என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய மக்கள் - பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
- தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
- வாகனங்கள் ஊர்ந்தபடி சென்னைக்குள் நுழைந்தன.
பள்ளிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டதாலும், ஆயுதபூஜை விடுமுறையையொட்டியும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விடுமுறை முடிந்து இன்று(திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டது.
இதனால் சொந்த ஊர் சென்றவர்கள் நேற்று முதல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வரத் தொடங்கினர். கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், இருசக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி பொதுமக்கள் வந்ததால் ஜி.எஸ்.டி. சாலையில் பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்னைக்குள் நுழைந்தன.
இதே போல நேற்று மாலை பெய்த மழையால் ஜி.எஸ்.டி. சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டதால், தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. ரெயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளால் மிகுந்த நெரிசல் ஏற்பட்டது. மேலும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.






