search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school education directors office"

    • எங்களது கோரிக்கை நிறைவேற்றப் படாமலேயே உள்ளது. தி.மு.க. அரசு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
    • கடந்த 7 நாட்களில் இதுவரை 125 பேர் மயக்கம் அடைந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் 3 ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் பணி நிரந்தரம் கோரி இன்று 7-வது நாளாக காலவரையற்ற காத்திருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை உடனே நிறைவேற்ற கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

    இவர்களை போன்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பிலும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் பணிபுரிந்து வரும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சமஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றக்கோரி இந்த ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடந்த 28-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டத் தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக அவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பாக அந்த சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, கடந்த ஆட்சியின்போதும் சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்தினோம்.

    அப்போது மு.க.ஸ்டாலின் நேரில் வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். நான் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    இதன்படி தேர்தல் வாக்குறுதியையும் அளித்திருந்தார். ஆனால் எங்களது கோரிக்கை நிறைவேற்றப் படாமலேயே உள்ளது. தி.மு.க. அரசு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

    எங்களது குழந்தைகளுக்கு மட்டும் உணவு வழங்கிவிட்டு நாங்கள் பட்டினி கிடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தினரும் டி.பி.ஐ. வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நல சங்கம், மற்றும் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இவர்களும் தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடு பட்டு இப்படி 3 சங்கத்தினரும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தி வருவதால் பள்ளி கல்வித்துறை அலுவலகம் பரபரப்பாக காட்சி அளிக்கிறது.

    சாப்பிடாமல் தங்களது உடலை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் தினமும் மயக்கம் அடைந்து வருகிறார்கள். கடந்த 7 நாட்களில் இதுவரை 125 பேர் மயக்கம் அடைந்துள்ளனர்.

    இதுபோன்று மயக்கம் அடைபவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டி.பி.ஐ. வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    ×