search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "influenza"

    • இன்புளுயன்சா-ஏ வகை காய்ச்சல் தான் அதிகமான அளவில் இருக்கிறது.
    • காய்ச்சல் அதிகரிப்பதை பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்படும்.

    சென்னை:

    சென்னையை பொறுத்தவரை மழைக்கால நோய்கள் ஆண்டு தோறும் செப்டம்பர் முதல் ஜனவரி வரை இருக்கும்.

    இதில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்த நோய் பரவல் உச்சத்தில் இருக்கும். இந்த வருடமும் காய்ச்சல் பெருமளவு காணப்படுகிறது. பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

    இந்த காலங்களில் வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், கொசுக்கள் மூலம் பரவும் காய்ச்சல் ஆகியவை வழக்கமாக பரவும். இந்த ஆண்டும் அதேபோல் காய்ச்சல்கள் பரவி வருகின்றன.

    இது பற்றி ஆய்வு செய்வதற்காக ஒரு அரசு மற்றும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. மொத்தம் 300 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதில் இன்புளுயன்சா காய்ச்சல் அதிக அளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்புளுயன்சா-ஏ வகை காய்ச்சல் தான் அதிகமான அளவில் இருக்கிறது. இந்த வகை காய்ச்சல் கண்டவர்களுக்கு உடல் வலி, அதிகமான காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    காய்ச்சல் அதிகரிப்பதை பொறுத்து இவற்றை 3 பிரிவுகளாக பிரிக்கப்படும். லேசான காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் அவை சாதாரண முறையில் சிகிச்சை அளிக்கப்படும். இதே காய்ச்சல் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகளை தாக்கினால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதே நேரம் அளவுக்கு அதிகமான காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் வாந்தி போன்றவை இருந்தால் அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு உயிருக்கு ஆபத்து நேரிடவும் வாய்ப்பு உண்டு என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். காய்ச்சல் பாதித்தவர்கள் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். மேலும் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டது. எனவே இந்த சீசனில் மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். லேசான காய்ச்சல் கண்டால் ஒன்றிரண்டு நாட்கள் பார்த்து விட்டு காய்ச்சல் குறையவில்லை எனில் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது நல்லது என்கிறார்கள் சுகாதாரத்துறையினர்.

    • காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்திலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கேரளாவை யொட்டியுள்ள 5 சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளா பதிவு எண் கொண்டு வரும் வாகனங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் யாராவது உள்ளார்களா? என்பது குறித்து சுகாதாரத்தை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் 3 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த 3 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு ஏராளமான கட்டுமான தொழிலாளர்களும், மீனவர்களும் சேர்ந்து வருகிறார்கள். எனவே அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்கள் யாருக்காவது காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்தும் கண்காணித்து வருகிறார்கள்.

    ஆசாரிப்பள்ளம், பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டு திறக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள 9 அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு திறக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டதை தொடர்ந்து அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு தனிவார்டு திறக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது வழக்கத்தை விட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர்வாகவே உள்ளது.

    குமரி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 2 முதல் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 1 வாரத்தில் மட்டும் 21 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 129 குழந்தைகளில் 121 பேருக்கு சாதாரண காய்ச்சல், 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்.
    • மருத்துவமனைகளில் தேவையான அளவு மருந்து கையிருப்பில் உள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரியவர்களை விட குழந்தைகளை காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கிறது.

    சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பருவ மழை காலம் தொடங்கும் நிலையில் சாதாரண காய்ச்சல் மற்றும் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது:-

    இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலை வலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டர்களிடம் உரிய ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    பருவநிலை மாற்றம் காரணமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. மருத்துவர்களின் பரிந்துரைபடி மட்டுமே சிகிச்சை எடுக்க வேண்டும். ப்ளூ வைரஸ் களால் பரவும் 'இன்ப்ளூயன்ஸா' காய்ச்சல் நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது.

    எனவே நோய் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் டாக்டரை உடனடியாக மக்கள் அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கிடையே சென்னையில் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதாக தகவல் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காய்ச்சல் பரவுவது தொடர்பாக தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டோம். தமிழகம் முழுவதும் ப்ளூ காய்ச்சலால் 282 குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளிலும், 215 குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளிலும், 54 குழந்தைகள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெறுகிறார்கள்.

    கடந்த ஆண்டு போலத் தான் குளிர்காற்று, ஈரப்பதம் காரணமாக இந்த காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் தொற்றால் முககவசம் அணிந்து அதிக இடை வெளியை கடைபிடித்தோம். இதனால் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்தது.

    ஆனால் கடந்த 2017, 2018-ம் ஆண்டுகளில் இப்போதைய பாதிப்பை விட ப்ளூ காய்ச்சல் பாதிப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது. எனவே ப்ளூ காய்ச்சலுக்கு பொதுமக்கள் பதட்டப்படவோ, பயப்படவோ தேவை இல்லை. எழும்பூர் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 129 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் ப்ளூ காய்ச்சல் யாருக்கும் இல்லை. 121 பேர் சாதாரண காய்ச்சலாலும், 8 பேர் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ப்ளூ காய்ச்சல் பாதித்த குழந்தைகளை 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

    காய்ச்சல் பாதித்தவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் ப்ளூ வைரஸ் காற்றின் மூலம் மற்றவர்களை பாதிக்கிறது. எனவே குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும்போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடை பிடிக்க சொல்ல வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் ஒரு குழந்தைக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டிருந்தால் மற்றொரு குழந்தைக்கும் பரவ வாய்ப்பு அதிகம். எனவே வீடுகளில் 2 மீட்டர் இடைவெளியை ஏற்படுத்தி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×