என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
குழந்தை பராமரிப்பு
- தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடும்.
- குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது தவறான பழக்கம்.
ஒவ்வொரு பெற்றோருமே குழந்தைகளை நல்வழிப்படுத்தி சிறந்த ஆளுமைத்திறன் கொண்டவர்களாக வளர்த்தெடுக்கவே முனைப்பு காட்டுகிறார்கள். குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை அன்புடன் சுட்டிக்காட்டி திருத்த வேண்டுமே தவிர கடுமையான சொற்களை பிரயோகித்து அவர்களை வசைபாடக்கூடாது. அது அவர்களை மன ரீதியாக பலவீனமாக்கிவிடும். என்னென்ன வார்த்தைகளை கூறி குழந்தைகளை திட்டக்கூடாது என்று தெரியுமா?
'உன் பிரச்சனையை கேட்க எனக்கு நேரமில்லை'
குழந்தைகளின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்காமல் அலட்சியப்படுத்துவது, அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அசட்டையாக இருப்பது, அவர்களின் கருத்துக்களை நிராகரிப்பது, தான் குடும்பத்தில் முக்கியமில்லாத நபராக, சுமையாக இருப்பவராக குழந்தைகளை சிந்திக்க வைத்துவிடும். தங்களை ஆதரவற்றவர்களாக எண்ணக்கூடும்.
'நீ புத்திசாலி என்று உன் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். அதற்குரிய தகுதி உனக்கு இல்லை'
உன்னை அதிபுத்திசாலி. எந்த பிரச்சனையையும் எளிதாக சமாளித்துவிடுவாய். அறிவாளி என்று நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் நீ இப்படி முட்டாளாக இருப்பாய் என்று எதிர்பார்க்கவில்லை.
உன் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது என்பது போன்ற கடுமையான வார்த்தைகளை உபயோகிக்கக்கூடாது. அது உணர்ச்சி ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் குழந்தையின் தன்னம்பிக்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.
'நீ புத்திசாலி இல்லை'
குழந்தையின் அறிவுத்திறன் பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் அவர்களின் கற்றல் ஆர்வத்தை பாதிக்கக்கூடும்.
'நீ அவரை போன்றவர். எதற்கும் உதவ மாட்டாய்'
குடும்பத்தில் எவருடைய பேச்சையும் கேட்காமல் தன் விருப்பப்படி செயல்படும் நபர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களுடன் ஒப்பிட்டு, 'நீயும் அவரை போன்றுதான் எதற்கும் உதவ மாட்டாய்.
நீ வாழ்க்கையில் முன்னேறுவது கஷ்டம்தான்' என்பது போன்ற வார்த்தைகளை குழந்தைகளிடம் கூறக்கூடாது. அது அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும். தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாக்கிவிடும்.
'நீ எப்போதும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறாய்'
குழந்தையை தொந்தரவு செய்பவர், எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனையை ஏற்படுத்திக்கொண்டே இருப்பவர் போல் சித்தரித்து பேசுவது அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும். அவர்களின் நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்தி, தவறான வழிக்கு செல்வதற்கு வழிவகை செய்துவிடும்.
'நீ எதற்கும் தகுதி இல்லாதவன்'
உன்னிடம் எல்லா திறமையும் இருக்கிறது. எதையும் சிறப்பாக செய்துவிடுவாய் என்று எண்ணி இருந்தேன். உன்னால் சின்ன விஷயத்தை கூட எளிதாக கடந்து வர முடியவில்லை.
எதற்கும் தகுதி இல்லாதவன் என்று கூறி திட்டக்கூடாது. அது குழந்தை தன்மீது கொண்டிருக்கும் சுய நம்பிக்கையை கேள்விக்குரியதாக்கிவிடும். தான் எந்த தகுதியும் இல்லாதவன் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
'நீ அந்த குழந்தையை போல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்'
குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுவது தவறான பழக்கம். அந்த குழந்தையை பார். எப்படி நன்றாக படிக்கிறது. நல்ல திறமைசாலியாகவும் இருக்கிறது.
அந்த குழந்தையை போல் நீயும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என கூறி மன நெருக்கடிக்கு ஆளாக்கக்கூடாது. அது அவர்களின் சுய மதிப்பை குறைத்துவிடும். தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு எந்த முயற்சியிலும் ஈடுபடுவதற்கு ஆர்வம் இல்லாதவர்களாக மாறிவிட நேரிடும்.
'உன்னால் ஏன் உன் சகோதர, சகோதரிகள் போல் இருக்க முடியவில்லை'
உடன் பிறந்தவர்களுடன் தொடர்ந்து ஒப்பிட்டு பேசுவது போட்டி மனப்பான்மையையும், பொறாமை உணர்வையும் உருவாக்கிவிடக்கூடும். எப்போதும் சண்டையிடும் மனோபாவம் அவர்களுக்குள் ஏற்பட்டுவிடும்.
'அழுவதை நிறுத்து. அதனால் எதுவும் மாறிவிடப்போவதில்லை'
செய்த தவறுக்கு மனம் வருந்தி குழந்தை அழும்போது கடுமையாக பேசக்கூடாது. அது குழந்தையின் உணர்ச்சிகளை நாம் புரிந்து கொள்ளாமல் வசைபாடுவது போலாகிவிடும். தன் உணர்வுக்கு உரிய மதிப்பு அளிக்கவில்லை என்று வேதனைப்படுவார்கள்.
- பிள்ளைகள் மொபைல் போன் நோண்ட கூடாது என்று தாய்மார்கள் விரும்பினால் அவர்கள் சீரியல் பார்க்கக்கூடாது.
- பிள்ளைகள் குற்றவாளிகள் இல்லை அவர்கள் சமூகத்தின் நெருக்கடிக்குள் இருக்கிறார்கள்
பெற்றோர்கள் வீட்டில் சீரியல் பார்த்தால் பிள்ளைகள் எப்படிப் படிப்பார்கள்? என்று நீயா நானா புகழ் கோபிநாத் கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் உரையாற்றிய கோபிநாத்,
ஒரு குழந்தையை தந்தை மேலே தூக்கிப்போட்டு பிடிக்கும்போது அது சிரித்துக்கொண்டே மேலே சென்று சிரித்துக்கொண்டே கீழே வரும். தந்தை அவ்வாறு செய்யும்போது தாய் கேள்வி கேட்பார் 'ஏங்க விட்டுட மாடீங்களே' என்று, ஆனால் குழந்தை கேட்காது ஏனென்றால் அதற்கு தெரியும் தனது தந்தை போகும் தன்னை விடமாட்டார் என்பது எனவே தான் அது சந்தோசமாக மேலேயும் கீழேயும் சென்று வருகிறது.
மாணவர்களே நீங்கள் யார் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது உங்களின் கேரக்டர்க்தான் முடிவு செய்யும். உங்களது உழைப்பையும் வெற்றியையும் தொடர்புப்படுத்துவது ஒழுக்கம், 2000 த்திலும் அதுதான் 3000 திலும் அதுதான். உலகம் அழியும் வரை அதுதான். டிசிப்ளின் இஸ் த கீ .
மகனோ மகளோ காலை 5 மணிக்கு எழுந்து எக்சர்சைஸ் பண்ண வேண்டும் என்று தந்தை ஆசைப்பட்டால் அவரும் அந்நேரம் எழுந்திருக்க வேண்டும். பிள்ளைகள் மொபைல் போன் நோண்ட கூடாது என்று தாய்மார்கள் விரும்பினால் அவர்கள் சீரியல் பார்க்கக்கூடாது. நீங்கேள சீரியல் பார்த்தால் பிள்ளைகள் போன் தன பார்க்கும். பிள்ளைகளுடன் பெற்றோர்கள் பேச வேண்டும். இல்லையென்றால் அவர்கள் போனில் வெளியில் தான் தொடர்பை தேடிக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும்.
அவர்களுக்குப் பேச யாரும் இல்லாத சூழ்நிலையை உருவாக்கக்கூடாது. அவர்களைத் தூரத்திலிருந்து பெற்றோர்கள் கவனிக்க வேண்டும். மாணவர்கள் ஆசியர்களுடன் உரையாட வேண்டும். இன்று அதற்கான சூழல் இல்லாமல் ஆகிவிட்டது. அதேபோல் பிள்ளையின் வளர்ப்பில் தந்தையின் பங்கும் இருக்க வேண்டும். வேலை பார்த்து காசு கொண்டு வருவது மட்டும் அவர்களின் வேலையாக இருக்கக்கூடாது.
பிள்ளைகள் குற்றவாளிகள் இல்லை அவர்கள் சமூகத்தின் நெருக்கடிக்குள் இருக்கிறார்கள், வீட்டுக்குள் உங்களை பார்த்துத்தான் அவர்கள் வளர்கிறார்கள், அவர்கள் உங்களின் பிள்ளைகள் மட்டுமல்ல . இந்த சமூகத்துக்குச் சொந்தமானவர்கள் எனவே அவர்களை வளர்ப்பதில் கவனம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- நன்றாக பசியெடுத்து, நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.
- நடப்பது, நமது உடலுக்கு, கால்களுக்கு, மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.
விளையாட்டு, உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி, சீரான இயக்கத்துக்கு உதவுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையையும் தருகின்றன.
நன்றாக பசியெடுத்து, நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கிறது. எனவே, நமது அன்றாட இயக்கங்களில், கடின உழைப்பு, விளையாட்டு போன்ற காரணிகளையும், யோகா, தியானம் போன்ற அம்சங்களையும் மேற்கொள்வது நல்லது.
விளையாட்டு பயிற்சிகள் இல்லாத சமயங்களில், நடைபயணம், நடைப்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நடைப் பயிற்சியால், ரத்த ஓட்டம் எல்லா திசுக்களிலும் மேம்படுவதுடன், உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது. சுறுசுறுப்பு, வளர்சிதை மாற்றும் அதிகரித்து, ஜீரண சக்தி மேம்படுகிறது. நடப்பது, நமது உடலுக்கு, கால்களுக்கு, மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. உடல் வலிமைக்கு வித்திடுகிறது.
* அதிகாலையில் நடைபயணம் ஏன்..?
அதிகாலையில் எழுந்து நடக்க வேண்டும் என்று, எதற்காக வலியுறுத்துகிறார்கள் என்றால், சுத்தமான காற்றை சுவாசிக்க வழி வகுக்கும். அதிகாலையில் எழுந்தாலே, அன்றைய நாளின் சோம்பலை முற்றிலுமாக தவிர்க்க முடியும். பள்ளிகளில், கவனத்தை செலுத்த வாய்ப்பு ஏற்படும். சிறுகுழந்தைகள் மத்தியிலும், இதே நடைமுறையை, மெல்ல மெல்ல பழக்கப்படுத்தினால், அவர்களும் நாளடைவில், தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த தொடங்குவர்.
இதையெல்லாம் என்னால் செய்ய முடியாது என்றாலும் கூட, வீட்டு வளாகத்தில் சிறிய தோட்டம் அமைத்து, அதன் பணியில் களமிறங்கினால், வேலை செய்த திருப்தியும், தரமான காய்கறிகள் கிடைத்த மகிழ்ச்சியும் கிடைக்கும்.
- குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை மட்டுமே டையப்பர் பயன்படுத்தலாம்.
- பயன்படுத்தப்பட்ட டயாப்பர்களை தகுந்த முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு டயாப்பர் பயன்படுத்தப்படும் பொழுது அவர்களுடைய மென்மையான சருமத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அந்த சரும பாதிப்பு என்பது எரிச்சலை ஏற்படுத்தி அரிப்பை உண்டாக்குவதால் குழந்தை அசவுகரியமாக உணர்வதன் காரணமாக அழுகிறது.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும், பாதுகாப்பான முறையிலும் டயாப்பரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து மருத்துவ ஆலோசகர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
டயப்பரை நான்கு மணிநேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். குழந்தைகள் மலம் கழித்ததை கவனித்து எச்சரிக்கையாக அதை மாற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் எளிதாக நோய்த்தொற்று ஏற்படக்கூடும். டயாப்பர் கிருமித்தொற்றைத் தடுக்க பயன்படுத்தும் ஆன்டிசெப்டிக் கூட குழந்தைகளின் மென்மையான சருமத்தை பதம் பார்த்து விடலாம்.
அந்த நிலையில், குழந்தையின் சருமம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து அதற்கு ஏற்ற டயாப்பரை மருத்துவர்கள் ஆலோசனை பெற்று பயன்படுத்த வேண்டும். அதன் பின்னர் டயாப்பரை முறையாக பயன்படுத்தி வரும்பொழுது குழந்தைகளின் தோலில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
டயாப்பரை சுற்றியுள்ளது சருமப் பகுதிகளை தொடும்பொழுது குழந்தை அழும்போதோ, டயப்பர் மாற்றும் போதோ குழந்தைகள் அழக்கூடும். இந்த நிலைகளில் டையப்பர் பயன்பாடு காரணமாக குழந்தையின் சருமம் பாதிக்கப்பட்டு இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
அந்த நிலையில் தொடக்க கட்டத்திலேயே தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகளின் சருமத்தில் அரிப்பு ஏற்பட்டு சிவந்த நிலையில் ரத்த கசிவும் உருவாகலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
வயிற்றுப்போக்கு நோயால் குழந்தைகள் பாதிக்கப்படும் பொழுது பயன்படுத்தப்படும் டயப்பர் மூலமாகவும் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். அத்துடன் டயாப்பரை இறுக்கமாக அணிவதன் மூலமாகவும் குழந்தையின் சருமம் பாதிக்கப்படுகிறது.
குழந்தைகளுடைய சருமம் மிகவும் உணர்வு திறன் கொண்டது அதனால் டயாப்பரில் உள்ள பல்வேறு ரசாயன பொருட்கள், துணி போன்றவை குழந்தைகளின் சருமத்துக்கு ஏற்றதாக இருப்பதில்லை. அதனால் குழந்தையின் சரும நிலை பற்றி அறிந்து அதற்கு ஏற்ற டயாப்பரை பயன்படுத்துவது நல்லது.
பகல் முழுவதுமே டையாப்பரை பயன்படுத்தும் பழக்கத்தை தவிர்த்து அவ்வப்போது குழந்தைகளின் சருமத்திற்கு சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் கிடைக்கும் படி அவர்களை சுதந்திரமாக விட வேண்டும்.
பாதுகாப்பான டயாப்பர் பயன்பாடு குறித்து மருத்துவ ஆலோசகர்கள் தெரிவித்த குறிப்புகள் கீழே வருமாறு :-
குழந்தைகளுக்கு இரண்டு வயது வரை மட்டுமே டையப்பர் பயன்படுத்தலாம். அதற்குப் பிறகு டாய்லெட் பயன்படுத்துவதற்கு பழக்கப்படுத்தி விடுவது நல்லது.
வெளியூர்களுக்கு செல்லும் பொழுது அல்லது வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது மட்டும் குழந்தைகளுக்கு டயாப்பரை பயன்படுத்தும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
முடிந்தவரை பகல் நேரங்களில் டயாப்பரை பயன்படுத்தாமல் இரவு நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம். வாசனை கொண்ட டயாப்பர்கள் சுகாதாரத்திற்கு ஏற்றதாக இல்லாமல் போகலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
ஒருமுறை பயன்படுத்திவிட்டு அந்த டயாப்பரை நான்கு மணி நேரம் கழித்து அகற்றும் பொழுது குழந்தை மலம் அல்லது சிறுநீர் கழிக்கவில்லை என்பதற்காக அதே டயாப்பரை மீண்டும் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட டயாப்பர்களை தகுந்த முறையில் அப்புறப்படுத்த வேண்டும். குழந்தைகள் அவற்றை வைத்து விளையாடும் வகையில் வீடுகளில் போட்டு வைக்கக்கூடாது.
- வாசிப்பு பழக்கத்தை வழக்கமாக்கும்போது புதிய புதிய சொற்கள், வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.
- புத்தகம் வாசிப்பது மனதளவில் நெருக்கமாக உணர வைக்கும்.
இன்றைய டிஜிட்டல் யுகம் பொழுதுபோக்குக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டிருப்பதால் பலரும் அதிலேயே மூழ்கி நேரத்தை பாழ்படுத்திக்கொள்கிறார்கள். அதனால் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. வாசிப்பு பழக்கத்தை வாழ்வின் ஒரு அங்கமாக பின்பற்ற வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்காக காரணங்கள் குறித்தும், வாசிப்பு பழக்கம் ஏன் அவசியமானது என்பது குறித்தும் பார்ப்போம்.
அறிவை அளிக்கும்
ஒவ்வொரு புத்தகங்களில் இடம் பெறும் தலைப்பும் ஏதோ ஒரு வகையில் கற்பனை செய்து பார்க்கக்கூடிய பரந்த அளவிலான அறிவை வழங்குகின்றன. அறிவியல், வரலாறு, தத்துவம் பற்றிய புத்தகங்களை படிக்கும்போது அவை சார்ந்த விஷயங்களை ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் ஆர்வத்தை வளர்த்தெடுக்கும். அது சார்ந்த தேடலில் மனதை ஈடுபட வைக்கும்.
சொற்களஞ்சியம்
வாசிப்பு பழக்கத்தை வழக்கமாக்கும்போது புதிய புதிய சொற்கள், வார்த்தைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தகவல் தொடர்பு திறனையும், புரிதலையும் மேம்படுத்தும்.
அழுத்தம்
புத்தகம் வாசிப்பது மனதளவில் நெருக்கமாக உணர வைக்கும். நாவல், கதை போன்றவற்றை வாசிக்கும்போது அதில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் மனதோடு பேசும் உணர்வை ஏற்படுத்திக்கொடுக்கும். மனக்கவலைகளில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்க வைக்கும். தேவையற்ற சிந்தனைகளுக்கு இடம் தராமல் மனதை இலகுவாக்கும். மன அழுத்தத்தில் இருந்தும் விடுவிடுக்கும். வாசித்து முடித்த பிறகு மனத்தெளிவை ஏற்படுத்திக்கொடுக்கும். மனம் ஓய்வெடுக்கவும் வழிவகை செய்யும்.
கவனிக்கும் திறன்
இன்றைய அவசர உலகில் கவனச்சிதறல் காரணமாக சின்ன சின்ன வேலைகளை கூட சரியாக முடிக்க முடியாமல் பலரும் தடுமாறுகிறார்கள். வாசிப்பு மீது கவனத்தை பதிக்கும்போது தேவையற்ற கவனச்சிதறல்களை தடுக்க முடியும். கவனத்தை ஒரு இடத்தில் குவிக்கும் திறன் மேம்படும்.
நினைவாற்றல்
நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை கூர்மைப்படுத்தவும் வாசிப்பு பழக்கம் உதவும். மனதை சுறுசுறுப்பாகவும், ஈடுபாட்டுடனும் வைத்திருக்க உதவும் என்று ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
படைப்பாற்றல்
வாசிப்பு பழக்கம் புதிய யோசனைகள் மற்றும் சிந்தனைகளை மெருகேற்ற வழிவகை செய்யும். படைப்பாற்றல் திறனையும் அதிகரிக்க செய்யும். எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் சிக்கலை தீர்ப்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்பட ஊக்கப்படுத்தும்.
எழுத்தார்வம்
புத்தகம் வாசிக்கும்போது அதில் இடம்பெறும் எழுத்து நடை, வாக்கிய அமைப்பு போன்றவற்றை படிக்கும்போது அதுபோன்று எழுதும் ஆர்வம் மேலோங்கும். ஒட்டுமொத்த தகவல்தொடர்பு திறனையும் மேம்படுத்தும். புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான ஆவலை தூண்டும்.
தூக்கம்
தூங்குவதற்கு முன்பு செல்போன் திரையில் பொழுதை போக்குவதற்கு பதிலாக சில நிமிடங்கள் புத்தகம் வாசிப்பது மனதை அமைதிபடுத்தும். உடலையும், உள்ளத்தையும் ஓய்வெடுப்பதற்கு தயார்படுத்தும். அதில் இடம்பெற்றிருக்கும் நல்ல கருத்துக்களை படிக்கும்போது மனம் ஆனந்தம் கொள்ளும். நன்றாக தூங்குவதற்கான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கும்.
புதிய உலகம்
புத்தகத்தில் இடம் பெற்ற சம்பவங்கள், கதாபாத்திரங்களுடன் நம்மையும் பயணிக்க வைத்து வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லும். புதிய உலகத்திற்குள்ளும் நுழைய வைக்கும். சிலிர்ப்பூட்டும் சாகச இடங்கள், வரலாற்று நிகழ்வுகள், பயணங்களுக்குள் நம்மையும் பயணிக்க வைத்துவிடும்.
கற்றல்
வாசிப்பு என்பது தொடர்ச்சியான கற்றல் அனுபவத்தை கொடுக்கும். வயது, ஆர்வத்தை பொருட்படுத்தாமல், எப்போதும் புதிதாக ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள தூண்டிக்கொண்டே இருக்கும். மற்றவர்களுடன் எந்தவொரு தலைப்பிலும் துணிச்சலாக கலந்துரையாடுவதற்கான தகுதியை வளர்த்தெடுக்கும்.
- மாணவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுவதற்கும், உணர்ச்சிவசப்படுவதற்கும் இதுவே காரணம்.
- போலி விவரங்களை வைத்து இன்று சமூக வலைத்தளங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தைகள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமாக உள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சந்திக்கும் எதிர்மறையான விளைவுகளானது அவர்களின் படிப்பை மோசமாக பாதிக்கிறது.
இன்றைய நவீன உலகில் இளம் வயதினர் மற்றும் குழந்தைகள் உட்பட எல்லா வயதினரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அது முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கோவிட்-19 இன் தொடக்கத்தில் இருந்து, மக்களிடையே இன்டர்நெட் அக்சஸ் பயன்பாடு வேகமாக அதிகரித்தது, ஏனெனில் அந்த காலகட்டத்தில் நாம் ஒரு நபரிடம் தொடர்பு கொள்ளவோ அல்லது சமூக ரீதியாக தொடர்பு கொள்ளவோ ஒரே வழி இதுதான். அதேசமயம் இதனை பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. அத்துடன் சமூக ஊடகங்களிலேயே அவர்கள் நேரத்தை வீணடிக்கின்றனர்.
சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. குறிப்பாக மாணவர்கள் பல விஷயங்களைக் கண்டறியவும், அவர்களின் அறிவை மேம்படுத்தவும், தொலைதூரத்திலிருக்கும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் மற்றும் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவும் மிகப்பெரிய தளங்களாகும். நாம் அனைவரும் அறிந்தபடி, சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன, ஏனெனில் இது மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்க உதவுகிறது. இப்போதெல்லாம் குழந்தைகள் சமூக தளங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் சந்திக்கும் எதிர்மறையான விளைவுகளானது அவர்களின் படிப்பை மோசமாக பாதிக்கிறது.
சைபர்புல்லிங் என்பது உலகளவில் உள்ள முக்கிய கவலைகளில் ஒன்றாகும். இது சமூக ஊடகங்களில் இணையத்தில் மற்றொரு நபரைக் கையாளவும், அவமானப்படுத்தவும் மற்றும் தீங்கு விளைவிக்கவும் நிறைய நடக்கிறது. மாணவர்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுவதற்கும், உணர்ச்சிவசப்படுவதற்கும் இதுவே காரணம். மேலும் குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். சமூக ஊடகங்களில் அதிகப்படியான ஈடுபாடு மாணவர்களை அவர்களின் கல்வியிலிருந்து திசை திருப்புகிறது.
சாதாரணமாக 13 வயது நிறைவடைந்தவுடன் மட்டுமே சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். ஆனால் போலி விவரங்களை வைத்து இன்று சமூக வலைத்தளங்களில் இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் 13 வயது நிறைவடைந்தாலும், பெரும்பாலான வெப்சைட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சமூக ஊடக செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் ஆப்ஸின் நன்மை தீமை குறித்து குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்பிக்க வேண்டும்.
13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது அவசியமாகும்.
பாதுகாப்பான இன்டர்நெட் அக்சஸை பெற்றோர்கள் பயன்படுத்துவதும், அதன் நன்மைகளை குழந்தைகளுக்கு கற்பிப்பதும் அவசியம் ஆகும். ஏனெனில், குழந்தைகள் அதன் நன்மைகளை புரிந்துகொண்டு அவற்றை பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் தூக்க முறை பாதிக்கப்படுகிறது.சமூக ஊடகங்களின் முக்கிய எதிர்மறை விளைவுகளில் ஒன்று, மாணவர்களுக்குத் தேவையான தூக்கத்தின் அளவு குறைவதாகும். தூக்கமின்மை மன மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. குறிப்பாக மாணவர்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க ஆரோக்கியமான தூக்கம் கட்டாயமாகும்.
- வீட்டு சூழல் குழந்தையின் மகிழ்ச்சிக்கு அடிப்படையானதாகும்.
- பாதுகாப்பை உணரும் குழந்தைகள் சுதந்திரமாக செயல்படுவார்கள்.
குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பதை அவர்களின் முகத்தில் வெளிப்படும் புன்னகை மட்டுமே தீர்மானித்து விடாது. அவர்கள் மகிழ்ச்சியான சூழலில் வளர்வதற்கு பெற்றோர்களின் பங்களிப்பும் முக்கியமானது. அதற்கு வித்திடும் விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
பாதுகாப்பு
பாதுகாப்பான மற்றும் ஆதரவான வீட்டு சூழல் குழந்தையின் மகிழ்ச்சிக்கு அடிப்படையானதாகும். பெற்றோருடன் பாதுகாப்பான தொடர்பையும், பந்தத்தையும் வலுப்படுத்திக்கொள்ளும் சூழலில் வளரும் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணரும் குழந்தைகள் சுதந்திரமாக செயல்படுவார்கள்.
எந்தவொரு விஷயத்தையும் செய்வதற்கு முன்பு நன்கு ஆராய்ந்தும், பெற்றோரிடம் தயக்கமின்றி கலந்தாலோசித்தும் முடிவுகளை எடுப்பார்கள். சிறந்த சமூக திறன்களையும் வளர்த்துக் கொள்வார்கள்.
நேர்மறை எண்ணங்கள்
குழந்தைகள் நேர்மறையான எண்ணங்கள், செயல்பாடுகளை பின்பற்றுவதற்கு பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது. அவ்வாறு செயல்படுவதற்கு ஊக்குவிப்பது மகிழ்ச்சியுடனும் நெருங்கிய தொடர்பை கொண்டது. பெற்றோரிடம் இருந்து அடிக்கடி பாராட்டுகளையும், ஊக்கத்தையும் பெறும் குழந்தைகள் தனித்திறன்மிக்கவர்களாக வளர்வார்கள். சுயமரியாதை உணர்வோடு செயல்படுவார்கள்.
விளையாட்டு
குழந்தைகள் விளையாடுவதற்கென்றே தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கிக்கொடுக்க வேண்டும். அத்தகைய விளையாட்டு நேரம் குழந்தைகளின் படைப்பாற்றல், கற்பனைத்திறன் மற்றும் ஏதேனும் பிரச்சனையை எதிர்கொண்டால் அதனை தீர்க்கும் திறனை வளர்க்க உதவும். குழந்தைகள் தங்களின் திறன் மற்றும் உடல் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான மகிழ்ச்சியான சூழலை விளையாட்டு வழங்குகிறது.
நட்புகள்
சக உறவுகள் மற்றும் சக நண்பர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு அதிக ஆதரவும், மதிப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. நெருக்கமான நட்பை கொண்ட குழந்தைகள் அதிக சுயமரியாதையை கொண்டுள்ளனர். அவர்களுக்கு மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
சமச்சீர் ஊட்டச்சத்து
குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சமச்சீரான, ஊட்டச்சத்துடன் கூடிய உணவு முக்கியமானது. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்ளும் குழந்தைகள் சிறந்த மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை கொண்டுள்ளனர். சரியான ஊட்டச்சத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். மகிழ்ச்சியான மனநிலைக்கு முக்கிய பங்களிக்கும்.
உடல் செயல்பாடு
உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மனநலத்தையும் மேம்படுத்தும். குழந்தைகள் தினமும் வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது கவலை மற்றும் மனச்சோர்வுக்கான அறிகுறிகளைக் குறைக்கும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் குறிப்பிடுகிறது.
சுதந்திரம்
குழந்தைகளை சுதந்திரமாக செயல்பட விடுவதும், அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதற்கு ஊக்குவிப்பதும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும். குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ப முடிவுகளை எடுக்க அனுமதிப்பது, அவர்களை திறமையானவர்களாகவும், பொறுப்பானவர்களாகவும் வளர வழிகாட்டும். அவர்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும்.
குடும்ப நேரம்
குடும்பத்தினர் அனைவருடனும் சேர்ந்து விளையாடுவது, சேர்ந்து படிப்பது, உணவு உட்கொள்வது போன்ற செயல்பாடுகள் குடும்ப பிணைப்பை வலுப்படுத்தும். குடும்பத்தினருடன் தவறாமல் நேரத்தை செலவிடும் குழந்தைகள் அதிக மகிழ்ச்சியுடனும், பாதுகாப்பு உணர்வுடனும் வாழ்வது ஆய்வுகள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- பிள்ளைகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
- தந்தையை பின்பற்றியே பிள்ளைகளின் வெளியுலக பழக்க வழக்கங்களும் அமையும் என்பதால் பிள்ளைகளின் முன்னிலையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
குடும்பத்தை பொறுப்பாக வழிநடத்தும் தலைமைப் பண்பு கொண்டவராகவும், தங்களுடைய ரோல் மாடலாகவும் ஒவ்வொரு பிள்ளைகளும் தந்தையை பார்க்கிறார்கள். குழந்தைகளை வழிநடத்தும் விஷயத்தில் சிறப்பான தந்தையாக விளங்க பின்பற்ற வேண்டிய அடிப்படை குணங்கள் இவை..
நிபந்தனை இல்லாத அன்பு: தந்தை தன் பிள்ளைகளிடம் காண்பிக்கும் அன்பும், பாசமும் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாததாகவும், நிபந்தனையற்றதாகவும் இருக்க வேண்டும். பிள்ளைகள் மீது எந்த அளவுக்கு அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்பது அவர்களுக்கு புரியும்படி அமைய வேண்டும். பிள்ளைகள் பாதுகாப்பாக, சுதந்திரமாக வளர்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் செய்யும் சின்ன சின்னச் செயல்களையும் மனப்பூர்வமாக பாராட்ட வேண்டும். இவை சிறந்த தந்தைக்கான அடையாளங்களாக அமையும்.
பொறுமை: ஒவ்வொரு தந்தைக்கும் நிச்சயம் இருக்க வேண்டிய குணம் பொறுமை. குழந்தைகளை வளர்ப்பதற்கு பொறுமை மிக அவசியம். அவர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கு சட்டென்று கோபத்தை வெளிப்படுத்திவிடக்கூடாது. அது தந்தை மீதான அவர்களின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். தந்தையிடம் பேசுவதற்கு பயமும், அச்ச உணர்வும் மேலோங்கக்கூடும். அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிரமங்களை எதிர்கொள்வதற்கு தந்தை தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு பொறுமை மிக அவசியம்.
ஊக்கம்: சிறந்த தந்தையானவர் பிள்ளைகளின் ஒவ்வொரு செயல்களையும் நேரடியாக கண்காணித்து ஊக்கம் அளித்துக்கொண்டே இருப்பார். படிப்பிலோ, விளையாட்டிலோ சிறந்து விளங்கும்போது வாழ்த்து கூறி உற்சாகப்படுத்த வேண்டும். உடனுக்குடன் பரிசுப்பொருட்களை வாங்கிக்கொடுத்து பாராட்ட வேண்டும். ஒருவேளை பிள்ளைகள் தோல்வியை தழுவினால் ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அடுத்த செயலை தொடங்குவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.
நம்பகத்தன்மை: நெருக்கடியான சூழலோ, மகிழ்ச்சியான தருணமோ எத்தகைய நிலையிலும் தந்தை தனக்கு பக்கபலமாக இருப்பார் என்ற நம்பகத்தன்மையை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும். அதற்கேற்ப தந்தையின் செயல்பாடு அமைந்திருக்க வேண்டும். குழந்தையின் தேவை அறிந்து தக்க சமயத்தில் அதனை நிறைவேற்றிக்கொடுக்கும் நபராகவும் விளங்க வேண்டும். அது தந்தை மீது பிள்ளைகள் வைத்திருக்கும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
முன்மாதிரி: தந்தையானவர் தன் பிள்ளைகளுக்கு முன் மாதிரியாக விளங்க வேண்டும். நேர்மையுடன் செயல்பட வேண்டும். இரக்க குணம் படைத்தவராகவும், பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும். அதனை பார்த்து பிள்ளைகளும் நல்ல குணாதிசயம் கொண்டவர்களாக வளர்வார்கள்.
கேட்கும் திறன்: சிறந்த தந்தைக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணாதிசயங்களுள் ஒன்று பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்து கேட்பது. அவர்களின் உணர்வுகள், யோசனைகள், சிந்தனைகள், கவலைகள் என ஒவ்வொரு நிலைப்பாட்டையும் கண்காணித்து அவர்களை வழிநடத்த வேண்டும். எந்த நேரத்தில் எந்த மன நிலையில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களை மனம் விட்டு பேச வைக்க வேண்டும். அவர்கள் கூறும் கருத்துக்களை கூர்ந்து கவனித்து ஆதரவு அளிக்க வேண்டும்.
பங்கேற்பு: குழந்தைகளுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவரே சிறந்த தந்தையாக இருக்க முடியும். பள்ளிகளில் குழந்தைகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டி, கலை நிகழ்ச்சிகளை பார்வையிடுவது, பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் தவறாமல் கலந்து கொள்வது என பிள்ளைகளுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்க வேண்டும். அது தந்தையுடனான பந்தத்தை வலுப்படுத்தும்.
ஒழுக்கம்: சிறந்த தந்தை ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும். அவரின் நடத்தையிலும், செயலிலும் அது வெளிப்பட வேண்டும். தந்தையை பின்பற்றியே பிள்ளைகளின் வெளியுலக பழக்க வழக்கங்களும் அமையும் என்பதால் பிள்ளைகளின் முன்னிலையில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
- பாதாம் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, நினைவாற்றலை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
- பால் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.
பொதுவாக குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை விரும்பி சாப்பிடுவதில்லை, அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளின் ஊட்டச்சத்து குறைவாகவே காணப்படுகிறது. எனவே குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்து, வயதிற்கேற்ற உடல் வளர்ச்சிக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை கொடுக்கவேண்டும்.
எல்லா குழந்தைகளும் விளையாட்டுத்தனமாகதான் இருக்கும், எனவே நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை, அவர்களுடன் விளையாடிக்கொண்டே ஊட்ட முயற்சிப்பது மிக சிறந்த வழியாகும். குறைந்தது 1 மணி நேரமாவது உணவு தர செலவிடவேண்டும்.
எதை விரும்புகிறார்கள் என்பதை நன்கு அறிந்து, அவர்களுடன் குழந்தைகளை சாப்பிடவைப்பது என்பது சற்று கடினமான விஷயம் என்றாலும், விடாமுயற்சியால் அவற்றை இலகுவாக்க முயற்சிக்கவேண்டும்.
தற்போது உணவிலும் ரசாயன கலவை இருப்பதால், எதிர்பார்க்கும் அளவிற்கு ஊட்டச்சத்துள்ள பொருட்கள் நமக்கு கிடைப்பதில்லை. இருப்பினும் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க எவ்வகையான உணவு கொடுக்கலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
வால்நட் பொதுவாக குழந்தைகளுக்கு மூளை செயல்பாடு எப்போதும் சுறுசுறுப்பாக தான் இருக்கும்.சில முக்கியமான உணவுகள் மூளையின் போதுமான வளர்ச்சிக்கு மேலும் உதவுகிறது.வளரும் குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க இந்த வகையான உணவுகள் சேர்த்துக்கொள்ளுங்கள். யதேர்ச்சையாக மூளையைப் போன்றே தோற்றமளிக்கும் வால்நட் மூளை வளர்ச்சிக்கும் உகந்ததாக உள்ளது. நுங்கு சாப்பிடுவது மார்பகத்திற்கு நல்லது என்ற சித்த மருத்துவர் கருத்து மாதிரி இல்லை இது. பல முன்னணி ஆங்கில இதழ்களில் வெளியான தகவல்தான் வால்நட்டின் நன்மைகள். வால்நட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு மூளை அல்சைமர் நோய்களைத் வராமல் தடுக்கிறது. தினமும் 3-5 வால்நட் கொடுத்தாலே போதுமானது.
பாதாம் இதில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது, நினைவாற்றலை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாமை காலை அல்லது மாலையில் கொடுக்கலாம், இரவில் கொடுக்கக்கூடாது இரவில் கொடுப்பது செரிமான கோளாறு ஏற்படலாம்.தினமும் 5 முதல் 10 பாதாம் வரை கொடுக்கவேண்டும்,அதிக அளவு வயிற்றுப்போக்கு உண்டாக்கும்.
முட்டை இதில் ஒமேகா 3 கொலஸ்ட்ரால் அமிலங்கள் மற்றும் கொலின் ஊட்டச்சத்து உள்ளது,தினமும் ஒரு 1 வேகவைத்த முட்டையை கொடுங்கள், 1 அல்லது 2 முட்டை கொடுக்கலாம், குழந்தைகள் ஆக்டிவ்வாக, சுறுசுறுப்பாக இருக்க உதவும்,மேலும் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும்
மீன் வைட்டமின் டி மற்றும் பி12 கால்சியம், பாஸ்பர் நிறைந்துள்ளன, எனவே இது ஆரோக்கியமான மூளை செயல்பாடுகளுக்கு நல்லது மற்றும் நினைவக சக்தியை அதிகரிக்கிறது.எந்த வகையான மீனாக இருந்தாலும் கொடுக்கலாம்,ஆனால் முள் அதிக அளவு உள்ள மீனை கட்லெட்,புட்டு போன்ற ஸ்னாக்ஸ் முறையில் கொடுத்தால்,குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் வாரம் இருமுறை மீன் கொடுக்கலாம், இது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தி மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
பால் வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது,அதில் கால்சியம், புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் உள்ளன, இவை அனைத்தும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் நல்ல ஞாபக சக்தியை அளிக்கிறது,பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.தினமும் இரவில் ஒரு டம்ளர் பால் குடித்தால் குழந்தைகளுக்கு நல்ல தூக்கம் வரும்.
- புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கின்றன.
- நீர்சத்துள்ள உணவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள்:
உங்கள் குழந்தையின் தட்டில் ஒரு வானவில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், மிளகுத்தூள் மற்றும் கீரைகள் இயற்கையில் சத்துக்கள் நிறைந்தவை. இதில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளன.
புரதங்கள்:
கோழி, ஒல்லியான இறைச்சிகள், மீன் மற்றும் பருப்பு வகைகளை உங்களில் குழந்தைகளின் உணவில் இணைக்கவும். இவை நோய் தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்களில் இருந்து உங்கள் குழந்தையை பாதுகாக்கும்.
புரோபயாடிக்குகள்:
தயிர் மற்றும் புளித்த உணவுகளில் காணப்படும் புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கின்றன. இது வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அம்சமாகும்.
முழு தானியங்கள்:
முழு கோதுமை, ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி ஆகியவை நீடித்த ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியை ஆற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
நட்ஸ் வகைகள்:
நட்ஸ் மற்றும் விதைகளில் துத்தநாகம், செலினியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
திரவங்கள்:
போதுமான நீரேற்றம் நோயெதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது. தண்ணீர், மூலிகை தேநீர் மற்றும் நீர்த்த பழச்சாறுகளை வழங்குங்கள்.
மழைக்காலத்தில் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுவகைகளை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதற்கு முன், நீங்கள் மருத்துவரின் ஆலோசனையையும் பெறலாம்.
- தூய்மையில் கவனம் செலுத்தாததால் பல நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
- குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.
பல்வேறு பகுதியில் கொளுத்தும் வெயிலில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வகையில், மழை பெய்து வருகிறது. என்னதான் மழை வெப்பத்தில் இருந்து நமக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தாலும், மழைக்காலத்தில் வைரஸ் மற்றும் நோய் தொற்றுக்களின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கும்.
எனவே, வெயில் காலத்தை விட மழைக்காலத்தில் ஆரோக்கியத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, மழைக்காலத்தில் ஏற்படும் வைரஸ் நோய்கள் அவர்களை எளிதில் பாதிக்கலாம். இந்த பருவத்தில் சிறிய குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதேசமயம், மழைக்காலத்தில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கொசுக்கள் வேகமாக உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் முக்கியம். அதேபோல, புதிதாகப் பிறந்த குழந்தை சளி, இருமல் மற்றும் நிமோனியா போன்ற பொதுவான வைரஸ் தொற்றுகளால் பாதிக்கலாம்.
எனவே, மழைக்காலங்களில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். மழைக்காலத்தில் பிறந்த குழந்தையை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.
எப்படி பராமரிப்பது?
* உங்கள் குழந்தை 6 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால், குழந்தைக்கு முடிந்தவரை முழு உணவாக தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கவும். தாயின் பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
* குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஆரம்பித்து விட்டால், ஆரோக்கியமான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
* மழைக்காலங்களில் தூய்மையில் கவனம் செலுத்தாததால் பல நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், வெளியில் இருந்து வந்த பிறகு உங்கள் கைகளை கழுவ முயற்சிக்கவும். அதற்கு பின்னர் உங்கள் குழந்தைகளைத் தொடவும்.
* கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க, வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் கொசுக்களிடமிருந்து பாதுகாக்க முழு கை ஆடைகளையும் அணிய வேண்டும்.
* பருவமழை காலத்தில் அனைத்து இடங்களிலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம். கூட்ட நெரிசலான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதால் வைரஸ் தொற்று ஏற்படலாம்.
* அதேசமயம், புல் அதிகம் வளரும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம், ஏனெனில் இதுபோன்ற இடங்களில் கொசுக்கடி பயம் இருக்கும்.
* மழைக்காலத்தில் குழந்தைகள் எளிதில் நோய்வாய்ப்படுவார்கள். எனவே, குழந்தையை எப்போதும் உலர்வாக வைக்க முயற்சி செய்யுங்கள். வலுவான சூரிய ஒளியில் குழந்தைகளின் ஆடைகளை உலர்த்தவும்.
* சூரிய ஒளி குறைவாக இருந்தால், குழந்தையை ஆடை அணிவதற்கு முன் லேசாக அயர்ன் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆடைகளில் உள்ள ஈரப்பதம் நீங்கும். குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவும். ஒரே டயப்பரை நீண்ட நேரம் அணிவதால் குழந்தைக்கு தொற்று மற்றும் சளி கூட ஏற்படலாம்.
- பேசுவதற்கு முதல் காரணம் என்று பார்த்தால் மரபணு பிரச்சனை ஒன்றாகும்.
- குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்பட்டு இதுவும் பேசுவதற்கு தாமதத்தை ஏற்படுத்துகிறது.
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ஆடியோலஜிஸ்ட் & ஸ்பீச் பேத்தாலஜிஸ்ட் டாக்டர் நித்யா மாலைமலர்.காமிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நிறைய பெற்றோர்களுக்கு நமது குழந்தை எப்போது பேசும் என்பதில் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் சில குழந்தைகள் குறிப்பிட்ட வயதில் பேசிவிடுவார்கள். சில குழந்தைகள் பேசுவதற்கு தாமதம் ஆகிறது.
குழந்தைகள் பேசுவதற்கு தாமதம் ஆகிறது என்றால் அதற்கு என்ன காரணம்?
பேசுவதற்கு முதல் காரணம் என்று பார்த்தால் மரபணு பிரச்சனை ஒன்றாகும். எடுத்துக்காட்டாக அப்பாவே, அம்மாவே தனது குழந்தை பருவத்தில் தாமதமாக பேசி இருக்கலாம். அதனால் குழந்தையும் தாமதமாக பேசுவாங்க.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கூட்டுக் குடும்பம் என்ற ஒன்று இருந்தது, அதனால் குழந்தைகளுக்கு பேசுவது, புரிந்து கொள்வது போன்ற பிரச்சனையாக இல்லை. ஆனால் இந்த காலக்கட்டத்தில் அம்மா, அப்பா, குழந்தை என்று குறுகிய வட்டத்தில் வளர்வதால் குழந்தைகளிடம் அந்த புரிதல் என்பது இல்லாமல் இருக்கிறது. இப்போது உள்ள குழந்தைகள் அதிகப்படியாக தனிமையிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்களுடன் பேசி விளையாட தாத்தா, பாட்டி, அப்பா என ஆட்கள் இல்லை இதுவும் பேசுவதில் தாமதத்திற்கு காரணமாக உள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு மொழி ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. நாம் வீட்டில் தமிழ் மொழியில் பேசுகிறோம். ஆனால் போன் மூலம் ஆங்கிலத்தில் குழந்தைகளுக்காக பாடல்கள் வைக்கிறோம். இதனால் குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்பட்டு இதுவும் பேசுவதற்கு தாமதத்தை ஏற்படுத்துகிறது.
போன் மூலம் பாடல்கள், கதைகள் போன்றவற்றை அறிவதால், முகம் பார்த்து பேசுதல் என்பது இல்லாமல் போய்விடுகிறது. 2 வயதிலேயே குழந்தைகள் போன்களின் மூலம் பாடல், படிப்பு என கற்றுக் கொள்கிறார்கள். ஒரு சமயம் இந்த போன் சாதகமாக இருந்தாலும், 100 குழந்தைகளில் 3 குழந்தைகளுக்கு மரபணு பிரச்சனை இருக்கும் போது போன் பார்ப்பதால் பேசுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒரு குழந்தை எந்த வயதில் இருந்து பேச தொடங்கும்? எந்த வயதில் இருந்து நல்லா பேச தொடங்கும்? இல்ல பேசுவதில் தாமதம் என்று நாம் எப்படி கண்டுபிடிப்பது?
ஒரு குழந்தை பிறந்தவுடனேயே பேச தொடங்கிவிடும். பசி என்றால் அழுதால் அதுவும் பேசுவதற்கு முதல் நிலை ஆகும்.
ஒரு வயதில் குழந்தை அம்மா, அப்பா என்று ஆரம்பிக்கும்.. படிப்டபடியாக 2 வயதில் 2 வார்த்தைகைள் பேசும். 3 மூன்று வார்த்தைகள் பேசும்.
மூன்று வயது ஆன பிறகும் குழந்தைகள் அம்மா, அப்பா என்ற வார்த்தைகளை தவிர வேறு எதுவும் பேச வில்லை என்றால் மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தைகள் பேசுவதற்கு எவ்வளவு நாள் காத்திருக்கலாம்?
நாங்கள் தனி குடும்பமாகதான் இருக்கிறோம். இருவரும் வேலை செல்கிறோம் வேலைக்கு ஆட்கள் வைத்து பார்க்கிறோம் என்றால், அந்த குழந்தையுடன் தொடர்பில் இருப்பவர்கள் எப்படி வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். நம் குழந்தை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.
காத்திருக்கும் நாள் என்பது அதிக பட்சமாக 3 முதல் 6 மாதமாக இருக்கலாம். 2 அல்லது 3 வயது ஆகியும் குழந்தை பேசவில்லை என்றால் பேச்சு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சென்று பார்ப்பது நல்லது. மருத்துவர்களிடம் இது வெறும் பேச்சு தாமதம் மட்டுமா? அல்லது குழந்தைக்கு வேறு ஏதேனும் பிரச்சனை இருக்கா என்று கேட்டு அறிந்த கொள்ளலாம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் போன் உபயோகிப்பதை நிறுத்திக் கொள்வதும் நல்லது. நீங்கள் மருத்துவரை அணுகும் போது குழந்தைகளுக்கு ஆர்டிசமோ, எடிஎச்டியோ இருக்கலாம் என்று சொன்னால் இன்னும் அதிக கண்காணிப்பு கொடுக்க வேண்டி வரும்.
குழந்தைகள் பேசுவதில் தாமதம் என்றால் எந்த மருத்துவரை பார்க்க வேண்டும்? குழந்தை நல மருத்துவரா? அல்லது ஒரு தெரபிஸ்டை போய் பார்க்கணுமா?
நீங்கள் குழந்தை நல மருத்துவரையும் பார்க்கலாம். ஸ்பீச் தெரபிஸ்ட்டையும் போய் பார்க்கலாம். இரண்டு பேரும் உங்களை வழி நடத்துவார்கள்.
தெரபிஸ்டை போய் பார்க்கும் போது எந்த மாதிரியான நடைமுறைகள் இருக்கும்?
முதலில் பெற்றோர் சார்ந்த கேள்விகள் இருக்கும். குழந்தைகளின் புரிதல் திறன், பேசும் திறன் எப்படி இருக்கு என்று பார்ப்போம். 3 வயது குழந்தைக்கு 1 வயதிற்கான புரிதல் திறன் தான் இருக்கு, பேசும் திறன் 8 மாதத்திற்கு தான் இருக்கு என்றால் அந்த குழந்தையால் ஏன் அடுத்தவர்களை பார்த்து கற்று கொள்ள முடியவில்லை என்று பார்ப்போம்.
யார் யாரெல்லாம் தெரபிஸ்ட்டை பார்க்கலாம்? குழந்தைகள் மட்டுமா? அல்லது பெரியவர்களும் பார்க்கலாமா?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்பீச் தெரபிஸ்ட்டை பார்க்கலாம். குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், பேச முடியாத குழந்தைகள், மென்று சாப்பிட முடியாத குழந்தைகள், திக்கி பேசும் குழந்தைகள், உச்சரிப்பு குறைப்பாடு உள்ள குழந்தைகள், டீன் ஏஜ் இருந்து அடல்ட் ஏஜ் வரும், குரலில் மாறுபாடு இருக்கும் குழந்தைகள், உதாரணமாக ஆண் குரல் பெண் போலவும், பெண் குரல் ஆண் போலும் இருக்கும் அது போல் உள்ள குழந்தைகள், விபத்தால் குரல் திறன் இழந்தவர்கள், பக்கவாதம் வந்து குரல் இழந்தவர்கள் என மேற்கண்ட அனைவரும் ஸ்பீச் தெரபிஸ்டை பார்க்க வேண்டும்.
பேச்சு தாமதத்திற்கும் ஆர்டிசத்திற்கு தொடர்பு இருக்கா?
ஒரு குழந்தைக்கு வேறும் பேச்சு தாமதம் மட்டும் தான் இருக்கு என்றால் அந்த குழந்தைக்கு புரிதல் திறன் நன்றாக இருக்கும். நம் கண் பார்த்து பேசுவாங்க, நம்ம என்ன சொன்னாலும் செய்வார்கள்.
ஆனால் ஆர்டிசம் என்பதில் நிறைய விஷயங்கள் உள்ளடக்கி உள்ளது. பேச்சு தாமதம் இருக்கும், புரிதல் திறன் குறைவாக இருக்கும், செய்ததையே திரும்ப திரும்ப செய்வார்கள் இதெல்லாம் ஆர்டிசத்துடன் தொடர்புடையது. ஆர்டிசத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு பேச்சு தாமதம் இருக்கும். ஆனால் பேச்சுதாமதம் இருக்கும் குழந்தைகளுக்கு ஆர்டிசம் இருக்காது.
திக்கு வாய் உள்ள குழந்தைகளை தெரபி மூலம் சரிசெய்ய முடியுமா?
திக்கு வாய் என்பது ஒரு நோய் கிடையாது. திக்கு வாய் என்பது ஒரு குறைபாடு சம்பந்தப்பட்ட விஷயம். இதற்க பல்வேறு பயிற்சி மூலம் இதை சரிசெய்ய முடியும். இது குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கு உள்ளது. இதற்கு 3 மாதம் தெரபி எடுத்தாலே சரி செய்து விடலாம்.
ஆண்ணிற்கு ஒரு பெண்ணின் குரல் இருப்பது ஒரு பிரச்சனையாக உள்ளது அதை சரிசெய்ய முடியுமா?
இந்த குரல் மாற்றம் என்பது ஹார்மோன்ஸ் சம்பந்தபட்ட விஷயம். இதை சரிசெய்ய முடியும், இதற்கு முறையான தெரபிகள் மற்றும் பயிற்சிகள் உள்ளது. நிறைய பேருக்கு 3 அமர்வுகளில் சரியாகி இருக்கிறது. ஒரு சிலருக்கு 10 அமர்வுகளில் சரியாகி உள்ளது. ஆண்களுக்கு விரைவில் குணப்படுத்தலாம் ஆனால் பெண்களுக்கு கால தாமதமாகும்.
குழந்தைகள் போன் பயன்படுத்தலாம் ஆனா அது அளவு இருக்கனும்னு சொன்னீங்க.. எந்த அளவு என்று சொல்லுங்கள்...
உலக சுகாதாரத்துறை கருத்துப்படி, 0-2 வயது குழந்தைகளுக்கு அதிகபட்சமாக போன் காண்பிக்க கூடாது என்றும் அந்த வயது குழந்தைகளில் மூலை நன்கு வளர்ச்சியடையும் காலம். அந்த நேரத்தில் போன்களை பார்க்கும் போது அவர்களது உலகம் அந்த போனிலேயே முடிந்து விடும்.
ஆனால் 2 வயது மேல் போன் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு 1மணி நேரம் கொடுக்கலாம். குழந்தைகள் போன் உபயோகிக்கும் போது கண்டிப்பாக பெற்றோர்கள் அருகில் இருக்க வேண்டும்.
பேச்சு தாமதம் இருக்கும் குழந்தைகளின் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?
குழந்தைகளுடன் பெற்றோர்கள் நேரம் செலவிட வேண்டும் இது மிகவும் முக்கியமான ஒன்று. குழந்தைகளை அந்த வயதுடைய குழந்தைகளுடன் பழக செய்ய வேண்டும்.
குழந்தைகள் துரு துரு என்று இருந்ததால் என்ன பண்ணனும்?
குழந்தை என்றால் துரு துருனு தான் இருக்கும். ஆனால் ரொம் துரு துருனு இருந்தால் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். குழந்தை துருதுருனு இருக்கு ஆனா நல்ல பேசுது, விளையாடுது, புரிஞ்சுக்குது என்றால் நீங்கள் பயப்படவே தேவையில்லை.
இவ்வாறு டாக்டர் நித்யா அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்