என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    பெற்றோர்கள் குழந்தைகளிடம் கத்தாமல், சொல்வதை கேட்கவைப்பது எப்படி? 5 எளிய வழிகள்!
    X

    பெற்றோர்கள் குழந்தைகளிடம் கத்தாமல், சொல்வதை கேட்கவைப்பது எப்படி? 5 எளிய வழிகள்!

    • குரல்கள் கொடுக்கும் அறிவுரையைவிட, செயலின் விளைவுகள் நிறையப் பாடங்களை கற்றுக்கொடுக்கும்.
    • அதிகம் கோபப்படும்போது நம்மீது வெறுப்பு உணர்வு தோன்ற ஆரம்பித்துவிடும்.

    குழந்தை வளர்ப்பு என்பது அவ்வளவு எளிதானல்ல. பெற்றோர் என்ற பொறுப்பு எவ்வளவு கடமைகளை கொண்டது என்பதை அந்த நிலையில் இருப்பவர்கள் அறிவர். இந்தக் கடமையில், இந்த பணியில் பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு, அதாவது தவறு என்றால் தாங்கள் சொல்வதை பிள்ளைகள் கேட்க வேண்டுமென்றால் கத்தினால்தான் அது நடக்கும் என நம்புவது. அவர்களை பயப்பட வைப்பதற்கு, சொல்வதை கேட்க வைப்பதற்கு என அனைத்திற்கும் கத்துவதுதான் வழி என பல பெற்றோர்களும் நினைக்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் குழந்தைகளிடம் கத்தினால் அப்போதைய வேலை வேண்டுமானால் முடியலாம். ஆனால், அந்தக் கத்தல் குழந்தைகளை அதிக பதட்டமாகவும், அடங்காதவர்களாவும் மாற்றுகிறது என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கத்தாமல் குழந்தைகளை நாம் சொல்வதை கேட்கவைப்பது எப்படி என்பதை கூறும் 5 எளிய வழிகள்.

    கண்களை பார்த்து, அமைதியாக பேசுங்கள்...

    குழந்தைகள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அல்லது அவர்களை ஒரு விஷயத்தை செய்ய வைக்க வேண்டுமானால், கத்தாமல், அதிகாரத் தோரணையில் சொல்லாமல், அவர்களிடம் சென்று மண்டியிட்டு அவர்களது கண்களை பார்த்து அமைதியாக பேசுங்கள். அந்த அமைதியான பேச்சு அவர்களை கவனிக்க செய்யும். மேலும் சில விஷயங்களை அவர்களை சொல்லவும் வைக்கும்.

    கட்டளை வேண்டாம்

    "இப்போதே செய்" என கட்டளையிடுவதற்கு பதில், சாப்பிட்டுவிட்டு வீட்டுப்பாடம் செய்கிறீர்களா? இல்லை வீட்டுப்பாடம் செய்துவிட்டு சாப்பிடுகிறீர்களா? அல்லது கொஞ்சநேரம் விளையாடுகிறீர்களா? ஒரு 10 நிமிடம் இடைவெளி எடுத்துக்கொள்கிறீர்களா? என கேளுங்கள். அப்போது அதை செய்வார்கள்.

    இடைவெளி விட்டுப் பேசுங்கள்

    குழந்தைகளிடம் அவர்களின் தவறை குறிப்பிட்டு கோபமாக பேசும்போது, சிறிது இடைவெளி விட்டு பேசுங்கள். கோபமாக இருக்கும்போது கொஞ்சம் அமைதியானால் அந்த கோபம் தணியும். உங்களின் இந்த சுயகட்டுப்பாட்டை மாதிரியாக கொண்டு குழந்தைகள் தங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்க கற்றுக்கொள்வார்கள்.


    குழந்தைகளின் கண்களை பார்த்து அமைதியாக பேசுங்கள்

    முயற்சியைப் பாராட்டுங்கள், முடிவுகளை மட்டுமல்ல

    போட்டியோ, ஏதேனும் புதிய செயலோ எதுவாக இருந்தாலும் அதன் வெற்றி, முடிவை பார்க்காமல் குழந்தைகளின் அந்த முயற்சியை, அதில் கலந்துகொண்டதை பாராட்டுங்கள். அது அவர்களை ஊக்குவிக்கும். தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால், அடுத்தமுறை நன்றாக எடுங்கள் என கூறுங்கள். அப்படி தொடர்ந்து மதிப்பெண்கள் குறைந்தால் அதற்கான காரணம் என்னவென கண்டறியுங்கள். அதைவிடுத்து கத்துவதால், கோபப்படுவதால் எந்தப் பலனும் இல்லை.

    தண்டனைகளைவிட விளைவுகள் பாடத்தை சொல்லிக்கொடுக்கும்

    மிகவும் அடம்பிடித்து குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்யாவிடில் கத்துவதற்கு பதிலாக அதை அப்படியே விடுங்கள். மறுநாள் ஆசிரியரின் முன்பு அதற்கு பதில்சொல்ல கடமைப்படிருப்பர். நம் குரல்கள் கொடுக்கும் அறிவுரையைவிட, அவர்களின் செயலின் விளைவுகள் நிறையப் பாடங்களை கற்றுக்கொடுக்கும். இது வாழ்வின் அனைத்து தருணங்களுக்கும் பொருந்தும்.

    அமைதி

    கத்துவதைவிட அமைதியாக பேசுவது அவர்களை காதுகொடுத்து கேட்கவைக்கும். அதிகம் கோபப்படும்போது நம்மீது ஒரு வெறுப்பு உணர்வு தோன்ற ஆரம்பித்துவிடும். "அன்னைக்கு என்ன அடிச்சல்ல" என நாம் திட்டுவது, அடிப்பது போன்ற நிகழ்வுகள் அவர்களின் மனதில் ஆழமாக பதியும். அவர்களின் தவறை சுட்டிக்காட்ட பேசாமல் அமைதியாக இருங்கள். அப்போது அவர்களே வந்துப்பேசி தவறை உணர்வார்கள்.

    Next Story
    ×