இவற்றால் குழந்தைகளுக்கு, எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது.

    குழந்தைகளுக்கு ஏற்ற, குழந்தைகளுடன் விளையாடக்கூடிய நாய் இனங்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா..!

    1. சிஸ்டூ (shiz tuz)

    இந்த வகை குட்டி நாய்கள்தான், குழந்தைகளின் செல்லப்பிராணி பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது. இவை அழகானவை. துறுதுறுவென இருப்பவை. பிடித்து விளையாடும் அளவிற்கு, முடிகள் வளர்வதால் குழந்தைகளின் சிகை அலங்கார விளையாட்டிற்கு ஏற்றவை. வீட்டில் வளர்ப்பது தொடங்கி, வாக்கிங் அழைத்துச் செல்வது, கடற்கரையில் விளை யாடுவது, வெளி இடங் களுக்கு சென்றால் கையோடு தூக்கிச் செல்வது... என எல்லா வகையிலும், இது 'பெஸ்ட் சாய்ஸ்'.

    விலை: ரூ.10 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.

    2. பூடில் (poodle)

    இதுவும், குட்டியாக இருக்கும் நாய்தான். சிஸ்டூ அளவிற்கு பிரபலம் இல்லை என்றாலும், தமிழ்நாட்டின் நிறைய வீடுகளில் பூடில் வளர்கிறது. சிஸ்டூவின் செல்ல சேட்டைகள், எல்லாமும் இந்த பூடில் நாய் இனத்திலும் எதிர்பார்க்கலாம். குழந்தை களோடு விளையாடுவது, பாசம் காட்டுவது... என உயிருள்ள விளையாட்டு பொம்மை போல இது செயல்படும்.

    விலை: ரூ.40 ஆயிரத்தில் தொடங்குகிறது

    3. கோல்டன் ரிட்ரைவர் (Golden Retriever)

    இவை வெளிநாடுகளில், பெரும்பாலான குடும்பங்களில் வளர்க்கப்படும் வகை. குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோரிடமும் சிறப்பாக விளையாடக்கூடியது. இந்த நாயின் ரோமங்களை வெட்டாமல் இருந்தால், இது மிகவும் அழகாக புசு... புசு.. என்று இருக்கும். இவை ரிட்ரைவர் வகையை சார்ந்தவை. அதாவது ஏதாவது ஒரு பொருளை தூக்கி எறிந்தால், அதை தேடி சென்று கவ்விக் கொண்டு வந்து நம்மிடமே சேர்த்துவிடும்.

    விலை: ரூ.15 ஆயிரத்தில் தொடங்குகிறது

    4. லாப்ரடார் (Labrador retriever)

    இது ரொம்பவும் கிளாசிக் நாய் இனம். குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான நாய் என்று சிந்தித்தாலே, இந்த லாப்ரடார் ரிட்ரைவர் வகைகள்தான், முதலில் நினைவில் தோன்றும். வெள்ளை, கருப்பு வண்ணங்களில் இவை பெரும்பாலான வீடுகளில் வளர்ந்து வருகிறது.

    விலை: ரூ. 7 ஆயிரத்தில் தொடங்குகிறது

    5. கோம்பை (kombai)

    இது நம் தமிழ்நாட்டின் அடையாளம். நாட்டு நாய்களில் இதுவும் ஒன்று. மற்ற எல்லா நாட்டு நாய்களை விடவும், இவை குழந்தைகளுடன் அதிகம் நட்புறவு காட்டும். பாசமாக பழகும். குழந்தைகள் மட்டுமல்ல, குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி, விசுவாசமாக இருக்கும்.

    விலை: ரூ.10 ஆயிரத்தில் தொடங்குகிறது

    ×