என் மலர்
குழந்தை பராமரிப்பு
- தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் அன்னைக்கும் உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்கும்.
- தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போடலாம்.
தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைகள் பெறும் நன்மைகள் குறித்தும், தாய்ப்பால் கொடுப்பதால் தாய் அடையும் நன்மைகள் குறித்தும் காண்போம்.
முதல்பால்...
குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து வரும் முதல் பால் (கொலஸ்ட்ரம்) 'தங்க திரவம்' என அழைக்கப்படுகிறது. காரணம், மஞ்சள் நிறத்தில் வரும் இப்பாலில் புரதங்கள், ஆன்டிபாடிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் ஆரம்பகாலத்தில் குழந்தையின் செரிமான அமைப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொலஸ்ட்ரமில் கொழுப்பு குறைவாகவும், இம்யூனோகுளோபுலின்கள் அதிகமாகவும் உள்ளது. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
தாய்ப்பாலில் ரத்த வெள்ளை அணுக்கள், ஆன்டிபாடிகள், நொதிகள் மற்றும் மனித பால் ஒலிகோசாக்கரைடுகள் (HMOs) நிறைந்துள்ளன. அவை புதிதாகப் பிறந்த குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மற்றும், உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வளர்க்கின்றன. குழந்தை வளரும் காலக்கட்டத்தில் இவை அத்தியாவசிய நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
மூளை வளர்ச்சி
மூளை வளர்ச்சிக்கு அவசியமான டோகோசாஹெக்ஸெனாயிக் அமிலம் தாய்ப்பாலில் உள்ளது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியமாகிறது.

தாய்-சேய் பிணைப்பை தாய்ப்பால் வலுப்படுத்துகிறது
வயதுக்கு ஏற்ற வளர்ச்சி
குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப தாய்ப்பாலின் கலவை மாறுபடும். ஆரம்ப பால் புரதத்தால் நிறைந்தது. அதே நேரத்தில் பிந்தைய பால் (ஹிண்ட்மில்க்) கெட்டியாகவும், கொழுப்பாகவும் இருக்கும். இது குழந்தையின் எடை அதிகரிப்பிற்கு மிகவும் முக்கியமானது.
உளவியல்
தாய்ப்பால் கொடுப்பது உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்குகிறது. தாய்-சேய் பிணைப்பை வலுப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் சீராக இருக்கும். தாய்ப்பால் குடிக்கக்கூடிய குழந்தை எப்பொழுதும் உற்சாகமாகக் காணப்படும், சோர்வாக இருக்காது.
நோய்தடுப்பு
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, உடல் பருமன், டைப் 1 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவு. மேலும் காது தொற்று மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு.
தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள்
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ரத்தப்போக்கு நிற்கும். சுகப்பிரசவத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். தாய்ப்பால் கொடுப்பதால் அவை சரியாகும். தாய்ப்பால் கொடுக்க தாயின் கர்ப்பப்பை விரைவில் சுருங்கி விடும். இதன் காரணமாக வயிறு பெரிதாவது தடுக்கப்படும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் மீண்டும் கர்ப்பம் தரிப்பதில் இருந்து இடைவெளி கிடைக்கும். இது பெண்களுக்குச் சிறந்த நன்மை அளிக்கும். தாய்ப்பால் கொடுத்தால் இளமை போய்விடும் என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கிறது. ஆனால் தாய்ப்பால் கொடுத்தால் பெண்கள் இளமையாக இருப்பார்கள். முக்கியமாக தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோயை தடுக்கும். மேலும் கருப்பை புற்றுநோய், எலும்புப்புரை, இருதய நோய், உடல் பருமன் போன்றவற்றையும் தடுக்கும்.
- குழந்தைகள் அழும்போது பெற்றோர்கள் பலரும் நினைப்பது, எப்படியாவது குழந்தையை தூங்க வைத்துவிடவேண்டும் என்பதுதான்.
- மென்மையான இசை, ஹம்மிங் மற்றும் பாடல் போன்ற அமைதியான ஒலிகள் குழந்தையை அமைதிப்படுத்த உதவும்.
பெற்றோர்கள் குழந்தை அழும்போது குழந்தையை சமாதானப்படுத்த, எதற்காக அழுததோ, அதிலிருந்து கவனத்தை திசைதிருப்ப பல முயற்சிகளை மேற்கொள்வர். சிலநேரங்களில் இந்த செயல் வெற்றியடையும். ஆனால் சிலநேரங்களில் என்ன செய்தாலும் குழந்தைகளின் அழுகையை நிறுத்தமுடியாது. அப்போது பெற்றோர்கள் பலரும் நினைப்பது, எப்படியாவது குழந்தையை தூங்க வைத்துவிடவேண்டும் என்பதுதான். பகலிலேயே இப்படித்தான் நடக்கும். அப்போது இரவில் குழந்தைகள் அழுவதை நினைத்துப் பாருங்கள். சிலநேரங்களில் இரவில் திடீரென குழந்தைகள் அழ ஆரம்பிப்பார்கள். இரவில் திடீரென குழந்தை அழுவதற்கான காரணங்கள் பலருக்கும் தெரியாது. இதற்கு சில பொதுவான காரணங்கள் சில உள்ளன. அதுகுறித்து பார்ப்போம்.
பசி
இளம் குழந்தைகளின் வயிறு சிறியதாக இருப்பதால் அடிக்கடி உணவளிக்க வேண்டும். உணவளிக்கும் இடைவெளி மாறலாம் என்றாலும், ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் ஒருமுறை குழந்தைக்கு பால் அல்லது திரவ உணவுகளை கொடுக்கவேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் பகலில் எழுந்திருப்பதைப் போலவே இரவில் அடிக்கடி பசியில் எழுந்திருப்பார்கள். குழந்தைகளின் தூக்கமுறை பகல், இரவு என பெரிய வித்தியாசத்தை கொண்டிருக்காது. முதல் மூன்றுமாதம் வரை குழந்தைகள் அதிகநேரம் தூங்குவார்கள்.
பல் முளைப்பு
குழந்தைகள் அழ மற்றொரு காரணமாக இருப்பது பல் முளைப்பது. பொதுவாக குழந்தைகளுக்கு 6 மாத வயதில் இருந்து பல் முளைக்கத் தொடங்கும். இது பொதுவானது. ஒவ்வொரு குழந்தைக்கும் பல்முளைக்கும் காலம் மாறுபடும். பல் முளைப்பது குழந்தைக்கு வலியை கொடுக்கும். மேலும் பல் முளைப்பது குழந்தைக்கு காய்ச்சலை ஏற்படுத்தும். அந்த காலக்கட்டத்தில் குழந்தைகள் அழுவார்கள். அப்போது காய்ச்சலுக்கான மருந்து கொடுக்கலாம். அல்லது குழந்தையில் ஈறில் சுத்ததான விரலால் மெதுவாக தேய்ப்பதன் மூலம் குழந்தையை ஆற்றலாம்.
வயிற்றுவலி
குழந்தை ஆரோக்கியமாக இருந்தும், இரவில் காரணமே இல்லாமல், ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கும் மேலாகவும், வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது அழுகிறதென்றால், அவர்களுக்கு வயிற்று வலி இருக்கலாம். 5 குழந்தைகளில் 1 குழந்தையை வயிற்று வலி பாதிக்கலாம். இது ஆரம்பகாலத்தில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனைதான். குழந்தைக்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகும்போது இந்தப் பிரச்சினை சரியாகிவிடும். அப்போதும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகலாம்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் இருந்தாலும் குழந்தைகள் அழுவார்கள். தாய்ப்பால் இல்லாமல் ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க, பரிந்துரைக்கப்பட்டபடி சரியான அளவு ஃபார்முலா பவுடர் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும். வேறு ஏதேனும் காரணங்களால் மலச்சிக்கல் ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

2 முதல் 3 மாதக்குழந்தைகளுக்கு இரவில் அடிக்கடி பசி எடுக்கும்
குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் பொதுவான காரணிகள்;
- மிக விரைவாகவோ அல்லது அதிகமாகவோ பால் குடிப்பது குழந்தைக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். அதனால் குழந்தைகள் அதிகமாக பால் குடிக்க கட்டாயப்படுத்தாதீர்கள்.
- இரண்டாவது தாய்ப்பால் கொடுக்கும்போது அவர்களை எப்படி வைத்து பால் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம். அதற்கான முறையை பின்பற்றி அதற்கு தகுந்தாற்போல பால்கொடுக்கவேண்டும்.
- குழந்தையை அசௌகரியப்படுத்தும் மற்றொரு காரணி ஈரத்துணி. குழந்தைகள் சிறுநீர் கழித்ததை கவனிக்காமல் இருக்கும்போது அந்த ஈரம் அவர்களை எரிச்சலடைய செய்யும்.
- குழந்தைகள் அதிக சூடாகவோ அல்லது அதிக குளிராகவோ உணர்ந்தால் அழக்கூடும். மேலும் குழந்தையின் உடைகள் மிகவும் இறுக்கமாகவும், சங்கடமாகவும் இருந்தாலும் அழுவார்கள்.
மேற்கூறியவைகளை கருத்திற்கொண்டு குழந்தையை கவனித்துப் பாருங்கள். இவையெல்லாம் பொதுவான காரணங்கள்தான். அப்படி இந்த காரணங்கள் எதுவும் இல்லையென்றால் மருத்துவரை அணுகுங்கள்.
- உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது.
- முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான விஷயம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, உணவு ஒவ்வாமை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் குழந்தைகள் சத்துள்ள பொருட்களை சாப்பிட முடியாது, உடல் எடை குறையும், உடல்நலம் பாதிக்கப்படும். உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதைக் குணப்படுத்தும் முறைகளைக் காண்போம்.
குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை இருப்பதை எவ்வாறு கண்டறிவது?
வளரும் குழந்தைகளுக்கு புதிதாக உணவுகளை பழக்கப்படுத்த வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சாதம், முட்டை, வேர்க்கடலை, அவித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை பெற்றோர்கள் கொடுக்க தொடங்குவார்கள். அப்படி இந்த பொருட்கள் ஒத்துகொள்ளவில்லை எனில் சாப்பிட்ட சிறிதுநேரத்திலேயே குழந்தைகள் வாந்தி எடுத்துவிடுவார்கள். அல்லது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். அரிப்பு, தோல் வெடிப்புகள், வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலநேரங்களில் மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். மேலும் சில உணவுகளை குழந்தைகள் சாப்பிடவே மாட்டார்கள். அப்போது அது காலப்போக்கில் சரியாகிவிடும் என பெற்றோர் விட்டுவிடுவார்கள். குழந்தைக்கு உணவு ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். அது ஒவ்வாமைதானா என உறுதிப்படுத்தி அதன்பின் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குவர். மேலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவை வேறு எந்த முறையில் கொடுக்கலாம் எனவும் அறிவுறுத்துவர்.

குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள்
ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொதுவான உணவுப் பொருட்கள்...
- பால்
- முட்டை
- வேர்க்கடலை
- மரக்கொட்டைகள்
- மீன்
- கோதுமை
- சோயா
- ஷெல்ஃபிஷ்
மேற்கூறிய 8 உணவுகள்தான் 90% உணவு ஒவ்வாமைகளை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு என்ன செய்வது?
முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும். ஆனால் சில ஒவ்வாமைகள் தொடர்ந்து நீடிக்கும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், வேர்க்கடலை மற்றும் குழந்தைக்கு ஒவ்வாமை கொடுக்கும் பொருட்களை உங்களின் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். குழந்தைக்கு முட்டை அவித்து கொடுத்தால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், மாற்று வழியில் எவ்வாறு அதனை கொடுக்கலாம் என மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பின்னர் தொடர்ந்து அதனை கொடுத்துவரும்போது இந்த பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.
ஒவ்வாமையை தடுக்க என்ன செய்யலாம்?
ஒரு உணவுப்பொருள் குழந்தைக்கு ஒவ்வாமையை கொடுக்கிறது என்றால் அதை கொஞ்ச நாட்கள் தவிர்க்கவேண்டும். குழந்தையை பார்த்துக்கொள்பவர்களிடமும், பள்ளியிலும் அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப்பொருட்கள் குறித்து தெரிவித்தல் நல்லது. ஒவ்வாமை இருப்பவர்கள் எப்போதும் வெளியில் செல்லும்போது எபிநெஃப்ரின் ஆட்டோ-இன்ஜெக்டரை எடுத்துச் செல்வது நல்லது. குழந்தையின் பள்ளி அல்லது பகல்நேர பராமரிப்பு மையத்திலும் குழந்தைக்கு தேவையான மருத்தை வழங்குவது நல்லது.
- உங்களின் வற்புறுத்தலால் படித்துக்கொண்டே இருந்தால், சோர்ந்துவிடுவார்கள்.
- முழுபுத்தகத்தையும் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப படிப்பதை விட, சிறு குறிப்புகள் எடுத்துப் படிப்பது எளிதாக இருக்கும்.
* குழந்தைகள் விளையாடவும், படிக்கவும், ஓய்வெடுக்கவும் சரியாக நேரம் நிர்ணயித்து பின்பற்ற வைக்க வேண்டும். இதனால் குழந்தைகள் உற்சாகமாகச் செயல்படுவார்கள். எப்போதும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தச் சொன்னால், அவர்கள் ஆர்வப்பட மாட்டார்கள். உங்களின் வற்புறுத்தலால் படித்துக்கொண்டே இருந்தால், சோர்ந்துவிடுவார்கள். எனவே குழந்தைகள் விளையாடவும், அவர்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யவும் நேரம் கொடுக்க வேண்டும்.
* குழந்தைகள் குறிப்பிட்ட நேரம் படித்தால், அதைத் தொடர்ந்து சிறிது நேரம் இடைவெளி விட வேண்டும். உதாரணமாக 25 நிமிடங்கள் படித்தால் 5 நிமிடம் இடை வேளை. இது பொமடேரோ டெக்னிக்' எனப்படுகிறது. இந்த நுட்பமானது குழந்தைகளின் கவனத்தை அதிகரித்து, அவர்களது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும். குழந்தைகள் சிறந்த மதிப்பெண்களைப் பெற ரொம்ப நேரம் படிக்க கட்டாயப்படுத்த வேண்டாம். அவ்வப்போது குறுகிய இடைவெளிவிட்டு படிக்க ஊக்குவியுங்கள்.
* முழுபுத்தகத்தையும் மீண்டும் மீண்டும் திரும்பத் திரும்ப படிப்பதை விட, சிறு குறிப்புகள் எடுத்துப் படிப்பது எளிதாக இருக்கும். மேலும், புரிந்து படிப்பதற்கு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பாடத்தை ஏன், எதற்கு, எப்படி என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களாகப் படித்தால் எளிதாக மனதில் பதியும்.
- குழந்தைகளின் சிறிய முயற்சிகளை கூட பாராட்டுங்கள்.
- குழந்தைகளை வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்காதீர்கள்.
குழந்தைகள் சில சமயங்களில் பெற்றோரின் பேச்சை கேட்காமல் இருப்பதுண்டு. அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி கொடுக்காதபோதோ, அவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்கும்போதோ கடும் கோபம் கொள்வார்கள். அந்த சமயத்தில் எந்த வேலை சொன்னாலும் செய்ய மாட்டார்கள். பெற்றோரின் பேச்சுக்கு செவிமடுக்காமல் எதிர்த்து பேசவும் செய்வார்கள். பிடிவாதமும் பிடிப்பார்கள். அவர்களை திட்டாமல் அன்பாக அரவணைக்க ஒருசில விஷயங்களை செய்தாலே போதுமானது. உங்கள் சொல் பேச்சை கேட்டு நடக்க தொடங்கிவிடுவார்கள். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...
உணர்ச்சி ரீதியாக இணையுங்கள்
குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன்பு உணர்ச்சி ரீதியாக அவர்களுடன் இணையுங்கள். அவர்களின் தோளில் மென்மையாக தொடுவது, கன்னத்தை பிடித்து கிள்ளுவது, அவர்களின் பெயரை மெதுவாக உச்சரிப்பது, கட்டிப்பிடிப்பது என அன்பை பொழியுங்கள். அவை அவர்களின் உணர்வுகளை ஆசுவாசப்படுத்தும். கோபம், பிடிவாதத்தை தளர்த்தச் செய்யும்.
கண்கள் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்
குழந்தைகள் இறுக்கமான மன நிலையிலோ, கடும் அதிருப்தியுடனோ இருந்தால் அவர்களை உடனே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். அந்த சமயத்தில் அவர்களை உரத்த குரலில் அழைப்பது, ஏதேனும் வேலை செய்யுமாறு கட்டளையிடுவது போன்ற செயல்கள் அவர்களிடத்தில் எரிச்சலை அதிகப்படுத்தும்.
அதற்கு இடம் கொடுக்காமல் அவர்கள் இருக்கும் இடத்திற்கே நீங்கள் சென்று அவர்களின் மன நிலையை கவனியுங்கள். கண்கள் மூலம் நேருக்கு நேர் தொடர்பு கொள்ளுங்கள். அப்படி கண்களை பார்த்து பேசுவது அவர்களின் ஆக்ரோஷத்தை தணிக்கும். அதன் பிறகு அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட தொடங்கும்.
கட்டளை இடாதீர்கள்
குழந்தைகள் கடுமையான கட்டளைக்கு எளிதில் இணங்கமாட்டார்கள். ஆனால் அன்புக்கு கட்டுப்படுவார்கள். அதிகார தொனியிலோ, உரத்த குரலிலோ பேசுவதற்கு பதிலாக அன்பாக பேசி அவர்களின் விருப்பம் என்ன என்பதை முதலில் ஆராயுங்கள். முதலில் அவர்களின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு அதன் பிறகு உங்கள் விருப்பப்படி செயல்பட முயற்சியுங்கள்.
அமைதியான குரலில் பேசுங்கள்
குழந்தைகள் விஷயத்தில் எப்போதும் மென்மையான அணுகுமுறையையே கையாள வேண்டும். கட்டளையிடுவது, சத்தமாக பேசுவது என குரல் தொனியில் ஆக்ரோஷம் வெளிப்படக்கூடாது. மெதுவாக, தெளிவாக, அன்பாக பேசுங்கள். அதிக சத்தத்தை விட அமைதியான குரல் எளிதில் அவர்களை உங்கள் வசப்படுத்திவிடும். நீங்கள் சொல்வதற்கு செவி சாய்க்க தொடங்கிவிடுவார்கள்.

குழந்தைகளின் செயல்பாடுகளை பாராட்டுங்கள்
குழந்தைகளின் சிறிய முயற்சிகளை கூட பாராட்டுங்கள். சின்ன சின்ன விஷயங்களை ஊக்கப்படுத்துங்கள். அடுத்த முறை இன்னும் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டுவார்கள்.
மென்மையாக அணுகுங்கள்
குழந்தைகளின் செயல்பாடுகள் அவர்களின் வயதுக்கு தக்கபடியே அமையும். அவர்களிடம் நடத்தையில் குறைபாடுகள் இருக்கலாம். அதனை கண்டிப்புடன் சுட்டிக்காட்டுவதோ, கடுமையாக திட்டுவதோ கூடாது. அதனை ஏன் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கி புரியவைக்க வேண்டும். மென்மையாக அணுகுவதன் மூலம் அவர்களின் செயல்பாடுகளை படிப்படியாக மாற்றிவிட முடியும்.
கால அவகாசம் கொடுங்கள்
குழந்தைகள் எதையும் உடனடியாக செய்யமாட்டார்கள். நீங்கள் சொன்னதை செயல்படுத்த அவர்களுக்கு கால அவகாசம் கொடுங்கள். அதனை சிறப்பாக செய்து முடிக்க ஆலோசனையும் வழங்குங்கள். அப்படி அறிவுறுத்தலை வழங்கிய பிறகு அமைதியாக இருங்கள்.
உங்களின் பொறுமை நிச்சயம் மாயாஜாலம் நிகழ்த்தும். அடிக்கடி தலையீடு செய்வதை தவிர்த்தால் போதும். நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவார்கள்.
பழக்கப்படுத்துங்கள்
குழந்தைகளை வீட்டு வேலை செய்ய நிர்பந்திக்காதீர்கள். அவர்களாகவே ஆர்வமாக வேலை செய்ய ஊக்குவியுங்கள். அவர்கள் பயன்படுத்தும் அறையை சுத்தம் செய்ய வைக்க வேண்டும் என்றால், கட்டளையிடாதீர்கள்.
'அறையை சுத்தம் செய்' என்று சொல்வதற்கு பதிலாக 'தரையில் கிடக்கும் பொம்மையை அலமாரியில் வை. புத்தகங்களை ஒழுங்குபடுத்து. அறையில் சிதறி கிடக்கும் பொருட்களை அந்தந்த இடத்தில் வை' என அன்பாக கூறுங்கள். அதைத்தொடர்ந்து 'நீங்கள் பயன்படுத்தும் அறையை நீங்களேதான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்' என்று கூறி அவர்களுடன் சேர்ந்து அறையை சுத்தப்படுத்துவதற்கு உதவுங்கள். நாளடைவில் அவர்களாகவே சுத்தம் செய்வதற்கு பழகிவிடுவார்கள்.
- தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.
- மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற, அவர்கள் நன்றாக படித்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு மூளை வளர்ச்சியை தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது.
மூளையை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகளை உண்பதால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிப்பதோடு, அவர்களது ஞாபக சக்தியும் கூடுகிறது.
மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், போதிய சத்தின்மையாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே ஞாபக மறதிக்கு முக்கிய காரணம். இதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர்.
இவை அனைத்திற்கும் சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம். அத்துடன் மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.
கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சி அடையும். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது.
இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.
அதுவும் வளரும் குழந்தைகளுக்கு இந்த உணவு நல்ல ஒரு உடல் வளர்ச்சியை தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது. மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும். நட்ஸ் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.
வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது. மேலும் வைட்டமின் பி அதிகம் இருப்பதால், உடலில் இரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதால், உடலில் எல்லா பாகங்களும் சுறுசுறுப்பாக இருக்கும்.மேலும் காய்கறிகளில் தக்காளி, கேரட், பீன்ஸ், கீரைகள் போன்றவையும் சிறந்தது.
ஆகவே மேற்கூறிய உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் மூளையானது நன்கு சுறுசுறுப்போடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். க்ரீன் டீயில் மூளைச் செல்கள் பாதிப்படையாமல் தடுக்கும், பாலிபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை குடிப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, சோர்வான மனநிலை மாறும். பெர்ரி பழங்களில் குவர்செடின் என்னும் மூளைச் செல்களில் இயக்கத்தை அதிகரிக்கும் பொருள் உள்ளது.
அதுமட்டுமின்றி இதில் ஆந்தோசையனின் என்னும் போட்டோ கெமிக்கல், அல்சீமியர் என்னும் ஞாபக மறதி நோயை தடுக்கும். அதிலும் சில பெர்ரி பழங்களான ராஸ்ப்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது. பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
தேனில் அளவற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அவற்றில் ஞாபக சக்தியை அதிகரிப்பதும் ஒன்று. எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு ஸ்பூன் தேனை சாப்பிட்டால், எடை குறைவதோடு, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். நட்ஸில் மூளையின் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் பி6 இருக்கிறது.
எனவே தினமும் ஒரு கை பாதாம், பிஸ்தா போன்றவற்றை சாப்பிடுவது, ஞாபக சக்திக்கு மட்டுமின்றி, முழு உடலுக்கும் நல்லது. மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் தான் உள்ளது. எனவே தண்ணீர் குறைவானால் மூளையில் செயல்பாடும் குறைந்து, மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறைந்துவிடும். எனவே அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால், மூளையில் வறட்சி ஏற்படாமல், மூளைச்செல்கள் சுறுசுறுப்போடு செயல்படும்.
- குழந்தைகளின் காதுகளை பொறுத்தவரை வலி ஏற்படுவது அவ்வப்பொழுது வரக்கூடிய பாதிப்பு தான்.
- மூக்கில் ஏற்படும் சிக்கல்களை பொறுத்தவரை சுற்றுப்புற சூழலில் உள்ள மாசு காரணமாகத்தான் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.
குழந்தைகளைப் பொறுத்தவரை இ.என்.டி என்று சொல்லப்படும் காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களுடைய உடல் நிலை மற்றும் கல்வியில் சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன.
பள்ளி செல்லும் குழந்தைகள் இ.என்.டி பிரச்சனையால் அடிக்கடி பாதிக்கப்படும் நிலையில், பெற்றோர் மற்றும் ஆசிரியர் இரு தரப்பினரும் இணைந்து இந்த பிரச்சனையில் அக்கறை காட்ட வேண்டியதாக உள்ளது.
காதுகளில் அல்லது மூக்கில் ஏதேனும் சிறிய பொருட்களை குழந்தைகள் போட்டுக் கொள்ளும் பொழுது அதன் மூலம் அடைப்பு ஏற்பட்டு சில நேரங்களில் ரத்தம் கூட வழியலாம். பழங்களின் கொட்டைகள், சிறிய நாணயங்கள் ஆகியவற்றை எதிர்பாராமல் குழந்தைகள் விழுங்கி விடும்பொழுது அது உணவுக் குழாய் அல்லது மூச்சுக்குழாய் வரை சென்று அடைபட்டு சிக்கலை ஏற்படுத்தி விடலாம். அது போன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது மிக அவசியம்.
குழந்தைகளின் காதுகளை பொறுத்தவரை வலி ஏற்படுவது அவ்வப்பொழுது வரக்கூடிய பாதிப்பு தான். சளி தொல்லையால் குழந்தைகள் பாதிக்கப்படும் பொழுது காது வலி அவர்களுக்கு ஏற்படலாம். மூக்கின் பின்பக்கம் உள்ள குழாய் மூலம் காதுக்கு செல்லும் வழி அடைபட்டு தொற்று ஏற்பட்டு அதன் மூலம் காது வலி ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், சளி பிடித்துள்ள சமயங்களில் குழந்தைகள் காது வலி என்று தெரிவித்தால் அவர்களுடைய காதில் உட்புறம் பாதிக்கப்பட்டுள்ளதா என்று மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், பட்டாசுகளை அதிக ஒலியோடு வெடிப்பது, காது சுத்தம் செய்யும் பட்ஸை குழந்தைகள் தவறாக பயன்படுத்தி விடுவது, குழந்தைகளுக்கு இடையில் ஏற்படும் சண்டை காரணமாக காது பகுதியில் எதிர்பாராமல் தாக்கி விடுவது, ஏதேனும் கட்டிகள் ஏற்படுவது ஆகியவை காரணமாகவும் குழந்தைகளின் காதுகளில் வலி ஏற்படலாம். பெற்றோர்கள் தவறியும் கூட குழந்தைகளின் காது வலிக்கு எண்ணெய் விடுவது போன்ற விஷயங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மூக்கில் ஏற்படும் சிக்கல்களை பொறுத்தவரை சுற்றுப்புற சூழலில் உள்ள மாசு காரணமாகத்தான் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். அத்துடன் சளி பிடிக்கும் பொழுது மூக்கு அடைத்து விடுவதால் வாய் மூலம் சுவாசம் நடந்து அடினாய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது,
தொண்டையை பொறுத்தவரை டான்சில் கட்டிகள் ஏற்படுவது, அதன் மூலம் இன்பெக்சன் ஏற்பட்டு காய்ச்சல் வருவது, குளிர் பானங்களை அல்லது ஐஸ்கிரீமை அதிகமாக உண்பது, கரும்புச்சாறு, பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளுடன் நெருக்கமாக பழகுவது, தொடர் இருமல் ஆகியவை காரணமாகவும் தொண்டை பாதிக்கப்படலாம்.
- குழந்தைகளுக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொருட்களின் வடிவில் காய்கறி இருந்தால் மிகவும் சிறப்பு.
- சரியான நேரத்துக்கு சாப்பாடு தர வேண்டும்.
காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றலைத் தருகின்றன. காய்கறிகளை சாப்பிடுவது குழந்தைகளை நோய்களில் இருந்து பாதுகாக்கும். காய்கறிகள் குழந்தைகளுக்கு ஆற்றல், வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் தண்ணீரை வழங்குகின்றன. அவை குழந்தைகளை பிற்காலத்தில் இதய நோய், பக்கவாதம் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. ஆனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை குழந்தைகள் விரும்பிச் சாப்பிட வைப்பது எப்படி? இப்படித்தான்...
உணவு விஷயத்தில் உங்களைப் பார்த்துத்தான் உங்கள் குழந்தை கற்றுக்கொள்கிறது, எனவே குழந்தையை காய்கறிகளை சாப்பிட ஊக்குவிப்பதற்கான சிறந்த வழி, நீங்கள் சாப்பிடுவதையும், அதை ரசித்து ருசிப்பதையும் குழந்தையை பார்க்க வைப்பதாகும்.
குழந்தைகள் நிறைய காய்கறிகளை சாப்பிட ஊக்குவியுங்கள். அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருங்கள். இந்த விஷயத்தில் விடாமுயற்சியும், பாராட்டும் உதவும்.
குழந்தைகளிடம் சாப்பாட்டை திணிக்கக் கூடாது. அவர்களுக்கு பசிக்கும்போதுதான் உணவு ஊட்ட வேண்டும். புடலங்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய், அவரைக்காய் போன்ற காய்களை பெரும்பாலான குழந்தைகள் விரும்புவதில்லை. அவற்றை நறுக்கும்போது வித்தியாசமான முறையில் நறுக்க வேண்டும்.
குழந்தைகளுக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொருட்களின் வடிவில் காய்கறி இருந்தால் மிகவும் சிறப்பு. காய்கறிகளை வைத்து வேடிக்கையான வடிவங்களை உருவாக்குவது அல்லது சிறு துண்டுகளாக நறுக்கி வித்தியாசமாக பரிமாறினால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
உங்கள் பிள்ளை ஒரு குறிப்பிட்ட பழம் அல்லது காய்கறியை விரும்பவில்லை என்று ஒருபோதும் முடிவெடுத்துவிட வேண்டாம். அடுத்த முறை நீங்கள் அதை சமைக்கும்போது, அவர்கள் அதை தின்று பார்க்க முயற்சி செய்யலாம். குழந்தைகளின் ரசனைகள் வயதுக்கு ஏற்ப மாறுகின்றன.
சரியான நேரத்துக்கு சாப்பாடு தர வேண்டும். சாப்பிடுவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பு வரை எந்த நொறுக்குத்தீனியும், குளிர்பானமும் கொடுக்கக் கூடாது. அதிலும், சாக்லேட் போன்ற தீனிகள் கூடவே கூடாது.
உங்கள் குழந்தையை பழம், காய்கறிகளை வாங்க அழைத்துச் செல்லுங்கள். அவர்கள் உங்களுடன் பழங்களையும் காய்கறிகளையும் பார்க்கவும், முகரவும், உணரவும் அனுமதிக்கவும்.
காய்கறிகளை கழுவுவது, அவற்றை எடுத்துவைப்பது போன்ற சிறு சிறு வேலைகளை குழந்தைகளிடம் கொடுத்து ஈடுபடுத்துவது, அவர்கள் உணவை விரும்பி சாப்பிடத் தூண்டும்.
காய்கறி பொரியல், கூட்டு போன்றவற்றை பரிமாறும் போது கூடவே வடகம், அப்பளம் போன்ற எண்ணெயில் பொரித்தவற்றை வைக்கக் கூடாது. அவற்றை எடுத்து உண்டுவிட்டு, காய்கறிகள் வேண்டாம் என்று பிள்ளைகள் தவிர்ப்பார்கள். எனவே அவற்றை தனியாகத் தருவதுதான் நல்லது.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினால், குழந்தைகளும் உணவை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
சாப்பிட மறுக்கும் குழந்தைகளை ஒருபோதும் தண்டிக்காதீர்கள். எதையாவது சொல்லி பயம் காட்டாதீர்கள். அது குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியை பாதிக்கும். வற்புறுத்தி உங்கள் குழந்தையை சாப்பிட வைக்க நினைப்பது தவறு. அது அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான கொஞ்ச நஞ்ச ஆசையையும் நீக்கிவிடும். பொறுமையோடு முயற்சி செய்யுங்கள்.
- உடற்பயிற்சி உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.
- வீட்டு பணிகளான சுத்தம் செய்தல், துடைத்தல், போன்ற வேலைகளை குழந்தைகள் செய்வது ஒரு நல்ல உடற்பயிற்சி.
இன்றைய வாழ்க்கை சூழலில் உடற்பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் உடற்பயிற்சி பெரியவர்களுக்கு மட்டும் அல்ல குழந்தைகளுக்கும் அவசியமானதாக கருதப்படுகிறது.
உடற்பயிற்சி உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கிறது. குழந்தைகள் ஓடி ஆடி விளையாடாமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து இருப்பதால் உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்து சிறு வயதிலேயே உடல் பருமன் உண்டாகிறது. இவற்றை தடுக்க குழந்தைகள் செய்ய வேண்டிய எளிமையான உடற்பயிற்சிகளை பற்றி அறிந்து கொள்வோம்.
நடைப்பயிற்சி
வீட்டில் மாடி இருந்தால் தினமும் 10-15 நிமிடம் வரை படிக்கட்டுகளில் ஏறி இறங்கலாம். இல்லையென்றால் வீட்டின் அருகே நடக்கலாம். வாய்ப்பு இருப்பின் வீட்டிற்கு அருகே உள்ள பூங்காக்களில் நடப்பது சிறந்த உடற்பயிற்சி ஆகும். இவ்வாறு செய்வது குழந்தைகளின் உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையாக வெளியேறுகிறது. இதயத்துடிப்பு சீராகிறது.
சிலம்பு பயிற்சி
கம்புகளை வைத்து செய்கிற சிலம்பு பயிற்சியும் சிறந்த உடற்பயிற்சியாகும். இது தற்காப்பு கலைகளுள் ஒன்று. இதை தினமும் செய்வதால் குழந்தைகளின் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும் சிலம்பாட்டம் உதவி புரியும்.
யோகா
தினமும் இருபது நிமிடங்கள் யோகா செய்வது குழந்தைகளுக்கு நல்லது. பல யோகாசனங்கள் இருக்கின்றன. அவற்றில் அடிப்படையான ஆசனங்களான பிராணாயாமம், சூரிய நமஸ்காரம் ஆகிய வற்றை செய்வது சிறப்பானது. யோகா செய்வது குழந்தைகளின் மனதை அமைதியாக்குகிறது. சிந்தனைகளை ஒருநிலைப்படுத்துகிறது.

வீட்டு பணிகளை செய்வது
வீட்டு பணிகளான சுத்தம் செய்தல், துடைத்தல், போன்ற வேலைகளை குழந்தைகள் செய்வது ஒரு நல்ல உடற்பயிற்சி ஆகும். இந்த வேலைகளை செய்வதால் நாம் குனிந்து நிமிருகிறோம். அதேபோல வீட்டில் கலைந்துள்ள பொருட்களை அழகாக அடுக்கி வைப்பதும் ஒரு உடற்பயிற்சி தான்.
நடனம் ஆடுவது
வீட்டில் நடனம் ஆடுவது சிறந்த உடற்பயிற்சியாக அமைகிறது. பெற்றோர்கள் நடன அசைவுகளை கற்றுக்கொடுத்து குழந்தைகளை ஆட சொல்லலாம். இது உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை தரும். ஆப்பிரிக்க நாடுகளிலும், மற்ற வெளிநாடுகளிலும் வீட்டில் நடனம் ஆடுவதை உடற்பயிற்சியாக செய்து வருகின்றனர்.
கயிறு வைத்து குதிப்பது
ஸ்கிப்பிங் எனப்படும் கயிறு வைத்து குதித்து விளையாடும் பயிற்சியை குழந்தைகள் தினமும் செய்வது அவர்களின் பாதங்களையும், உடல் உறுப்புகளையும் சீராக வைத்திருக்க உதவி புரியும். இதை தினமும் செய்வதால் உடல் எடை அதிகரிக்காமலும், உடல் தசைகள் வலிமையாகவும் இருக்கும்.
- கடற்கரை மணலில் கால் பதித்து விளையாடும் குழந்தைகளுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கிறது.
- மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் கற்பனை திறனையும், படைப்பாற்றல் திறனையும் வளர்க்கிறது.
மண் என்பது இயற்கையின் மகத்தான கொடை. இந்த மண் இன்றி உலகமே இல்லை. இந்த மண்ணுக்கும், குழந்தைகளுக்குமான உறவு என்பது மிக நெருக்கமானது. மண்ணை கண்டால் ஆரவாரம் செய்து விளையாடும் குழந்தைகள் ஏராளம். இன்று பெரியவர்களாய் இருக்கும் பலரும் மண்ணோடு உருண்டு புரண்டு விளையாடிய மகிழ்ச்சியான அனுபவத்தை கொண்டு இருப்போம். எத்தனை விலையுயர்ந்த விளையாட்டுப் பொருட்கள் இருந்தாலும் இயற்கையின் இலவசமான விளையாட்டுப் பொருள் என்றால் அது மண்தான். அதில் விளையாடுவதற்கு குழந்தைகளுக்கு அனுமதி கொடுங்கள். குழந்தைகள் மண், மணலில் விளையாடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்வோம்!

* கடற்கரை மணலில் கால் பதித்து விளையாடும் குழந்தைகளுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கிறது.
* மண்ணில் வீடுகட்டி விளையாடுதல், கோபுரம் கட்டுதல், குச்சியை மறைத்து வைத்து கண்டு பிடித்தல், எலிவளை அமைத்தல், குகைகள் அமைத்தல் போன்ற பல விளையாட்டுகளை விளையாடுவதால் குழந்தைகளின் உடல் தசைகள் வலிமை பெறுகின்றன.
* குழந்தைகள் மணலில் விளையாடுவதால் அவர்களின் மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. ஒற்றுமை மலர்கிறது. விட்டுக்கொடுக்கும் பழக்கம் வளர்கிறது.
* மண்ணில் விளையாடுவது குழந்தைகளின் கற்பனை திறனையும், படைப்பாற்றல் திறனையும் வளர்க்கிறது.
* ஈரமணல், உலர்ந்த மணல், நீர் சேர்த்து குழைத்த மணல், களிமண் என பலவித மணல்களில் விளையாடும் போது குழந்தைகளின் பிரித்தறியும் திறன் வளர்கிறது.
* பெற்றோர் மணல் விளையாட்டுகள் மூலம் பெற்ற பசுமையான அனுபவங்களை குழந்தைகளுக்கும் கொடுத்திட வேண்டும். குழந்தைகளுக்கு மணல் விளையாட்டுகளின் மகிமையை சொல்லிக்கொடுக்க வேண்டும்.
* இன்றைக்கு எத்தனையோ விளையாட்டுப் பொருட்கள் உருவெடுத்தாலும் அடிப்படையில் மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளை ஆரோக்கியமாக வாழ வித்திடுகின்றன.
எனவே பெற்றோரே! குழந்தைகளுக்கு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களை வாங்கி கொடுங்கள். மண் உண்டியலை வாங்கி கொடுத்து சேமிக்க சொல்லிக்கொடுங்கள். வீடுகளில் மணல் தரைகள் இல்லாத இந்த காலச்சூழலில் குழந்தைகளை பூங்காக்களுக்கும், கடற்கரைக்கும் அழைத்துச் சென்று விளையாட விடுங்கள்.
இயற்கையின் கொடையான மண்ணை நேசியுங்கள்.
- பெற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு கதை சொல்ல வேண்டும்.
- குழந்தைகளின் புரிதல் திறன் வளர்கிறது.
ஒரு ஊர்ல ஒரு காடு இருந்தது என்று கதை சொல்ல தொடங்கும் போதே குழந்தைகள் காட்டிற்குள் சென்று விடுகிறார்கள். அந்தக் காட்டில் ஒரு பெரிய சிங்கம் இருந்தது என்றதும் பெரிய சிங்கத்தை கற்பனையில் உருவாக்கி விடுகிறார்கள்.
இப்படி குழந்தைகளுக்கு கதை சொல்வதால் அவர்கள் தங்களை மறந்து கதை உலகிற்குள் சென்று விடுகிறார்கள். இந்த கதைகள் குழந்தைகளை எப்படி உருவாக்குகிறது? என்ன பயன் கிடைக்கிறது? என்பதை இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்!

இன்றைய காலச்சூழலில் குழந்தைகளோடு அமர்ந்து பேசுவதற்கும், அவர்கள் சொல்வதை கேட்பதற்கும் நேரம் இல்லாமல் பல பெற்றோர் வேலை என்று ஓடிக்கொண்டு இருக்கின்றனர். இதனால் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பேசுவதற்கு தயங்குகிறார்கள்.
இந்த சூழலை சரி செய்ய பெற்றோர் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு கதை சொல்ல வேண்டும். இது குழந்தைகளுக்கு அன்பை வெளிப்படுத்துகிற செயல்பாடாக மாறும். இதனால் குழந்தைகள் பெற்றோர் உறவு நெருக்கமாகும்.
நேர்மறை எண்ணம் வளர்தல்
குழந்தைகளுக்கு நீதிக்கதைகளையும், தன்னம்பிக்கை கதைகளையும், வரலாற்று கதைகளையும், புரட்சியாளர்களின் வாழ்க்கை கதைகளையும் சொல்கிறபோது அவர்கள் உள்ளத்தில் தன்னம்பிக்கை வளர்கிறது.
இந்த சமூகத்துக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்ற உந்துதல் கிடைக்கிறது. எல்லா சூழலிலும் வாழ்க்கையை நேர்மறை எண்ணத்துடன் எதிர்கொள்ளும் எண்ணத்தை கதைகள் குழந்தைகளுக்குள் விதைக்கிறது.

புரிதல் திறன் அதிகரித்தல்
குழந்தைகள் கதைகளை ஆர்வமுடன் கேட்பதால் அந்த கதையின் கருத்துகளை புரிந்து கொள்கிறார்கள். ஏன்? எதற்கு? என்ற கேள்விகளை கேட்கிறார்கள். குழந்தைகளுக்கு கதை சொல்வதால் அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வம் அதிகமாகிறது. இதனால் அவர்களின் புரிதல் திறன் வளர்கிறது.

சொல் அறிவு
ஒவ்வொரு முறை கதை சொல்கிற போதும், கதைகளை கேட்கிற போதும் குழந்தைகள் புதிய சொற்களையும் அதற்குரிய அர்த்தங்களையும் தெரிந்து கொள்கிறார்கள். நிறைய கதைகளை கேட்கிறபோது பல சொற்கள் அவர்களுக்கு கிடைக்கிறது. அதிகமான சொல் அறிவு அவர்கள் எழுதுவதற்கு உதவுகிறது.
நல்லொழுக்கம் வளர்கிறது
கதைகள் குழந்தைகளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆர்வமுடன் கேட்பதால் அவர்களின் ஆழ்மனதில் கதைகள் பதிந்து விடுகிறது. எனவே குழந்தைகளுக்கு ஒழுக்கம் சார்ந்த கதைகளை சொல்வது அவர்களை ஒழுக்கமானவர்களாக மாற்றும்.

கலாசாரங்களை அறிதல்
குழந்தைகள் கதைகளின் வழியாக அவர்களுடைய கலாசாரத்தை அறிந்து கொள்கிறார்கள். பல நாட்டு கதைகள் வழியாக குழந்தைகள் பரந்துபட்ட உலகத்தையும், பிற பழக்கவழக்கங்களையும் அறிந்து கொள்கிறார்கள். இதனால் குழந்தைகள் எல்லா மக்களையும் புரிந்து கொண்டு பன்முகத்தன்மை மிகுந்தவர்களாக வளர்வார்கள்.
எனவே, அன்பு பெற்றோரே! குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள், குழந்தைகளின் கதைகளை கேளுங்கள். கதைகளை வாசிக்க அவர்களை ஊக்கப்படுத்துங்கள். குழந்தைகள் சொல்லும் கதைகளை புத்தகமாக்குங்கள். கதைகள் அவர்களை படைப்பாற்றல் மிக்கவர்களாக மாற்றும்.
- அதிகமான உணவுகளை கொடுப்பதை விட அதை பிரித்து கொடுங்கள்.
- உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த வடிவங்களில் செய்து கொடுங்கள்.
குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது இன்றைய பெற்றோருக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. அதனை எளிதாக்கும் ஒரு சில வழிமுறைகளை அறிந்து கொள்வோம்!

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் நேரத்தை வழக்கப்படுத்துங்கள். ஒரே நேரத்தில் அதிகமான உணவுகளை கொடுப்பதை விட அதை பிரித்து கொடுங்கள்.
சமைக்கும்போது குழந்தைகளின் உதவியை நாடுங்கள். மாவு பிசைவது, பழங்களை துண்டுகளாக வெட்டுவது போன்ற வேலைகளை அவர்கள் செய்கிறபோது உணவை உண்பதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.
உணவுகளை குழந்தைகளுக்கு பிடித்த வடிவங்களில் செய்து கொடுங்கள். அவ்வாறு செய்கிறபோது விரும்பி சாப்பிடுவார்கள்.

காய்கறிகளையும், பழங்களையும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொடுங்கள்.
குழந்தைகள் சாப்பிடும்போது தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். இதனால் குழந்தைகள் முழு கவனத்துடனும் அதனை ரசித்து சாப்பிட முடியும்.
கூடுமானவரை குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். இதன் மூலம் மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து பிறருக்கு கொடுத்தும் குழந்தைகள் சாப்பிடுவார்கள்.

குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பிடித்தால் அவர்களைப் பயமுறுத்தாமல், அடிக்காமல் பொறுமையாக இருந்து, உணவு கொடுக்க முயற்சி செய்யுங்கள்.
குழந்தைகளுக்கு உணவை சிறிய உருண்டைகளாக கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் விருப்பத்துடன் உண்பார்கள்.






