என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    இலவச குழந்தை பராமரிப்பை வழங்கும் முதல் அமெரிக்க மாநிலம்!
    X

    இலவச குழந்தை பராமரிப்பை வழங்கும் முதல் அமெரிக்க மாநிலம்!

    • வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடும்பங்களுக்கும் இலவசம்!
    • வேலை தேடும், வேலைக்கு செல்லும் மற்றும் படிக்கும் தாய்மார்களுக்கான முன்னெடுப்பு.

    குழந்தை பராமரிப்பு என்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல. பசியறிந்து குழந்தைக்கு உணவு கொடுக்கவேண்டும். அவர்களை தூங்கவைக்க வேண்டும். குளிக்க வைக்க வேண்டும். எப்போதும் அவர்களை கண்காணித்து கொண்டே இருக்கவேண்டும். இப்படி பல வேலைகளை உள்ளடக்கியது. அதுவும் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பராமரிப்பது இன்னும் சிக்கல் வாய்ந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களில் பணிக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் தாய்மார்களை உதவிக்கு வைத்துக்கொள்வர். இருப்பினும் நகரங்களில் வாழ்பவர்களால், கிராமத்தில் இருக்கும் தங்கள் அம்மாக்களை இங்குகொண்டுவந்து வைத்து குழந்தையை பார்த்துக்கொள்ள வைப்பது என்பது பல நடைமுறை சிக்கல்களை உள்ளடக்கியது.

    சில வீட்டில் அவர்களின் அம்மாக்களும் வேலைக்குப் போகும் சூழல் இருக்கும். அப்போது குழந்தையை யார் பார்த்துக்கொள்வது? இந்த சூழலில் இருக்கும் பலரும் தேர்ந்தெடுப்பதுதான் குழந்தை பராமரிப்பு மையங்கள். காசு, பணம் போன்றவற்றைவிட பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகள் மேலானவர்கள்தான். ஆனால் அவர்களை பராமரிக்கவும் பணம் என்பது அத்தியாசியமான ஒன்று. அதனால் அவர்களுக்கும் வேறு வழியில்லை. வேலைக்கு சென்றுதான் ஆகவேண்டும். குழந்தை பராமரிப்பு மையங்களில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி தங்கள் குழந்தைகளை விட்டுச்செல்வர். பணிமுடிந்து வந்து மீண்டும் அழைத்துச்செல்வர்.

    அல்லது பலரும் வீட்டிலேயே குழந்தை பராமரிப்பாளரை நியமித்து குழந்தைகளை கவனிக்க சொல்வர். இதற்கு எப்படியும் மாதத்திற்கு ரூ.15 ஆயிரத்திற்குமேல் செலவு செய்வர். வீட்டில் பணியமர்த்தப்படும் பராமரிப்பாளர்களுக்கு மாதம் ரூ.13 முதல் 15 ஆயிரம் சம்பளம் வழங்குவர். ஒருவேளை கூடுதல் வேலைகள், அதாவது வீட்டு வேலைகள் சிலவற்றையும் சேர்த்து பார்க்கச்சொன்னால் அதற்கேற்றவாறு கூடுதல் சம்பளம் கொடுப்பர். பராமரிப்பு மையங்களில் இந்த தொகை மாறுபடலாம். சில மையங்கள், குறிப்பாக பகல்நேர பராமரிப்பு மையங்கள், நாள் அல்லது வார அடிப்படையில் கட்டணம் வசூலிக்கின்றன. சில மையங்கள் மணிநேரத்தை கணக்கில்கொண்டு கட்டணம் வசூலிக்கின்றன. இந்த செலவே எப்படியும் அவர்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு போய்விடும்.


    அனைத்து குடும்பங்களுக்கும் இலவச குழந்தை பராமரிப்பை வழங்குகிறது நியூ மெக்ஸிகோ

    இலவச குழந்தை பராமரிப்பு...

    இந்நிலையில் இந்த குழந்தை பராமரிப்புச் செலவை குறைக்கும் வகையில் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ நகரம், புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது குழந்தை பராமரிப்பு இலவசம் என அறிவித்தது. அம்மாநில அரசு அறிவித்த அந்த திட்டமும் நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் அனைத்து குடும்பங்களுக்கும் இலவச குழந்தை பராமரிப்பை வழங்கும் முதல் மாநிலமாக நியூ மெக்ஸிகோ மாறியுள்ளது. இதனால் அம்மாநில மக்களுக்கு ஆண்டுக்கு சுமார் $12,000 மிச்சமாகிறது. இந்திய மதிப்பில் தோராயமாக பத்து லட்சத்து அறுபது ஆயிரம். குடும்பத்தினர் தங்கள் வேலையை தொடரவும், கல்வியை தொடரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    "குடும்ப ஒற்றுமை, பணியாளர் பங்கேற்பு மற்றும் நியூ மெக்ஸிகோவின் எதிர்கால செழிப்புக்கு குழந்தை பராமரிப்பு அவசியம். உலகளாவிய குழந்தை பராமரிப்பில் முதலீடு செய்வதன் மூலம், நாங்கள் குடும்பங்களுக்கு நிதி நிவாரணம் வழங்குகிறோம். எங்களது பொருளாதாரத்தை ஆதரிக்கிறோம், மேலும் ஒவ்வொரு குழந்தையும் வளரவும், செழிக்கவும் வாய்ப்பு இருப்பதை உறுதி செய்கிறோம்" என நியூ மெக்ஸிகோ ஆளுநர் மிச்செல் லுஜன் கிரிஷாம் தெரிவித்துள்ளார்.

    திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது?

    கடந்த சில ஆண்டுகளாகவே இத்திட்டம் அங்கு நடைமுறையில் இருந்துள்ளது. ஆனால் அது வருமானத்தின் அடிப்படையில், அதாவது வறுமைக்கோட்டின் கீழ் என நாம் குறிப்பிடுவதுபோல வருமானம் குறைவாக இருப்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இந்த சலுகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அரசினுடைய மையங்களில் சேர்த்தாலும், தனியார் பராமரிப்பு மையங்களில் குழந்தைகளை சேர்த்தாலும் அதற்கான பராமரிப்பு தொகையை அரசு வழங்கும். பராமரிப்பு தொகையை பெற்றோர்கள் கட்டிவிட்டு, பின்னர் அந்த தொகையை அரசிடமிருந்து பெறுவார்கள்.

    Next Story
    ×