search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Kids Food"

  • முதல் 6 மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது.
  • காலம் கடந்து திட உணவு ஆரம்பிப்பதும் தவறானதே.

  குழந்தைகள் சிறப்பாக வளர பிறந்த முதல் நாளில் இருந்து 12 மாத காலம் வரை எந்த உணவை எப்போது கொடுக்கலாம் என்பதை இதில் பார்ப்போம்.

  முதலில் தாய்ப்பால் மட்டுமே போதும். வேறு எந்த உணவும் கொடுக்க தேவையில்லை. தண்ணீர் கூட கொடுக்க தேவையில்லை. வியாதிகளை தடுக்கும் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் மட்டுமே இயற்கையாக உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையை மடியில் வைத்து கொடுக்க வேண்டும். பால் கொடுத்த உடனே படுக்க வைக்காமல் 20 நிமிடம் தோளில் போட்டு தட்டிக் கொடுக்க வேண்டும். முதல் 6 மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதன்பிறகு மெது, மெதுவாக திட உணவுகளை கொடுக்கலாம். காலம் கடந்து திட உணவு ஆரம்பிப்பதும் தவறானதே.

  6 முதல் 8 மாதம் வரை அரிசி கஞ்சி, ராகி கஞ்சி, வேக வைத்த காய்கறி அதாவது வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பீட்ரூட் ஆகியவற்றை சுழற்சி முறையில் ஊட்டலாம். வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றை வேக வைக்காமல் மசித்து மட்டும் கொடுத்தால் போதுமானது. பழச்சாறுகளும் கொடுக்கலாம்.

  9 மாதம் முதல் 1 வயது வரை நெய்யுடன் கீரை சேர்த்து பருப்பு சாதம், கீரை சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை கொடுக்கலாம். புரதச்சத்துடைய உணவு அதாவது பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, காராமணி வகைகளை நன்றாக வேக வைத்து நாளுக்கு ஒரு தடவை ஊட்டலாம். தினமும் 2-3 பேரீச்சம் பழம் தரலாம். இட்லி, இடியாப்பம், வேக வைத்த இறைச்சியின் சாறு, கோழி மற்றும் இறைச்சியால் செய்த சூப், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை கொடுக்கலாம். உணவில் கலோரி அதிகரிக்க சிறிது நெய்யோ, தேங்காய் எண்ணெய்யோ விடலாம்.

  ஒரு வயதுக்கு மேல் சராசரி குடும்ப சாப்பாட்டை கொடுக்க ஆரம்பிக்கும் நேரம் என தக்கலை குமார் மருத்துவமனை மணலி குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.கே.சஜித்குமார் தெரிவித்துள்ளார்.

  • நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி சளி பிடிக்கும்.
  • குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கலாம்.

  குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். சரியாக சாப்பிடவும் மாட்டார்கள். குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் இருந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து அடிக்கடி சளி பிடிக்கும். ஆகவே குழந்தைகள் பசி எடுத்து சாப்பிட பஞ்ச தீபாக்கினி லேகியம் கால் முதல் அரை டீ ஸ்பூன் காலை, இரவு இருவேளை கொடுக்கவும். இது பசியை தூண்டும், நல்ல சீரணமுண்டாகும். அதுபோல, நெல்லிக்காய் லேகியம் அரை முதல் ஒரு டீஸ்பூன் காலை, இரவு கொடுக்க வேண்டும். இதிலுள்ள வைட்டமின் சி, கால்சியம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.

  இவை தவிர பொதுவாக, திரிபலா சூரணம் குழந்தைகளுக்கு 200-500 மி.கி. அளவில் கொடுக்கலாம், இரவு வேளையில் கொடுப்பது நல்லது. இதனால் பக்க விளைவுகள் இல்லை. குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் எடுக்கலாம். அன்றைக்கு வெந்நீரில் குளிக்க வைப்பது நல்லது.

  சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

  மின்னஞ்சல்: doctor@dt.co.in,

  வாட்ஸ் அப்: 7824044499

  • கால்சியம் மற்றும் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக தயிர் உள்ளது.
  • அக்ரூட் பருப்புகள் சிறந்த புரத சிற்றுண்டி ஆகும்.

  சிறு குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் 10 உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

  1. பழங்கள் : பழங்களில் குழந்தைகளுக்கான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பழங்களில் நார்ச்சத்துகளும் இருக் கின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி, முலாம்பழம், கிவிப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்றவை மிகவும் சிறந்த பழங்களாகும்.

  2. பால் : பால் பொருட்களில் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. பாலிலுள்ள கால்சியம், குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக வைத்திருக்கவும், அதே நேரத்தில் புரதம், மூளைத் திசுக்களை உருவாக்கவும் உதவுகிறது.

  3. தயிர் : கால்சியம் மற்றும் புரதத்திற்கு ஒரு சிறந்த ஆதாரமாக தயிர் உள்ளது. இந்த தயிர், குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக பெரிதும் உதவுகிறது.

  4. முட்டை : முட்டையில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முட்ைடயில் கால்சியம் மற்றும் அவற்றை உடலில் உறிஞ்சுவதற்கு உதவும் வைட்டமின் டி போன்றவை நிறைந்துள்ளது. எனவே முட்டையை காலை வேளையில் கொடுத்தால், குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும்.

  5. பசலைக் கீரை : பசலைக் கீரையில் எலும்புகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்றவை நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை குழந்தைக்கு கொடுத்தால் மிகவும் நல்லது.

  6. முட்டைக்கோஸ் : குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறியான முட்டைக்கோஸ், செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவை குழந்தைகளை நோய்கள் எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும். இந்த காய்கறியானது அப்படியே தின்பதற்கும் மற்றும் அதன் மென்மையான சுவை தன்மையினால் பல உணவுகளில் பச்சையாக சேர்த்தும் கொடுக்கலாம்.

  7. முழு தானியங்கள் : முழு தானியங்களாலான உணவுகளில் ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, துத்தநாகம், வைட்டமின் பி, டி மற்றும் கால்சியம் நிறைந்து காணப்படுகிறது. எனவே தானிய வகை உணவுகளை குழந்தைகளுக்குக் கொடுத்தால், குழந்தைகளை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

  8. ஓட்ஸ் : எந்த குழந்தைகள் ஓட்ஸ் சாப்பிடுகிறார்களோ, அந்த குழந்தைகளுக்கு கவனக்குறைவு நீங்கி, படிப்பில் ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. ஓட்ஸ் மெதுவாக செரிமானமடைவதோடு, நிலையான ஆற்றலை குழந்தைகளுக்கு வழங்கும்.

  9. நட்ஸ் : நட்ஸ்களில் நல்ல கொழுப்புகள் அதிகம். அதனை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவை உடலின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். குறிப்பாக நட்ஸில் பேரீச்சம்பழம் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள்.

  10. அக்ரூட் : அக்ரூட் பருப்புகள் சிறந்த புரத சிற்றுண்டி ஆகும். இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இது குழந்தைகளின் மூளை செயல்பாடுகளை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைக்கிறது.

  • ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்கலாம்.
  • குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க வேண்டாம்.

  குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலத்துக்கு வெறும் தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 முதல் 12 மாதக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து பிற உணவுகளையும் பழக்க ஆரம்பிக்கலாம்.

  தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டிய பருவத்தில், ஒருவேளை தாய்க்கு போதிய அளவு பால் சுரப்பு இல்லாவிட்டால் மருத்துவரை ஆலோசித்தே முடிவு செய்ய வேண்டும். நீங்களாக குழந்தைக்கு செயற்கை பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டாம்.

  ஒரு வயதுக்குப் பிறகு குழந்தைக்கு பதப்படுத்தப்பட்ட பால் கொடுக்க ஆரம்பிக்கலாம். 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு முழு கொழுப்புச்சத்துள்ள பால் கொடுக்கலாம்.

  பசும்பால் கொடுப்பதாக இருந்தால் குழந்தைக்கு ஒரு வயது முடிந்த பிறகுதான் தொடங்க வேண்டும். ஆவின் பால் கொடுப்பதாக இருந்தால் அதில் ஆரஞ்சு நிற பாக்கெட்டில் வரும் பால் குழந்தைகளுக்கு ஏற்றது. அதில் ஃபுல் க்ரீம் இருக்கும். அதில் தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அப்படியே காய்ச்சி ஆறவைத்துக் கொடுக்கலாம்.

  குழந்தைக்கு ஒரு நாளைக்கு 400 மில்லி அளவு வரை பால் கொடுக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது குழந்தைக்கு மலச்சிக்கல் வர வாய்ப்புண்டு. இது 5 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பொருந்தும். அந்த வயதைத் தாண்டிய குழந்தைகளுக்கு ஆவினின் பச்சை நிற பாக்கெட் பால், அதன் பிறகு, நீல நிற பாக்கெட் என மாற்றலாம்.

  • குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.
  • வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

  2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். குழந்தைகளா...! நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை சோதித்துக் கொள்ளுங்கள்.

  பருப்பு உணவுகள் : இரண்டு வயது குழந்தைக்கு பருப்பு சம்பந்தப்பட்ட உணவை தினமும் சேர்க்கும்போது, உடலில் புரதத்தின் அளவு சரியாக தக்க வைக்கப்படும். பருப்பு வகைகளில் பல வகைகள் இருக்கிறது. இருப்பினும் பாசிப்பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.

  ஆரோக்கியமான எண்ணெய்கள்: ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள், சோயா பீன்ஸ், பிற நட்ஸ் வகைகள் மற்றும் அவற்றின் எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றை இரண்டு வயது குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கலாம்.

  பால் பொருட்கள் : பால் பொருட்களான பால், தயிர், பன்னீர் அனைத்தும் கால்சியம் நிறைந்தவை. கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. உங்கள் குழந்தை லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால், கால்சியம் உட்கொள்ளும் இடைவெளியை ஈடுசெய்ய அவர் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  கேரட் : கேரட் 'வைட்டமின்-ஏ' நிறைந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கீரை, காலே மற்றும் பிற காய்கறிகளிலும் வைட்டமின்-ஏ அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.

  கோழி : கோழி மற்றும் பிற அசைவ உணவுகளில் எளிதில் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்து உள்ளது. இரும்பு சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு சக்தி அளிக்க உதவுகிறது. ரத்த சோகையைத் தடுக்கிறது.

  மீன் : அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டவைகளுள் (EFA) மீன் ஒரு நல்ல மூலமாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. இருதய அமைப்பை பலப்படுத்துகின்றன.

  சிட்ரஸ் பழங்கள் : எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவை வைட்டமின்-சி உள்ளடக்கத்திற்கு புகழ் பெற்றவை. வைட்டமின்-சி குறைபாடு ஸ்கர்வி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். வைட்டமின்-சி ஈறுகள் மற்றும் ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், காயங்களிலிருந்து மீளவும் உதவுகிறது. மாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி, கீரை போன்றவற்றிலும் வைட்டமின்-சி உள்ளது.

  வாழைப்பழங்கள் : மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான கூறுகள் எனலாம். தசை வலிமைக்கு தேவையான சத்துக்கள் வாழைப்பழங்களில் காணப்படுகின்றன. இந்த நன்மை பயக்கும் பழத்தை தானியங்கள் மற்றும் பிற உணவுகளில் இணைத்து சாப்பிடலாம்.

  வைட்டமின்-டி : இது ஒரு உணவு அல்ல என்றாலும், இது உடல் உறிஞ்சும் ஒன்று. எனவே உடல் வளர்ச்சியில் வைட்டமின்-டி வகிக்கும் ஒருங்கிணைந்த பங்கைக் கருத்தில் கொண்டு இந்த பட்டியலில் சேர்த்திருக்கிறோம். சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

  குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
  குழந்தைகளுக்கு உணவூட்டும் சிரமம் பெரும்பாலும் தந்தையர் அறியாததே! குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் தாய்மார்கள் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என மருத்துவத் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

  1. குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள். போதும் எனுமளவுக்கு உண்டபின் அதிகமாய் உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம்.

  2. சோறு சாப்பிடு, கீரை சாப்பிடு அப்படி சாப்பிட்டால் சாக்லேட் வாங்கித் தரேன், ஐஸ்கிரீம் வாங்கித் தரேன் என்று சொல்வது தவறு. அப்படிச் சொல்வதனால் சோறு என்பது மோசமான பொருள் என்றும், சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை நல்ல பரிசுப் பொருட்கள் போன்ற ஒரு தோற்றம் குழந்தைகளின் மனதில் பதிந்து விடும். நாட்கள் செல்லச் செல்ல குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டம் குறையவும், இனிப்புகளின் மீதான விருப்பம் மிகைப்படவும் இது ஒரு காரணமாகிவிடுகிறது.

  3. இனிப்புகளை முழுமையாய் தவிர்க்காதீர்கள். அப்படி மறுக்க மறுக்க குழந்தைகளுக்கு இனிப்புகளின் மீதான ஆர்வம் அதிகரித்துக் கொண்டே வரும். பின்பு வாய்ப்புக் கிடைக்கும் போது வட்டியும் முதலுமாய் சேர்த்து இனிப்பை உண்டு உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளும். எனவே ஒரு குறிப்பிட்ட அளவு இனிப்பு வகையறாக்களை வழங்கி வருவதே சிறப்பானது.

  4. அதிக கொறித்தல் பொருட்களைக் குழந்தைகளுக்கு வழங்காமல் இருப்பதே நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் உணவு ஊட்டுவதும், சரியான நேரத்தில் தின்பண்டங்கள் கொடுப்பதும் நல்லது. எப்போதும் ஏதேனும் கொறித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான மதிய உணவையோ, இரவு உணவையோ தேவையான அளவு சாப்பிட மறுக்கும்.  வீடுகளில் தேவையற்ற உணவுப் பொருட்களை வாங்கி நிறைக்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக நீங்கள் வாங்கி வைக்கும் குளிர்பானமோ, சிப்ஸோ குழந்தை சாப்பிடக் கூடாது என நீங்கள் எண்ணுவதில் அர்த்தமில்லை. குறைந்தபட்சம் குழந்தைகளிடமிருந்து அவற்றை முழுமையாய் மறையுங்கள்.  5. இன்றைக்கு எங்கும் பரவியிருக்கும் குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள், எனர்ஜி பானங்கள் போன்றவை குழந்தைகளுக்கு எந்த நன்மையும் தருவதில்லை என்கிறது ஜெர்னல் பீடியாட்ரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று. மாறாக இவை உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறதாம். எனவே 100 விழுக்காடு பழச்சாறு என்றெல்லாம் கவர்ச்சிகரமாய் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

  6. பழச்சாறு போன்றவற்றுக்குப் பதிலாக தண்ணீர் அதிகமாய் அருந்துவதற்குக் குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். எல்லோரும் எல்லாவற்றையும் விரும்பமாட்டார்கள் என்பதும் நமக்கு மிகவும் பிடித்தது இன்னொருவருக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போகும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதனால் உங்கள் குழந்தையை திட்டாதீர்கள்.

  7. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்காதீர்கள். ஒரே மாதிரியான உணவைக் கொடுக்க வேண்டி வந்தால் அதன் வடிவத்தையோ, சுவையையோ எதையேனும் வித்தியாசமாய் காண்பியுங்கள். வித்தியாசமானவை குழந்தைகளுக்குப் பிடிக்கும் என்பதையும், பிடித்தமான பாத்திரத்துக்காகவே குழந்தைகள் உணவை உண்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

  8. ஒரு கடி, ஒரு வாய் என குழந்தைகளை உற்சாகப்படுத்துங்கள். காய்கறி போன்றவற்றை தினமும் கொஞ்சம் கொஞ்சம் உண்ணப் பழக்கினாலே அவை நீண்டகால உணவுப் பழக்கமாய் மாறிவிடும். எனினும், எதையும் அளவுக்கு மீறி வற்புறுத்தாதீர்கள்.

  9. குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை பறவை, பூ, படகு என வித்தியாசமான வடிவங்களில் வெட்டிப் பரிமாறிப் பாருங்கள். குழந்தைகள் வெகுவாக விரும்பி உண்பார்கள்.

  சிறு சிறு சமையல் வேலைகளில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு உணவின் மீதான நாட்டம் அதிகரிக்கும். 
  ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து மையம் குழந்தைகள் சாப்பிடும் உணவில் இருக்கும் பூச்சி கொல்லி மருந்து அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
  ஐதராபாத்:

  அமெரிக்கா, ஐரோப்பியா நாட்டு குழந்தைகள் சாப்பிடும் உணவை விட ஐதராபாத் குழந்தைகள் சாப்பிடும் உணவில் 40 சதவீதம் அதிக பூச்சி கொல்லி மருந்து இருப்பது தெரியவந்தது.

  6 வயது முதல் 15 வயது வரை உள்ள 188 சிறுவர்கள், 188 சிறுமிகளின் சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொண்டது. மேலும் குழந்தைகள் சாப்பிடும் 40 வகையான உணவு பொருட்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

  சிறுவர்களிடம் சேகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் சிறுநீரில் சராசரியாக 4.1 மைக்ரோமொல் வளர்ச்சிதை மாற்றத்துக்கான அளவு இருந்தது.

  இந்த அளவு அமெரிக்க குழந்தைகளுக்கு 0.101 அளவாக உள்ளது. சிறுவர்களை விட சிறுமிகளின் சிறுநீர் மாதிரிகளில்தான் அதிக அளவு பூச்சி கொல்லி மருந்து இருந்தது.

  ஏனென்றால் அந்த வயதில் சிறுமிகள் சிறுவர்களை விட அதிக பழங்கள் சாப்பிடுவது தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தற்போது பழங்களை பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அதிக விளைச்சலுக்காக ரசாயன பயிர்களை பூச்சிகளிடம் இருந்து காப்பாற்ற பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பழங்கள், காய் கறிகளில் ரசாயன தன்மை படிந்து விடுகிறது.
  ×