என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போராடிய ஆசிரியரைத் தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை- அன்புமணி ராமதாஸ்
- சென்னையில் 8-ம் நாளாக இன்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் எட்டாம் நாளாக இன்றும் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் நேற்றைய போராட்டத்தின் போது ஆசிரியர்கள் சிலரை காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். நீதி கேட்டு போராடும் ஆசிரியர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. 2009- மே மாதம் 31-ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் கிடைக்கிறது. இந்த அநீதியை இழைத்தது திமுக அரசு தான். அது தான் இந்த அநீதியைப் போக்க வேண்டும்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது இந்தக் கோரிக்கையை ஆதரித்தது. போராடிய ஆசிரியர்களை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களே நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதன்பின் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளித்தார். ஆனால், இப்போது அதிகாரம் கிடைத்ததும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறார்.
தங்களுக்கான நீதியைக் கேட்டு போராடும் ஆசிரியர்களை ஒவ்வொரு நாளும் கைது செய்து திமுக அரசு அலைக்கழிக்கிறது. கைது செய்யப்படும் போது பெண் ஆசிரியர்கள் மனிதநேயமின்றி கொடூரமாக நடத்தப்படுகின்றனர். சென்னையில் நேற்று போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவர் வில்லியம் என்பவரை காவல்துறை அதிகாரி ஒருவர் பேருந்துக்குள் குண்டுக்கட்டாக தூக்கி வீசியதுடன் கன்னத்தில் அறையும் காணொலி சமூக வலைத்தலங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற ஆசிரியரின் கை உடைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இத்தகைய அடக்குமுறைகளை மன்னிக்க முடியாது. இத்தகைய அடக்குமுறைகளின் மூலம் போராட்டத்தை முடக்கிவிடவும் முடியாது. ஆசிரியர்களை தாக்கிய காவல்துறையினர் மீது தமிழக அரசு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கற்றறிந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு முக்கியப் பங்களிக்கும் ஆசிரியர்களை போராடும் நிலைக்கு தள்ளும் எந்த அரசும் நீடித்த வரலாறு இல்லை. திமுக அரசு அதையும் கடந்து ஆசிரியர்களைத் தாக்குதல் உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கான பாடத்தை திமுகவுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் புகட்டுவார்கள்.






