search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3-வது நாளாக நீடிக்கும் ஆசிரியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு
    X

    3-வது நாளாக நீடிக்கும் ஆசிரியர்கள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தனர்.
    • முதல் நாள் போராட்டம் தொடங்கியபோது இருந்ததை விட தற்போது அதிகம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதியில் இருந்து பணியை தொடங்கிய ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னாள் பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஊதியத்தில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது என்றும் இதனை சரிசெய்ய வேண்டும் என்றும் இவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள் . கடந்த 2014-ம் ஆண்டு முதல் அதற்காக இவர்கள் போராடி வருகிறார்கள்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால் தற்போது செவி சாய்க்காமல் உள்ளனர். எனவே தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியே இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டம் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. இதுவரை 46 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இவர்களில் 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று காலையில் பூமணி, மேரிநிர்மல் ஜாய், தாத்தப்பன் ஆகிய 3 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. போலீசார் சமரச பேச்சு நடத்தியும் அதனை ஆசிரியர்கள் ஏற்கவில்லை.

    இது தொடர்பாக ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறும்போது, தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதியின்படி செயல்பட வேண்டும். சம வேலைக்கு சம ஊதியத்தை தான் நாங்கள் கேட்கிறோம். எனவே எங்களது போராட்ட குரலுக்கு அரசு செவிசாய்த்து எங்களை அழைத்து பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    முதல் நாள் போராட்டம் தொடங்கியபோது இருந்ததை விட தற்போது அதிகம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் இருந்து அணி அணியாக ஆசிரியர்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் 3 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழுவுக்கு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

    ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×