என் மலர்
நீங்கள் தேடியது "school education department"
- காமராஜர் ஆட்சி காலத்தில்தான் ஆரம்ப பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மிக அதிக அளவில் தொடங்கப்பட்டன.
- அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
சென்னை:
இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தராபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக பள்ளி கல்வித்துறை அலுவலக வளாகத்தில் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பெயரை அலங்கார வளைவிற்கு வைப்பதும், வளாகத்தில் அவரது உருவ சிலை வைப்பதும் மட்டுமே மிகப்பொருத்தமாக இருக்கும். காமராஜர் ஆட்சி காலத்தில்தான் ஆரம்ப பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மிக அதிக அளவில் தொடங்கப்பட்டன. அது மட்டுமில்லாது அனைவரையும் படிக்க வைக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்த மிக முக்கியமான கோரிக்கையை ஆராய்ந்து, ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு அக்டோபர் மாதம் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.
- கடந்த மாத சம்பளம் இதுவரையில் கிடைக்காததால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை:
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு அக்டோபர் மாதம் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு மாதமும் இறுதி வேலை நாளில் சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஆனால் கடந்த மாத சம்பளம் இதுவரையில் கிடைக்காததால் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி கல்வி இணை இயக்குனர் நரேஷ் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (இடை நிலை) ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பள்ளி கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக 42 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை மாவட்ட கல்வி அலுவலகம் கட்டுப்பாட்டில் புதிதாக மாற்றம் செய்யப்பட்ட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லா பணியாளர்கள் விவரங்கள் சார்ந்த புதிய மாவட்ட கல்வி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் ஊதியம் பெற்று வழங்கும் வகையில் இணையத்தில் விவரங்கள் உள்ளீடு செய்யப்பட்டு உள்ளன.
எனவே அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும் (இடைநிலை) தங்கள் கட்டுப்பாட்டில் புதிதாக சேர்ந்துள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லா பணியாளர்களின் சம்பள பட்டியலை கருவூலத்தில் அல்லது சம்பள கணக்கு அலுவலகத்தில் உடனடியாக சமர்பித்து ஊதியம் பெற்று வழங்க வேண்டும்.
இதில் எவ்வித கால தாமதமும் ஏற்படக்கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் மேற்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சார்பாக 30.9.2022க்கு முன்னர் பட்டியல் ஏதேனும் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளதா என்பதனை உறுதி செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தையே பின்பற்ற வேண்டும்.
- மேல்நிலைப்பிரிவில் 60 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 61-100 மாணவர்கள் வரை இரு பிரிவாகவும், ஒவ்வொரு கூடுதல் 40 மாணவர்களுக்கும் கூடுதல் பிரிவும் ஏற்படுத்திடவும் அனுமதிக்கப்படுகிறது.
சென்னை:
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு 1:40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தையே பின்பற்ற வேண்டும்.
மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்சி-மாநகராட்சி பகுதியாக இருப்பின் குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஏனைய ஊரக பகுதியாக இருப்பின் குறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கை 15 ஆக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்நிலைப்பிரிவில் 60 மாணவர்கள் வரை ஒரு பிரிவாகவும், 61-100 மாணவர்கள் வரை இரு பிரிவாகவும், ஒவ்வொரு கூடுதல் 40 மாணவர்களுக்கும் கூடுதல் பிரிவும் ஏற்படுத்திடவும் அனுமதிக்கப்படுகிறது.
குறைந்தபட்ச மாணவர்கள் இல்லாமல் நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு அதில் பயிலும் மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும்போது ஒரு ஆசிரியருக்கு வாரத்துக்கு குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் ஒதுக்கீடு உள்ளதா என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
முதுகலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர்கள் மேல்நிலை வகுப்புகளில் மொழிப் பாடத்தில் வாரத்திற்கு குறைந்தபட்சம் 24 பாடவேளைகள் எனவும், இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் 28 பாட வேளைகள் என்ற அடிப்படையிலும் கணக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு போதிய பாடவேளை இன்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில் கீழ்நிலை வகுப்புகளுக்கு (9, 10-ம் வகுப்பு) கற்பிக்க பாட வேளைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மொழிப்பாடத்தில் 24 பாட வேளைக்கும், முதன்மை பாடத்தில் 28 பாட வேளைகளுக்கும் கூடுதலாக இருப்பின் இதற்கென ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம் செய்யலாம்.
ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யும்போது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து அதில் ஒரு பணியிடம் ஆசிரியருடன் உபரி பணியிடமாக இருக்குமாயின் அப்பாடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களில் இளையோரை ஆசிரியருடன் உபரியாக காண்பிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றி பள்ளி கல்வி துறைக்கு விவர அறிக்கை தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
- டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 386 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சென்னை :
பள்ளி கல்வித்துறையில் 38 வருவாய் மாவட்டங்களாக நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 386 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
இதற்காக மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஒரு குழுவும், மாநில அளவில் பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கற்பித்தல் பணியில்...
* தகுதியுள்ள ஆசிரியர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் மாவட்ட தேர்வு குழுவின் முன் நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீடு செய்ய வேண்டும். மாவட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை, மாநில தேர்வு குழுவின் பரிசீலனைக்கு வருகிற 14-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அந்த பட்டியலின் அடிப்படையில் மாநில தேர்வு குழு இறுதி பட்டியலை தயாரிக்க வேண்டும்.
* அனைத்து வகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அலுவலகங்களில் நிர்வாகப்பணி மேற்கொள்ளும் ஆசிரியர்கள் விண்ணப்பிக்க கூடாது.
* பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எந்தவித குற்றசாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும், பொதுசேவைகளில் நாட்டம் கொண்டவராகவும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித்தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருத்தல் வேண்டும்.
* அரசியலில் பங்குபெற்று அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்கள் கண்டிப்பாக பரிந்துரைக்கக்கூடாது. கல்வியினை வணிகரீதியாக கருதி செயல்படும் (டியூசன் எடுப்பவர்கள்) ஆசிரியர்களையும், நடத்தை விதிகளுக்கு முரணாக இருக்கும் ஆசிரியர்களையும் இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாக கருதப்படவேண்டும் என்பது போன்ற பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேர் விண்ணப்பம்.
- ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகளாக காத்திருக்கிறேன். ஆனால், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுமார் 13 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்துள்ளது. பட்டதாரிகள், வீடு தேடி வரும் கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்களை எல்லாம் தற்காலிகமாக நியமிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உள்ளிட்ட தகுதிகளை கொண்டவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.
ஆனால், பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பம் செய்தால், அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். அந்த விண்ணப்பங்கள் மீது முடிவு எடுக்கக்கூடாது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சார்பில், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக கடந்த 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.
அதில், 28 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்வு நடைமுறைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதற்காக வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
- கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
- மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவதில் பள்ளிகள் எவ்வித தாமதமும் செய்யக்கூடாது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10 வரை வகுப்புகள் இன்று தொடங்குகின்றன. இந்நிலையில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று பள்ளிகள் திறந்த உடன், தொடக்கப்பள்ளிகளில் 5ம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகளுக்கு தாமதமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கிட வேண்டும்.
இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து மாற்றுச் சான்றிதழ் கோரினால், அவற்றைத் தடையின்றி வழங்கிட வேண்டும். மாற்று சான்றிதழ் வழங்கும் பணிகளை இன்றும், நாளையும் மேற்கொள்ள வேண்டும்.
அரசுப்பள்ளிகளில் இன்றைய தினமே மாணவர் சேர்க்கையும் தொடங்க உள்ளதால், 8-ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அந்த மாணவர்கள் முந்தைய பள்ளிகளிடம் மாற்றுச் சான்றிதழ் பெற்று அதைச் சமர்ப்பித்த பின் முறையாகப் பதிவேட்டில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும்.
மேலும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக முழுவதும் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மாணவர்கள் கல்வி பாதிக்கக்கூடும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு திரும்பும்படி அரசு வேண்டுகோள் வைத்தது. ஆனாலும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல் இருந்ததால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்தது.
பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பள்ளி கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 4 ஆயிரத்திற்கும் மேலான ஆசிரியர்களுக்கு 17-பி விதியின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் நடந்த அரசாணை எரிப்பு போராட்டத்திலும் சிலர் ஈடுபட்டனர். அவர்கள் மீது 17-பி விதியின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. ஆனால் மிகவும் தீவிரமாக செயல்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த ஆசிரியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான “பேனல்” தயாரிக்கப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்கள் மேல்நிலை பட்டதாரி ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூன், ஜூலை மாதத்தில் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கான பட்டியல் தயாரிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு 17-பி விதியின் கீழ் தண்டனை பெற்ற 4 ஆயிரம் ஆசிரியர்கள் பெயர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண் அளிக்கின்றனர்.
விடைத்தாள்களை திருத்தம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அரசு தேர்வுத் துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினாலும் தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவர்கள் மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்து விடைத்தாள் நகல்களை பெற்று பார்த்த போதுதான் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி வருகின்றன.
ஆசிரியர்கள் அலட்சியமாக விடைத்தாள்களை திருத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அறிந்தும் இது போன்ற தவறுகள் ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்றன.
மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு 4,500 பேர் விண்ணப்பித்து விடைத்தாளின் நகலை பார்த்தபோது அதில் 1700 மாணவர்களின் மதிப்பெண்கள் வேறுபட்டு இருந்தது.
மாணவர்களின் விடைத்தாள்களில் கூட்டல் தவறு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மதிப்பெண்களை கூட்டி மொத்தமாக போடும் போது தவறு செய்திருப்பது தெரிய வந்தது.
10 மதிப்பெண்கள் வரை வேறுபட்டு இருந்தது. மேலும் சிலரது மதிப்பெண்கள் 72 என்பதற்கு பதிலாக 27 என தவறுதலாக கொடுக்கப்பட்டு இருந்தன. விடைத்தாள்களை ஒரு ஆசிரியர் திருத்தினாலும் அது சரியாக திருத்தப்பட்டு இருக்கிறதா? கூட்டலில் தவறு உள்ளதா? என்பதை கண்காணிக்க படிப்படியாக 3 கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணியில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். அப்படியிருந்தும் மதிப்பெண் தவறாக வழங்கியது, முறையாக கூட்டி மதிப்பெண் அளிக்காமல் அலட்சிய போக்கில் செயல்படுதல் போன்றவை கண்டறியப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டத்திலும் விடைத்தாள் திருத்தம் செய்ததில் குளறுபடிகள் செய்ததாக 500 ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இதனை அனுப்பி உள்ளனர்.
விடைத்தாள்களில் பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்டி மதிப்பெண் மாறுபட்டு இருப்பதையும் கூறி 7 நாட்களுக்குள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
முறையான விளக்கத்தை கொடுத்தால் அவர்கள் மீது 17-ஏ, 17 பி போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அதன்படி அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை 3 ஆண்டுகளுக்கு ‘கட்’ செய்யப்படும்.
உரிய விளக்கம் தராதவர்கள் அல்லது விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விடைத்தாள் திருத்தம் செய்வதில் கவனத்துடன் செயல்படவும் தவறுகளுக்கு இடம் அளிக்கக்கூடாது என தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும் ஆசிரியர்கள் சிலர் தவறு செய்கின்றனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

தற்போது அலட்சிய போக்கில் விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அவர்களது விளக்கத்தை பொறுத்து ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால் சஸ்பெண்டு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பு ஏற்றது முதல் கல்வித்துறையில் பல அதிரடியான மாற்றங்களை புகுத்தி வருகிறார். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளை போன்று 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு முறையில் மீண்டும் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது.
9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மொழி பாடங்களான தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும், ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என்றும் பிரிக்கப்பட்டு தற்போது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் என்று இருப்பதை தமிழ் என்று ஒரே தேர்வாகவும், ஆங்கிலம் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என்று இருப்பதை ஆங்கிலம் என்று ஒரே தேர்வாகவும் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு நடத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தன.
இதேபோல 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் மொழி பாடங்களாக தமிழ், ஆங்கிலம் என்று 2 பாடங்களும், 4 முக்கிய பாடங்களும் என மொத்தமாக 6 பாடங்களில் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 2 மொழி பாடங்களுக்கு பதிலாக ஏதாவது ஒரு பாடத்தை அமல்படுத்தலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மொழி பாடத்தை மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது.

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தற்போது தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு தலா ஒரு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்துக்கு ஒரே தேர்வு நடத்தினால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மொழி பாடங்களுக்கு ஒரு தேர்வு முறை என்பது அமலுக்கு வந்துவிடும். மொழி பாடங்களுக்கு தலா ஒரு தேர்வு நடந்தால், தேர்வு நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை குறையும். மேலும் விடைத்தாள் திருத்தும் பணியும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகனிடம் கேட்டபோது, பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவருவதற்கான திட்டம் அரசிடம் இருப்பதாகவும், இறுதி வடிவம் கொடுப்பது குறித்து அரசு தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.