என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அறிவியல் சார்ந்த முற்போக்கு சிந்தனையோடு பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது- அமைச்சர் அன்பில் மகேஷ்
- பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வருகிறதே தவிர புதிய மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வரப்படவில்லை.
- ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லை மாவட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் அடைவு தேர்வு தொடர்பாக நடத்திய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறை சார்ந்த ஆய்வு கூட்டம் 23-வது மாவட்டமாக இங்கு தலைமை ஆசிரியர்களை சந்தித்து நடத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு என்னென்ன தேவை என்பது குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக செயல்படும் இடங்களை கண்டறிந்து அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு மற்ற இடங்களில் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது. எந்த அரசாக இருந்தாலும் பள்ளிகளை மூடாது. மூடியதாக வரலாறும் கிடையாது.
கடந்த கல்வி ஆண்டில் இருந்து இந்த கல்வி ஆண்டு வரை உள்ள கணக்கீட்டில் புதியதாக 4 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டதாக தகவல்கள் வருகிறதே தவிர புதிய மாணவர் சேர்க்கை குறித்த தகவல்கள் வரப்படவில்லை.
மூடப்பட்ட 207 பள்ளிகளின் காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை ஆசிரியர்கள் கண்டறிந்து ஈ-ரெஜிஸ்டர் பதிவேட்டில் இணைக்கப்பட்டு பள்ளிகளில் சேர்த்து வருகிறோம்.
உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி 2015-16-ல் இருந்து உலகம் முழுவதும் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்திற்காக இடம் விட்டு இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கணக்கி டப்பட்டுள்ளது.
மூடப்பட்ட பள்ளிகள் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளியில் படிக்கும் வயதில் உள்ள மாணவர்களை பள்ளியில் படிக்க சேர்ப்பதற்கான அனைத்து பணிகளையும் அதிகாரிகளும், ஆசிரியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில் இருக்கும் மாணவர்களிடம் மத்திய அமைச்சர் அவரது நம்பிக்கை சார்ந்து பேசி உள்ளார். அவரது நம்பிக்கை சார்ந்து பேசியது அவரது இஷ்டம். அது குறித்து கருத்து சொல்ல முன்வரவில்லை.
அறிவியல் சார்ந்து முற்போக்கு சிந்தனையோடு தந்தை பெரியார் வழியில் பள்ளிக்கல்வித்துறை தமிழக முதலமைச்சர் வழி காட்டுதலோடு செயல்பட்டு வருகிறது. அறிவை சார்ந்து இருக்கும் பாதையில் நாங்கள் செல்லும்போது எங்களோடு சேர்ந்து பயணிக்க ஆசைப்படுபவர்கள் எங்களோடு வரலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






