

பெற்றோர்கள் குழந்தை அழும்போது குழந்தையை சமாதானப்படுத்த, எதற்காக அழுததோ, அதிலிருந்து கவனத்தை திசைதிருப்ப பல முயற்சிகளை மேற்கொள்வர். சிலநேரங்களில் இந்த செயல் வெற்றியடையும். ஆனால் சிலநேரங்களில் என்ன செய்தாலும் குழந்தைகளின் அழுகையை நிறுத்தமுடியாது. அப்போது பெற்றோர்கள் பலரும் நினைப்பது, எப்படியாவது குழந்தையை தூங்க வைத்துவிடவேண்டும் என்பதுதான். பகலிலேயே இப்படித்தான் நடக்கும். அப்போது இரவில் குழந்தைகள் அழுவதை நினைத்துப் பாருங்கள். சிலநேரங்களில் இரவில் திடீரென குழந்தைகள் அழ ஆரம்பிப்பார்கள். இரவில் திடீரென குழந்தை அழுவதற்கான காரணங்கள் பலருக்கும் தெரியாது. இதற்கு சில பொதுவான காரணங்கள் சில உள்ளன. அதுகுறித்து பார்ப்போம்.
பசி
இளம் குழந்தைகளின் வயிறு சிறியதாக இருப்பதால் அடிக்கடி உணவளிக்க வேண்டும். உணவளிக்கும் இடைவெளி மாறலாம் என்றாலும், ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் ஒருமுறை குழந்தைக்கு பால் அல்லது திரவ உணவுகளை கொடுக்கவேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் பகலில் எழுந்திருப்பதைப் போலவே இரவில் அடிக்கடி பசியில் எழுந்திருப்பார்கள். குழந்தைகளின் தூக்கமுறை பகல், இரவு என பெரிய வித்தியாசத்தை கொண்டிருக்காது. முதல் மூன்றுமாதம் வரை குழந்தைகள் அதிகநேரம் தூங்குவார்கள்.
பல் முளைப்பு
குழந்தைகள் அழ மற்றொரு காரணமாக இருப்பது பல் முளைப்பது. பொதுவாக குழந்தைகளுக்கு 6 மாத வயதில் இருந்து பல் முளைக்கத் தொடங்கும். இது பொதுவானது. ஒவ்வொரு குழந்தைக்கும் பல்முளைக்கும் காலம் மாறுபடும். பல் முளைப்பது குழந்தைக்கு வலியை கொடுக்கும். மேலும் பல் முளைப்பது குழந்தைக்கு காய்ச்சலை ஏற்படுத்தும். அந்த காலக்கட்டத்தில் குழந்தைகள் அழுவார்கள். அப்போது காய்ச்சலுக்கான மருந்து கொடுக்கலாம். அல்லது குழந்தையில் ஈறில் சுத்ததான விரலால் மெதுவாக தேய்ப்பதன் மூலம் குழந்தையை ஆற்றலாம்.
வயிற்றுவலி
குழந்தை ஆரோக்கியமாக இருந்தும், இரவில் காரணமே இல்லாமல், ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கும் மேலாகவும், வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது அழுகிறதென்றால், அவர்களுக்கு வயிற்று வலி இருக்கலாம். 5 குழந்தைகளில் 1 குழந்தையை வயிற்று வலி பாதிக்கலாம். இது ஆரம்பகாலத்தில் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனைதான். குழந்தைக்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகும்போது இந்தப் பிரச்சினை சரியாகிவிடும். அப்போதும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகலாம்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் இருந்தாலும் குழந்தைகள் அழுவார்கள். தாய்ப்பால் இல்லாமல் ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைக்கு மலச்சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்க, பரிந்துரைக்கப்பட்டபடி சரியான அளவு ஃபார்முலா பவுடர் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும். வேறு ஏதேனும் காரணங்களால் மலச்சிக்கல் ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
2 முதல் 3 மாதக்குழந்தைகளுக்கு இரவில் அடிக்கடி பசி எடுக்கும்
குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் பொதுவான காரணிகள்;
மேற்கூறியவைகளை கருத்திற்கொண்டு குழந்தையை கவனித்துப் பாருங்கள். இவையெல்லாம் பொதுவான காரணங்கள்தான். அப்படி இந்த காரணங்கள் எதுவும் இல்லையென்றால் மருத்துவரை அணுகுங்கள்.