என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

உணவக உரிமையாளர்கள் கவனத்திற்கு! - உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள 14 வழிகாட்டு நெறிமுறைகள்!
- நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ / பொட்டலமிடவோ கூடாது.
- உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்.
சென்னை:
உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* அனைத்து உணவு வணிகர்களும் http://foscos.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
* அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி மருத்துவ தகுதி சான்றிதழ் பெற வேண்டும்.
* உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும்.
* உணவுப் பொருட்களில் ஈக்கள், பூச்சிகள் மெய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும்.
* உணவு எண்ணெயை ஒரு முறை சமைக்க பயன்படுத்த வேண்டும். மீதமான பயன்படுத்திய உணவு எண்ணெயை FSSAI அங்கீகரித்த கொள்முதலாளருக்கு மட்டும் விற்க வேண்டும்.
* விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்திடல் வேண்டும்.
* நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ / பொட்டலமிடவோ கூடாது.
* அனுமதிக்கப்படாத நெகிழியில் (பிளாஸ்டிக்) உணவுப்பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக்கூடாது.
* உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர் அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* எவ்வகை உணவு எண்ணெய்களையும் லேபிள் விபரங்களின்றியும், பொட்டலமிடாமல் சில்லறை அடிப்படையிலும் நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது.
* உணவை கையாள்பவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றை தவறாமல் அணிய வேண்டும்.
* பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்கள் கொள்முதல் விற்பனை செய்யும்போது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. உரிமை எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விவரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகங்கள் / பேக்கரி / இனிப்பகங்கள் உள்ளிட்ட உணவு நிறுவனங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக்கூடாது.
* சிக்கன்-65, பஜ்ஜி, கோபி-65 போன்ற உணவு வகைகளில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது.
என்பது உள்பட 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
உணவு கடைகளில், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ? அல்லது தயாரித்தாலோ? உணவு கடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உணவு பாதுகாப்புத்துறை சட்டத்தின்படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






