என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிகாட்டு நெறிமுறைகள்"

    • அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை விட கூட்டம் கணிசமாக அதிகரித்தால், அது ஒரு தீவிரமான விதிமீறலாகக் கருதப்படும்
    • நிகழ்ச்சிக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் தேவையின்றி ஒன்றுக்கூடக்கூடாது

    தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தயாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

    அதன்படி,

    • புதிய நெறிமுறைகளின்படி வரையறுக்கப்பட்ட இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்
    • அரசு பரிந்துரைத்ததற்கு மாற்றாக வேறு இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 முதல் 30 நாட்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்
    • 50,000-க்கும் மேல் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு 30 நாட்கள் அல்லது அதற்கு முன்பே விண்ணப்பிக்கலாம்
    • நிர்ணயிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எங்கும் வி.ஐ.பி. உரையாற்றக் கூடாது
    • 500 பேருக்கு ஒரு கழிப்பறை, 300 மீட்டர் அளவில் ஒரு நடமாடும் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும்
    • ஒரு நபருக்கு 4 லிட்டர் குடிநீர், ஒவ்வொரு 100 மீட்டருக்கும் குடிநீர் வசதியை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
    • நிகழ்விற்கான அனுமதி, சம்பந்தப்பட்ட காவல் துறையினரால் விதிக்கப்படும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
    • அனுமதி கடிதத்தில் 'இத்தனை மணி முதல் இத்தனை மணி வரை' என்று கொடுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது.
    • ரோடு ஷோக்கள் 3 மணிநேரத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.
    • விண்ணப்பத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பின்பற்றுவதற்கு உட்பட்டே இந்த அனுமதி வழங்கப்படுகிறது. அதாவது 500 பேர் வருவார்கள் என்று குறிப்பிட்டிருந்தால், அந்த எண்ணிக்கையைத் தாண்டக்கூடாது
    • அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை விட கூட்டம் கணிசமாக (50 சதவீதத்திற்கும் மேல்) அதிகரித்தால், அது ஒரு தீவிரமான விதிமீறலாகக் கருதப்படும்; மேலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நிகழ்ச்சிக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் தேவையின்றி ஒன்றுக்கூடக்கூடாது. நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியான கால அட்டவணையை பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • கூட்டப் பாதுகாப்பு, ஒழுங்குமுறை மற்றும் சீரான மேலாண்மை போன்றவற்றை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உறுதிசெய்ய வேண்டும். மேடைகள், தடுப்புகள் (Barricades), பந்தல்கள், அனைத்து தற்காலிக அமைப்புகள், மின்விளக்கு மற்றும் ஒலி அமைப்புகள் மற்றும் மின் இணைப்புகளின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்கள் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டும். இந்தச் சான்றிதழ்களை நிகழ்ச்சி தொடங்குவதற்கு குறைந்தது 4 மணி நேரத்திற்கு முன்னதாக அனுமதி வழங்கிய அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்
    • ஏதேனும் அசம்பாவிதம் அல்லது தீ விபத்து ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் தீயணைப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
    • அனைத்து வாகனங்களும் ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களுக்கு (Parking lots) மட்டுமே திருப்பி விடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்; பொதுப் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. எதிர்பார்க்கப்படும் ஒவ்வொரு 50 வாகனங்களுக்கும் குறைந்தது ஒரு தன்னார்வலர் (Volunteer) இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
    • நிகழ்வு நடைபெறும் முழு நேரத்திலும் அவசரகால மீட்பு வாகனங்களுக்கு (ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், காவல் துறை வாகனங்கள்) தடையற்ற போக்குவரத்து இருப்பதை ஏற்பாட்டாளர் உறுதி செய்ய வேண்டும்.
    • டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் ஏதேனும் வைப்பதாக இருந்தால், நடைமுறையில் உள்ள தமிழ்நாடு அரசின் அரசாணை மற்றும் சட்ட விதிகளின்படி, உரிய அனுமதி பெற்றே நிறுவ வேண்டும். 
    • நடைமுறையில் உள்ள நிபந்தனைகளுக்கு இணங்கவே தற்காலிகக் கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும்.
    • கர்ப்பிணிப் பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய நபர்கள் பாதுகாக்கப்படுவதையும், அதிக மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு அவர்கள் ஆளாகாமல் இருப்பதையும், அதிக நேரம் நிற்க வைக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்காகத் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும், மேலும் அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காகத் தனி தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
    • அனுமதிக்கப்பட்ட அளவை விட மக்கள் அதிகம் வந்துவிட்டால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க 100 பேருக்கு ஒரு தன்னார்வலர் என்ற கணக்கில் ஆட்களை நியமித்து, தடுப்புகள் மூலம் அவர்களைப் பாதுகாப்பு பகுதிகளுக்குப் பிரித்து அனுப்ப வேண்டும்.
    • ஊர்வலமாகச் செல்லும்போது சாலையை முழுமையாக அடைக்காமல், ஒரு பக்கமாக மட்டுமே செல்ல வேண்டும். மறுபாதியை வாகனங்கள் செல்வதற்காக ஒதுக்கி, பொதுமக்களுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    • நிகழ்ச்சியின் தன்மை அல்லது எதிர்பார்க்கப்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, தகுதிவாய்ந்த அதிகாரம் கொண்ட அதிகாரி (காவல் துறை), அவசியமெனக் கருதப்படும் வேறு எந்தவொரு குறிப்பிட்ட நிபந்தனைகளையும் விதிக்கலாம். 
    • அனுமதிக்கான அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றுவதற்கு ஏற்பாட்டாளரே முழுப் பொறுப்பாவார். இதில் ஏதேனும் விதிமீறல் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டால், வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்; மேலும், சேதங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது. 

    என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
    • அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஆட்சேபனை இருந்தால் அவற்றை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யலாம்.

    சென்னை:

    கரூரில் த.வெ.க. விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன.

    இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

    இதன்படி, தமிழ்நாடு அரசு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதில் அரசு விதித்துள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக இருப்பதாக அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் பதில் மனுக்களை தாக்கல் செய்தன.

    பின்னர் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தது.

    இந்தநிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை பரிசீலித்து விரைவில் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும். அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5-ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும்.

    அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஆட்சேபனை இருந்தால் அவற்றை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தனர்.

    • வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
    • பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தல்.

    டிட்வா புயல் முன்னெச்சரிக்கையாக பொது மக்கள் புயல் மழை வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

    இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    அதில், டிட்வா புயல், கனமழை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

    பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்ல வேண்டாம், மேலும் மரங்களின் கீழ் நிற்க வேண்டாம்.

    பால், குடிநீர், மெழுகுவர்த்தி, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
    • சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம்.

    பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வரும், 6.11.2025 அன்று மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

    முன்னதாக, கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோக்களுக்கு காவல் துறை அனுமதி வழங்க மறுத்தது. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'அரசியல் கட்சித் தலைவர்களின், ரோடு ஷோ மற்றும் பொதுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் போது, பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிமுறைகளை, 10 நாட்களுக்குள் வகுக்க வேண்டும்' என கெடு விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • அனுமதிக்கப்படாத வாசகங்கள், புகைப்படங்கள் அல்லது ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது.
    • கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாசகங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் தவெகவினர் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் காலத்தில், கழகத் தோழர்கள் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதவாறு மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    வீடு வீடாகச் செல்லும் பரப்புரை, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் தலைமைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாசகங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    சுவர் எழுத்துகள், பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் இவை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்படாத வாசகங்கள், புகைப்படங்கள் அல்லது ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது.

    தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றில் அங்கீகரிக்கப்படாத பேனர்கள், வடிவமைப்புகள், இலச்சினைகள் அல்லது வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது.

    முதல்வர் வேட்பாளர் அல்லது கழகத் தலைவர் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்கம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இதைப் பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    உள்ளரங்கு, பொதுவெளி மற்றும் பொதுக் கூட்டங்களின் போது, கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வெடி வெடிப்பது உள்ளிட்ட அதிகப்படியான கொண்டாட்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

    நிகழ்ச்சிகளின் போது, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், பொதுமக்களின் உற்ற தோழர்களாகக் கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட கல்வி நிலையங்கள் மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும்.
    • இணையத்தில் தற்கொலை தடுப்பு உதவி எண்களை காட்சிப்படுத்தி விளம்பரம் செய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    மாணவர்களின் தற்கொலையை தடுக்கும் நோக்கில் 15 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட கல்வி நிலையங்கள் மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும், கல்வி நிலைய வளாகங்கள், விடுதிகள், இணையத்தில் தற்கொலை தடுப்பு உதவி எண்களை காட்சிப்படுத்தி விளம்பரம் செய்ய வேண்டும், மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்ப பிரிப்பது, அவமதிப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

    கல்வி மன அழுத்தம், தேர்வு அழுத்தம் மற்றும் நிறுவன ஆதரவு இல்லாததால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும், இது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

    • தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.
    • பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது.

    திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்தைக் கண்டித்து த.வெ.க. சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வரவுள்ள த.வெ.க. தொண்டர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பட்டியலிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக்கண்காணிப்பின் கீழ்ச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நாளை (13.07.2025) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை, சிவானந்தா சாலையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்பவர்கள், கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    ஆர்ப்பாட்டம் சரியாகக் காலை 10.00 மணிக்கு தொடங்க இருப்பதால், அதற்குத் தகுந்தார்போல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் நாம் ஒன்றுகூட வேண்டும்.

    எனவே, அனைவரும் தங்களது வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்திவிட்டு, கடற்கரை சாலை வழியாக சிவானந்தா சாலையை அடைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    2. ஆர்ப்பாட்டத்தைக் கட்டுக்கோப்பாக அமைதியான முறையில் நடத்தி, நமது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசை வலியுறுத்த வேண்டும்.

    3. ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வாகனங்களைக் கொண்டு வர வேண்டாம். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

    4.போக்குவரத்து விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி, போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல், வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சிரமமின்றிச் சென்று வரும் வகையில் வழி விட்டு ஒத்துழைப்பு தந்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்.

    5.தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.

    6.பொதுமக்களுக்கு இடையூறு உண்டாகும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது.

    7.எந்த ஒரு மத, சாதி, இன மற்றும் தனிப்பட்ட நபர்களைப் புண்படுத்தும் வகையில் முழக்கங்கள் எழுப்பக் கூடாது.

    8.தனிப்பட்ட அதிகாரிகள் மீதும், ஆட்சேபகரமான முறையிலும் பேசுதல் மற்றும் முழக்கங்களை எழுப்புதல் கூடாது.

    9.ஆர்ப்பாட்டத்தின் போது உருவ பொம்மைகளைக் கொண்டு வருவது. அவற்றை எரிப்பது. புகைப்படங்களை எரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

    10.ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இருப்பதால் மருத்துவமனைக்கு வந்து செல்பவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    11.ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும்.

    12.எவ்வகையிலும் கழகத்தின் கொள்கைகள். குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு எதிராகக் கண்டிப்பாகச் செயல்படக் கூடாது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • காலி மனையில் செடிகள், மண்டுதல், குப்பைகள், மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • காலி நிலத்தில் எல்லையை சுற்றி வலுவான மற்றும் பாதுகாப்பான வேலியை அமைக்க வேண்டும்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலி நிலங்கள் வைத்துள்ள நில உரிமையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    காலிமனை வைத்துள்ள உரிமையாளர்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் ரூ.25000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அபராதம் விதித்தும் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    காலி மனையில் செடிகள், மண்டுதல், குப்பைகள், மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    காலி நிலத்தில் எல்லையை சுற்றி வலுவான மற்றும் பாதுகாப்பான வேலியை அமைக்க வேண்டும்.

    நிலத்தில் திடக்கழிவு அல்லது கட்டிடக் கழிவுகள் தேங்கியிருப்பதை தவிர்க்க வேண்டும்.

    பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்க காரணமாக இருக்கும் கழிவுகளை எரிப்பதை தவிர்க்க வேண்டும்.

    நிலத்தில் அதிகமாக வளர்ந்துள்ள செடிகளை அகற்றி குப்பைகள் தேங்காமால் பார்த்து கொள்ள வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

    • நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ / பொட்டலமிடவோ கூடாது.
    • உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்.

    சென்னை:

    உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * அனைத்து உணவு வணிகர்களும் http://foscos.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    * அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி மருத்துவ தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.

    * உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும்.

    * உணவுப் பொருட்களில் ஈக்கள், பூச்சிகள் மெய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும்.

    * உணவு எண்ணெயை ஒரு முறை சமைக்க பயன்படுத்த வேண்டும். மீதமான பயன்படுத்திய உணவு எண்ணெயை FSSAI அங்கீகரித்த கொள்முதலாளருக்கு மட்டும் விற்க வேண்டும்.

    * விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்திடல் வேண்டும்.

    * நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ / பொட்டலமிடவோ கூடாது.

    * அனுமதிக்கப்படாத நெகிழியில் (பிளாஸ்டிக்) உணவுப்பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக்கூடாது.

    * உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர் அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    * எவ்வகை உணவு எண்ணெய்களையும் லேபிள் விபரங்களின்றியும், பொட்டலமிடாமல் சில்லறை அடிப்படையிலும் நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது.

    * உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்.

    * பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் விற்பனை செய்யும்போது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. உரிமை எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விவரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    * உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகங்கள் / பேக்கரி / இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக்கூடாது.

    * சிக்கன்-65, பஜ்ஜி, கோபி-65 போன்ற உணவு வகைகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது.

    என்பது உள்பட 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

    உணவு கடைகளில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ? அல்லது தயாரித்தாலோ? உணவு கடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.
    • மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும்.

    1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    மேலும், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை விழகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும், தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து சிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.

    மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது, வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும்.

    செவ்வாய் கிழமைகளில் 6-12 வகுப்பினருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற நெறிமுறைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் இது பொருந்தும்.
    • ஐகோர்ட்டு உத்தரவின் படி விதிகளை திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான அரசுபணியில் முன்னுரிமை என்ற விதி பொருந்தும் என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து, தமிழ் மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பிற மாநிலங்களில் தமிழ் மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று, பின்னர் தமிழ் நாட்டில் தங்களது கல்வியினை சேரும் வகுப்பில் இருந்து தொடர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் மேற்படி முன்னுரிமை வழங்க தகுதி உடையவர்கள் என்றும் பள்ளி செல்லாமல் நேரடியாக தனித் தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முன்னுரிமை வழங்க தகுதி உடையவர்கள் அல்ல என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு பொதுத் தேர்வுகளின் தனித் தேர்வர்களாக தேர்ச்சி பெற்று தொடர்ந்து கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் இது பொருந்தும்.

    கல்வி மற்றும் மாற்று சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள் என்பதை நியமன அலுவலர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    ஐகோர்ட்டு உத்தரவின் படி விதிகளை திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குதலை உறுதி செய்திட வேண்டும்.
    • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகளில் பழச்சாறு வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கப்புகளில் மட்டுமே வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    கோடை காலம் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, பலவித குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகளை அருந்தும் சூழல் காணப்படுகிறது. அதனால், மாவட்டம் முழுவதும் சாலையோர மற்றும் நிரந்தர குளிர்பான கடைகளில் பரவலாக பொதுமக்களின் நுகர்வு அதிகரித்துள்ள இந்த தருணத்தில் சாலையோர மற்றும் நிரந்தர வணிகம் செய்யும் வணிகர்கள், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் வழங்குதலை உறுதி செய்திட வேண்டும்.

    சாலையோர உணவு வணிகர்கள் உள்பட அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்பு தரச் சட்டத்தின்படி, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம் குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அனைத்து மூலப் பொருட்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவு பொருட்களாக இருக்க வேண்டும்.

    மிக முக்கியமாக பயன்படுத்தப்படும் குடிநீர் தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருத்தல் அவசியம். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேலான செயற்கை வண்ணங்களை சேர்த்தல் கூடாது. நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி தேதியை உறுதிப்படுத்திட வேண்டும்.

    முறையான மற்றும் தொடர்ச்சியான பூச்சி தடுப்பு முறைகளை பயன்படுத்தி, பூச்சிகள் மொய்ப்பதை தவிர்த்தல் வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகளில் பழச்சாறு வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கப்புகளில் மட்டுமே வழங்க வேண்டும்.

    குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அடைக்கப்பட்ட குடிநீரை வாங்கும் போது வணிகர்கள் தரக்குறியீடு, உணவு பாதுகாப்பு உரிமம், கொள்கலன்களில் வாய்ப்புறம் சீலிட்டு மூடியிருத்தல் மற்றும் காலாவதி நாள் போன்றவற்றை உறுதி செய்திட வேண்டும். மேலும், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் குடிநீர் கொள்கலன்களை சூரிய ஒளிப்படும்படி வைக்கக் கூடாது.

    இத்தகைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான மற்றும் பழச்சாறுகளை வழங்க மாவட்ட நிர்வாகம், வணிகர்களை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை குறைக்க, போதுமான அளவு உடலின் நலனை காக்க நீர் மோர் மற்றும் இளநீர் போன்றவற்றை அருந்துதல் மிகவும் நலம் பயக்கும். எனவே, பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×