search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளுக்கு வரும் மழைக்கால காய்ச்சல்... காரணங்களும் தீர்வும்
    X

    குழந்தைகளுக்கு வரும் மழைக்கால காய்ச்சல்... காரணங்களும் தீர்வும்

    • மழைக்காலங்களில் கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளுக்குமே காய்ச்சல் வந்துவிடுகிறது.
    • சுகாதாரமில்லாத உணவுகள் காய்ச்சலுக்கு ஒரு முக்கியமான காரணம்.

    திடீர் பருவநிலை மாற்றம் காரணமாகத்தான் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இரண்டும் வருகின்றன. இவை இயல்பானதுதான் என்பதால் பயப்பட வேண்டாம். ஒரு நாளைக்கு முன்னதாக லேசான மூக்கொழுகுதலுடன் நார்மலாக இருக்கிற குழந்தைகளுக்கு அன்றைக்கு சாயங்காலமோ, இரவோ காய்ச்சல் வர ஆரம்பிக்கும். இது சளியினால் வருகிற சாதாரணக் காய்ச்சல்.

    இப்படியில்லாமல் சளிப்பிடித்து இரண்டு அல்லது மூன்று நாள்கள் கழித்து காய்ச்சல் வருகிறது என்றால், மழைக்கால தொற்றுநோய்கள் காரணமாக இருக்கலாம். இன்னும் சில குழந்தைகளுக்கு காய்ச்சல் இரண்டு, மூன்று நாள் இருந்துவிட்டு போய்விடும். அம்மாக்கள் 'அப்பாடா' என்று சற்று ரிலாக்ஸ் ஆகிற நேரத்தில் மறுபடியும் மெல்ல தலைகாட்ட ஆரம்பிக்கும். இதுவும் மழைக்கால தொற்றுநோய்களால் வருகிற காய்ச்சல்தான்.

    இந்த மாதங்களில், சில குழந்தைகளுக்குக் காய்ச்சலுடன் தொண்டையில் இன்ஃபெக்‌ஷனும் ஏற்படும். இதனால், தொண்டையெல்லாம் புண்ணாகி சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். இவர்களுக்கு 10 அல்லது 15 நாள் மாத்திரை தர வேண்டி வரும். நான் மேலே சொல்லியிருக்கிற நான்கு காய்ச்சல்களுக்குமே குழந்தைகளின் வயது மற்றும் எடையைப் பொறுத்து மருந்து கொடுத்தாலே சரியாகிவிடும்.

    வராமல் தடுக்க வழிகள்

    பருவநிலை மாற்றத்தால் வருகிற காய்ச்சல், ஒரு குழந்தையிடம் இருந்துதான் இன்னொரு குழந்தைக்குப் பரவும். அதனால், உங்கள் பிள்ளைக்கு லேசான காய்ச்சல் இருந்தால்கூட பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் இருப்பதுதான் நல்லது.

    இந்த மாதங்களில் குழந்தைகளுக்கு ஹோட்டல் உணவுகளை வாங்கித் தராதீர்கள். ஏனென்றால், சுகாதாரமில்லாத உணவுகள் காய்ச்சலுக்கு ஒரு முக்கியமான காரணம். கேன் வாட்டராக இருந்தாலும் கொதிக்க வைத்து ஆறிய நீரை மட்டும் குழந்தைகளுக்குக் கொடுங்கள்.

    இந்த சீஸனில் மழையும் வெயிலும் மாறி மாறி இருக்கும் என்பதால், உங்கள் வீட்டைச் சுற்றி சுத்தமான மழை நீர் எங்கும் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் கொசுக்களின் பிறப்பிடம். டெங்கு கொசுக்கள் இப்படிப்பட்ட சுத்தமான நீரில்தான் முட்டையிடும் என்பதால், கவனம்.

    வீட்டுக்கு முன்னால் தேங்கியிருக்கிற மழை நீரில் வெறுங்காலுடன் குதிப்பதற்கு பிள்ளைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்தான். ஆனால், அப்படிக் குதித்தால் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, எலிக் காய்ச்சல் என மழைக்கால தொற்றுநோய்கள் அத்தனையும் வந்துவிடலாம். 10 வயதுக்கு மேல் வளர்ந்த குழந்தைகள் என்றால், அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தேவையான அளவு உடலில் இருக்கும். அதுவரைக்கும் மழை நீரில் விளையாடுவதைத் தள்ளி வைப்பதுதான் நல்லது.

    பருவநிலை மாற்றத்தால் வருகிற காய்ச்சலைப் பொறுத்தவரைக்கும், அதிகமான வயிற்று வலி, அடிக்கடி வாந்தியெடுத்தல், கை, கால்கள் சில்லிட்டுப்போவது போன்ற அறிகுறிகள் குழந்தைகளிடம் இருந்தால், குடிப்பதற்கு நிறைய நீராகாரங்கள் கொடுங்கள். காய்ச்சல் இருந்தாலும் சின்னதாகவாவது விளையாடிக்கொண்டிருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. அதற்கு மாறாக, சோர்ந்துபோய் படுத்துக்கொண்டே இருந்தாலும், தூங்கிக்கொண்டே இருந்தாலும் உடனடியாகக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்.

    Next Story
    ×