search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "school students"

  • பெண் கல்விதான் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் அவர்களுக்கு சமூக விடுதலையை அளிக்கும்
  • பரிசு பொருட்களாக சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.

  நேற்று (பிப் 18) புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 44 லட்சம் செலவில் பள்ளிக் கட்டிடங்கள் கட்டும் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா சென்றிருந்தார்.

  அன்று பள்ளியின் ஆண்டு விழாவும் நடைபெற்றதால், தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்படி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய எம்.எம். அப்துல்லா, "சிறுபான்மைச் சமூகத்தில் இருந்தும் மீனவ சமூகத்தில் இருந்தும் பெருவாரியான குழந்தைகள் படிக்கும் பள்ளி அது.. எனவே அதை மனதில் வைத்து "பெண் கல்விதான் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் அவர்களுக்கு சமூக விடுதலையை அளிக்கும் என்று கூறி படித்து நீங்கள் எல்லாம் பெரும் பெரும் பொறுப்புகளுக்கு வர வேண்டும்" என பேசினார்

  பின்பு தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்படி, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நானூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 15 மாணவியருக்கு பரிசு பொருட்களை வழங்கினார். பரிசு பொருட்களாக சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.

  பரிசு பொருட்களை வழங்கிய பிறகு மீண்டும் மாணவர்களிடம் பேசிய அப்துல்லா, "சற்று முன்னர்தான் உங்களிடம் படிப்பு ஒன்றுதான் பெண்ணடிமைத் தனத்தில் இருந்து உங்களை விடுதலை செய்யும்.. அடுப்படி மறந்து நீங்கள் எல்லாம் பெரிய பெரிய அதிகாரிகளாக வர வேண்டும் எனப் பேசினேன்.. ஆனால் என் கையாலேயே பரிசு பொருட்களாக சட்டி பானைகளை உங்களுக்கு வழங்க வைத்து விட்டார்கள்.

  அப்போதே மாட்டேன் என்று மறுத்தால் மேடை நாகரீகமாக இருக்காது.. எனவே அந்தப் பரிசுகளைக் குடுத்து நானும் அவர்களின் தப்புக்கு துணை போனேன்! அதற்கு பிராயச் சித்தமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசாகத் தருகிறேன்.. வந்து பெற்றுக் கொள்ளுங்கள்" என அறிவித்தேன். பெற்றுக் கொண்ட அந்தக் குழந்தைகளும் நானும் மகிழ்வோடு விழா முடிந்து திரும்பினோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

  • ஆலப்புழா மாவட்டம் களவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
  • பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் தாங்களாகவோ வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர்.

  திருவனந்தபுரம்:

  2024 ஆங்கில புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. புதிதாக பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

  புத்தாண்டு வாழ்த்துக்களை பெரும்பாலானோர் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது சமீபகால வழக்கமாக இருந்து வருகிறது. இதற்காக பலரும் தற்போதே தயாராகி வருகின்றனர்.

  இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள், அம்மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டிக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை தாங்களே தயாரித்து அனுப்பி வைத்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

  ஆலப்புழா மாவட்டம் களவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு களவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டிக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்தனர்.

  அதன்படி அந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் தாங்களாகவோ வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர். மாணவ-மாணவிகளின் அந்த படைப்புகள் கைவி னைப் பொருட்கள், ஓவியங்கள் என பல விதங்களில் இருந்தன.

  மாணவ-மாணவிகள் தங்களின் படைப்புகளை தபால் சேவை மூலம் கல்வித்துறை மந்திரியின் அலுவலகத்திற்கு அனுப்பி அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

  • பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.
  • மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  பெங்களூரு:

  கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா எலவள்ளி கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அங்கு பாரதம்மா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். வார்டனாக மஞ்சுநாத் என்பவர் உள்ளார்.

  இந்த நிலையில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா மற்றும் வார்டன் மஞ்சுநாத் ஆகியோர் மாணவ-மாணவிகளை அடித்து துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தலைமை ஆசிரியை பாரதம்மா அந்த பள்ளியில் உள்ள கழிவறை தொட்டியை (செப்டிக் டேங்க்) சில மாணவர்களை கட்டாயப்படுத்தி வைத்து சுத்தம் செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

  இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில், மாணவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும், மாணவர்களை வைத்து கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய வைத்ததாகவும் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதம்மா, வார்டன் மஞ்சுநாத், சமூக அறிவியல் ஆசிரியர் அபிஷேக், ஓவிய ஆசிரியர் முனியப்பா ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அக்ரம் பாஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்காலிக ஆசிரியர் மரேஷ், ஒப்பந்த பணியாளர் கலாவதி ஆகிய இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

  சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  இந்த சம்பவம் பற்றி தாலுகா சமூக நல அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், மஸ்தி போலீசார் கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்ட தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர்கள் முனியப்பா, அபிஷேக் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது முந்தைய காலம், தற்போதைய காலம் என்று பிரிக்க முடியாத அளவுக்கே தற்போதைய மாணவர்களும் உள்ளனர்.
  • தனது தொழிலில் தனித்துவத்துடன் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களின் மனதையும் கொள்ளை கொண்டு விடுகின்றனர்.

  கல்வி என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். அது ஒருவரை நல்வழிப்படுத்துவது மட்டுமின்றி, எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தருவதாக இருக்கிறது. அப்படிப்பட்ட கல்வியை போதிக்கும் ஆசிரியர்கள் போற்றத்தக்கவர்கள் ஆவர்.

  உயர்ந்தவன் தாழ்ந்தவன், வசதி படைத்தவன் வசதி இல்லாதவன் என அவர்கள் எதையும் பார்க்காமல் மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை கற்பித்து கொடுக்கிறார்கள். இதன் மூலம் ஒருவருக்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுப்பதே ஆசிரியர்கள் தான் என்றே கூறலாம்.

  இதனால் ஒருவர் யாரை மறந்தாலும் தனக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை மறப்பதில்லை. தாய்-தந்தை அடுத்தபடியாக ஆசிரியரை கூறுகிறார்கள். 2000-ம் ஆண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர்களை தெய்வமாகவே மதித்தார்கள் என்று கூறலாம்.

  ஆசிரியர்களில் பலர் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, நல்லது-கெட்டது, எதிர்காலத்துக்கு அவசியமானது என அனைத்தையும் சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் விளங்குகின்றனர் என்றால் மிகையல்ல. அப்படிப்பட்ட ஆசிரியர்களை யாரும் மறந்து விட முடியாது.

  நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத முந்தைய காலக்கட்டங்களில் படித்தவர்கள், தற்போது நடத்தும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் உடன் படித்த மாணவர்கள் மட்டுமின்றி, தங்களுக்கு கல்வியறிவை கொடுத்த ஆசிரியர்களை கவுரவிப்பதை காண முடிகிறது.

  ஆசிரியர்களுக்கு மரியாதை கொடுப்பது முந்தைய காலம், தற்போதைய காலம் என்று பிரிக்க முடியாத அளவுக்கே தற்போதைய மாணவர்களும் உள்ளனர். தனது தொழிலில் தனித்துவத்துடன் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களின் மனதையும் கொள்ளை கொண்டு விடுகின்றனர்.

  அவர்களுக்கு தனது தாய்-தந்தைக்கு செய்வதைப் போன்று அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். அப்படித்தான் கேரளாவில் கண் பார்வையற்ற ஒரு ஆசிரியருக்கு பஸ்சில் இருந்து இறங்கி பள்ளிக்கு வருவதற்கு, வகுப்பறைக்கு செல்வதற்கு என அனைத்து இடங்களுக்கும் கையை பிடித்து அழைத்துச் சென்று மாணவிகள் உதவி வருகிறார்கள்.

  கண் பார்வையற்ற ஆசிரியருக்கு உதவும் மாணவிகள் பற்றிய விவரம் வருமாறு:-

  கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி கருக்குட்டி எடக்கன்னு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார். இந்த நிலையில் தனது எட்டாவது வயதில் கண் பார்வையை முற்றிலும் இழந்தார்.

  கண் பார்வையை இழந்தாலும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் வேலாயுதன். அவர் கோட்டயத்தில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் தனது படிப்பை தொடர்ந்தார். அங்கு கண் பார்வையற்றோருக்கான பிரெய்லி முறையில் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டார்.

  பின்பு திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த அவர், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து சிறப்பாக படித்த அவர், ஆசிரியர் பணியில் சேருவதை இலக்காக நிர்ணயித்தார்.

  இதற்காக திருச்சூர் கேரள வர்மா கல்லூரியில் எம்.ஏ. படிப்பை முடித்தார். பின்பு பாலக்காடு மாவட்டம் ஒட்டப்பாலம் என்.எஸ்.எஸ். கல்லூரியில் பி.எட். படிப்பை முடித்தார். அதன் பிறகு வேலாயுதன் ஆசிரியர் பணிக்காக பல தனியார் பள்ளிகளின் கதவை தட்டினார்.

  ஆனால் யாரும் அவருக்கு வேலைகொடுக்க தயாராக இல்லை. இதனால் வேலாயுதன் வாழ்வாதாரத்திற்காக லாட்டரி சீட்டு விற்க தொடங்கினார். 11 ஆண்டுகளாக லாட்டரி விற்கும் தொழிலிலேயே ஈடுபட்டு வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.

  அதன் பிறகு அட்டப்பாடியில் உள்ள ஒரு பள்ளியில் பாடம் எடுக்கும் வாய்ப்பு வேலாயுதனுக்கு கிடைத்தது. அங்கு சில நாட்கள் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய அவர் மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டார்.

  இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு உயர் நிலை ப்பள்ளி உதவியாளர் தரவரிசை பட்டியலில் வேலாயுதன் முதல் இடத்தை பிடித்தார். இதன்மூலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா முப்பத்தடம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். அங்கு சமூக அறிவியல் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

  அங்கமாலியில் தங்கி இருந்த அவர், முப்பத்தடம் அரசு பள்ளிக்கு தினமும் ஒன்றரை மணி நேரம் பயணித்து வர வேண்டி இருந்தது. பார்வையற்றவரான அவருக்கு அந்த பயணம் மிகவும் சவாலாக இருந்தது. இதனால் தனது ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் பணிபுரிய விரும்பினார்.

  அதற்கு தகுந்தாற் போல் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அவர் பணி மாறுதல் பெற்றார். கண் பார்வையற்றவராக இருந்தாலும் அவர் பாடம் எடுக்கும் முறை பெரும்பாவூர் பள்ளி மாணவிகளுக்கு மிகவும் பிடித்து விட்டது.

  இதனால் மாணவிகளுக்கு பிடித்த ஆசிரியராக வேலாயுதன் மாறிவிட்டார். கண் பார்வையற்ற அவருக்கு, தங்களின் தாய்-தந்தைக்கு செய்வது போன்று அனைத்து உதவிகளையும் செய்ய மாணவிகள் ஆர்வமுடன் முன் வந்தனர்.

  தினமும் காலையில் தனது ஊரிலிருந்து பஸ்ஸில் பள்ளிக்கு வரும் அவரை, பஸ் நிறுத்தத்தில் இருந்து பள்ளி வரை மாணவிகள் கையை பிடித்து அழைத்து வருகிறார்கள். பின்பு மாலையில் பள்ளி முடிந்ததும் பள்ளியில் இருந்து பஸ் நிறுத்தத்திற்கும் கையை பிடித்து அழைத்துச் சென்று பஸ்சில் ஏறிச் செல்ல உதவுகிறார்கள்.

  அதுமட்டுமின்றி பள்ளியில் இருக்கும்போது பணியாளர் அறையில் இருந்து வகுப்பறைக்கும் கையை பிடித்து அழைத்துச் சென்று உதவி செய்கிறார்கள். கண் பார்வையில்லாத ஆசிரியர் வேலாயுதனுக்கு, அவரிடம் படிக்கும் மாணவிகளே கண்களாக இருந்து வழிகாட்டியாக இருக்கிறார்கள்.

  இது பற்றி ஆசிரியர் வேலாயுதன் கூறும்போது, குழந்தைகள் என்னிடம் ஈடு இணையற்ற அன்பை கொடுக்கிறார்கள் என்று கூறினார். ஆசிரியர் வேலாயுதன் பற்றி மாணவிகள் கூறும்போது, மிகவும் அமைதியானவர். நன்கு பாடம் எடுப்பார். பாட்டும் பாடுவார். இதனால் அவரை எங்களுக்கு பிடிக்கும் என்றனர்.

  பார்வையற்ற ஆசிரியருக்கு மாணவிகள் செய்யும் இந்த சேவையை அதே பள்ளியில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மட்டுமின்றி பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.

  மாணவிகளுக்கு பிடித்த ஆசிரியராக வேலாயுதன் உள்ளார். இதனால் அவரிடம் படிக்கும் மாணவிகள், கண் பார்வையில்லாத வேலாயுதனின் கண்களாக உள்ளனர் என்பதே மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.

  • புதிய சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.
  • அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஈரோடு:

  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் செல்லும் சாலை பழுதடைந்து சேதம் அடைந்துள்ளது. இதற்காக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு புதிய சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் புதிய சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

  இதே போல் வனப்பகுதியில் சுற்றி அகழிகள் அமைக்காமல் யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும், இது குறித்து வனத்துறையினரிடம் கூறினால் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வலியுறுத்தியும், இதே போல் மலைப்பகுதியில் தொலை தொடர்பு சேவை இல்லாததால் அவசரகால உதவிக்கு மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், இங்கு உள்ள நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை ஆசனூர் ஆரேப்பாளையம் பிரிவு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் தங்களது குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  மலை கிராம மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் வாகனங்கள் 2 புறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  தகவல் அறிந்த தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம், வட்டாட்சியர் ரவிசங்கர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

  • ரெயில்வே மேம்பாலம் விரைவில் கட்டி முடிக்க வேண்டும்
  • பொதுமக்கள் வலியுறுத்தி

  ஜோலார்பேட்டை:

  திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

  இதில் ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி - மல்லானூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பச்சூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

  இதனால் பச்சூர் ரெயில்வே மேம்பாலம் வழியாக பொதுமக்கள் செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் ரெயில் தண்டவாளத்தைக் கடக்க மிகவும் அவதிப்படுகின்றனர்.

  மேலும் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்கள் ஆபத்தான முறையில் ரெயில் தண்ட வாளத்தை கடந்து செல்லும் சுழல் உள்ளது.

  சில சமயங்களில் மாண வர்கள் சைக்கிள்களுடன் தண்டவாளத்தை கடக்கும் போது திடீரென ரெயில் வந்துவிடுகிறது. இதனால் மாணவர்கள் பயத்துடனே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

  அதேபோல் பச்சூரில் ரெயில் நீண்ட நேரம் நிற்பதால், ரெயில் பெட்டிகளுக்கு இடையே உள்ள கப்ளிங் மீது ஏறியும், பெட்டிகளின் அடியில் புகுந்தும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

  எனவே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடியும் வரை, பள்ளி மாணவர்கள் சிரமமின்றி தண்ட வாளத்தை கடந்து செல்ல மாற்று பாதை பாதை அமைத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதியதாக கட்டப்பட்ட வரும் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

  • பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் பட்சத்தில் நகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டுப் பெறலாம்.
  • தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

  வண்டலூர்:

  மறைமலை நகர் நகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது, இதைத தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் நகராட்சியால் தயாரிக்கப்பட்டு பொது மக்களின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்ற வழங்கப்பட்டது. மேலும் நிலவேம்பு கசாயம் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று தொடர்ந்து 5 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

  இதுகுறித்து நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் கூறும்போது, பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் தேவைப்படும் பட்சத்தில் நகராட்சியை தொடர்பு கொண்டு கேட்டுப் பெறலாம். டெங்கு கொசு உற்பத்தியாகும் நிறுவனங்கள் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவர்களுக்கு அபராத விதிக்கப்டுகிறது. பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

  • சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ரூ.25,000 ரொக்க பரிசை வழங்கினர்.
  • பரிசு பெற்ற மாணவர்களுக்கு எல்.கே மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

  ஆறுமுகநேரி:

  மேல்நிலைப் பள்ளிகளுக்கு இடையில் நடந்த புத்தாக்க மேம்பாட்டு திட்ட அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டியில் காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப் பள்ளியின் மாணவர் குழுவினர் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். வாகன கதவு திறப்பு கண்காணிப்பு கருவி என்னும் தலைப்பில் கண்டுபிடிப்பில் வெற்றியைப் பெற்ற இந்த குழுவினர் தொடர்ந்து மாநில அளவிலும் இடம்பெற்றனர்.

  இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ரூ.25,000 ரொக்க பரிசை வழங்கினர். பரிசு பெற்ற மாணவர்களான முகம்மது அப்துல் காதர் ஆரிஷ் ,மஹ்மூது மிக்தாத், சேக் முகம்மது அலி,நாக அனு கார்த்திக்,நாக அனு சேஷன் ஆகியோருக்கும் அவர்களுக்கு பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியர் ராஜாவுக்கும் எல்.கே மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் செய்யது முகைதீன் தலைமை தாங்கினார்.ஆட்சி மன்ற குழு உறுப்பினர் லெப்பை தம்பி முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் சுபைர் அலி வரவேற்று பேசினார்.உதவி தலைமை ஆசிரியர்கள் முகம்மது சித்திக்,சேக் பீர் முகம்மது காமில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்றனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.

  • பேரணியை தாசில்தார் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.

  விளாத்திகுளம்:

  விளாத்திகுளம் தாசில்தார் அலுவலக அதிகாரிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தாசில்தார் ராமகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியானது அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி எட்டயபுரம் ரோடு, பஸ் நிலையம், மதுரை ரோடு, காய்கறி மார்க்கெட் வழியாக தாசில்தார் அலுவலகத்தில் முடிவடைந்தது.

  மேலும் இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் தவசுமுத்து, தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன் உட்பட வருவாய்த்துறை ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம், விளாத்திகுளம் அரசு பள்ளி ஆசிரியர் சேகர், காவல் துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.