என் மலர்
குழந்தை பராமரிப்பு

தாய்ப்பால் கொடுப்பதால் நீடிக்கும் இளமை!
- தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் அன்னைக்கும் உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்கும்.
- தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போடலாம்.
தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைகள் பெறும் நன்மைகள் குறித்தும், தாய்ப்பால் கொடுப்பதால் தாய் அடையும் நன்மைகள் குறித்தும் காண்போம்.
முதல்பால்...
குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து வரும் முதல் பால் (கொலஸ்ட்ரம்) 'தங்க திரவம்' என அழைக்கப்படுகிறது. காரணம், மஞ்சள் நிறத்தில் வரும் இப்பாலில் புரதங்கள், ஆன்டிபாடிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் ஆரம்பகாலத்தில் குழந்தையின் செரிமான அமைப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொலஸ்ட்ரமில் கொழுப்பு குறைவாகவும், இம்யூனோகுளோபுலின்கள் அதிகமாகவும் உள்ளது. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
தாய்ப்பாலில் ரத்த வெள்ளை அணுக்கள், ஆன்டிபாடிகள், நொதிகள் மற்றும் மனித பால் ஒலிகோசாக்கரைடுகள் (HMOs) நிறைந்துள்ளன. அவை புதிதாகப் பிறந்த குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மற்றும், உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வளர்க்கின்றன. குழந்தை வளரும் காலக்கட்டத்தில் இவை அத்தியாவசிய நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
மூளை வளர்ச்சி
மூளை வளர்ச்சிக்கு அவசியமான டோகோசாஹெக்ஸெனாயிக் அமிலம் தாய்ப்பாலில் உள்ளது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியமாகிறது.
தாய்-சேய் பிணைப்பை தாய்ப்பால் வலுப்படுத்துகிறது
வயதுக்கு ஏற்ற வளர்ச்சி
குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப தாய்ப்பாலின் கலவை மாறுபடும். ஆரம்ப பால் புரதத்தால் நிறைந்தது. அதே நேரத்தில் பிந்தைய பால் (ஹிண்ட்மில்க்) கெட்டியாகவும், கொழுப்பாகவும் இருக்கும். இது குழந்தையின் எடை அதிகரிப்பிற்கு மிகவும் முக்கியமானது.
உளவியல்
தாய்ப்பால் கொடுப்பது உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்குகிறது. தாய்-சேய் பிணைப்பை வலுப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் சீராக இருக்கும். தாய்ப்பால் குடிக்கக்கூடிய குழந்தை எப்பொழுதும் உற்சாகமாகக் காணப்படும், சோர்வாக இருக்காது.
நோய்தடுப்பு
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, உடல் பருமன், டைப் 1 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவு. மேலும் காது தொற்று மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு.
தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள்
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ரத்தப்போக்கு நிற்கும். சுகப்பிரசவத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். தாய்ப்பால் கொடுப்பதால் அவை சரியாகும். தாய்ப்பால் கொடுக்க தாயின் கர்ப்பப்பை விரைவில் சுருங்கி விடும். இதன் காரணமாக வயிறு பெரிதாவது தடுக்கப்படும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் மீண்டும் கர்ப்பம் தரிப்பதில் இருந்து இடைவெளி கிடைக்கும். இது பெண்களுக்குச் சிறந்த நன்மை அளிக்கும். தாய்ப்பால் கொடுத்தால் இளமை போய்விடும் என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கிறது. ஆனால் தாய்ப்பால் கொடுத்தால் பெண்கள் இளமையாக இருப்பார்கள். முக்கியமாக தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோயை தடுக்கும். மேலும் கருப்பை புற்றுநோய், எலும்புப்புரை, இருதய நோய், உடல் பருமன் போன்றவற்றையும் தடுக்கும்.






