search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளுக்கு முதல் 12 மாதம் கொடுக்க வேண்டிய உணவுகள்
    X

    குழந்தைகளுக்கு முதல் 12 மாதம் கொடுக்க வேண்டிய உணவுகள்

    • முதல் 6 மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது.
    • காலம் கடந்து திட உணவு ஆரம்பிப்பதும் தவறானதே.

    குழந்தைகள் சிறப்பாக வளர பிறந்த முதல் நாளில் இருந்து 12 மாத காலம் வரை எந்த உணவை எப்போது கொடுக்கலாம் என்பதை இதில் பார்ப்போம்.

    முதலில் தாய்ப்பால் மட்டுமே போதும். வேறு எந்த உணவும் கொடுக்க தேவையில்லை. தண்ணீர் கூட கொடுக்க தேவையில்லை. வியாதிகளை தடுக்கும் எதிர்ப்பு சக்தி தாய்ப்பாலில் மட்டுமே இயற்கையாக உள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தையை மடியில் வைத்து கொடுக்க வேண்டும். பால் கொடுத்த உடனே படுக்க வைக்காமல் 20 நிமிடம் தோளில் போட்டு தட்டிக் கொடுக்க வேண்டும். முதல் 6 மாதம் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதன்பிறகு மெது, மெதுவாக திட உணவுகளை கொடுக்கலாம். காலம் கடந்து திட உணவு ஆரம்பிப்பதும் தவறானதே.

    6 முதல் 8 மாதம் வரை அரிசி கஞ்சி, ராகி கஞ்சி, வேக வைத்த காய்கறி அதாவது வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, பீட்ரூட் ஆகியவற்றை சுழற்சி முறையில் ஊட்டலாம். வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றை வேக வைக்காமல் மசித்து மட்டும் கொடுத்தால் போதுமானது. பழச்சாறுகளும் கொடுக்கலாம்.

    9 மாதம் முதல் 1 வயது வரை நெய்யுடன் கீரை சேர்த்து பருப்பு சாதம், கீரை சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை கொடுக்கலாம். புரதச்சத்துடைய உணவு அதாவது பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, காராமணி வகைகளை நன்றாக வேக வைத்து நாளுக்கு ஒரு தடவை ஊட்டலாம். தினமும் 2-3 பேரீச்சம் பழம் தரலாம். இட்லி, இடியாப்பம், வேக வைத்த இறைச்சியின் சாறு, கோழி மற்றும் இறைச்சியால் செய்த சூப், முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை கொடுக்கலாம். உணவில் கலோரி அதிகரிக்க சிறிது நெய்யோ, தேங்காய் எண்ணெய்யோ விடலாம்.

    ஒரு வயதுக்கு மேல் சராசரி குடும்ப சாப்பாட்டை கொடுக்க ஆரம்பிக்கும் நேரம் என தக்கலை குமார் மருத்துவமனை மணலி குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.கே.சஜித்குமார் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×