என் மலர்
நீங்கள் தேடியது "தாய்ப்பால் அவசியம்"
- தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் அன்னைக்கும் உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்கும்.
- தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போடலாம்.
தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைகள் பெறும் நன்மைகள் குறித்தும், தாய்ப்பால் கொடுப்பதால் தாய் அடையும் நன்மைகள் குறித்தும் காண்போம்.
முதல்பால்...
குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து வரும் முதல் பால் (கொலஸ்ட்ரம்) 'தங்க திரவம்' என அழைக்கப்படுகிறது. காரணம், மஞ்சள் நிறத்தில் வரும் இப்பாலில் புரதங்கள், ஆன்டிபாடிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் ஆரம்பகாலத்தில் குழந்தையின் செரிமான அமைப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொலஸ்ட்ரமில் கொழுப்பு குறைவாகவும், இம்யூனோகுளோபுலின்கள் அதிகமாகவும் உள்ளது. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
தாய்ப்பாலில் ரத்த வெள்ளை அணுக்கள், ஆன்டிபாடிகள், நொதிகள் மற்றும் மனித பால் ஒலிகோசாக்கரைடுகள் (HMOs) நிறைந்துள்ளன. அவை புதிதாகப் பிறந்த குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மற்றும், உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வளர்க்கின்றன. குழந்தை வளரும் காலக்கட்டத்தில் இவை அத்தியாவசிய நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
மூளை வளர்ச்சி
மூளை வளர்ச்சிக்கு அவசியமான டோகோசாஹெக்ஸெனாயிக் அமிலம் தாய்ப்பாலில் உள்ளது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியமாகிறது.

தாய்-சேய் பிணைப்பை தாய்ப்பால் வலுப்படுத்துகிறது
வயதுக்கு ஏற்ற வளர்ச்சி
குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப தாய்ப்பாலின் கலவை மாறுபடும். ஆரம்ப பால் புரதத்தால் நிறைந்தது. அதே நேரத்தில் பிந்தைய பால் (ஹிண்ட்மில்க்) கெட்டியாகவும், கொழுப்பாகவும் இருக்கும். இது குழந்தையின் எடை அதிகரிப்பிற்கு மிகவும் முக்கியமானது.
உளவியல்
தாய்ப்பால் கொடுப்பது உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்குகிறது. தாய்-சேய் பிணைப்பை வலுப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் சீராக இருக்கும். தாய்ப்பால் குடிக்கக்கூடிய குழந்தை எப்பொழுதும் உற்சாகமாகக் காணப்படும், சோர்வாக இருக்காது.
நோய்தடுப்பு
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, உடல் பருமன், டைப் 1 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவு. மேலும் காது தொற்று மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு.
தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள்
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ரத்தப்போக்கு நிற்கும். சுகப்பிரசவத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். தாய்ப்பால் கொடுப்பதால் அவை சரியாகும். தாய்ப்பால் கொடுக்க தாயின் கர்ப்பப்பை விரைவில் சுருங்கி விடும். இதன் காரணமாக வயிறு பெரிதாவது தடுக்கப்படும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் மீண்டும் கர்ப்பம் தரிப்பதில் இருந்து இடைவெளி கிடைக்கும். இது பெண்களுக்குச் சிறந்த நன்மை அளிக்கும். தாய்ப்பால் கொடுத்தால் இளமை போய்விடும் என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கிறது. ஆனால் தாய்ப்பால் கொடுத்தால் பெண்கள் இளமையாக இருப்பார்கள். முக்கியமாக தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோயை தடுக்கும். மேலும் கருப்பை புற்றுநோய், எலும்புப்புரை, இருதய நோய், உடல் பருமன் போன்றவற்றையும் தடுக்கும்.
- குழந்தைக்கான முதல் உணவு, தாய்ப்பால்.
- உடலுறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சியடைய தாய்ப்பால் மிக அவசியம்.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் முதல் உணவாக தாய்ப்பாலைத்தர உதவ வேண்டும். இல்லையெனில் ஏன் அவ்வாறு தாய்ப்பால் கொடுக்க இயலவில்லை என்ற மருத்துவ காரணத்தை மருத்துவ பதிவேட்டிலும், தாய் மருத்துவமனையை விட்டு வெளியேறும் போது தரும் ஆவணத்திலும் பதிவுசெய்ய வேண்டும்.
குழந்தை பிறந்த நேரம், தாய்ப்பால் கொடுத்த நேரம் இரண்டையும் பதிவுசெய்ய வேண்டும். இதை ஒவ்வொரு மருத்துவமனையிலும் கடைப்பிடித்தால் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைக்க முடியும் என்கிறது, மருத்துவ ஆய்வு.
வேலைக்குப் போகும் பெண்களின் சிரமத்தைக் குறைப்பதற்காக அரசாங்கம் பேறுகால விடுமுறை வழங்குகிறது. ஆனாலும் 46.8 சதவீதம் தாய்மார்கள் தான், குழந்தைகளுக்கு 6 மாதம் முடிய தாய்ப்பால் மட்டுமே தருகிறார்கள். தாய்ப்பால் பெறுவது குழந்தையின் உரிமை. அதைத் தருவது தாயின் கடமை.
வேலைக்குச் செல்லும் பெண்கள், தங்கள் குழந்தைக்கு தொடர்ந்து தாய்ப்பால் தருவது பற்றி முன்கூட்டியே திட்டமிட வேண்டும்.
வேலையில் சேர 3 வாரத்துக்கு முன்பிருந்தே இதை ஆரம்பிக்கலாம். முதல் வாரத்தில் தாய்ப்பாலை எப்படி எடுப்பது, பாதுகாப்பது என்று கற்றுக்கொள்ள வேண்டும். இப்படி சேகரிக்கப்பட்ட பால், அறை வெப்பநிலையில் 7 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் 24 மணி நேரம் வரை கெடாது. சேகரித்து வைத்த பாலை ஸ்பூன் மூலம் குழந்தைக்குப் புகட்ட வேண்டும்.
குழந்தைக்கான முதல் உணவு, தாய்ப்பால். குழந்தையின் உடலுறுப்புகள் சரியான முறையில் வளர்ச்சியடைய, புரதச்சத்து நிறைந்த தாய்ப்பால் மிக அவசியம். சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்த அரைமணி நேரத்திற்குள்ளும், அறுவை சிகிச்சை மூலமாகப் பிறந்த குழந்தை என்றால் இரண்டு மணி நேரத்திலும் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும்.
குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது அவசியம். உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா சபையின் குழந்தைகள் நல கூட்டமைப்பின் ஆய்வு முடிவுகளின்படி, தாயின் பால்சுரப்பினைப் பொருத்து குழந்தைக்கு 3 வயது வரையில் தாய்ப்பால் கொடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீம்பால் தொடங்கி 3 வயது வரையில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள், நோய்க்கிருமிகளிடம் இருந்து சிறப்பான பாதுகாப்பு கிடைக்கப்பெறுவார்கள்.
முதல் ஆறு மாதத்துக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவு, தண்ணீர்கூட கொடுக்கத் தேவையில்லை. அதன் பிறகு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
பிறந்த குழந்தைக்கு, பசுவின் பாலோ பவுடர் பாலோ தாய்ப்பாலுக்கு இணையான சத்தைக் கொடுக்கக்கூடியது அல்ல என்பதுடன், அளவு, இடைவெளி என கொடுக்கப்படும் முறைகளால் அது சிசுவுக்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகும் இயற்கை உணவு.
குழந்தையின் புத்திக்கூர்மை, மூளைச் செயல்திறன், சுறுசுறுப்பு ஆகியவற்றை நிர்ணயிக்கும் கருவியாக தாய்ப்பால் செயல்படுவதாக உலக சுகாதார நிறுவனமான WHO உரக்கச் சொல்கிறது. மேலும், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரித்தல், மனஅழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்கிறார்கள் மருத்துவர்கள்.






