search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காய்ச்சல்"

    • காய்ச்சலுக்கு கேரளாவில் ஏராளமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர்.
    • அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பும் வழிமுறைகளை அரசு தெரிவித்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குதற்கு முன்னதாகவே பல்வேறு வித காயச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவ தொடங்கின. பருவமழை பெய்ய தொடங்கியதும் அவற்றின் பாதிப்பு மேலும் அதிகரித்தது.

    காய்ச்சல்களில் டெங்கு, மலேரியா, பன்றி மற்றும் எலிக்காய்ச்சல் மட்டுமின்றி நைல், அமீபிக் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை நோய்களும் பரவின. அமீபிக் மூளைக்காய்ச்சல் என்பது தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பவர்களுக்கு, அதில் வாழும் அமீபாக்கள் மூலம் ஏற்படுகிறது.

    அதாவது குளிப்பவர்களின் காதுமடல் மற்றும் நாசி துவாரத்தின் வழியாக மூளைக்கு சென்று அமீபா தாக்குகிறது. இதன் மூலம் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த காய்ச்சலுக்கு கேரளாவில் ஏராளமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர்.


    அவர்களில் 3 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதையடுத்து அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பில் இருந்து தப்பும் வழிமுறைகளை அரசு தெரிவித்தது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளாக அசுத்தமான தண்ணீர் தேங்கியிருக்கக் கூடிய குளங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டனர்.

    அவர்கள் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தனி வார்ட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அமீபிக் மூளைக்காயச்சல் தொற்று பாதிப்புக்கு உள்ளான 10 பேர் புரண குணமடைந்திருக்கிறார்கள்.

    இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்கள். கேரளாவில் இதுவரை அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்த 14 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது.
    • அரசு ஆஸ்பத்தி ரிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் பரவலாக மழை பெய்து வருவதால் சளி, இருமல், கை-கால் வலியுடன், காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.

    ஒரு சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

    கடந்த ஆண்டை ஒப்பிடும் போது பெரிய அளவில் டெங்கு பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றாலும் வருகின்ற பருவமழை காலத்தில் டெங்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சுகாதாரத்துறை கருதுகிறது. அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் தொடங்கி கண்காணிக்கப்படுகிறது.

    இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. 30 முதல் 50 பேர் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். பரவலாக டெங்கு பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்பு பெரிய அளவில் இல்லை. காய்ச்சல், உடல் சோர்வு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இல்லை. ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்தி ரிகளில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.


    ஆனால் டெங்கு பாதிப்பு குறிப்பிடும் படியாக இல்லை என்று மருத்துவ மனை முதல்வர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி பொது மருத்துவத் துறை தலைவர் சந்திரசேகர் கூறியதாவது:-

    வைரஸ் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தான் அதிகளவில் வருகிறார்கள். டெங்கு காய்ச்சல் 5 நாட்கள் இருந்து பின்னர் படிப்படியாக குறையும். காய்ச்சல் குறைந்து விட்டது என்று அலட்சியமாக இருக்க கூடாது. அந்த நேரத்தில் தான் வாந்தி, வயிற்று வலி போன்றவை ஏற்பட்டு உடலில் தட்டணுக்கள் குறைய தொடங்கும்.

    எனவே தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சீதோஷ்ண நிலை மாறி மாறி நிலவுவதால் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    டெங்குவை பொறுத்த வரை காய்ச்சல் வந்தவுடன் சிகிச்சை பெற்று கண்காணிப்பில் இருந்தால் பாதிப்பை ஏற்படுத்தாது. பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை தான் டெங்குவின் தாக்கம் அதிகரிக்கும்.

    வீட்டை சுற்றிலும் சுத்தமாக வைத்திருந்தால் டெங்கு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். பகலில் கடிக்கும் 'ஏடீஎஸ்' கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சல் உண்டாக்குகிறது. வீடுகளையும், சுற்று புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாதாரண காய்ச்சல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும்.
    • வைரஸ் காய்ச்சல் அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக சிக்குன் குனியா காய்ச்சலும் அதிகமாக பரவ தொடங்கி உள்ளது.

    டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல வகை காய்ச்சல் மக்களுக்கு பரவி வந்தாலும் சிக்குன் குனியா காய்ச்சல் வந்தவர்கள் மிகவும் முடங்கி விடுவார்கள்.

    காய்ச்சல் வந்தாலே உடல் சோர்வடையும் உடம்பு நெருப்பால் கொதிக்கும் எனவும் சாப்பிட படிக்காது. பசியின்மை அடித்து போட்டது போல் உடம்பு வலி ஏற்படும். காய்ச்சலில் பல வகைகள் இருந்தாலும் சாதாரண காய்ச்சல் ஆன்டிபயாடிக் மாத்திரைகளிலேயே சரியாகி விடும்.

    பெரும்பாலான வைரஸ் காய்ச்சல் அசுத்தமான தண்ணீர் அல்லது உணவின் மூலம் பரவும். பொதுவான வைரஸ் காய்ச்சல் ஒரு வாரம் வரை நீடிக்கலாம். இந்த வகை காய்ச்சல் தொண்டையில் நோய்த் தொற்றை ஏற்படுத்தும். இதற்கு சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால் சீக்கிரம் குணப்படுத்தி விடலாம்.

    ஆனால் டெங்கு, சிக்குன் குனியா காய்ச்சல் என்பது ஏ.டி.எஸ். கொசு கடிப்பதால் வருகிறது.

    கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, வயிற்று வலி, தொடர்ச்சியான வாந்தி, உடல் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

    சிலருக்கு உடலில் அரிப்பு, சிவப்பு புள்ளிகள், தோன்றும்.

    இந்த காய்ச்சல் தீவிரமாகி விட்டால் உடலின் உட்பகுதியில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். மூட்டு வலியும் அதிகமாகும். ரத்தத்தின் தட்டையணுக்கள் குறைந்து உயிருக்கு ஆபத்தாகி விடும்.

    எனவே சிக்குன் குனியா நோய் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

    இந்த நிலையில் தமிழ் நாட்டில் சிக்குன் குனியா காய்ச்சல் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக காணப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 1,451 பேருக்கு சிக்குன் குனியா அறிகுறி இருந்தது. அதில் 331 பேருக்கு சிக்குன் குனியா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டு பாதிப்பு இருந்தாலும், பாதிக்கப்பட்ட அனைவரும் நலமுடன் உள்ளதாகவும் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும்.
    • உடலின் பழுதுபார்க்கும் செயல்முறைகளையும் ஊக்குவிக்கும்.

    காய்ச்சல் வந்தால் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு அசவுகரியம், மந்தம், பலவீனம் போன்றவை ஏற்பட்டு அன்றாட செயல்பாடுகள் முடங்கிப்போய்விடும். அப்படி அடிக்கடி காய்ச்சல் வருவதோ, ஒருசில நாட்களை கடந்தும் நீடிப்பதோ ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

    ஆனால் எப்போதாவது திடீரென்று காய்ச்சல் வந்தால் அது உடல் நலனுக்கு நன்மை செய்யும். உடலின் பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது காய்ச்சலின்போது உடலின் வெப்பநிலை 99.1 டிகிரி பாரன்ஹீட் முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரைக்குள் இருந்தால் சில ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். அவை பற்றி தெரிந்து கொள்வோம்.

    ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்

    காய்ச்சலின் போது, உடலில் ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும். இந்த செல்கள்தான் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முன்னணி வீரர்கள்போல் செயல்படும். பாக்டீரியா, வைரஸ் போன்ற நோய்க்கிருமிகளை கண்டறிந்து அவற்றின் மீது தாக்குதல் தொடுப்பது இவற்றின் பணியாகும்.

    காய்ச்சலின்போது உடல் வெப்பநிலை அதிகரிப்பது, எலும்பு மஜ்ஜையில் அதிக ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்யத் தூண்டும் என்பது ஆய்விலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த செயல்முறையின்போது நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு உடலின் செயல்திறன் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டு நோயின் தீவிரத்தையும் குறைக்கும்.

    பாக்டீரியா - வைரஸ் வளர்ச்சி குறையும்

    பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தி அவை குறைவான அளவுக்கு வளர்வதற்கு சாதகமான சூழலை காய்ச்சல் உருவாக்கும். நமது உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (98.6 டிகிரி பாரன்ஹீட்). இந்த வெப்பநிலையை பல நோய்க்கிருமிகள், நுண்ணுயிரிகள் விரும்புகின்றன.

    காய்ச்சல் காரணமாக உடலின் வெப்பநிலை உயரும்போது இவற்றின் செயல்பாடுகள் முடங்கும். அதிக உடல் வெப்பநிலை, இன்புளூயன்ஸா வைரஸ் போன்ற சில வைரஸ்களின் வளர்ச்சியையும், செயல்பாடுகளையும் தடுக்கும். அவற்றின் வளர்ச்சியை குறைப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கும். நோய்த்தொற்றுகளை அழிப்பதற்கு அதிக நேரத்தையும் அளிக்கும்.

    வைரஸ் எதிர்ப்பு செயல்பாட்டில் முன்னேற்றம்

    காய்ச்சலினால் ஏற்படும் அதிக உடல் வெப்பநிலை நோய்க்கிருமிகளை குறைப்பதோடு, சில நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். சைட்டோகைன்கள் எனப்படும் புரதங்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இவை உடலில் உள்ள ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு மூலக்கூறுகளின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும்.

    மேலும் காய்ச்சல் ஏற்படுத்தும் வெப்பநிலை நியூட்ரோபில்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் செயல்திறனை மேம்படுத்தும். அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுவதற்கு முக்கியமானவை.

    பழுதுபார்க்கும் செயல்முறையை மேம்படுத்தும்

    காய்ச்சல் உடலின் பழுதுபார்க்கும் செயல்முறைகளையும் ஊக்குவிக்கும். அதிக வெப்பநிலை சேதமடைந்த புரதங்களை சரிசெய்ய உதவும். செல்களை அழுத்தத்தில் இருந்தும் பாதுகாக்கும்.

    இந்த புரதங்கள் செல்களை பராமரிப்பதிலும், அவற்றை மீட்டெடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிக வெப்பநிலை புரதங்களின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் காய்ச்சல் அல்லது வீக்கத்தால் சேதமடைந்த செல்கள் சரிசெய்யப்படுவதற்கு வழிவகை செய்யும்.

    நச்சுக்களை நீக்கும்

    காய்ச்சலின் போது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கும். நச்சுத்தன்மை நீங்குவதற்கான செயல்முறைக்கும் உதவும். குறிப்பாக வளர்சிதை மாற்ற விகிதங்கள் அதிகரிப்பது வியர்வை மற்றும் நச்சுக்களின் வெளியேற்றத்திற்கு வழிவகுக்கும்.

    வியர்வை உடலில் இருந்து சில நச்சுக்களை அகற்ற உதவும் என்பதை ஆய்வுகளும் கூறுகின்றன. எனவே, காய்ச்சலால் தூண்டப்பட்ட வியர்வை தீங்கு விளைவிக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும்.

    நோய் எதிர்ப்பு திறன் கூடும்

    காய்ச்சல் உடலின் நோய் எதிர்ப்பு நினைவகத்தை மேம்படுத்தும். நோய்க்கிருமிகளுக்கு எதிராக நீண்டகால பாதுகாப்பிற்கு இது முக்கியமானது. அதிக வெப்பநிலை டி செல்கள் மற்றும் பி செல்கள் போன்ற நோய் எதிர்ப்பு நினைவக செல்களை உருவாக்குவதை மேம்படுத்தும். உண்மையில் காய்ச்சலை அனுபவிப்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தை எதிர்கால நோய் தொற்றுகளுக்கு எதிராக பாதுகாக்க வழிவகை செய்யும்.

    • சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இன்று பகல் பரிதாபமாக இறந்தான்.
    • பரிசோதனையின் முடிவுகளை தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

    கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கம் இருந்தது. தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலைதூக்கியுள்ளது.

    இந்நிலையில் கேரள மாநிலம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவனான 14 வயது சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவனது உமிழ்நீர் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவனுக்கு நிபா காய்ச்சல் அறிகுறி தெரியவந்தது. புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுவன் தனிமைபடுத்தப்பட்டு கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டான்.

    அங்கு அவனது நிலை கவலைக்கிடமானதை தொடர்ந்து டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் இன்று பகல் பரிதாபமாக இறந்தான்.


    இதையடுத்து நிபா வைரஸ் குறித்து தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    • காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநல பிரச்சினை ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.

    • ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்க வேண்டும்.

    • அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகளை உடனடியாக கண்டறிந்து உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

    • பரிசோதனையின் முடிவுகளை தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

    • பரிசோதனை மேற்கொள்ளும் போது உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து சுகாதாரத்துறையினர் நோயாளிகளை கையாள வேண்டும்.

    • நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெள்ள நிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

    • காய்கள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

    • கிணறுகள், குகைப் பகுதிகள், தோட்டங்கள், இருள் சூழுந்த பகுதிகளில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    • அறிகுறிகள் கண்டறியப்படும் நோயாளிகள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம்.

    போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    • சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழையும் பெய்கிறது. இந்த பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னையில் வசிக்கும் பலர் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    வழக்கமாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளை விட தற்போது 2 மடங்கு நோயாளிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் சமீபகாலமாகவே பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் பெய்கிறது. இதனால் பொதுமக்கள் பலர் சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கிளீனிக்குகள் போன்றவற்றில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பருவ நிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக சென்னை முழுவதுமே காய்ச்சல் பாதிப்பு பரவலாக உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    வெளியில் உணவு வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதன்மூலம் பருவநிலை காரணமாக பரவும் காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சுபிக்ஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த மேட்டுப்பாளையம் சண்முகாபுரம், வி.பி.சிங். நகர், காந்தி வீதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது46). தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் சுபிக்ஷா (வயது13). அங்குள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சுபிக்ஷாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் காய்ச்சலுக்கு மருந்து மாத்திரை கொடுத்தனர்.

    ஆனாலும் மறுநாள் காலை காய்ச்சல் அதிகரித்ததால் சுபிக்ஷா பள்ளிக்கு செல்லவில்லை. அன்று மதியம் 3 மணி முதல் தொடர்ந்து வாந்தி எடுத்து கொண்டிருந்தார், மாலையில் அங்குள்ள தனியார் கிளினிக் டாக்டரிடம் சுபிக்ஷாவை காண்பித்தனர்.

    அங்கிருந்த டாக்டர் கதிர்காமம் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்தார். அதன்படி இரவு 10 மணிக்கு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்றனர். சிறுமிக்கு ரத்த அழுத்தம் குறைவாக உள்ளதாக கூறி சிகிச்சை அளித்தனர். ஆனால் ரத்த அழுத்தம் சீராக வில்லை.

    மேலும் இ.சி.ஜி.யும் சீராக இல்லாததால் நள்ளிரவு மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சுபிக்ஷா, பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பருவமழை பெய்ய தொடங்கிய பிறகு நோய் பாதிப்புகள் அதிகரித்தன.
    • காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கிய நிலையில், அதற்கு முன்னதாகவே பல்வேறு காய்ச்சல்களும், தொற்று நோய்களும் பரவ தொடங்கியது. பருவமழை பெய்ய தொடங்கிய பிறகு நோய் பாதிப்புகள் அதிகரித்தன.

    அங்கு டெங்கு, டைபாய்டு, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்சசல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் பரவின. மேலும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட ஏராளமான தொற்று நோய்களும் வேகமாக பரவியபடி இருக்கிறது. அங்கும் தினமும் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சல் பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தொற்று நோய்களின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் எலி காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் பலியாகி இருக்கிறார்.

    கேரள மாநிலம் திருச்சூர் ஒருமனயூர் பகுதியை சேர்ந்த பிரதீப்-ஜீஜா தம்பதியரின் மகன் விஷ்ணு(வயது31). கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எலி காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில் வாலிபர் விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் சுகாதாரத்துறையின் வழி காட்டுதலின்படி உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • திருச்சூர் பகுதியில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கபன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது.
    • பன்றிகளை பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவ தொடங்கின. இந்நிலையில் தற்போது பருவமழை தீவிரமடைந்திருப்பதால் நோய் பரவல் மேலும் அதிகரித்திருக்கிறது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    அது மட்டுமின்றி பறவை காய்ச்சலும் கேரளாவில் பரவியது. இதன்காரணமாக ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான வாத்துக்கள், கோழிகள் மற்றும் பறவைகள் கொல்லப்பட்டன. இந்நிலையில் திருச்சூர் பகுதியில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கபன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது.

    மடக்கத்தனம் பகுதியில் தான் அதிக பாதிப்பு இருக்கிறது. இதனால் அங்கு மாநில கால்நடைத்துறை முகாமிட்டு தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. அதன் ஒரு பகுதியாக தொற்று பாதிப்பு உள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வளர்க்கப்பட்டு வரும் பன்றிகளை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்காக உருவாக்கப்பட்ட மீட்பு குழுவினர் பன்றிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். பன்றிகளை பணி கடந்த 5-ந்தேதி தொடங்கியது. மடக்கத்தனம் பகுதியில் இதுவரை 310 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு வேறு எங்கும் இருக்கிறதா? என்று கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தோற்று ஏற்பட்டால் குறைப்பிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.
    • ஜிகா வைரஸ் தோற்றால் குறைபாடுகளுடன் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

    ஏடிஸ் வகை கொசு மூலம் பரவும் ஜிகா வைரஸ் காய்ச்சல் பரவலால், எச்சரிக்கையாக இருக்க மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.

    மகாராஷ்டிராவில் ஜிகா வைரல் பரவல் கண்டறியப்பட்டதை அடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரல் உள்ளதா என்று சோதிக்கக வேண்டும் என்றும் ஜிகா வைரல் இருந்தால் கருவின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    ஏனெனில் கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தோற்று ஏற்பட்டால் குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதற்கும், குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருக்கலைவு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    தலைவலி, தோல் வெடிப்பு, காய்ச்சல், மூட்டு வலி உள்ளிட்டவை ஜிகா வைரஸ் தொற்றுப் பாதிப்பின் அறிகுறிகளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    • கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடுமையான வெப்பம், திடீர் மழை என்று பருவநிலை மாறி மாறி வருகிறது. இதனால் கொசுக்கள் மற்றும் தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தற்போது பள்ளிகளும் திறந்துள்ளதால் குழந்தைகளிடையே சளி மற்றும் காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது.

    இது தொடர்பாக குழந்தைகள் நல முதுநிலை மருத்துவ நிபுணர் டாக்டர் வில்வநாதன் கூறியதாவது:-

    பருவ காலங்கள் மாறும்போது இன்ப்ளூ யன்ஸா, டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள், டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் பரவலாக காணப்படும். அந்த வகையில் தற்போது குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பலருக்கு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன.

    கடந்த வாரம் வரை இத்தகைய நிலை இல்லை. ஓரிரு நாட்களாக தான் சூழல் மாறி இருக்கிறது. காய்ச்சல் அறிகுறிகளுடன் நேற்று (17-ந்தேதி) மருத்துவ மனைகளை நாடியவர்களின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் 3 மடங்கு உயர்ந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    இது சீசன் காய்ச்சல்தான். பருவநிலை மாறும்போது இந்த மாதிரி தொற்று வியாதிகள் ஏற்படுவது வழக்கமானதுதான். கடந்த ஆண்டுகளை விட அதிகமாக பரவுவதாக வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை. எனவே மக்கள் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம்.

    பொதுவாகவே பருவ நிலைகள் மாறும்போது முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சிய நீரை குடிப்பது, சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பது போன்ற பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அது மட்டுமல்ல, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை களுக்கு சென்று மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பறவை காய்ச்சல் பாதிப்பில் தான் அவை இறந்துள்ளன என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தீவிரமடைந்து உள்ளது. ஆலப்புழா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இது கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என கருதப்பட்டதால் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    அந்த மாவட்டத்தில் ஏராளமான கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில் கோட்டயம் மாவட்டத்துக்கும் தற்போது பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 29-ந் தேதி வரை இந்தப் பகுதியில் கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கோட்டயம் மற்றும் அதனை சுற்றி உள்ள 10 கி.மீட்டர் தொலைவு பகுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கோட்டயம் அருகே உள்ள மணற்காட்டில் அரசு கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான கோழிகள் திடீரென இறந்தன. அவற்றின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், பறவை காய்ச்சல் பாதிப்பில் தான் அவை இறந்துள்ளன என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை கொல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    ×