search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Schools Reopen"

    • பள்ளிகள், கல்லூரிகளில் மழை மற்றும் வெள்ளநீர் சூழ்ந்து இருந்தால், அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
    • மழை வெள்ளத்தால் மாணவ-மாணவிகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மழை ஓய்ந்த நிலையிலும், வெள்ள நீரால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மழை, வெள்ள நீரை கருத்தில் கொண்டு சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது.

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முதல் 2 நாட்களுக்கு பொது விடுமுறை விடப்பட்ட நிலையில், அதன் பிறகு வெள்ள நீர் அதிகம் சூழ்ந்திருந்த பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல், கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் தொடர் விடுமுறைக்கு பிறகு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயங்கத் தொடங்கின.


    பள்ளிகளை பொறுத்தவரையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 14 பள்ளிகளில் வெள்ள நீர் வடியாத நிலை இருப்பதாகவும், அதிலும் சென்னையில் மட்டும் 6 பள்ளிகள் உள்ளதாகவும் சொல்லப்பட்டது. அந்த பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடந்தன.

    அதேபோல், இந்த 4 மாவட்டங்களில் இருக்கும் 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2 கல்லூரிகளை தவிர பிற கல்லூரிகளில் தண்ணீர் வடிந்து, மாணவ-மாணவிகள் கற்கும் சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    அவ்வாறு மழைநீரால் சூழ்ந்து இருக்கும் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட கலெக்டர் முடிவு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தொடர் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள், கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பான கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்த கல்வித்துறை சார்பில் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பள்ளிகள், கல்லூரிகளில் மழை மற்றும் வெள்ளநீர் சூழ்ந்து இருந்தால், அங்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதனை பின்பற்றி மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களிலும் தமிழக அரசு சுமார் ரூ.2 கோடி செலவு செய்து பள்ளிகளை சீரமைத்து உள்ளது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இன்று திட்டமிட்டபடி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் பள்ளிகள் இயங்கின.

    மாணவ-மாணவிகள் ஒரு வாரத்திற்கு பிறகு வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். ஆனால் இன்று பாடங்கள் நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக மழை வெள்ளத்தால் மாணவ-மாணவிகளுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    எத்தனை மாணவர்களுக்கு சீருடைகள் சேதமடைந்துள்ளன என்று ஆய்வு செய்யப்பட்டது. அதுபோல எத்தனை மாணவர்களுக்கு மழை வெள்ளத்தில் சிக்கி பாட புத்தகங்கள் நாசமாகி விட்டன என்று கணக்கிடப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் இன்று காலை தொடங்கி மாலை வரை இந்த பணி நடைபெறுகிறது.

    இன்று மாலை கணக்கெடுப்பு முடிந்த பிறகுதான் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு எந்தெந்த பொருட்கள் எவ்வளவு தேவை என்பது தெரியவரும். அதன் அடிப்படையில் பாட புத்தகங்கள், சீருடைகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    நாளை (செவ்வாய்க் கிழமை) மாணவ-மாணவிகளுக்கு புதிய பாட புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    • பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
    • தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவு.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி நாளை (டிசம்பர் 08) சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆறு தாலுகாக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 11-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பள்ளிகளை திறப்பதற்கு முன் தூய்மை, மின் இணைப்பு என தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.

    • காலாண்டு விடுமுறை இன்றுடன் முடிகிறது.
    • 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நாளை வகுப்புகள் தொடங்குகிறது.

    சென்னை:

    தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை பல்வேறு கட்டங்களாக விடப்பட்டது. கடந்த 23-ந்தேதி ஒரு சில பள்ளிகளுக்கு விடப்பட்டன.

    27-ந்தேதி முதல் மேலும் சில பள்ளிகள் மூடப்பட்டன. மிலாடி நபி, காந்தி ஜெயந்தி விடுமுறையை மையமாக வைத்து காலாண்டு விடுமுறை விடப்பட்டது.

    தனியார் பள்ளி மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை கிடைத்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டன.

    காலாண்டு விடுமுறை இன்றுடன் முடிகிறது. நாளை அனைத்து அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகின்றன.

    தனியார் மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நாளை வகுப்புகள் தொடங்குகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் 8-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • காலை மற்றும் மாலை நேரங்களில் பயணியர் அதிகமாக செல்லும், ‘பீக் ஹவர்களில்’ கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதேபோல், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    பொது பயணியரோடு, மாணவர்களும் பயணிப்பதால், அரசு பஸ்களில் கூட்டம் அதிகரிக்கும். எனவே, தேவைக்கு ஏற்றார் போல், கூடுதல் பஸ்களை இயக்க, கிளை மேலாளர்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

    இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வழக்கமாக இயக்கப்படும், 2,700 மாநகர பஸ்களோடு, மேலும், 150 பஸ்கள் நேற்று முதல் கூடுதலாக இயக்க, கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, காலை மற்றும் மாலை நேரங்களில் பயணியர் அதிகமாக செல்லும், 'பீக் ஹவர்களில்' கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சிறு குழந்தைகளுக்கு வகுப்புகள் தொடங்குவதால் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
    • மாநகராட்சி, தனியார் பள்ளிகள், மழலையர் பள்ளிகளுக்கு முதன்முதலாக வரும் குழந்தைகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

    1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (புதன்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நாளை வகுப்புகள் தொடங்குகிறது.

    இது தவிர எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் குழந்தைகளுக்கும் நாளை வகுப்பு நடைபெறுகிறது. சிறு குழந்தைகளுக்கு வகுப்புகள் தொடங்குவதால் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    மாநகராட்சி, தனியார் பள்ளிகள், மழலையர் பள்ளிகளுக்கு முதன்முதலாக வரும் குழந்தைகளை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இதுவரையில் பெற்றோர் அரவணைப்பில் இருந்த குழந்தைகள், அவர்களை பிரிந்து பள்ளிக்கு வருவதால் அழவும், கூச்சலிடவும் வாய்ப்பு உள்ளது.

    அவர்களை அன்போடும், பாசத்தோடும் ஆசிரியர்கள் வரவேற்று வகுப்பறைக்கு அழைத்து செல்லவும், அழுதால், விளையாட்டு பொருட்களை கொடுத்து சிரிக்க வைக்கவும் தயார்படுத்தப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு விளையாட்டு சூழலை ஏற்படுத்தும் வகையில் பல பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியைகள் குழந்தைகளோடு குழந்தைகளாகவே மாறி வகுப்பறையில் அமர வைக்க பல்வேறு அணுகுமுறைகளை கையாள தயாராக உள்ளனர்.

    பள்ளிக்கு முதன்முதலாக தங்கள் குழந்தைகள் செல்ல இருப்பதால் இன்றே அவர்களை தயார்படுத்தும் பணியில் பெற்றோர்கள் ஈடுபட்டனர். செல்லக்கூட்டி அழக்கூடாது... அம்மா உன்பக்கத்தில் தான் இருப்பேன்... மிஸ்கூட ஜாலியா விளையாடணும் செல்லம்... என கொஞ்சி கொஞ்சி அவர்களை நாளைய வகுப்பறைக்கு தயார்படுத்தி வருகிறார்கள்.

    புதிய சீருடை, ஷூ, பெல்ட், சிறிய புத்தக பை இவற்றுடன் பள்ளிக்கு செல்லும் காட்சியை பெற்றோர் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

    • கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள்.
    • நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள்.

    விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதையொட்டி மாணவச் செல்வங்களை வாழ்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள். நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள்.

    நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக இருப்பேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

    • கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர ‘நோ பேக் டே’ திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    குழந்தைகள் 5 வயது பூர்த்தியான பின்னர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்படியே பள்ளிக்கு அழைத்துச் சென்றாலும் அங்குள்ள ஆசிரியர் குழந்தைகளை தலையை சுற்றி காதை தொடுமாறு கூறுவார். அப்படி காதை தொட்ட குழந்தைகள் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. 2½ வயது ஆகிவிட்டாலே மழலையர் பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். அவர்களுக்கு புத்தகம் பை வீட்டு பாடம் என ஆரம்பத்திலேயே சுமைகள் அதிகரிக்கிறது.

    கிலோ கணக்கில் மாணவர்கள் நோட்டு, புத்தகங்களை சுமந்து செல்வதால் நாளடைவில் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுதொடர்பாக பெற்றோர், பள்ளி நிர்வாகத்தினர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து டாக்டர்கள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

    பள்ளி மாணவர்களின் முதுகு எலும்பை பாதுகாப்பது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும். மாணவர்களின் தோள் பையின் எடை அதிகரிப்பதால் கழுத்து வலி, முதுகுவலி, தோள் பட்டை வலி மற்றும் முதுகு எலும்பு வளைதல் ஆகிய உடல்நல பாதிப்புகள் உண்டாகின்றன.

    தவறான தோள் பையை பயன்படுத்துவது மற்றும் தோள் பையை தவறான முறையில் தொடர்ந்து பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் இளம் வயதிலேயே முதுகு கூன் விழுதல், சுவாச கோளாறு, முதுகு தண்டுவட சவ்வு விலகுதல் போன்ற பிரச்சனைகள் வரும் அபாயம் உள்ளது எனக் கூறியுள்ளனர்.

    பள்ளிக் குழந்தைகளின் புத்தக பை சுமையை குறைக்க தெலுங்கானா மாநில அரசு இந்த கல்வியாண்டில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.

    தெலுங்கானாவில் மாணவர்களின் சுமையை குறைக்க வாரத்தில் ஒரு நாள் 'நோ பேக் டே' புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி இந்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாதாந்திர 'நோ பேக் டே' திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் ஒவ்வொரு மாதமும் 4-வது சனிக்கிழமையன்று இந்த 'நோ பேக் டே' கடைபிடிக்கப்படும்.

    அந்த நாட்களில் புத்தக பை கொண்டு செல்ல வேண்டாம்.

    ஆண்டு முழுவதும் மொத்தம் 10 பேக் இல்லாத நாட்கள் கடைபிடிக்கப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்கள் புத்தக பையை சிரமத்தோடு சுமந்து வருவது தடுக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநில கல்வி காலண்டர் வெளியிடப்பட்டது. அதில் ஜூன் 12, 2023 முதல் ஏப்ரல் 23, 2024 வரையிலான கல்வியாண்டில் 'நோ பேக் டே' நாளாக அறிவித்த தேதிகளை கோடிட்டு காட்டியுள்ளது.

    இந்த 'நோ பேக் டே' நாளில் மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி, யோகா மற்றும் தியானம் உள்ளிட்ட சிறப்பு வகுப்புகள் நடைபெறும்.

    இதுகுறித்து அந்த மாநில கல்விச் செயலாளர் கூறியதாவது:-

    இந்த 'நோ பேக் டே' நாளில் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை தவிர மற்ற செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.

    இந்த 'நோ பேக் டே' நாள் கடைபிடிக்கப்படுவதால் யோகா, விளையாட்டு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படும்.

    இதன்மூலம் மாணவர்கள் கற்றல் திறன் மற்றும் பொது அறிவு வளரும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த 7-ந்தேதி திறக்க இருந்த பள்ளிகள் இன்று திறப்பு
    • அமைச்சர் நேரில் சென்று பள்ளி மாணவிகளை வரவேற்றார்

    சென்னை:

    தமிழக பாடத்திட்டத்தில் படிக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு ஏப்ரல் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் ஏப்ரல் மாதத்திலேயே அதிகமாக இருந்ததால் தேர்வுகள் முன் கூட்டியே முடிக்கப்பட்டன.

    வழக்கமாக கோடை விடுமுறை மே மாதம் மட்டும் விடப்படும். ஜூன்-1 அல்லது 2-ந்தேதிகளில் பள்ளிகள் திறக்கப்படும். அது போல இந்த ஆண்டும் ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் சற்றும் குறையவில்லை.

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்ளில் வெப்ப அலை வீசியதால் பள்ளி திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோரிடம் இருந்து வந்தது.

    இதையடுத்து ஜூன் 7-ந்தேதிக்கு பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஒரு வார காலம் தள்ளி வைக்கப்பட்ட போதிலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசியது. இது பள்ளி குழந்தைகளை கடுமையாக பாதிக்கும் என்பதால் கல்வித்துறை பள்ளி திறப்பை மேலும் ஒரு வாரம் தள்ளி வைத்தது.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்றும் (12-ந்தேதி) 1 முதல் 5-ம் வகுப்பு குழந்தைகளுக்கு 14-ந் தேதியும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

    அதன்படி இன்று அனைத்து பள்ளி கூடங்களும் திறக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.

    இந்த வருடம் மாணவ-மாணவிகளுக்கு 45 நாட்கள் கோடை விடுமுறை கிடைத்தது. நீண்ட நாட்கள் விடுமுறையில் வீடுகளில் முடங்கியதால் பள்ளி எப்போது திறக்கும் என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் இடையே ஏற்பட்டது.

    தமிழகம் முழுவதும் தொடக்கப் பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். குறிப்பாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு செல்லும் மாணவ-மாணவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வகுப்புகளுக்கு சென்றனர்.

    பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. அரசின் சார்பில் விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், பேக் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் புதிய புத்தகங்களை மகிழ்ச்சியுடன் பெற்றனர்.

    வகுப்பு வாரியாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இதனை வழங்கினார்கள். இதே போல் சீருடையும் வழங்கப்பட்டன.

    சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. சி.பி.எஸ்.இ. வகுப்புகளும் தொடங்கின. சென்னையில் அரசு மற்றும் மாநகராட்சி மூலம் நடத்தப்படும் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டன.

    விருகம்பாக்கம் அரசு ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளை வரவேற்றார். உற்சாகத்துடன் வந்த மாணவிகள் அவரவர் வகுப்பில் அமர வைக்கப்பட்டனர்.

    தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்ததால் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்பட்டது. மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

    இதே போல் எல்லா பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளுக்கு வந்தனர். நண்பர்கள், ஆசிரியர்களை சந்தித்து மனம் விட்டு பேசினர்.

    முதல் நாள் என்பதால் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டதால் பாடங்கள் நடத்தப்படவில்லை. மேலும் பள்ளிக்கு புதிதாக வந்த மாணவ-மாணவிகள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

    • பள்ளிகள் திறக்கப்படுவது 2-வது முறையாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
    • 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ந்தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

    ஆனால் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் மே மாதத்தில் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மாறாக அதற்கு பிறகுதான் வெயில் அதிகமாக கொளுத்த தொடங்கியது.

    தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. சென்னையில் 105 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. எனவே பள்ளிகள் திறப்பை ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளி வைப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.

    ஆனாலும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தது. எனவே பள்ளிகள் திறக்கப்படுவதை மேலும் தள்ளி வைக்குமாறு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகள் திறக்கப்படுவது 2-வது முறையாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் 2023-2024-ம் கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளையும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (12-ந்தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும்.
    • மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் வகுப்புகள் நடத்தப்படும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பள்ளிக்கூடங்களை திறக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படும். கோடை விடுமுறைகளை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாடங்களை விரைந்து முடிக்க இனி சனிக்கிழமையிலும் வகுப்புகள் நடைபெறும்.

    மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையிலும் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தப்படும்.

    தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான தகவல் வரவில்லை. 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் போட்டியில் பங்கேற்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது.
    • இன்று காலை 8.30 மணி முதல் பாட வாரியாக வகுப்புகள் தொடங்கின.

    சென்னை:

    கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் 2-வது முறையாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 12-ந்தேதியும், 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் வருகிற 14-ந்தேதியும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி திறப்பு தாமதமானதால் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி திறப்பு தாமதமானதால் அவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த முடியாததால் மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

    இதை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆயத்தப் பணிகள் நேற்றே தொடங்கி நடந்தது.

    மாலையிலேயே அந்தந்த மாணவ, மாணவிகளுக்கு செல்போனில் அதற்கான லிங்க் அனுப்பப்பட்டது.

    இன்று காலை 8.30 மணி முதல் பாட வாரியாக வகுப்புகள் தொடங்கின. வீட்டில் இருந்தபடியே 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பாடத்திட்டங்களை ஆன்லைன் மூலம் படித்தனர்.

    கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடந்தது. அதன் பின்பு வெயில் தாக்கத்தால் இப்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது.

    பள்ளி திறந்ததும் வழக்கம் போல் நேரடி வகுப்புகள் தொடங்கும்.

    • எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பொதுமக்களின் பஸ் பயணம் அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
    • வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக ‘ஸ்பேர்’ பஸ்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. மே மாதம் முழுவதும் விடுமுறைக்கு பிறகு ஜூன் 1-ந்தேதி பள்ளிக்கூடம் திறப்பதாக இருந்தது.

    ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 7-ந்தேதிக்கு பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு சொந்த ஊர், சுற்றுலா தலங்கள் சென்றவர்கள் பள்ளி திறப்பது தாமதம் ஆனதால் பயணத்தை தள்ளி வைத்தனர்.

    மேலும் ஒரு வாரம் கழித்து பள்ளிகள் திறப்பதால் வெளியூர் சென்றவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு வருவது தள்ளிப்போகிறது. 3-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.

    அதனால் அரசு போக்குவரத்து கழகத்திலும் உள்ள பஸ்களை முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு அதிகரித்துள்ளது.

    எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பொதுமக்களின் பஸ் பயணம் அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக 'ஸ்பேர்' பஸ்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 5-ந்தேதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் பயணம் செய்கிறார்கள். திருமணம், உள்ளிட்ட சுபகாரியங்கள் அதிகம் நடப்பதால் வெளியூர் பயணம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,200 பஸ்கள் தவிர கூடுதலாக 500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதேபோல வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனாலும் மக்கள் கூட்டம் எதிர்பாராமல் வருகிறது. குறிப்பாக நள்ளிரவு நேரத்தில் வந்தால் திடீரென பஸ் வசதியை எவ்வாறு ஏற்படுத்தி கொடுக்க முடியும். வெளியூர் செல்பவர்கள் முன்பதிவு செய்தால் அதனை கணக்கிட்டு தேவையான பஸ் வசதியை ஏற்படுத்தி தர முடியும்.

    விழுப்புரம், சேலம், மதுரை, கோவை, கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகத்தில் இருந்து கூடுதலாக பஸ்கள் பெறப்பட்டு கூட்டத்தை சமாளிக்க திட்டமிட்டுள்ளோம். 7-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×