என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தை உடல்நலம்"
- அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
- சில வகை ‘ஜங்’ உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் அறிவு மழுங்குகிறது.
'ஜங் புட்' பற்றியும், அவை குழந்தைகளுக்கு உண்டாக்கும் தீமைகள் பற்றியும் தெரிந்து கொள்வோமா..!
* 'ஜங் புட்' எவை?
உடல் இயக்கத்திற்கான மூன்று வேளை உணவு போக, கூடுதலாக உட்கொள்ளும் உணவுகளும், ஸ்நாக்ஸ் எனப்படும் தின்பண்டங்களும் 'ஜங் புட்' பட்டியலில்தான் வருகிறது. குறிப்பாக ஆவியில் வேகவைத்தது தவிர, எண்ணெய்யில் பொரிப்பது, டின்களில் அடைத்து வைத்திருப்பது, பாக்கெட் உணவுகள், இனிப்பு சாக்லெட்டுகள் இவற்றுடன் அவசர கதியில் சமைக்கும் உணவுகள் போன்றவை எல்லாம் 'ஜங் புட்' உணவில்தான் வருகிறது. குறிப்பாக நூடுல்ஸ், பீட்சா, பிரைடு ரைஸ், நொடி பொழுதில் தயாராகும் அசைவ உணவுகள், சிப்ஸ் உணவுகள்... எல்லாம் ஜங் புட் ரகம்தான்.
* ஜங் புட் உண்டாக்கும் விளைவுகள்
'ஜங் புட்' களை அதிகம் உட்கொள்வதால், மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதற்றம், உடற்பருமன் போன்றவை ஏற்படுகிறதாம். இந்த வகை உணவுகள் கொழுப்புச்சத்து அதிகம் கொண்டவை. குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு, புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவையும் ஏற்படுகின்றன. குறிப்பாக உடற்பருமனில் தொடங்கி, எல்லா வகையான வியாதிகளுக்கு வழிவகை செய்கின்றன.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சில வகை 'ஜங்' உணவுகளை உட்கொள்வதால் குழந்தைகளின் அறிவு மழுங்குகிறது எனவும், மறதி அதிகரிக்கிறது எனவும் தெரிய வந்துள்ளது. இனிப்பு பதார்த்தங்கள், பல வியாதிகளை உடலுக்கு கொண்டு வருகின்றன. இனிப்பை தொடர்ந்து அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது. அதனால் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள், செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது நலம்.
* பாக்கெட் உணவுகள்
வறுத்த உணவு வகைகளில் சுவைக்காக செயற்கை பொருட்கள், ரசாயனம், உணவுக்கு நிறமேற்ற சாயப் பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பழக்க வழக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. வறுப்பதற்காக பயன்படுத்தப்படும் சில எண்ணெய் வகைகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை.
அதேபோல பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஏற்கனவே சமைக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகின்றன. வறுத்த உணவுகளால் ஏற்படும் அனைத்து பாதிப்புகளும் இந்த மாதிரியான பாக்கெட் உணவுகளிலும் ஏற்படுகின்றன. இந்த வகை உணவுகள் உடலின் நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன. இதனால் அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அவசர உலகில் பாக்கெட் உணவுகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
மூன்று வேளை உணவு போக, கூடுதலாக உட்கொள்ளும் உணவுகளும், ஸ்நாக்ஸ் எனப்படும் தின்பண்டங்களும் 'ஜங் புட்' பட்டியலில்தான் வருகிறது.
- தொலைக்காட்சி பெட்டியை அதன் எடைக்கேற்ற ஸ்டாண்டில் வையுங்கள்.
- பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும்போது கண்காணிக்க ஆட்கள் இருப்பதில்லை.
பெரிய டேபிள் போட்டு அதன் மீது அலங்காரத் துணியை விரித்து, தொலைக்காட்சிப் பெட்டியை வைத்திருப்போம். குழந்தை அந்த துணியை இழுத்து, இழுத்து விளையாடி ஒரு கட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டி நழுவி விழக்கூடும். சென்னையில் இப்படி தொலைக்காட்சி பெட்டி விழுந்து குழந்தை இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதேபோல் தொலைக்காட்சி பெட்டியை அதன் எடைக்கேற்ற ஸ்டாண்டில் வையுங்கள். எடை குறைந்த, சக்கரங்கள் கொண்ட டீப்பாயில் தொலைக்காட்சி பெட்டியை வைக்க வேண்டாம். வாஷிங்மிஷின் எந்திரத்தை திறந்து வைக்காதீர்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்கும் இயல்புகொண்டது குழந்தை. எனவே உள்ளே இறங்கி கதவை மூடிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம்.
டேபிள் பேனின் சுழற்சி குழந்தைகளை வசீகரிக்கும் இன்னொரு ஆபத்து. சுழலும் விசிறிகளுக்கு இடையே கையை நுழைக்க வேண்டும் என நினைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே நெருக்கமான கம்பித்தடுப்புகள் இருக்கும் டேபிள் பேன்களையே வாங்குங்கள். அப்படியே வாங்கினாலும், அதைத்தொட்டு விளையாட குழந்தைகளை அனுமதிக்காதீர்கள். டேபிள் பேனை போலவே எரியும் சுடர் விளக்கும் குழந்தைகளின் ஆவலைத் தூண்டக்கூடிய ஒன்று. இந்த வசீகரம் குழந்தையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எனவே சுடர் விளக்கு, எரியும் மெழுகுவத்தி ஆகியவற்றை குழந்தையின் கைக்கு எட்டாத உயரத்தில் வையுங்கள்.
குழந்தைகளின் பள்ளி உணவு டப்பாக்களில் விக்கிக்கொள்ளும் அளவுக்கோ, தொண்டையில் சிக்கிக் கொள்ளும் அளவுக்கோ கடினமான, பெரிய அளவிலான உணவு பொருட்களை கொடுப்பதைத் தவிருங்கள். குறிப்பாக, பெரிய இறைச்சி அல்லது எலும்புத்துண்டுகளை கொடுத்து அனுப்ப வேண்டாம். பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடும்போது கண்காணிக்க ஆட்கள் இருப்பதில்லை. குழந்தைகள் தூங்கும்போதோ அல்லது வீட்டில் இல்லாதபோதோ இஸ்திரி போடுவது, மின்சாதனங்கள் பழுது பார்ப்பது, ஆசிட் ஊற்றிக் கழிப்பறையை கழுவுவது, வெள்ளையடிப்பது போன்ற பணிகளை செய்வது நல்லது.
- தாமதமாகத் தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு மிகவும் குறைவாகவே இருக்கும்.
- சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக் கூர்மையும் அதிகம் இருக்கும்.
தூக்கத்திற்கும், மனித உடல்நலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்த தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், குழந்தைகளை இரவில் சீக்கிரமே தூங்க வைத்தால் அவர்கள் உடல் பருமனற்றும், சுலபமாக வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனக் கண்டறிந்துள்ளது.
9 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட 2,200 குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்தி, தூங்கும் நேரம், உடற்பயிற்சி, வேலையின் அளவு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்தனர். அதன்படி, இரவில் காலதாமதமாகத் தூங்கி காலையில் மிகவும் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளை விட, இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும் குழந்தைகளின் பருமன் அல்லது எடை ஒன்றரை மடங்கு குறைவாக உள்ளதாம்.
''சீக்கிரம் படுத்துத் தூங்கும் குழந்தைகளுக்கு அறிவுக் கூர்மையும் அதிகம் இருக்கும்'' என்கிறார் இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய கரோல் மகேர். மேலும், ''தாமதமாகத் தூங்கி தாமதமாக எழும் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். இது போன்ற குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட, மூன்று மடங்கு அதிகமாக டி.வி பார்ப்பதிலும், கம்ப்யூட்டரில் ஈடுபாடு கொள்வதிலும் நேரத்தை செலவழிப்பார்கள்'' என்கிறார் டாக்டர் கரோல்.
'பின் தூங்கி முன் எழுவது' என்பது இலக்கியத்தில் மட்டுமே இருக்கட்டும். 'முன் தூங்கி முன் எழுவதே' உடலுக்கு நல்லது என்கிறது அறிவியல்!
- கைக்குழந்தையைப் பொறுத்தவரை ‘அழுகை’ என்பது ஒரு மொழி.
- குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு.
குழந்தைச் செல்வத்தின் இன்பத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதே குழந்தைகள் அழத் தொடங்கினால் நம் மனது மிகவும் துன்பப்படும். எப்பேற்பாடுபட்டாவது அழுகையை நிறுத்த முயற்சிப்போம். பல நேரங்களில் தோல்விதான் மிஞ்சும்.
ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தை அதிகமாக அழும்போது, அது எதற்காக அழுகிறது, என்ன செய்தால் அழுகை நிற்கும் எனத் தெரியாமல் திகைக்கிற தாய்மார்தான் அதிகம். கைக்குழந்தையைப் பொறுத்தவரை 'அழுகை' என்பது ஒரு மொழி. தாயின் கவனத்தைத் தன் மீது ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் எளிய வழி. பசி, தாகம், தனிமை, களைப்பு போன்ற சாதாரணக் காரணங்களால் குழந்தை தினமும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு. இந்தக் கால அளவு அதிகரித்தால் அல்லது குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால், அதைக் கவனிக்க வேண்டும்.
குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய்மாரின் முதன்மைக் கணிப்பு. இது பெரும்பாலும் உண்மைதான் என்றாலும், பசியையும் தாண்டிப் பல காரணங்களால் குழந்தை அழக்கூடும். குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக, குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும்.
பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். உதாரணமாக, திட உணவு சாப்பிடும் குழந்தைக்குச் சில தாய்மார் உணவைக் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இதனால் உணவு விக்கிக்கொள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும். இதனால் சாப்பிட்ட பிறகு குழந்தை அழும். அப்போது கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தையின் அழுகை நின்றுவிடும். பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும். குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.
அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத்துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடுப்பு ஆபரணங்கள் ஆகியவற்றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். `டயபர்' என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவிட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பும் தடிப்பும் உண்டாகின்றன. இதன் காரணமாகவும் குழந்தைகள் அடிக்கடி அழுவதுண்டு.
தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும்.
குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.
சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும்.
குழந்தையின் உடலை மெல்லிய துணி கொண்டு சுற்றுவதால் குழந்தைகளின் அழும் நேரம் குறைக்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதெற்கென ப்ரத்யேகமாக துணிகள் கடைகளில் கிடைக்கின்றன வாங்கி பயன்படுத்துங்கள். இது உங்கள் குழந்தையின் அழுகையை தடுத்து ஆறுதலையும் பாதுகாப்பையும் அளிக்கிறது. அதே நேரம் தலை மற்றும் முகம் மூடிவிடாமல் பார்த்து கொள்ளவும், இது குழந்தை எளிதாக சுவாசிக்க உதவும். உங்கள் குழந்தையின் கைகளை வெளியில் விட்டும் சுற்றலாம். குழந்தை வயிற்றினால் படுக்க அல்லது தவழ முயற்சிக்கும் காலங்களில் இம்முறையை நிறுத்தி விட வேண்டும்.
குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட முறைதான் மேலும் கீழும் (ராக்) உங்கள் குழந்தையை அசைத்தல். அதற்கு குழந்தையை பாதுகாப்பாக உங்கள் கைகளில் பிடித்து மெதுவாக ராக் செய்யவும். இம்முறையால் அழும் குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது. அதுமட்டுமல்லாமல் பின்வரும் காலங்களில் இது குழந்தை மனஉறுதியுடன் வளர்வதற்கு உதவுகிறது.
வயிறு பிரச்சினை உங்கள் குழந்தை தொடர்ந்து அழ வைக்கும் ஒரு முக்கிய காரணி. ஏப்பத்தின் மூலமாக வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றுவதன் மூலம் குழந்தையின் அழுகையை நிறுத்தலாம். அதற்கு உங்கள் குழந்தை கிடத்தி சைக்கிள் ஓட்டுவது போல் கால்களை அசைப்பதன் மூலம் வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றலாம்.
- ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்கலாம்.
- குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க வேண்டாம்.
குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலத்துக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து பிற உணவுகளையும் பழக்க ஆரம்பிக்கலாம்.
தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டிய பருவத்தில், ஒருவேளை தாய்க்கு போதிய அளவு பால் சுரப்பு இல்லாவிட்டால் மருத்துவரை ஆலோசித்தே முடிவு செய்ய வேண்டும். நீங்களாக குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டாம்.
ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு முழு கொழுப்புச்சத்துள்ள பால் கொடுக்கலாம்.
பசும்பால் கொடுப்பதாக இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகுதான் தொடங்க வேண்டும். ஆவின் பால் கொடுப்பதாக இருந்தால் அதில் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வரும் பால் குழந்தைகளுக்கு ஏற்றது. அதில் ஃபுல் க்ரீம் இருக்கும். அதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே காய்ச்சி ஆறவைத்துக் கொடுக்கலாம்.
குழந்தைக்கு ஒரு நாளைக்கு 400 மில்லி அளவு வரை பால் கொடுக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது குழந்தைக்கு மலச்சிக்கல் வர வாய்ப்புண்டு. இது 5 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பொருந்தும். அந்த வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு ஆவினின் பச்சை நிற பாக்கெட் பால், அதன் பிறகு, நீல நிற பாக்கெட் என மாற்றலாம்.
- மழைக்காலங்களில் கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளுக்குமே காய்ச்சல் வந்துவிடுகிறது.
- சுகாதாரமில்லாத உணவுகள் காய்ச்சலுக்கு ஒரு முக்கியமான காரணம்.
திடீர் பருவநிலை மாற்றம் காரணமாகத்தான் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இரண்டும் வருகின்றன. இவை இயல்பானதுதான் என்பதால் பயப்பட வேண்டாம். ஒரு நாளைக்கு முன்னதாக லேசான மூக்கொழுகுதலுடன் நார்மலாக இருக்கிற குழந்தைகளுக்கு அன்றைக்கு சாயங்காலமோ, இரவோ காய்ச்சல் வர ஆரம்பிக்கும். இது சளியினால் வருகிற சாதாரணக் காய்ச்சல்.
இப்படியில்லாமல் சளிப்பிடித்து இரண்டு அல்லது மூன்று நாள்கள் கழித்து காய்ச்சல் வருகிறது என்றால், மழைக்கால தொற்றுநோய்கள் காரணமாக இருக்கலாம். இன்னும் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் இரண்டு, மூன்று நாள் இருந்துவிட்டு போய்விடும். அம்மாக்கள் 'அப்பாடா' என்று சற்று ரிலாக்ஸ் ஆகிற நேரத்தில் மறுபடியும் மெல்ல தலைகாட்ட ஆரம்பிக்கும். இதுவும் மழைக்கால தொற்றுநோய்களால் வருகிற காய்ச்சல்தான்.
இந்த மாதங்களில், சில குழந்தைகளுக்குக் காய்ச்சலுடன் தொண்டையில் இன்ஃபெக்ஷனும் ஏற்படும். இதனால், தொண்டையெல்லாம் புண்ணாகி சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு 10 அல்லது 15 நாள் மாத்திரை தர வேண்டி வரும். நான் மேலே சொல்லியிருக்கிற நான்கு காய்ச்சல்களுக்குமே குழந்தைகளின் வயது மற்றும் எடையைப் பொறுத்து மருந்து கொடுத்தாலே சரியாகிவிடும்.
வராமல் தடுக்க வழிகள்
பருவநிலை மாற்றத்தால் வருகிற காய்ச்சல், ஒரு குழந்தையிடம் இருந்துதான் இன்னொரு குழந்தைக்குப் பரவும். அதனால், உங்கள் பிள்ளைக்கு லேசான காய்ச்சல் இருந்தால்கூட பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் இருப்பதுதான் நல்லது.
இந்த மாதங்களில் குழந்தைகளுக்கு ஹோட்டல் உணவுகளை வாங்கித் தராதீர்கள். ஏனென்றால், சுகாதாரமில்லாத உணவுகள் காய்ச்சலுக்கு ஒரு முக்கியமான காரணம். கேன் வாட்டராக இருந்தாலும் கொதிக்க வைத்து ஆறிய நீரை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.
இந்த சீஸனில் மழையும் வெயிலும் மாறி மாறி இருக்கும் என்பதால், உங்கள் வீட்டைச் சுற்றி சுத்தமான மழை நீர் எங்கும் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் கொசுக்களின் பிறப்பிடம். டெங்கு கொசுக்கள் இப்படிப்பட்ட சுத்தமான நீரில்தான் முட்டையிடும் என்பதால், கவனம்.
வீட்டுக்கு முன்னால் தேங்கியிருக்கிற மழை நீரில் வெறுங்காலுடன் குதிப்பதற்கு பிள்ளைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்தான். ஆனால், அப்படிக் குதித்தால் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, எலிக் காய்ச்சல் என மழைக்கால தொற்றுநோய்கள் அத்தனையும் வந்துவிடலாம். 10 வயதுக்கு மேல் வளர்ந்த குழந்தைகள் என்றால், அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தேவையான அளவு உடலில் இருக்கும். அதுவரைக்கும் மழை நீரில் விளையாடுவதைத் தள்ளி வைப்பதுதான் நல்லது.
பருவநிலை மாற்றத்தால் வருகிற காய்ச்சலைப் பொறுத்தவரைக்கும், அதிகமான வயிற்று வலி, அடிக்கடி வாந்தியெடுத்தல், கை, கால்கள் சில்லிட்டுப்போவது போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் இருந்தால், குடிப்பதற்கு நிறைய நீராகாரங்கள் கொடுங்கள். காய்ச்சல் இருந்தாலும் சின்னதாகவாவது விளையாடிக்கொண்டிருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. அதற்கு மாறாக, சோர்ந்துபோய் படுத்துக்கொண்டே இருந்தாலும், தூங்கிக்கொண்டே இருந்தாலும் உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்.
- சாப்பிட்டவுடன் கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும்.
- தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம்.
முகத்திற்கு அழகு சேர்க்கும் விஷயங்களில் பற்களுக்கும் முக்கிய பங்குண்டு. அதை எப்படி பாதுகாப்பது என தெரிந்து கொள்வோமா...?
குழந்தைப் பருவம் முதலே பற்களை முறையாக சுத்தம் செய்யவேண்டும். தினமும் இரண்டு வேளை பல் துலக்குவது அவசியம். சாப்பிட்டவுடன் கண்டிப்பாக வாய் கொப்பளிக்க வேண்டும். சிலருக்கு சிறு வயதிலேயே பற்கள் நீண்டு வளர்வதால், அவர்களது முக அமைப்பே மாறிவிடுகிறது. இதற்குக் காரணம், குழந்தைப் பருவத்தில் விரல் சூப்புவதே.
பால் பற்கள் விழுந்து நிரந்தரமான பற்கள் வளரும் பருவத்தில் இந்தப் பழக்கம் தொடரும் பட்சத்தில், பற்கள் நேரான வளர்ச்சிக்கு விரல்கள் இடையூறாக இருக்கின்றன. பற்கள் இயல்பை விட்டு விரல் சூப்பும் நிலைக்கேற்ப நீண்டு வளர ஆரம்பித்து விடுகின்றன. எனவே, 4 வயதுக்கு மேல் குழந்தைகள் இந்தப் பழக்கத்தைத் தொடர அனுமதிக்கக்கூடாது.
பல் துலக்கும்போது பலரும் தெரியாமலேயே தவறு செய்கிறார்கள். அது, பற்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பல் ஈறுகளுக்கு கொடுக்க மறப்பதுதான்.
ஈறுகளுக்கும், பற்களுக்கும் இடையில் உள்ள சின்ன இடைவெளிகளில் நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் தங்குவதால்தான் ஈறு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க ஈறுகளை எப்படி பாதுகாப்பது என்பதை பல் மருத்துவர்கள் மூலம் அறிந்து, அதை குழந்தைகளுக்குக்கற்றுக் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால், பிற்காலத்தில் பல் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
- குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது.
- பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது நல்லது.
பிறந்த குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வது உலகம் முழுவதும் பின்பற்றப்படுகிறது. ஒரு சரியான எண்ணெய் மசாஜ், குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. வயிற்று வலிக்கு நல்ல ஒரு சிகிச்சையாக உள்ளது, குழந்தையின் உடல் வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. எண்ணெய் மசாஜ் மூலம் குழந்தையின் வளர்ச்சியை அதிகரிப்பது பெற்றோர் கையில் மட்டும் தான் உள்ளது.
குழந்தைகளுக்கு இயற்கையான எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதால் அவர்களின் சரும ஆரோக்கியம் மேம்படும். தசை மற்றும் எலும்புகள் வலுப்பெறும். குழந்தைக்கும் அன்னைக்குமான பாசம் அதிகரிக்கும்.
குழந்தையின் நாசுக்கான சருமத்தில் ஏதாவது ஒரு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்தில் தவறான பாதிப்புகளைத் தரும். எந்த ஒரு எண்ணெயையும் குழந்தைக்கு தடவுவதற்கு முன்னர், குழந்தையின் கை அல்லது கால் பகுதியில் ஒரு சிறிய பகுதியில் தடவி, சோதித்து, ஒரு மணி நேரம் கழித்து தடிப்பு, ஒவ்வாமை போன்ற எந்த ளரு பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்து பின்னர் முழு உடலிலும் தடவலாம்.
குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் தொற்று மற்றும் வறட்சி ஏற்படாமல் காக்கும்.
சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய்யை உபயோகப்படுத்தினால் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பாதாம் எண்ணெய் தோல் நோய்கள் உண்டாகாமல் காக்கும். சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.
குழந்தைகளின் சருமம் வறண்டதாக இருந்தால், விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்யலாம். நகங்கள் மற்றும் தலை முடிக்கும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனால் தலைமுடி மற்றும் விரல்கள் மிகவும் பளபளப்பாக மாறுகின்றன. குழந்தையின் உடலில் விளக்கெண்ணெய் தடவி, 10-15 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.
குழந்தைக்கு மசாஜ் செய்ய ஆலிவ் எண்ணெய் மிகவும் ஏற்றது. ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் குழந்தையின் தசை வேகமாக வளர்ச்சி அடைகிறது. ஆனால் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தி குழந்தைக்கு மசாஜ் செய்யும்போது சில விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தைக்கு தோல் அழற்சி, வெட்டு அல்லது தடிப்புகள் இல்லாமல் இருக்கும்போது மட்டும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தவும். வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்ட குழந்தையின் சருமத்திற்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தக் கூடாது .
- 10 மாதத்திற்கும் முன்பாகவே குழந்தை பிறக்கின்ற நிலையை குறை பிரசவம் என்கின்றனர்.
- குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன.
நெருங்கிய உறவு திருமணம்
ஒரு தம்பதிக்கு பிறக்கின்ற குழந்தை உடல் மற்றும் மன நல குறைபாடுகளோடு பிறப்பதற்கு மற்றும் மருத்துவ அறிவியல் ஆய்வாளர்களால் கூறப்படுவது பிரதானமான காரணமாக கூறப்படுவது, நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளும் நடைமுறை தான் என்கின்றனர். நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்கின்ற ஆண், பெண்களுக்கு எந்த ஒரு உடல், மன நல குறைபாடுகள் இல்லை என்றாலும், அவர்கள் தங்களிடம் இருக்கிற தங்கள் மூதாதையர்களின் மரபணுக்களை தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு கடத்துவதால், அந்த மூதாதையர்களுக்கு இருந்த உடல், மன நல குறைபாடுகள் இப்போது பிறக்கின்ற குழந்தைக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்பது மருத்துவ உலகின் கருத்தாக இருக்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடு
பெண்கள் முதன் முதலில் கர்ப்பம் தரித்த காலம் முதல் குழந்தை பெற்றெடுக்கும் காலம் வரை ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். கர்ப்பிணி பெண்கள் சாப்பிடும் இந்த ஊட்டச்சத்துகள் தான் வயிற்றில் வளருகின்ற தங்களின் குழந்தைகளின் உடல்நலத்திற்கு அடிப்படையாக அமைகிறது. சத்து இல்லாத, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் வகையிலான உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவதால் அது கருவில் வளரும் குழந்தையின் உடலில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
ரத்த கொதிப்பு
அனைத்து மனிதர்களுக்கும் ரத்த அழுத்தம் அவர்களின் வயதிற்கு ஏற்ப இருக்கும். பெண்கள் கர்ப்பமடைந்த பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பு சராசரியான அளவிற்கு சற்று கூடுதலாக இருப்பது இயல்பானது தான். ஆனால் ஒரு சில பெண்களுக்கு அதீத ரத்த அழுத்தம் கர்ப்ப காலத்தில் ஏற்படுவதால், அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் குறைபாடுகளை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
மஞ்சள் காமாலை
நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதிலும், அந்த உணவில் இருக்கின்ற நச்சு தன்மைகளை அழித்து உடலுக்கு தேவையான சத்துகளை பிரித்து தரும் அரும்பணியை கல்லீரல் செய்கிறது. இந்த கல்லீரல் நச்சு தன்மையால் பாதிக்கப்பட்டு, அழற்சி உண்டாகி மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு இந்நோய் ஏற்பட்டால் வயிற்றில் வளரும்குழந்தைகளை உடற்குறைபாடு கொண்ட குழந்தைகளாக பிறக்க செய்து விடும் சூழல் ஏற்படுகிறது.
நீரிழிவு நோய்
ஒரு காலத்தில் ஒன்றிரண்டு பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட நோயாக இருந்த நீரிழிவு நோய், தற்காலத்தில் அனைத்து வயதினர் மற்றும் பாலினத்தவர்களை பாதிக்கிறது. அதிலும் கர்ப்ப காலத்தில் இந்த நீரிழிவு பிரச்னையை எதிர்கொள்ளும் பெண்கள் மிகுந்த உடல் நல பிரச்சனைகளை சந்திப்பதோடு, தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளின் உடல் குறைபாடு கொண்டதாக பிறக்கின்ற ஆபத்தை அதிகப்படுத்துகிறது.
குறைப்பிரசவம்
ஒரு தாயின் வயிற்றில் 10 மாத காலம் இருந்து பின்பு பிறக்கின்ற குழந்தை உடல் ரீதியான முழுமையான வளர்ச்சியை பெற்றிருக்கும். இத்தகைய குழந்தை பிறப்பு ஒரு முழுமையான கர்ப்ப கால பிறப்பாக கருதப்படுகிறது. 10 மாதத்திற்கும் முன்பாகவே குழந்தை பிறக்கின்ற நிலையை குறை பிரசவம் என்கின்றனர். இப்படி குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. இந்த குறைபிரசவமாக குழந்தை பிறப்பதால் முழுமையான உடல் வளர்ச்சி பெறாமல் அங்க குறைபாடு உள்ள குழந்தையாக பிறக்கின்ற நிலையை அதிகரிக்கிறது.
வயிற்றுக்குள் குழந்தை நிலை
10 மாத காலம் கருவில் குழந்தை சுமக்கும் பெண்கள், தங்கள் வயிற்றில் வளருகின்ற குழந்தையின் நிலையை அடிக்கடி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம். பிரசவத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு வயிற்றில் வளரும் குழந்தையின் உடலை கருக்கொடி சுற்றிக்கொள்வது, குழந்தையின் தலை திரும்பாமல் இருப்பது போன்றவை குழந்தை உடற்குறைபாடு கொண்டு பிறக்கின்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது.
பிரசவ காலம்
10 மாத காலம் கழிந்ததும் பிரசவ வலி எடுத்து, குழந்தை பெற்றெடுக்கும் சமயத்தில் வயிற்றில் இருந்து வெளிவரும் குழந்தையின் தலைக்கு பதிலாக கால் முதலில் வெளியே வருவது, பிரசவ காலத்தில் குழந்தைக்கு ஏற்படும் எலும்பு முறிவு போன்ற காரணங்கள் குழந்தை ஊனமாக பிறக்கின்ற நிலையை உண்டாக்குகிறது.
மேற்கூறிய பிரச்சனைகளை தவிர்ப்பதன் மூலமும், பேறு காலத்தில் அனுபவம் வாய்ந்த மருத்துவரின் ஆலோசனை பெறுவதன் மூலமும் குழந்தை உடல் மன நல குறைபாடுகள் இல்லாமல் பிறக்க செய்ய முடியும்.
- சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள்.
- தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.
தவழும் வயதில், குழந்தைகளின் உலகம் தனித்துவமானது; பார்க்கும் ஒவ்வொரு பொருளும் அவர்களுக்குப் புதுமையாகத் தெரியும். எந்தப் பொருள் அருகில் இருந்தாலும், கையில் கிடைத்தாலும் முதலில் தொட்டுப் பார்ப்பார்கள். பிறகு, கையிலெடுத்து வாயில் போட்டுக் கடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அது என்னவென்று அறிந்துகொள்ளத் துடிக்கும் ஆர்வம்தான் காரணம்.
ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைகள் கண்டதையும் வாயில் போட்டுக்கொள்ள ஒரு காரணம். உதாரணமாக, கால்சியம் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் சுண்ணாம்பு, சாக்பீஸ் போன்றவற்றைத் தின்பார்கள். இரும்புச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் பல்பம், சுவரிலிருக்கும் பெயின்ட் போன்றவற்றைத் தின்னத் துடிப்பார்கள். உடலில் மைக்ரோமினரல்ஸ் குறைபாடு உள்ள குழந்தைகள் சாம்பலையும், சால்ட் குறைபாடு உள்ள குழந்தைகள் ஊறுகாயையும் வாயில் போட்டுக்கொள்ளத் துடிப்பார்கள்.
குழந்தைகளால் விழுங்கப்படும் பொருள்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக்கொள்ளலாம். மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக்கொண்டால், சுவாசப்பாதை தடைபடும். மூச்சுவிட முடியாது. உணவுக்குழாய்க்குள் என்றால், இரைப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருள்கள் எந்தத பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் வெளியேறிவிடுவதும் உண்டு.
குழந்தைகள், ஏதாவது ஒன்றை விழுங்கும்போது நாம் பார்த்துவிட்டால் பிரச்னையில்லை . ஒருவேளை நாம் பார்க்காவிட்டால்தான் பிரச்னை. இதை எப்படி அறிந்துகொள்வது? அதுவரை ஓடி, ஆடி, பேசித் திரிந்த குழந்தை திடீரென அமைதியாக இருக்கும்; அழக்கூடச் செய்யலாம்; அவர்களின் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் தெரியலாம். இதையெல்லாம் வைத்துத்தான் அவர்கள் எதையோ விழுங்கியிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள முடியும்.
பேசக்கூடிய பெரிய குழந்தைகளாக இருந்தால் அவர்களிடமே கேட்டுவிடலாம். எதையோ அவர்கள் விழுங்கிவிட்டது உறுதியாகிவிட்டால், முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனியவைத்து, முதுகுப் பகுதியில் ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னுமொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் பொருள் வரவில்லையென்றால், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.
பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதான் சிறந்தது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவிகளைச் செய்யலாம். முதலில், குழந்தையை மல்லாக்கப் படுக்கவைத்து நெஞ்சுப்பகுதிக்கு நடுவில் நம் கையைவைத்து நிமிடத்துக்கு நூறுமுறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படியே முப்பது தடவை செய்த பின்னர், குழந்தையின் மூக்குக்கு அருகே காதை வைத்து, மூச்சு வருகிறதா என்று கவனிக்க வேண்டும். வராவிட்டால், குழந்தையின் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். அப்படியும் குழந்தைக்கு மூச்சு வரவில்லை என்றால், மீண்டும் முதலில் செய்ததுபோல நெஞ்சுப்பகுதியில் ஐந்து முறை கைவைத்து அழுத்த வேண்டும். மீண்டும் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். இப்படியே தொடர்ச்சியாக மருத்துவ உதவி கிடைக்கும்வரை செய்ய வேண்டும். ஒன்று முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த முதலுதவிகளைச் செய்யலாம்.
ஒரு வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் என்றால், முதலில் வாய்க்குள் விரலைவிட்டு ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் நம் கைகளிலோ, தொடைகளிலோ குழந்தையைக் குப்புறப் படுக்கவைத்து, தலையை தாழ்வாக வைத்துக்கொண்டு குழந்தையின் முதுகில் ஐந்து முறை தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வரவில்லையென்றால், குழந்தையை அதே நிலையில் மல்லாக்கப் படுக்கவைத்து, நெஞ்சுக்குக் கீழே நம் இரண்டு விரல்களை வைத்து மேல் நோக்கிவாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான். குழந்தைகள் எதை விழுங்கியிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவதுதான் நல்லது. பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவி செய்யலாம்.
சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது தவறு; அப்படிச் செய்யக் கூடாது. தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.
வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு. உதாரணமாக பொரி, கடலை, பாசி போன்றவை. இவற்றால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ரத்தமும் வழியலாம். சமயத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிடும். அதனால் குழந்தையின் மூக்கில் புண் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது.
- பெற்றோர்களும் இந்த விஷயத்தில் போதிய விழிப்பு உணர்வு இல்லை.
- இன்றைய சிறுவர்கள் கண்களுக்கு அதிகப்படியாக வேலைக் கொடுக்கிறார்கள்.
நீண்ட நேரம் படிப்பது, சிறு வயதிலேயே மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் சிறுவர்களுக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அது கவனிக்கப்படாமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள்.
எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் பெரும்பாலான மாணவர்கள் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பல மாணவர்கள், தங்களுக்குப் பார்வைக்குறைபாடு இருப்பதையே அறியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்களும் இந்த விஷயத்தில் போதிய விழிப்பு உணர்வு இல்லை.
இன்றைய சிறுவர்கள் கண்களுக்கு அதிகப்படியாக வேலைக் கொடுக்கிறார்கள். முக்கியமாக, நீண்ட நேரம் படிப்பது, சிறு வயதிலேயே மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றனர். இதனால் இயல்பாகவே, இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. தற்போது உலகளவில் சுமார் 3 கோடியே 9 லட்சம் பார்வையற்றவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்வையிழந்து தவிக்கிறார்கள். இது உலகின் மொத்த பார்வையற்றவர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.
ஒரு மனிதனுக்குத் தனது வாழ்நாளில் எந்த வயதிலும் பார்வையிழப்பு ஏற்படலாம். குறிப்பாக, சிறுவர்களுக்கு கண் பார்வை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் அது கவனிக்கப்படாமல் இருந்தால் நிரந்தர பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறார்கள் கண் மருத்துவர்கள்.
முக்கியமாக சிறுவர்களின் முதல் 8 வருடங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் அவர்களது மூளையும் கண்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பார்வைத்திறனை அதிகரிக்கும் காலகட்டம் அது. இந்த தருணத்தில்தான் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். ஏனெனில் கண்பார்வை தொடர்பான அறிகுறிகள் அப்போதுதான் தெரியவரும்.
ஒவ்வொரு 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பாலும் தங்களுக்கு பார்வைக் குறைபாடு இருப்பதை அறியாமலேயே அவர்கள் வளர்கிறார்கள். இதனால், ஆரம்பத்திலேயே குறைபாட்டைக் கண்டறிய முடியாமல் போய்விடுகிறது.
- பசுக்களுக்கு தரப்படும் தீவனத்தின் குணம் பாலிலும் எதிரொலிக்கும்.
- பசுக்களின் பாலை குடிக்கும் போது இந்த நோய் மனிதர்களையும் தாக்கும்.
பசுமையான மேய்ச்சல் நிலங்களை கிராமங்களில் உருவாக்கி புல், கீரைகளை தீவனமாக அளித்தார்கள். பசுக்கள் இன்று நகர-கிராம குப்பைத் தொட்டிகளில் உணவை தேடி திரிகின்றன. குப்பையில் வீசப்பட்ட கெட்டுப்போன உணவை உண்டு தரும் பால் மனிதர்களையும் பாதிக்கும் என்பதுதான் அதிர்ச்சியான தகவல்.
தமிழகத்தில் பால் மாடு வளர்ப்பு என்பது பல லட்சக்கணக்கான மக்களுக்கான வாழ்க்கை ஆதாரமாக உள்ளது.
கிராமங்களில் பசுக்களை வளர்ப்பவர்கள் கறந்த பாலை ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர். இதேபோல் தனியாகவும், பண்ணைகள் மூலமாகவும் விற்கிறார்கள். பொதுவாகவே கொள்முதல் செய்யப்படும் பாலை அந்தந்த நிறுவனங்கள் ` பாஸ்டிரைசேசன் ' என்ற முறையில் 160 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் பதப்படுத்தி கிருமி நீக்கம் செய்து பாக்கெட்டில் அடைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
நகரங்களில் பசுக்களை வளர்ப்பவர்கள் பலர் ஆங்காங்கே விற்பனை செய்கின்றனர். ஆனால், சரியான வெப்பநிலையில் காய்ச்சாத பாலில் அந்த பசுக்கள் உட்கொண்ட தீவனத்தின் மணம் மற்றும் தன்மை காணப்படுவதுடன், புருசெல்லோசிஸ் போன்ற நோய் தொற்று கிருமிகளும் இருக்கும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பசுக்களுக்கு தரப்படும் தீவனத்தின் குணம் பாலிலும் எதிரொலிக்கும். ஆரோக்கியமான சுகாதார நிலையில் பசும் புற்கள், புண்ணாக்கு, உலர் தீவனங்கள், தூய குடிநீர் தரப்பட்டு வளர்க்கப்படும் பசுக்களில் கறந்த பசும்பால் நறுமணத்துடன், இனிப்பு சுவையோடு இருக்கும்.
மேய்ச்சலுக்கு போகும் பசுக்கள் நிலத்தில் முளைத்திருக்கும் காட்டு வெங்காயம் போன்ற களைகளை மேயும் போது அவற்றின் பாலில் இந்த களைகளின் வாடை காணப்படும். நிறமும் வேறுபடும். இதுதான் பாலின் இயல்பு.
இப்போது நம் நாட்டில் பசுக்களின் நிலைமையை பார்க்கலாம். தற்போது நகரங்களிலும் பல கிராமங்களிலும் கூட வளர்க்கப்படும் பசுக்களை போதிய தீவனம் அளிக்க வசதி இல்லாமல் அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இந்த பசுக்கள் தெருத்தெருவாக வீடுகளில் போய் மக்கள் தரும் எஞ்சிய இட்லி, தோசை முதல் குப்பையில் வீசப்பட்ட பாலித்தீன், நாப்கின் வரை அனைத்து கழிவுகளையும் உண்கின்றன.இந்த பசுக்களின் பால் எந்த தரத்தில் இருக்கும் என்பது கேள்விக்குறி.
இது குறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியதாவது:-
பொதுவாக, பாலை வீட்டில் காய்ச்சும் போது அதிகபட்சமாக 100 டிகிரி சென்டி கிரேடு வெப்பநிலையில் தான் காய்ச்ச முடியும். இந்த கொதி நிலையிலும் தப்பி உயிர் வாழும் நுண்ணுயிரிகள் பாலில் உண்டு. இந்த நுண்ணுயிரிகள் மனித உடலுக்குள் செல்லும் போது என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று இதுவரை பகுப்பாய்வு செய்யப்படவில்லை. ஆனால், குப்பையில் வீசப்பட்ட கெட்டுப் போன உணவை உண்டு வாழும் பசுக்களுக்கு உறுதியாக பல உடல் நல குறைபாடுகளும், அவற்றின் பாலில் தரமற்ற கொழுப்பு மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் காணப்படும் என்பது உறுதி.
இந்த வகை மாடுகளின் பாலை சரியாக காய்ச்சாமல் குடிக்கும் போது மனிதர்களுக்கு அனீமியா என்னும் ரத்தசோகை வரும். இந்த பாலை குடிக்கும் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு உருவாகும். ஊட்டச்சத்து குறைபாடு தொடர்புடைய நோய்களும் தொடர்ந்து வரும்.சுகாதாரமற்ற நிலையில் வளரும் பசுக்களில் எலும்புருக்கி நோய் மற்றும் புருசெல்லோசிஸ் நோய் இருக்கலாம். இந்த பசுக்களின் பாலை குடிக்கும் போது இந்த நோய் மனிதர்களையும் தாக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரமற்ற பால் உற்பத்தியை தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, ` மாடு வளர்ப்பு என்றால் அதற்கு சுகாதாரமான கொட்டகை, சத்துள்ள பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனம், தூய குடிநீர் எல்லாம் இருக்க வேண்டும். நகரங்களில் மாடு வளர்ப்பவர்களுக்கு இப்படி எந்த வசதியும் இல்லை. பணம் செலவழித்து தீவனம் வாங்க தயங்கி பசுக்களை சாலையில் திரிய விட்டு குப்பையில் மேய விடுகின்றனர்.
இதனை தடுக்க, நகர எல்லைக்குள் வளர்க்கப்படும் மாடுகளை ஒரு இடத்தில் வைத்து பராமரிக்கும் வகையில் மாநகராட்சி ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட அளவு இடம் ஒதுக்கி மாட்டு கொட்டில்களை ஏற்படுத்தி தர வேண்டும்.இதன் மூலம் மட்டுமே நகர சாலைகளிலும் குப்பை தொட்டிகளை தேடி பசுக்கள் திரிவதை தடுக்க முடியும். மக்களுக்கு ஆரோக்கியமான பசுக்களின் பால் கிடைக்கும்' என்றார்.
தாய்ப்பாலுக்கு அடுத்ததாக போற்றப்படுவது பசுவின் பால். மனிதனுக்கு உணவாக பால், நெய், வெண்ணெய், தயிர், மோர் என்றுபல விதமான பொருட்களை தரும் பசுக்களை மனிதர்கள் பாதுகாப்பாக கொட்டில், கோசாலை, பசு மடம்என்று அமைத்து வளர்த்தார்கள்.






