என் மலர்
குழந்தை பராமரிப்பு

பள்ளிக்கு செல்லும் முன் குழந்தைகள் இதை செய்கிறார்களா?
- காலைநேரத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்யாதீர்!
- சீக்கிரம் எழுதல், நீரேற்றம், சீரான ஊட்டச்சத்து, குறைவான திரைநேரம் ஆகியவை பிரச்சனைகளை தீர்க்கும்.
ஒரு குழந்தையை காலையில் பள்ளிக்கு அனுப்புவது என்பது எவ்வளவு சிரமம் நிறைந்தது என்பது அவர்களின் தாய்மார்களுக்கு மட்டும்தான் தெரியும். குழந்தைகளைவிட அவர்கள்தான் ஞாயிற்றுக்கிழமைகளை அதிகம் எதிர்பார்ப்பார்கள். ஒரு பள்ளி காலைப்பொழுதை இவ்வளவு கடினமாக்குவது எது என நீங்கள் என்றாவது யோசித்திருக்கிறீர்களா? முன்கூட்டியே திட்டமிடாததுதான் அது. காலையில் சிரமமின்றி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கீழ்க்காணும் எளிய நடைமுறைகளை பெற்றோர்கள் பின்பற்றினாலே போதும்....
சீக்கிரம் எழுவது
குழந்தைகள் 8 மணிக்கு பள்ளிக்கு செல்லவேண்டும் என்றால், அவர்களை 7 மணிக்கு எழுப்பிவிட்டு அரக்க பறக்க பள்ளிக்கு அனுப்பாதீர்கள். 8 மணிக்கு பள்ளி எனில் 6.30-க்கு எழுப்பிவிடுங்கள். அதற்கு முதல்நாள் இரவு தாமதாக தூங்கவைக்கமால், சீக்கிரம் தூங்கவைக்கவேண்டும். சீரான தூக்க அட்டவணை குழந்தைகளை மன அழுத்தத்திற்கு இட்டுசெல்லாது.
தண்ணீர் குடிக்க வைக்கவேண்டும்
குழந்தைகள் எழுந்தவுடன் அவர்கள் முகம், கை, கால்களை கழுவசொல்லவேண்டும். பின்னர் கழிவறைக்கு சென்றுவந்தபின், பல் துலக்க சொல்லிவிட்டு, வெறும் வயிற்றில் கொஞ்சம் தண்ணீர் குடிக்க சொல்லவேண்டும். ஏனெனில் இரவு முழுவதும் தண்ணீர் இல்லாமல் உடல் நீரேற்றம் இன்றி இருக்கும். தூக்கத்திற்குப் பிறகு மீண்டும் நீரேற்றம் பெறுவது வளர்சிதை மாற்றத்தில் தொடங்கி அறிவாற்றல் செயல்பாட்டை ஆதரிக்கிறது.
காலை உணவு
சீக்கிரம் எழாத குழந்தைகள், தாமதமாகிவிட்டது எனக்கூறி சாப்பிடாமல் செல்வார்கள். காலை உணவை தவிர்ப்பது நினைவாற்றல், கவனம் செலுத்தும் செயல்களை பாதிக்கும். இதனால் கல்வி பாதிக்கப்படும்.
குழந்தைகளின் காலை நேர ரொட்டீனின் மாதிரிப் படம்
திரை பயன்பாட்டை குறைத்தல்
பெற்றோர் பலரும் தங்களுக்கு குழந்தைகள் வேலைகொடுக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மொபைல் ஃபோன் கொடுப்பது, டிவியை போட்டுவிட்டு பார்க்க சொல்வது என இருப்பர். எழுந்த உடனேயே டிஜிட்டல் சாதனங்களை பார்ப்பது மூளையின் கவனம் செலுத்தும் திறனை சீர்குலைக்கும். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் கவனச்சிதறல் ஏற்படும்.
உடற்பயிற்சி
காலையில் குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய சொல்லலாம். உடல் செயல்பாடு ரத்த ஓட்டத்தை தூண்டும் மற்றும் மூளையை கற்றலுக்கு தூண்டும்.
முன்னேற்பாடு
காலை நேரத்தை எளிதாக்கவும், மோதல்களைத் தவிர்க்கவும் முன்கூட்டியே திட்டமிடுங்கள். முந்தைய நாள் இரவே காலையில் போடவேண்டிய பள்ளி சீருடைகள், அன்றைய வகுப்புக்கு தேவையான புத்தகங்கள், போன்றவற்றை எடுத்துவைத்துவிடவேண்டும். இது குழந்தையின் நாளை அமைதியாக தொடங்க உதவும்.
படித்தல்
அன்றைய நாளில் உள்ள வகுப்புக்கான பாடங்களை ஒருமுறை எடுத்து காலைநேரத்தில் வாசித்து பார்க்க சொல்லலாம். ஒருமுறை தாங்களே வாசித்து பார்த்துவிட்டு, பின்னர் ஆசிரியர் நடத்துவதை கவனிக்கும்போது நன்றாக புரியும். பாடத்தில் இருக்கும் வார்த்தைகள் புரியவில்லையென்றாலும் சந்தேகங்களை எழுப்ப முடியும்.
பெற்றோர் அமைதி அவசியம்
இறுதியாக, பெற்றோர்கள் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. காலை நேரத்திலேயே பிள்ளைகளுடன் வாக்குவாதம் செய்வது நேரத்தை வீணடிப்பதோடு, குழந்தைகளுக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தி, காலை நேரத்தை இன்னும் கடினமாக்குகிறது.
சீக்கிரம் எழுதல், நீரேற்றம், சீரான ஊட்டச்சத்து, குறைவான திரைநேரம் ஆகியவை குழந்தைகளின் கவனத்தையும், நல்வாழ்வையும் ஆதரிக்கின்றன என்பதை ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளது.






