search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teachers strike"

    • எங்களது கோரிக்கை நிறைவேற்றப் படாமலேயே உள்ளது. தி.மு.க. அரசு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
    • கடந்த 7 நாட்களில் இதுவரை 125 பேர் மயக்கம் அடைந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் 3 ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் பணி நிரந்தரம் கோரி இன்று 7-வது நாளாக காலவரையற்ற காத்திருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை உடனே நிறைவேற்ற கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

    இவர்களை போன்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பிலும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் பணிபுரிந்து வரும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சமஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றக்கோரி இந்த ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடந்த 28-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டத் தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக அவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பாக அந்த சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, கடந்த ஆட்சியின்போதும் சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்தினோம்.

    அப்போது மு.க.ஸ்டாலின் நேரில் வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். நான் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    இதன்படி தேர்தல் வாக்குறுதியையும் அளித்திருந்தார். ஆனால் எங்களது கோரிக்கை நிறைவேற்றப் படாமலேயே உள்ளது. தி.மு.க. அரசு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

    எங்களது குழந்தைகளுக்கு மட்டும் உணவு வழங்கிவிட்டு நாங்கள் பட்டினி கிடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தினரும் டி.பி.ஐ. வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நல சங்கம், மற்றும் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இவர்களும் தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடு பட்டு இப்படி 3 சங்கத்தினரும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தி வருவதால் பள்ளி கல்வித்துறை அலுவலகம் பரபரப்பாக காட்சி அளிக்கிறது.

    சாப்பிடாமல் தங்களது உடலை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் தினமும் மயக்கம் அடைந்து வருகிறார்கள். கடந்த 7 நாட்களில் இதுவரை 125 பேர் மயக்கம் அடைந்துள்ளனர்.

    இதுபோன்று மயக்கம் அடைபவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டி.பி.ஐ. வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    • கடந்த 27-ந்தேதியில் இருந்து குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • முதலமைச்சரை சந்திக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் தகவல்

    கடந்த 2009-ம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு இருப்பதாகவும், அதனை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27-ந்தேதியில் இருந்து குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 4-வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 140-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்

    போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்ளுடன் தொடக்கக் கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஆகியோர் ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 30 நிமிடம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார். முதலமைச்சரை சந்திக்கும்வரை போராட்டம் தொடரும் என்றும், முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.
    • முதல் நாள் போராட்டம் தொடங்கியபோது இருந்ததை விட தற்போது அதிகம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதியில் இருந்து பணியை தொடங்கிய ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னாள் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஊதியத்தில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது என்றும் இதனை சரிசெய்ய வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் . கடந்த 2014-ம் ஆண்டு முதல் அதற்காக இவர்கள் போராடி வருகிறார்கள்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால் தற்போது செவி சாய்க்காமல் உள்ளனர். எனவே தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியே இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. இதுவரை 46 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இவர்களில் 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று காலையில் பூமணி, மேரிநிர்மல் ஜாய், தாத்தப்பன் ஆகிய 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. போலீசார் சமரச பேச்சு நடத்தியும் அதனை ஆசிரியர்கள் ஏற்கவில்லை.

    இது தொடர்பாக ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறும்போது, தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதியின்படி செயல்பட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியத்தை தான் நாங்கள் கேட்கிறோம். எனவே எங்களது போராட்ட குரலுக்கு அரசு செவிசாய்த்து எங்களை அழைத்து பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    முதல் நாள் போராட்டம் தொடங்கியபோது இருந்ததை விட தற்போது அதிகம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் இருந்து அணி அணியாக ஆசிரியர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழுவுக்கு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று காலை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு “மெமோ” வழங்கப்பட்டு வருகிறது. இந்த குற்ற குறிப்பாணை பெறுபவர்களுக்கு சம்பள உயர்வு, அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது. #JactoGeo #Teachers
    சென்னை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், ஆசிரியர்களிடையே உள்ள சம்பள முரண்பாடுகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ- ஜியோ) கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் அவர்களது 9 அம்ச கோரிக்கைகளில் எந்த ஒரு கோரிக்கையையும் ஏற்க முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்தது. ஜாக்டோ-ஜியோ கோரிக்கையால் தமிழக அரசுக்கு எந்த அளவுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதையும் தமிழக அரசு விளக்கமாக கூறியது.

    தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முன் வராததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். நேற்று 8-வது நாளாக அவர்களது வேலைநிறுத்தம் நீடித்தது. இந்த நிலையில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    “நோ ஒர்க் நோ பே” என்ற அடிப்படையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வேலைக்கு வராத நாட்களில் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு பணிக்கு வராத ஆசிரியர்களின் இடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்தது. இதைத் தொடர்ந்து வேலைக்கு வராத ஆசிரியர்கள் யார்-யார் என்று கணக்கெடுத்து பட்டியல் தயாரிக்கப்பட்டது.

    பொதுத்தேர்வு மற்றும் பயிற்சித்தேர்வு நெருங்குவதால் வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு பதிலாக ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் தற்காலிக ஆசிரியர்களை பணியில் அமர்த்தி வகுப்புகளை நடத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து சுமார் 50 சதவீதம் பேர் பணிக்கு திரும்பினார்கள். இதையடுத்து போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட சுமார் 500 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய ஊருக்கு இடமாற்றம் தருவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதை ஏற்று மேலும் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினார்கள்.

    இதற்கிடையே ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்பான வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கோர்ட்டில் தங்களுக்கு சாதகமான உத்தரவு வரும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் கோர்ட்டு புதிய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. அதற்கு பதில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுடன் இனி எந்த பேச்சும் நடத்தப்பட மாட்டாது என்று அரசு அறிவித்தது.

    மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்குள் பணியில் சேர்ந்தால், அவர்கள் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை இறுதி கெடுவாகவும் அரசு அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 97 சதவீதம் பேர் பணிக்குத் திரும்பினார்கள். இன்று (புதன்கிழமை) காலை மேலும் 2 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினார்கள். இதன் மூலம் 99 சதவீத ஆசிரியர்கள் வேலைக்கு வந்துவிட்டனர்.

    99 சதவீத ஆசிரியர்கள் வேலைக்குத் திரும்பி விட்டதால் 8 நாட்களுக்குப் பிறகு இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளும் இயங்கின. மூடப்பட்டு கிடந்த பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சி தேர்வுக்கான ஏற்பாடுகளைத் தொடங்கினார்கள்.

    ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மட்டுமே இன்று பணிக்கு வரவில்லை. அவர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதி 17(பி)ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் மீண்டும் பணியில் சேர வேண்டுமானால் முதன்மை கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்றே சேர முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்தவர்களில் 1273 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் அனைத்து சங்கங்களையும் சேர்ந்தவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் மீது இந்த ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று தெரிய வந்துள்ளது.

    இத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு குடிமைப்பணி விதி 17(பி)ன் கீழ் குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை முதல் பணிக்கு வராத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு “மெமோ” வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த குற்ற குறிப்பாணை பெறுபவர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் அரசு வழங்கும் சலுகைகள் கிடைக்காது என்று தெரிய வந்துள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கூறியதாவது:-

    உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியை பொறுத்தவரை 99 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வந்து விட்டனர். நேற்றிரவு வரை பணிக்கு வராதவர்கள் மீது 17-பி விதியின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இன்று காலையில் பணிக்கு வரும் ஆசிரியர்களுக்கு 17பி-ன்படி “மெமோ” வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    மெமோவை பெற்றுக்கொண்டுதான் பணியில் அவர்கள் இன்று சேர முடியும். பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடங்கி விட்டது. இதுவரை 1082 ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போராட்ட நிலை குறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறியதாவது:-

    எங்களது போராட்டத்தை அரசு மக்களுக்கு எதிராக திருப்பி விடுகிறது. முதல்-அமைச்சர் இந்த பிரச்சினையில் கவுரவம் பார்க்கிறார். சுயநலத்திற்காக போராடுவதாக முதல்-அமைச்சரே கூறியுள்ளார். அரசு ஊழியர்-ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக அவரது அறிக்கை உள்ளது.

    ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இன்று பிற்பகல் 3 மணி வரை அழைப்புக்காக காத்திருக்கிறோம்.

    முதல்-அமைச்சர் அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்குள்ளாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என்றால் இன்று (புதன்கிழமை) மாலை உயர்மட்ட குழு கூடி அடுத்த கட்ட முடிவு குறித்து ஆலோசனை செய்வோம்.

    மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் பணிக்கு திரும்புகின்றனர். மாணவர்கள் நலனில் ஆசிரியர்களுக்கு அக்கறை உள்ளது. 1-ந்தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்க இருப்பதால் கடமையை உணர்ந்து பணிக்கு செல்கிறார்கள்.

    ஆனாலும் உரிமைக்காக போராடும் நிலையில் இருந்து அவர்கள் விலகவில்லை. மன ரீதியாக பாதிக்கப்பட்டு அதிருப்தியுடன்தான் ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது இந்த அரசு அடக்குமுறையை கையாண்டு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரையில் 5 ஆயிரம் பேர் மீது சஸ்பெண்டு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



    ஆனாலும் ஜாக்டோ-ஜியோவின் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் டி.எம்.எஸ். அருகில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo #Teachers

    ஆசிரியர்கள் போராட்டத்தை கண்டித்து 11-ம் வகுப்பு மாணவர்கள் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    லாலாப்பேட்டை:

    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் ஊழியர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கின்றன. பள்ளி செயல்பாட்டில் இருந்தாலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுவதில்லை. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சரி செய்யவும், ஆசிரியர்கள் போராட்டங்களை கைவிட்டு மீண்டும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஆசிரியர்கள் வகுப்பிற்கு வராததை கண்டித்து 11-ம் வகுப்பு மாணவர்கள் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த லாலாப்பேட்டை இன்ஸ்பெக் டர் ரமாதேவி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடையே பேச்சு வார்தை நடத்தினர். பின்னர் போலீசாரின் அறிவுரையை ஏற்று மாணவர்கள் பள்ளிக்கு திரும்பினர். ஆசிரியர்களின் போராட்டத்தினை கண்டித்து மாணவர்கள் நடத்திய மறியல் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தஞ்சை வண்டிக்காரத்தெரு மாநகராட்சி நடு நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் பாடம் நடத்தினார். #JactoGeo #Teachers #TNSchoolEducationDept
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இதனால் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.

    தஞ்சை வண்டிக்காரத்தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகள் 100 பேர் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள். இந்த பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் பாடம் நடத்த ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

    இதை அறியாத மாணவ-மாணவிகள் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தனர். நேரம் செல்ல, செல்ல தங்கள் வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் வராததால் மாணவ-மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், சிறிய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தினார். இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர் ஆச்சரியம் அடைந்தனர். #JactoGeo #Teachers #TNSchoolEducationDept
    ஆசிரியர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மகன் மற்றும் மகளுடன் போராட்டம் நடத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    வால்பாறை கக்கன் காலனியை சேர்ந்த அஜிஸ் என்கிற மஸ்தான் என்ற தொழிலாளி அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் தனது மகள் அஜ்மிகா(10), அதே பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மகன் அஜ்மல்(6) ஆகியோரை அழைத்துக்கொண்டு வால்பாறை காந்தி சிலை முன்பு இன்று திடீர் போராட்டம் நடத்தினர்.

    அப்போது ஆசிரியர்கள் போராட்டத்தால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது என்று கூறினார். இதனையடுத்து வால்பாறை போலீசார் மஸ்தான் மற்றும் மாணவர்களை கைது செய்தனர். இந்த தகவல் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி என்பவருக்கு தெரியவந்ததும் அவர் வால்பாறையில் கைது செய்யப்பட்ட மஸ்தான் மற்றும் மாணவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார். #tamilnews
    நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. #JactoGeo
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

    அரசு ஊழியர் சங்கம், பட்டதாரி ஆசிரியர் சங்கம், தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 150 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

    கடந்த 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    21 மாத ஊதிய நிலுவையினை வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

    இவர்களது போராட்டத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.

    அதன் பின்னரும் அரசு கோரிக்கைகள் பற்றி இதுவரை எந்தவிதமான முடிவையும் தெரிவிக்காததால் கோர்ட்டில் கொடுத்த உத்தரவை ஜாக்டோ- ஜியோவினர் திரும்ப பெற்றதோடு மீண்டும் காலவரையற்ற போராட்டத்தில் 22-ந்தேதி முதல் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

    திருச்சியில் நடந்த உயர்மட்ட குழுவில் தொடர் போராட்டம் குறித்த அறிவிப்பினை நேற்று வெளியிட்டனர்.

    அதன்படி நாளை 22-ந்தேதி தமிழகம் முழுவதும் தாலுகா அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 23 மற்றும் 24-ந்தேதி மறியல் போராட்டமும், 25-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

    26-ந்தேதி குடியரசு தினத்தன்று அடுத்த கட்ட தீவிர போராட்டம் குறித்து சென்னையில் கூடி முடிவு செய்து அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நாளை முதல் தொடங்குவதால் அரசு பணிகள், பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் 10 லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த போராட்டத்தில் ஒரு பிரிவினர் கலந்து கொள்ளவில்லை.


    என்.ஜி.ஒ. சங்கம், தலைமை செயலக சங்கம், ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம், அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சில சங்கங்கள் பங்கேற்காததால் ஜாக்டோ- ஜியோவின் வேலை நிறுத்தம் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது போராட்டம் தொடங்கிய பிறகுதான் தெரியும்.

    ஆனால் அரசுக்கு எதிராக நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்தில் முதல் நாளில் 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து நடைபெறும் மறியல் போராட்டங்களில் அனைத்து ஊழியர்களும் கலந்து கொள்வார்கள் என்று ஜாக்டோ-ஜியோவின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்தார்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்துத்துறை செயலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 22-ந்தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள்.

    வேலை நிறுத்தம் செய்வது அல்லது வேலை நிறுத்தம் செய்வதாக அச்சுறுத்துவது அல்லது வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, போராட்டங்களில் கலந்து கொள்வது மற்றும் அரசு அலுவலகங்களில் தினசரி பணிகள் பாதிக்கும் வகையில் செயல்படுவது ஆகியவை தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதி 1973 பிரிவுகள் 20, 22, 22ஏ ஆகியவற்றின் கீழ் சட்ட விதி மீறலாகும்.

    தமிழக அரசு ஊழியர்கள் நடத்தை விதியின்கீழ் வேலை நிறுத்தம் செய்வதற்கு எந்தவித தார்மீக உரிமையோ சட்டபூர்வ உரிமையோ கிடையாது. சுப்ரீம்கோர்ட்டு இது தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பில் வேலை நிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்கள் அன்றைய சம்பளம் கேட்பதற்கு உரிமை இல்லை என்று கூறி உள்ளது.

    எனவே உங்களது துறையில் உள்ள அரசு ஊழியர்களிடம் நடத்தை விதிகளை மீறக்கூடாது என்று உத்தரவிட கேட்டுக் கொள்கிறேன். நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.

    நாளை தொடங்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் யாராவது கலந்து கொண்டு அலுவலக பணிகளை புறக்கணித்தால், அவர்கள் வராதது அங்கீகாரம் இல்லாத ஒன்றாக கருதப்படும்.

    இதன் அடிப்படையில் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் “நோ ஒர்க் நோ போ” என்ற கொள்கை அடிப்படையில் அவர்களுக்கு எந்த சம்பளமும் வழங்கப்படமாட்டாது. போராட்ட நாட்களில் அவர்களுக்கு உரிய படிகளும் வழங்கப்படமாட்டாது.

    ஆகையால் அரசு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை மீறும் பட்சத்தில் பணியாளர்கள் சட்டப்பிரிவு 17(பி)கீழ் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    மருத்துவ விடுப்பை தவிர அரசு ஊழியர்களுக்கு நாளை முதல் வேறு எந்த விடுப்பும் கிடையாது. தினக் கூலி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால் அவர்கள் உடனடியாக பணியில் இருந்து நிறுத்தப்படுவார்கள்.

    மருத்துவ விடுப்பு எடுப்பவர்கள் அதற்குரிய சரியான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவத்துறையின் உரிய சான்றிதழ் இல்லாமல் விடுப்பு எடுப்பதை அனுமதிக்க இயலாது.

    போலி மருத்துவ சான்றிதழ்கள் கொடுத்து நாளை விடுப்பு எடுப்பது தெரிந்தால் அவர்கள் மீது அரசு ஊழியர்கள் நடத்தை விதியின் கீழ் மிக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது சம்பளமும் ரத்து செய்யப்படும்.

    வேலை நிறுத்தத்தை கருத்தில் கொண்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் அமைப்புகளில் இயல்பு நிலை நிலவ துறை தலைவர்கள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் பாதிக்காத வகையில் உரிய மாற்று ஏற்பாடுகளையும் செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

    நாளை காலை 10.15 மணிக்குள்ளாக பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தகவல்களை கிராமம், தாலுகா, மாவட்ட அளவில் சேகரித்து தலைமை செயலகத்தில் உள்ள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்த துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    நாளை தொடங்கி வேலை நிறுத்தம் முடியும் வரை இந்த தகவல்கள் தினமும் தரப்பட வேண்டும். தலைமை செயலகம் துறைகளில் பணிக்கு வருபவர்கள் பற்றிய வருகை பதிவேடு தகவல்களை அந்தந்த துறை தலைவர்கள் 10.30 மணிக்குள் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு அளிக்க வேண்டும்.

    இந்த வருகை பதிவேடு தகவல்களை தவிர வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்களின் தகவல்களை தனியாக தினமும் மதியம் 12 மணிக்குள் தர வேண்டும். அதன் அடிப்படையில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். #JactoGeo
    புதிய ஓய்வூதியம் முறையை எதிர்த்தும் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தியும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் நாளை தொடங்கவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. #jactogeo #jactogeostrikepostponed #jactogeostrike
    மதுரை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு குழுவான ஜாக்டோ-ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் மதுரையை சேர்ந்த வக்கீல் லோகநாதன் என்பவர் இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் முன்பு ஆஜரானார்.

    அப்போது அவர், நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது. அடுத்த வாரம் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தேர்வு பெரிதும் பாதிக்கும். மேலும் கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பணிகளிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

    அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், உங்கள் கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்யுங்கள். பிற்பகல் 1 மணிக்கு அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொள்கிறோம் என்றனர்.

    மேலும், தற்போதைய சூழ்நிலையில் இந்த வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.



    இதற்கு முன்னர் இதே கோரிக்கைகளுடன் மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் இந்த நீதிமன்றம் தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை செய்திருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக வரும் 10-12-2018 அன்றுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

    இந்நிலையில், நாளை முதல் தொடங்குவதாக இருந்த வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, வக்கீல் லோகநாதன் தொடர்ந்த வழக்கின் மறுவிசாரணையை வரும் பத்தாம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். #jactogeo #jactogeostrikepostponed  #jactogeostrike 
    ×