என் மலர்
நீங்கள் தேடியது "அன்பில் மகேஷ்"
- சாரண இயக்கத்தின் இந்த உயரிய விருதினை, உ.பி. ஆளுநர் வழங்கிக் கெளரவித்தார்.
- வலிமையான சமுதாயத்தைப் படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.
பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற #19thNationalJamboree நிகழ்வில் @bsgnhq இயக்கத்தின் மிக உயரிய அங்கீகாரமான வெள்ளி யானை விருதினைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். சாரண இயக்கத்தின் இந்த உயரிய விருதினை, உ.பி. ஆளுநர் அவர்கள் வழங்கிக் கெளரவித்தார்.
மிக உயரிய வெள்ளி யானை விருதினை மாணவர்களின் நலன் காக்கும் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்கால இந்தியாவின் நம்பிக்கைத் தூண்களான என் அன்பு மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்களுக்கும் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.
அன்பு, மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய வலிமையான சமுதாயத்தைப் படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.
அன்பும் நன்றியும்!
இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
- வல்லுநர் குழுவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
- மாணவர்கள் படிப்பதற்கு தேவையான பாடத்திட்டங்கள் குறித்து இன்று ஆலோசனை.
மாநில கல்விக்கொள்கையின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்," 2026-27ம் கல்வி ஆண்டு முதல் படிப்படியாக பாடத்திட்டங்கள் மாற்றப்படும்" என்றார்.
மேலும் அவர்," புரிதலுடன் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான பாடத்திட்டங்கள் குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்க போகிறோம் உள்ளட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது" என்றார்.
- பிணங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு உண்மையான அக்கறை வெளிப்படாது.
- ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்தது கூட Eyewash-தானா?
கடந்த சனிக்கிழமை, கரூர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்து அரசு மருத்துவமனையில் கிடத்தப்பட்ட சடலங்களை பார்த்து சடலங்களை பார்த்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்ணீர் விட்டார்.
இந்நிலையில் இதை விமர்சனம் செய்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிக்கையில்,
"உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நம் தமிழ் உறவுகள்'' என கரூர் துயரத்திற்கு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட வீடியோவை பார்த்துவிட்டுக் கதறியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
நாம் முதலமைச்சராக இருந்த போது தொலைக்காட்சியைப் பார்த்துத்தானே ஆட்சி செய்தோம். இப்போது இருக்கிற முதலமைச்சர் நேரில் போகிறாரே? என்ற விரக்தியில், இயலாமையில் உளற ஆரம்பித்திருக்கிறார்.
கரூர் சம்பவத்திற்கு ஆணையத்தை அரசு அமைத்ததை Eyewash ஆணையம் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போது அமைக்கப்பட்டிருக்கும் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தைதான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது அமைத்தவர் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அப்போது பழனிசாமியின் Eye மூடியிருந்ததா? ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தவரும் எடப்பாடி பழனிசாமிதான். ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்தது கூட Eyewash-தானா?
சமூக ஊடகங்களில் எந்தமாதிரியான சதிக் கோட்பாட்டுக் கதைகள் பரவி வருகின்றன என்பது தெரியாதா? உங்கள் கட்சியின் ஐடி விங்கிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் இறந்த போதும் என்னவெல்லாம் நாடகம் ஆடினீர்கள்? பிறகு ஆர்.கே. நகர் தேர்தலில் இறந்த உங்களுடைய தலைவர் உடல் போன்ற சித்தரிக்கப்பட்ட பொம்மையை வைத்து பரப்புரை செய்தீர்கள்.
பொம்மையை வைத்து அரசியல் செய்த வரலாற்றை எழுதியவர்கள்தானே நீங்கள் இதுபோன்ற நாடகங்களை நடத்திப் பழக்கப்பட்ட உங்களுக்கு எல்லாமே போட்டோஷூட்டாகத் தெரியும். பிணங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு உண்மையான அக்கறை வெளிப்படாது.
அமைச்சர் ஒருவர் அழுவது போல நடிக்கத் தெரியாமல் மாட்டிக்கொண்டார் எனச் சொல்லியிருக்கிறார். இதே செப்டம்பர் 29-ம் தேதி 11 ஆண்டுகளுக்கு முன்பு அழுகாச்சியோடு ஓர் அமைச்சரவை பதவியேற்பு நாடகம் நடந்தது பழனிசாமிக்கு தெரியுமா? சொத்துக் குவிப்பு வழக்கில் 2014-ல் நீதிபதி குன்ஹா தீர்ப்பால் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தார்.
அதனால், பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கண்ணீரோடு பதவியேற்றது. அப்போது அழுவது போல் நடித்த உத்தமரா இன்று அழுகையைப் பற்றிப் பேசுவது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
- கரூர் துயர சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
- கூட்ட நெரிசல் குறித்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டது.
கரூர்:
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தகவல் அறிந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜ மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷும் சென்றார்.
இந்நிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் உடலைக் கண்டு அமைச்சர் அன்பில் மகேஷ் கதறி அழுதார். அவருக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆறுதல் கூறினார்.
- இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சிக்கு ஒன்னும் செய்யவில்லை.
- காவிரி ஆறு இருந்தும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு காணாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், 2026 தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று திருச்சியில் தொடங்கினார். 8 கி.மீ. தூரத்தை 4 மணி நேரமாக தொண்டர்கள் வெள்ளத்தில் கடந்து மரக்கடை பகுதிக்கு வந்தார். திருச்சி மரக்கடையில் பேசிய விஜய், இரண்டு அமைச்சர்கள் இருந்தும் ஒன்னும் செய்யவில்லை எனக் கூறினார். திருச்சியில் காவிரி ஆறு இருந்தும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு காணாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என் விமர்சனம் செய்திருந்தார். பெண்கள் பாதுகாப்பு, திமுக நிறைவேற்றாத வாக்குறுதி குறித்து பேசினார்.
திருச்சி என்றால் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர்தான் அமைச்சர்களாக உள்ளனர். இதனால் இவர்களைத்தான் அவர் விமர்சனம் செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்றடைந்த அமைச்சர் அன்பின் மகேஷிடம், விஜய் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சிக்கு ஒன்னும் செய்யவில்லை, அவரது பிரசாரத்திற்கு அதிகமான கூட்டம் வந்துள்ளதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அன்பில் மகேஷ் "முழு விவரத்தையும் இன்னும் நான் பார்க்கவில்லை. இப்போதுதான் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளேன். பார்த்தபின் அது சார்ந்து கருத்து சொல்கிறேன்.
கூட்டம் வந்திருப்பதாக சொன்னார்கள். முழுமையாக பார்த்திவிட்டு, அதன்பின் எனது கருத்தை தெரிவிக்கிறேன். விஜய் கூட்டத்திற்கு வந்துள்ளவர்களின் வீட்டில் உள்ள அண்ணன், தங்கை போன்றவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டம் சென்றடைந்துள்ளது. மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவு திட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களின் குடும்பத்தினர் பயன்பெறலாம்" என்றார்.
- எதிர்கால நியமனங்களுக்கு டெட் கட்டாய தேர்வாக இருக்க வேண்டும் என்பதை அரசு ஆதரிக்கும்.
- தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.
ஆசிரியர்கள் பணியில் தொடர TET தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதைதொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும்,"எதிர்கால நியமனங்களுக்கு டெட் கட்டாய தேர்வாக இருக்க வேண்டும் என்பதை அரசு ஆதரிக்கும்" என்றார்.
இதுகுறித்த அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பதிவில்," TET தேர்வு! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
- இரண்டு வருடத்திற்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
- இல்லையென்றால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.
இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும்.
தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011-12 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் 2012-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற கேள்வி இருந்தது. அதற்கு விடையளிக்கும் வகையில்தான் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதாவது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது என கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தை சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
- நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.
- டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?” என்று கேளுங்கள்" என்று சவால் விடுத்துள்ளார்.
79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டார்.
அதில், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்பில் மகேஷ் வெளியிட்ட பதிவில், ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் ஆளுநர் அவர்களே..
ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல, "நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன்" என்பதை காட்டிக்கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.
எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளர்களை மக்களும் திராவிட மாடல் அரசும் கொண்டாடி வருகிறது.
கமலாலயத்தின் ASER எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி "தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?" என்று கேளுங்கள்" என்று சவால் விடுத்துள்ளார்.
- நீலகிரி மாவட்டத்தில்- 17, சிவகங்கை- 16, திண்டுக்கல்- 12, சென்னை- 10, ஈரோடு- 10, மதுரை- 10, கோவை - 9 பள்ளிகள்.
- ராமநாதபுரம் - 9, தூத்துக்குடி - 8, தருமபுரி, திருப்பூர் மற்றும் விருதுநகரில் தலா - 7, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர் மற்றும் நாமக்கல்லில் தலா 6 பள்ளிகள்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த நான்கு கல்வி ஆண்டுகளில், கல்வித் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம்; இனி நிகழ்த்துவதற்கு எந்த ஒரு சாதனையும் இல்லை என்று தினமும் மார்தட்டிப் பேட்டி அளிக்கும் விடியா திமுக-வின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், இன்று தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்?
வயிற்றுப் பசியால் ஏழை குழந்தைகளின் படிப்பு பாழாகிவிடக்கூடாது என்பதற்காக சத்துணவு தந்த சரித்திர நாயகர் புரட்சித் தலைவரும்; மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்க பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த புரட்சித் தலைவி அம்மாவும் முன்னெடுத்த கல்வித் துறையை, கடந்த 51 மாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சி சீரழித்துவிட்டதை மக்கள் உணரத் துவங்கிவிட்டார்கள்.
குறிப்பாக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நடத்தப்படும் கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் பாடத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெறவில்லை என்றும், அதற்கு போதுமான ஆசிரியர்கள் அப்பள்ளிகளில் நியமிக்கப்படாததே காரணம் என்றும் அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக இந்த அரசின் கவனத்தை ஈர்த்துள்ளேன்.
மேலும், அரசுப் பள்ளிகளின் அருகிலேயே கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையால், பள்ளி மாணவர்கள் படிக்கும் வயதிலேயே பாதை மாறுகின்ற நிலையைப் பற்றியும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்தியும், தக்க நடவடிக்கை எடுக்காத பொம்மை முதலமைச்சர், தற்போதுதான் மாணவர்களை 'போதையின் பாதையில் செல்லாதீர்கள்' என்று விளம்பரங்கள் மூலம் கோரிக்கை வைத்து வருகிறார்.
இந்த துறைக்கென்று உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், வாரிசு உதயநிதியின் ரசிகர் மன்றத் தலைவராக மட்டுமே செயல்படுவது வெட்கக்கேடானது. தி.மு.க. ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள்
மற்றும் தனியார் நடத்தும் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுவதும் 207 அரசுப் பள்ளிகளை மூடும் வேலையை இந்த பெயிலியர் மாடல் அரசு கனகச்சிதமாக செய்து வருவதாகவும், பள்ளிகளை மூடுவதாக அறிவித்ததன் மூலம் 207 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வந்த இடங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயல்வதாகவும் கல்வியாளர்கள் இந்த அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில்- 17, சிவகங்கை- 16, திண்டுக்கல்- 12, சென்னை- 10, ஈரோடு- 10, மதுரை- 10, கோவை - 9, ராமநாதபுரம் - 9, தூத்துக்குடி - 8, தருமபுரி, திருப்பூர் மற்றும் விருதுநகரில் தலா - 7, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர் மற்றும் நாமக்கல்லில் தலா 6 என்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 207 அரசுப் பள்ளிகளை இந்த பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு மூடியுள்ளது.
இந்த 207 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லாததால்' மூடப்பட்டு வருவதாக நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனது தலைமையிலான அம்மாவின் அரசு, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 60-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, மாணவர்களுக்கு மடிக் கணினி, படித்த ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் என்று பல திட்டங்களை செயல்படுத்தி, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தது.
ஆனால், நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசோ, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் போன்ற நலத் திட்டங்களை நிறுத்தியதோடு, திட்டமிட்டு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல், அப்பாவி மக்களை தனியார் பள்ளிகளை நோக்கி ஓடச்செய்து விட்டு அவர்கள் மீதே பழிபோட்டு அரசுப் பள்ளிகளை மூடும் அராஜகப் போக்கை கடைபிடித்து வருகிறது. இச்செயலை, அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
207 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளது குறித்து நான் பேசியதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கீழ் உள்ள பள்ளிக் கல்வித் துறை, குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததாலும், பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடுவதாலும், மாணவர் சேர்க்கை இல்லாத பள்ளிகளை மூடுகிறோம் என்று ஒரு விரோதமான விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
இனியாவது பள்ளிக் கல்வித் துறை விழித்துக்கொண்டு, ஏழை, எளிய மக்களின் நலன் கருதி, மூடப்பட்ட 207 பள்ளிகளின் அருகாமையில் வசித்துவரும் மாணவர்களை, அதே பள்ளிகளில் சேர்ப்பதை ஒரு முனைப்பு இயக்கமாக மாற்றி, மாணவர் சேர்க்கையை அதிகரித்து இந்தப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
- வலுவான தேசிய பெருமையைக் கொண்ட சீனா கூட, வளர்ச்சிக்கு ஆங்கிலத்தை அவசியமாகக் கருதுகிறது.
- ஆங்கிலம் பெரும்பாலான மக்களுக்கு எட்டாதவாறு இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, "இந்தியாவில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நம்முடைய நாட்டின் மொழிகள், நம்முடைய கலாசாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன். நம்முடைய மொழிகளில் இல்லையென்றால், நாம் உண்மையான இந்தியனாக இல்லாமல் போய்விடுவோம். நமது நாட்டையும், நமது கலாச்சாரத்தையும், நமது வரலாற்றையும், நமது மதத்தையும் புரிந்து கொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது" எனத் தெரிவித்தார்
அமித் ஷாவின் இந்த பேச்சை கண்டித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, " ஆங்கிலம் அதிகாரமளிப்பது. வெட்கக்கேடானது அல்ல என தெரிவித்தார்.
இந்நிலையில், அமித் ஷாவின் கருத்தை விமர்சித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ஆங்கிலம் இனி ஒரு காலனித்துவ நினைவுச்சின்னம் அல்ல - அது உலகளாவிய முன்னேற்றத்திற்கான ஒரு கருவி. சீனா, ஜப்பான், கொரியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் அதை ஒரு காலனித்துவ நினைவுச்சின்னமாக அல்ல, மாறாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகத்தில் முன்னிலை வகிக்கக் கற்பிக்கின்றன. வலுவான தேசிய பெருமையைக் கொண்ட சீனா கூட, வளர்ச்சிக்கு ஆங்கிலத்தை அவசியமாகக் கருதுகிறது.
ஆனால் இந்தியாவில், அமித் ஷாவும் ஆர்.எஸ்.எஸ்.-ம் ஆங்கிலத்தை மேல்தட்டு மக்களுக்கு உரியதாக சித்தரிக்க முயல்கிறார்கள். இதற்கு காரணம் ஆங்கிலம் நமது கலாச்சாரத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அல்ல, மாறாக ஏழைகள், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை உயர்த்துவதற்கு அதிகாரம் அளிப்பதால் இவ்வாறு கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் சமஸ்கிருதம் இருந்ததைப் போலவே, இப்போதும் ஆங்கிலம் பெரும்பாலான மக்களுக்கு எட்டாதவாறு இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
இது மொழியைப் பற்றியது அல்ல - இது கட்டுப்பாட்டைப் பற்றியது.
அனைவருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதில் திமுக நம்பிக்கை கொண்டுள்ளது. நமது அடையாளத்திற்காக தமிழ், வாய்ப்பிற்காக ஆங்கிலம். அதனால்தான் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த இரண்டும் கிடைக்கின்றன. ஏனென்றால் மொழி ஒரு தடையாக அல்ல, ஒரு ஏணியாக இருக்க வேண்டும்.
அமித் ஷாவின் பயம் ஆங்கிலத்தைப் பற்றியது அல்ல - அது சமத்துவம் மற்றும் வளர்ச்சி பற்றியது" என்று பதிவிட்டுள்ளார்.
- அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.
- கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
தமிழக அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு வரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்!" எனும் பேருண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவச் செல்வங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ள திட்டங்களின் துணை கொண்டு கல்வியில் வெற்றியடைய வாழ்த்துகள்.
மிகுந்த உற்சாகத்தோடு மாணவர் சேர்க்கையை மேற்கொண்டு வரும் கல்வி அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு “சாகித்ய பால புரஸ்கார் 2025” விருது அறிவிப்பு.
- மாத இதழ்களின் வெற்றிக்கு பங்களித்து வருபவர்தான் எழுத்தாளர் சரவணன்.
எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு 2025ம் ஆண்டுக்கான 'பால சாகித்ய புரஸ்கார் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் எழுதிய 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற நாவலுக்காக ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகையுடன் விழும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்கள் அணியிலிருக்கும் ஒருவருக்கு "சாகித்ய பால புரஸ்கார் 2025" விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஒற்றைச் சிறகு ஓவியா" என்ற சிறார் நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் இவ்விருது பெறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க திராவிட மாடல் அரசு அமைந்தது முதல் நமது பள்ளிக் கல்வித்துறையால் மாணவர்களுக்காக வெளியிடப்படும் தேன்சிட்டு, ஊஞ்சல் ஆகிய மாத இதழ்களின் வெற்றிக்கு பங்களித்து வருபவர்தான் எழுத்தாளர் திரு.விஷ்ணுபுரம் சரவணன்.
அறிவியல் - முற்போக்கு சிந்தனைகளை குழந்தைகளிடம் விதைக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குழந்தைகளுக்கான அவரது எழுத்துப்பணி உயிர்ப்போடு தொடரட்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






